Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நினைவுகள் ...


நான்,
பசிக்கும் பணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல்
சம்பந்தம் ஏற்படுத்திய மானிட உலகில்,
உடம்பு மட்டும் உள்ள உயிரினமாய்,
ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு நாற்பத்திரண்டு வயது ஜந்து.

பணமென்னும் மாயையின் மடியில்
மதியிழந்த மானிடரைப்போல் நானும்
ஓடுகிறேன் ஓடுகிறேன்,
பணத்தின் பின்னால் ...

வாழ்வின் கரும்பாழ் ஒன்றில் சிக்குண்ட
கருஞ்சூரியனாய்,
வறுமையின் அலைகளில் அலைக்கழிக்கப்படும்
வெண்மதி நிழலாய்,
ஏன்தான் வாழ்கிறேன் என்ற
எண்ண ஓட்டத்திற்கு நடுவே,
ஏன்தான் வளர்ந்தேன் என்ற
எண்ண ஓட்டம் !

கதிரவனால் கரைந்த பனித்துளியாய்,
விளக்கையே வாழ்க்கையாய்க் கொண்ட
மின்மினியாய்,
நிறைவேறாக் கனவுகளாய்,
கரைந்தது என் நினைவு !

ஆம், நினைவுகள் !

பணத்தைக் காகிதமாய் மதிக்கும்
சிறுவயது !
அதுவல்லவோ 'முதிர்ச்சி' !
பால்ய வயதின் பச்சைப் பசேலென்ற பசுமை,
ஆம் !
பச்சைப் பசேலென்ற பசுமை
இன்றும் எந்தன் நெஞ்சினில் !

நன்றாய் எனக்கு நினைவிருக்கிறது,
பொதுக்கூட்டம ஒன்றில்,
"கற்சிலைகளுக்கு உயிரில்லை" என்று 
ஒருவர் முழக்கமிட்டு, மாலையிட்டார்,
தலைவர் சிலைக்கு !
முட்டாள்தனம் என்று நினைத்தேன்.

இன்னொருநாள்,
கறைபடாதிருக்கக்
கண்ணாடிப்பெட்டிக்குள் அடைத்தேன்,
கண்ணபிரானை !
ஆம்,
கடவுளையே அடைத்தேன்,
இன்று அடைந்து கிடப்பதோ நான்,
இருளில், காரிருளில் !

அடடா ! மறக்க முடியுமா அவளை !
எந்தன் பத்தாம் வகுப்பு இராஜகுமாரி !
மயிலாய், ஒயிலாய், கலையாய், சிலையாய்,
இன்று அவள் விலாசம் ?

வாழ்வின் சறுக்கலில் சிக்காத சிறுவனாய்,
காசைத் தூசென்று எண்ணி,
கோலி விளையாடும் பயபுள்ளையாய்,
பரவசத்துடன் பம்பரம் விட்ட பாலகன் இன்றோ,
அதே பம்பரமாய் சுழல்கிறான்,
வாழ்க்கைச் சக்கரத்தின் 
                                                                                         ஓரத்தில் !

இன்று, ஹும்ம்ம்,
ஓடுகிறேன் ஓடுகிறேன்,
பணத்தின் பின்னால் குடுகுடுவென்று ஓடுகிறேன்.
இவை,
மின்னிய பொற்காலத்தின்,
மிஞ்சிய வெறும் நினைவு !

விடைபெறவும் வக்கில்லாதவனாய்,
விடைகொடுக்கவும் விருப்பமில்லாதவனாய்,
ஊரெல்லையில் இருக்கும் பேர்ப்பலகையாய்,
எந்தன் "நன்றி, மீண்டும் வருக" ...

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி