Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சாரல் தமிழ் மன்றம் - புத்தகத் திறனாய்வுக் கூட்டம்

          மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் படிக்கும் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் மூலம் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்திற்கான(Book review session) முயற்சியை என் சீனியர் துவக்கி வைக்க, சோதனை ஓட்டமாக முதல் கூட்டம் 06/03/13 அன்று நடைபெற்றது. அண்ணன் பூ.கொ. சரவணன் 'The Life and Times of C.N.Annadurai' நூலைப் பற்றி விளக்கி ஒரு சிறு விதையை விதைத்தார். இரண்டாவது கூட்டத்தில் நம்மாழ்வாரின் புத்தகங்களைப் படித்து அதன் மூலம் கிடைத்த செய்திகளை, அறிவைப் பகிர்ந்துக் கொண்டான் நண்பன் Sathiya Moorthi. மூன்றாவது கூட்டத்தில் நடந்ததுதான் மகிழ்ச்சிக்குக் காரணம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இந்தியா, குறிப்பாகத் தமிழகம் எதிர்கொண்ட வரலாற்றை ஆர்.முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்’என்ற நூலின் மூலம் நண்பன் Thamil Thedal விளக்க, விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

          தமிழகம் என்றைக்குமே இந்தியை எதிர்த்ததில்லை, இந்தித் திணிப்பையே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திறனாய்வுக்கு முன்னர் இதுகுறித்து சற்று குழப்பத்துடன், மேம்போக்கான புரிதலுடன் பலர் இருந்தார்கள். ஆனால் திறனாய்வு முடிந்ததும் அனைவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் ஆரோக்கியமான முறையில் அடித்துக்கொண்டதைப் பார்த்தபோது இந்தப் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்தின் நோக்கம் நிறைவேற ஆரம்பித்திருக்கிறது என்று புரிந்தது. கூட்டம் முடிந்தப் பின் பலர் தனியாக என்னிடம் அவர்களது கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்று சொன்னபோது “என்ன சிந்திக்கிறீர்கள் என்பது அவ்வளவு முக்கியமல்ல, சிந்திக்கிறீர்களா என்பதே மிக முக்கியம்”, என்று மனப்பாடம் செய்த பஞ்ச் டயலாக் ஒன்றை சொல்லியனுப்பினேன்.

          இந்தப் புத்தகத் திறனாய்வுக் கூட்டம் சாரல் தமிழ் மன்றத்தின் புதிய பாய்ச்சல் என்றே நான் பார்க்கிறேன். குறிப்பாக ஒரு பொறியியல் கல்லூரியில் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் இது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களைப் புத்தகம் வாசிக்கத் தூண்டுவதுதான். இன்று இந்த சமூகத்திலிருந்து முழுக்க முழுக்க விலகி நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டு என்று இருப்பவர்களில் நாங்கள் முதன்மையானவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எங்களுக்கும் ப்ராய்லர் கோழிகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்ற நிதர்சனமானக் கேள்வி எழத்தான் செய்கிறது. இன்று இருக்கும் நடைமுறை சிக்கல்கள் எதிலும் எங்களில் பலருக்குத் தெளிவான பார்வையோ புரிதலோ கிடையாது. வரலாற்றை நாங்கள் சுத்தமாக ஒதுக்கித் தள்ளிவிட்டோம் என்பது வருத்தமான விஷயம். அதற்கு முழுக்க முழுக்க எங்களை மட்டுமே குற்றவாளிகளாக்கிவிட முடியாது என்பது வேறு விஷயம். ஆனால் இங்குதான் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்தின் அவசியம் புலப்படுகிறது. நாளைய இந்தியா நம் கையில் என்று சும்மா வாய்ச்சொல் வீரர்களாய் மட்டும் இருப்பதில் ஒரு நன்மையும் இல்லை. ஒரு தனிமனிதனுக்கென்று ஒரு அரசியல் பார்வை வேண்டும், இந்த சமூகம் குறித்த ஒரு சிந்தனை வேண்டும். ஒரு கொள்கை இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு சித்தாந்தத்தின் பிடிப்பு இருக்க வேண்டும். அவனுக்கே அவனுக்கான, அவனுக்கே உரித்தான ஒரு கற்பனை வெளி வேண்டும். "வாழ்வதற்கும் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது", என்று எஸ்.இரா. சார் சென்ற வாரம் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்திருந்தபோது சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. நாங்கள் ‘வாழ’ இந்தப் புத்தகத் திறனாய்வு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

          சுருங்கச் சொன்னால், இந்தப் புத்தகத் திறனாய்வின் இறுதி நோக்கம், அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதே. என்ன சிந்திக்கிறார்கள் என்பது அடுத்த கவலைதான். முதல் கவலை, சிந்திக்கிறார்களா இல்லையா என்பது. இதில் உள்ள ஒரே அபாயம், திறனாய்வில் நன்றாகக் காது கொடுத்துக் கேட்டுவிட்டுப் பிறகு புத்தகத்தைப் படிக்காமல் இருப்பது. அந்த அபாயத்தை மட்டும் படிப்படியாகக் குறைத்துவிட்டால் மிக விரைவில் நிறைய வாசகர்களை உருவாக்க முடியும். அனைத்துப் பள்ளிக் கல்லூரிகளிலும் இந்தப் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்தை நடத்தினால் விரைவில் தமிழ் புத்தகங்களையும் லட்சம் பிரதிகள் விற்கும் நிலையை ஏற்படுத்த முடியும்.

          படக் படக்கென்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு போக முடியாது. படிப்படியாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு வருகிறோம். அடுத்த வாரம் காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ திறனாய்வு செய்யப்பட இருக்கிறது. வருங்காலத்தில் திறனாய்வு செய்யப்பட இருக்கும் புத்தகங்கள் ராமசந்திர குகாவின் ‘India after Gandhi', கல்கியின் பொன்னியின் செல்வன், கோவி.லெனினின் திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம், சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணங்கள் என்று பட்டியல் நீள்கிறது. யாரையும் எதையும் முழுமையாக ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்பதன் அடிப்படையில் ஹிட்லரின் 'மெயின் காம்ஃ'பைக் கூட விட்டுவிடக்கூடாது என்று எண்ணம். பார்ப்போம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி