Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சுகநிவாஸ் தயிர் சேமியாவும் மனிதனை அரிக்கும் ராட்சத மீனும்!


''மைலாப்பூர்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எப்பவுமே தனிப் பெருமை உண்டு. என் உயிரோடும், உணர்வோடும், மனதோடும் கலந்த ஊர் இது'' என்று மைலாப்பூர் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

''ஒரு காலத்துல மேடை நாடகங்கள் என்றால் மைலாப்பூர்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். இங்கே ஓயாமல் நாடகங்கள் நடந்துகிட்டே இருக்கும். அதிலும் சென்னையின் பழமையான சபாக்களில் ஒன்றான பார்த்தசாரதி சபாவில் டிராமாக்கள் பார்த்த பொழுதுகள் அப்படியே கண்ணுல நிக்குது. ஆர்.எஸ்.மனோகரா, புரசை தம்பிரான் என எத்தனையோ பேரின் நாடகங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்களையும் பார்க்கிற பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சது. இன்னைக்கு மாதிரி அன்றைக்கு நெரிசலோ, டிராஃபிக்கோ இல்லாததால வீட்டில் உட்கார்ந்தே ஓசியில் முழு நாடகத்தையும் நெடுந்தூரத்துக்குக் கேட்க முடியும்.

மாடவீதி அப்படினு சொன்னாலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கும். அங்கே நடக்கிற அறுபத்து மூவர் உலாவில் கலந்துகிட்டா தனி திருப்தி. இங்கேதான் கம்பீரமா கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் ஒலிக்கும். மொட்டை மாடியிலும் செட்டு வீடுகளிலும் கழிந்த எங்களோட பால்யங்களின் ரம்மியான பொழுதுகள் அது. இந்தத் தலைமுறைக்குப் புரியாத சந்தோஷத்தை எங்களுக்குத் தந்தது அது. விவித பாரதியில் பாட்டுக் கேட்டும், நாடகங்களில் டேப் ரெக்கார்டரை வெச்சுக்கிட்டு சவுண்ட் எஃபெக்ட் கொடுத்த அந்தச் சின்ன வயசுக்கான சந்தோஷங்கள் இப்பவும் பிரமிப்பைத் தருது.

மைலாப்பூர் குளத்தில் ஒரு ராட்சத மீன் இனத்தை வளர்க்கவிட்டு அது வளர்ந்து பெரியத் தொல்லையாக உருவெடுத்தது. பெரிய பெரிய அளவுகளில் இருந்த அவை, குளத்தில் விழுந்து இறந்துபோன ஒரு மனிதரை முழுசாக தின்று தீர்த்து விட்டன. மீன்களை விற்றுவிட வேண்டும் என்றபோது கோயில் மீன்களை எடுக்கக்கூடாது எனப் பிரச்னையெல்லாம் கிளம்பியது. காசிமேட்டில் இருந்து படகைக் கொண்டு வந்து அந்த மீன்களை அள்ளிக்கொண்டு போனார்கள்.

காற்றாட நாங்கள் நடந்த நடைபாதைகள் இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் சுருங்கிக் கிடக்கின்றன. நான் படிச்ச பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்தான் தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், சோ என நிறைய வி.ஐ.பி-கள் படிச்சாங்க. இங்கே இருந்த கோகுல பாலசர்மா என்கிற வாத்தியார் ஜிப்பாவுக்குள் பிரம்பை வெச்சு இருப்பார், எடுக்கிறதும் தெரியாது, விளாசுறதும் தெரியாது. அப்படி ஒரு அசுர வேகம்.

இந்தப் பகுதி, பிராமணர்கள் மிகுந்த பகுதினு சொல்லப்படுது, ஆனால், கிழக்குப் பகுதியில் பிராமணர்களும், தெற்குப் பகுதியில் குடிசைவாசிகளும், லஸ் சர்ச் பக்கம் மேல்தட்டு மக்களும் கலந்து இருந்தாங்க. இங்கே இருந்த பிரகதி ஸ்டுடியோவில்தான் பல எவர் கிரீன் படங்கள் எடுக்கப்பட்டன. இங்கே கால்படாத நடிகர்களே இல்லை. அன்றைக்கு, ஹவுசிங் போர்டு குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்காக, வெறும் 20 லட்சத்தில் அப்போதே கட்டியதற்கான அடையாளமாக நினைவு ஸ்தூபி இங்கே எழுந்திருக்கிறது.

மாஞ்சா காத்தாடி போட்டிகளின் பிறப்பிடமே மயிலாப்பூர்தான். இங்கே இருந்துதான் வட சென்னை நோக்கி அது நகர்ந்தது. எங்கே காத்தாடி போட்டி நடந்ததோ அங்கேயே போலீஸ் குவாட்டர்ஸ் வந்தது காமெடியான க்ளைமாக்ஸ். இங்கே இருந்த டென்னிஸ் கிரவுண்டில் இந்தியாவின் பெயரை அன்னைக்கு உயரப் பறக்கவிட்ட ராமநாதன், கிருஷ்ணன் என பல பேர் விளையாடி இருக்காங்க. இந்தப் பகுதியின் ஹோட்டல்கள் தனி ரகம். ராயர் கஃபே இந்தப் பகுதியின் அடையாளம்ன்னு சொல்லலாம். அங்கேதான் நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகரா, சோன்னு பலபேர் காலை சாப்பாடே சாப்பிடுவாங்க. சுகநிவாஸின் தயிர் சேமியாவுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. சாம்பார் நிரம்பி வழியும் சாந்தா பவன் இட்லிக்குப் பல பேர் அடிமையாக இருந்தார்கள்.

சைவமும் வைணவமும் இணைந்து நிற்கிறதோ அப்படினு சொல்கிற அளவுக்குக் கோயில்களை இங்கே பார்க்க முடியும். இங்கே இருக்கும் நந்தலாலா கோயிலில் பெண் குழந்தைகள்தான் இறைவனுக்குப் பூஜையே செய்வார்கள். மாடவீதியின் வடக்கும், மேற்கும் சந்திக்கிற முனையில் எத்தனையோ தேர்தல் கூட்டங்களைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறோம்.

இன்றைக்கு மைலாப்பூர் மாறிவிட்டது. அன்றைக்கு 21-N பேருந்தில் 10 பைசா கொடுத்துக் கோபுரங்கள், நெரிசல் இல்லாத சாலைகளைப் பார்த்துக்கிட்டே போகும்போது  கட்டடங்கள் இல்லாதததால் தலையை அப்படியே வாரிச்செல்லும் கடல் காற்று எல்லாமும் அந்தப் பேருந்து பயணத்தில் கிட்டினாலும் பள்ளிக்கு நேரமாகிவிடுமே என்கிற பரபரப்பில் அதைக் கவனிக்காமல் பேருந்தை விட்டு இறங்கி ஓடுவோம். மைலாப்பூரும் அப்படி எந்த மாற்றத்திலும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் பயணத்தைப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய?''

- பூ.கொ.சரவணன், வ.விஷ்ணு
படங்கள்: ப.சரவணகுமார்

என் விகடன் - 19/10/12

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி