Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்          ஒரு படத்தில் குறைந்தபட்சம் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள், இரண்டு தொப்புள்காட்சிகள், ஒரு முத்தக்காட்சி, வெளிநாட்டில் நடனம், நட்சத்திர நடிகர்கள், பிரமாண்டமான செட், இதெல்லாம் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒரு திரைப்படமாக அங்கீகரிப்பார்கள் என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, மக்கள் முட்டாள்கள் அல்ல என்று பல படங்கள் சொல்லத் துவங்கி விட்ட வேளையில், இதோ இன்னொரு படம் அதை இன்னொரு முறை படத்தில் பாடல் கூட இல்லாமல் பாடியிருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், 2012-இன் இன்ப அதிர்ச்சி. மூனு மணி நேரம், மூச்சுத் தெணரத் தெணர சிரிக்க வைத்திருக்கிறார்கள் !

          நாயகன் விஜய் சேதுபதி இந்த முறையும் கிளாஸ் பெர்ஃபார்மன்ஸைக் கொட்டியிருக்கிறார். இவர்களெல்லாம் புதுமுகங்களா என்று ஆச்சரியப்படுமளவிற்கு அமைந்திருகின்றன ஹீரோவின் நண்பர்களாக நடிக்கும் மூவரின் நடிப்பு. ஆம், கொஞ்சம் கூட கேப்பே இல்லாமல் சிரிக்க வைக்கும் புதுமுகங்களின் முகபாவங்கள் அடடே சொல்ல வைக்கின்றன. ரிஸ்க் எடுத்து குளோசப் ஷாட்கள் பல வைத்து அவர்களின் திறமையை முழுவதுமாக உபயோகித்த இயக்குனர் பாலாஜி தரணீதரனின் முதுகில் ஒரு ஷொட்டு வைக்கலாம்.

“என்னாச்சி ?”
படத்தின் கால்வாசி நேரத்தை இந்த வசனம்தான் எடுத்துக்கொள்கிறது, ஆனால் பார்க்கும் நமக்கு ஒரு முறை கூட ஆயாசம் ஏற்படுவதில்லை ! ஒவ்வொரு ‘என்னாச்சி’க்கும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிக்கொண்டு வரும் நடிகர்களின் முகபாவம், பிண்ணனி இசை, இரண்டும் வசனங்கள் பல இல்லாத ஒரு உலகத்தரம் வாய்ந்த படம் தமிழில் வருவதற்கான நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றன.

“ப்பா ! யாருடா இவ, பேய் மாதிரி இருக்கா !”, இந்த வசனத்தைக் கேட்டவுடன் அரங்கமே அதிர்கிறது ! அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் போலும் ! “காதல்ங்கிறது...” என்று விக்கிரமன் பட ரேஞ்சுக்கு டயலாக் பேசி மொக்கை வாங்கும் பக்ஸின் பெரிய முழிப்புகளைக் காமெடிக்குப் பயன்படுத்தியதில் இயக்குனரின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. படத்தில் பருத்திவீரன் கார்த்தி மாதிரி தாடி வைத்துக் கொண்டு பாலாஜியாக வருபவரின் எக்ஸ்பிரஷன், பக்ஸுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் காலை வாரும் போட்டி, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் சிரிக்க வைக்கிறார்கள். செண்டிமெண்டுக்கும் கதை நகர்வதற்கும் ஒரு ஹாரி பாட்டர் நண்பரை வைத்திருக்கிறார்கள், பரவாயில்லை.

          படத்தின் நாயகிக்குப் பெரிய வேலை இல்லையென்றாலும் அவரைப் பார்த்தவுடன் ‘சின்ன வயசு ஷகீலா போல் இருக்கிறார்’ என்று எங்கோ படித்ததுதான் ஞாபகம் வந்தது. நடிப்பில் குறை வைக்கவில்லை அவர். SMS-லிருந்து சுந்தரபாண்டியன் வரை நட்புக்கு வக்காலத்து வாங்கி வாங்கி அது நண்பர்களுக்கே போரடித்துவிட்டது என்ற சூழலில், இந்தப் படத்தில் அதைக் கரெக்டாக தாலி கட்டும் படலத்தில் வைத்து நம்மை ‘த்சோ த்சோ’ கொட்டாமல் வைத்ததில் திரைக்கதையின் நேர்த்தி தெரிகிறது, இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் !

          பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் மைனஸ் இல்லை என்ற அளவில் இருக்கிறது. படம் நெடுகக் காணப்படும் சிற்சில இழுவைகளும் மூன்று மணிநேர படம் என்ற இயற்கையான சலிப்பும், படத்தின் பெரிதாகத் தொய்வடையாத திரைக்கதையினாலும் இடைவிடாத சிரிப்பு வெடிகளாலும் பொறுத்துக் கொள்ளும்படி இருக்கின்றன. உண்மைக் கதை என்பதால் ஒன்றையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாது என்ற இயக்குனரின் ஆசையைப் புறக்கணிக்காமல் தமிழ்நாடே கொண்டாடவேண்டிய படம். குடும்பத்தோடு சென்று கொஞ்ச நேரம் உங்கள் கவலைகளை ‘மறந்து போகலாம்’ !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி