Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பேருந்து பாசம்

         
நான் ஏழாம் வகுப்பு முடித்தவுடன் குடும்பத்துடன் இராஜா அண்ணாமலைபுரத்திற்குக் குடிபெயர்ந்தோம்.  அங்கிருந்து என் பள்ளி சுமார் 
8-10௦ கி.மீ. இருக்கும். முதலில் பள்ளிக்கு பேருந்தில் சென்றேன்.
அது போரடித்ததும் இரயிலில் சென்றேன். பிறகு அதுவும் 
போரடித்துப் போய் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் 
எலுமிச்சை ஜுஸிற்கு ஆசைப்பட்டு மறுபடியும் சிங்காரச் 
சென்னையின் எமவாகனத்தில் பயணம் செய்தேன். 
பத்தாம் வகுப்பு பாஸ் செய்தபோது பஸ் பிரயாணம் 
எனக்குத் திகட்டிப் போயிருந்தது. 

          எனவே வீட்டில் அடம்பிடித்து பள்ளிக்கு சைக்கிளில் 
செல்ல அனுமதி பெற்றேன். இருந்தும் பள்ளி சற்று தூரமாக 
இருந்ததால் இது சரி வருமா என்ற சந்தேகம் இருந்தது. 
அதனால் சைக்கிளை ஒரு வாரம் வெள்ளோட்டம் விட்டுப் 
பார்த்தேன். பிரயாணம் சுகமாய் இருந்தது. எனவே அதை 
கெட்டியாய் பிடித்துக்கொண்டுவிட்டேன். எங்கு சென்றாலும் 
சைக்கிளில்தான். அதன் விளைவாய் நான் கொஞ்சம் 
பெட்ரோல் எதிர்ப்பாளன் ஆனது வேறு விஷயம். 
நண்பர்களுடன் ( உண்மையை  சொல்லவேண்டுமென்றால் தோழிகளுடன் ) 
அரட்டை அடித்துக்கொண்டே சைக்கிளை மிதிக்கும் 
நேரங்கள் எனக்குப் பொற்காலமாய் தோன்றியது. 
காலம் வேகமாய், இன்பமாய் சென்றது. 

          திடீரென்று +2 படிக்கும்போது, புது வருடப் பிறப்பு அன்று,
"விஷ்ணு, இனிமே நீ சைக்கிள்ள போக வேண்டாம்."
"ஏம்ப்பா திடீன்னு ?"
"வேண்டாமே! பஸ்காரன் வண்டிய ஓட்றத பாக்கரப்பலாம் 
எனக்கு பயமா இருக்குடா."
"இல்லபா அது வந்து......."
"இன்னும் மூனு மாசந்தானே, எனக்காக பஸ்ல போடா",அப்பா அன்பாக, 
அமைதியாக சொன்னார்.
"ம்ம்ம், சரிப்பா", யாருக்கும் தெரியாமல் உதட்டைப் 
பிதுக்கியபடி அங்கிருந்து நழுவினேன்.

          உதட்டளவில் "சரிப்பா", என்று சொல்லிவிட்டேன். 
ஆனால் என் சைக்கிள் மழையிலும் வெயிலிலும் 
அனாதையாய் நிற்பதைப் பார்க்கும் போதெல்லாம் அதில் 
ஏறி ஆழ்வார்பெட்டையைச் சுற்றி  ஒரு ரவுண்டு 
வரவேண்டும்  என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அப்பா பேச்சைத் தட்டவும் முடியவில்லை, என் பொற்காலத்தை இழக்கவும் எனக்கு விருப்பமில்லை. 
அப்படி இப்படி என்று என்னை நானே சமாதானப்படுத்திக்
கொண்டு மறுபடியும் எலுமிச்சை ஜுஸை நினைத்துக்
கொண்டேன்.

பேருந்து பயணம் எப்படியிருக்கும் என்ற முன் அனுபவம் இருந்தபோதும் இம்முறை அது புதிதாய், இன்னும் சொல்லப் போனால் கொடுமையாய் இருந்தது. 
ஓட்டுனர் பேருந்தை கற்பழித்துக் கொண்டிருந்தார்; 
நடத்துனர் செம்மொழியான சென்னைமொழியில் அனைவரையும் 
வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தார்(ஏய்! .....த்தா மேல ஏறி வாடா); கல்லூரி மாணவர்கள் ஃபுட் 
போர்டு அடித்துகொண்டிருந்தனர்; மாணவிகள் செல்போனிடம் 
இரகசியம் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாம் வழக்கப்படிதான் 
இருந்தன. ஆனால் பொற்காலத்தை இழந்துவிட்ட எனக்கு இதன்மேல் என்றும் இல்லாத வெறுப்பும் ஆத்திரமும் 
வந்துவிட்டது. மனத்திற்குள் பெற்றோரை சபித்துக்கொண்டே, 
மற்றோரை இடித்துக்கொண்டே, குலுங்கி குலுங்கி சென்றுகொண்டிருந்தேன்.

          என் பள்ளிக்கு செல்ல ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் 
அரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். 
அதற்காக உள்ளே இன்னொரு பேருந்து ஒன்றில் ஏறிச் செல்ல வேண்டும். பொற்காலத்தை இழந்துவிட்ட விரக்தியில் 
நான் இருந்ததாலோ என்னவோ, என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் 
எதுவும் எனக்குச் சாதகமாக நடப்பதுபோலத் தோன்றவில்லை.

அந்த சமயம் பார்த்து பேருந்து என் பார்வையில் 
படும்போது உடனே கிளம்பிவிடும், அல்லது
 நான் உள்ளே போய் இருக்கையில் உட்காரும்போதுதான் 
ஓட்டுனர் தினத்தந்தி இரண்டாவது பக்கத்தில் நுழைந்திருப்பார். 
அதைப் பார்க்கும்போதெல்லாம் அவரைத் தள்ளிவிட்டு நான் வண்டியைக் 
கிளப்ப வேண்டும், என்ற எண்ணம் தோன்றும். 
பள்ளியிலிருந்து சாயங்காலம் வரும்போது ஐ.ஐ.டி. வாசல் 
வரை நடந்து வந்துவிடுவேன். ஏனோ எனக்கு அந்த மஞ்சள் 
நிற வாகனத்தின் மீது பிடிப்பு ஏற்படவில்லை.பள்ளி 
வாழ்க்கை முடிந்த இன்றைய நாட்களிலும் நான் ஐ.ஐ.டி. உள்ளே செல்கையில் ஒன்று அது எனக்கு முதுகைக் 
காட்டிக்கொண்டு என்னிடமிருந்து விலகிக்கொண்டிருக்கும், அல்லது அப்போதுதான் தூங்க 
ஆரம்பித்திருக்கும். "நான் அதில் ஏறவும், அது கிளம்பவும்", என்ற நிலைமை என்றுமே ஏற்பட்டதில்லை, இனியும் 
ஏற்படாது என்று என்னுள்ளே ஒரு குரல் சொல்கிறது.

          ஆனால் எனக்கும் அந்த பேருந்திற்கும் இருக்கும் இந்த உறவு இப்படியே 
இருக்கட்டும் என்ற சிறு ஆசை எங்கோ என் ஆழ்மனதில் 
இருக்கத்தான் செய்கிறது. அது போன்றதொரு பயணத்தை 
இப்போது நினைக்கையில் அது இன்பமயமாகத்தான் தெரிகிறது.                                 

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி