Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மீனாட்சியம்மன் தாலியும் காணாமல் போன காரப்பொரியும்!

          என் ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம். திருமங்கலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சில வருடங்களுக்கு முன் இங்கு நடந்த அரசியல் அதிரடிகள்தான். அங்கு நடந்த ஒரு இடைத்தேர்தலினால் திடீரென்று தமிழக அளவில் என் ஊர் பிரபலமானது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, திருமங்கலம் என்னும் ஒரு எழில்மிகு நகராட்சியை  உங்கள் முன் நிழலாட வைப்பதே என் நோக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டு திருமங்கலம் தன்னிடம் வைத்திருக்கும் இயற்கை அழகை, அதன் மக்களை, அமைதியை, தனித்துவத்தை, உங்களுக்குப் படம்பிடித்துக் காட்ட இதோ ஒரு இனிதான பயணம்...

          மதுரை மீனாட்சியம்மனின் மாங்கல்யம்(தாலி) செய்யப்பட்ட இடம் இது என்பதால் திருமாங்கல்யம் என்னும் பெயர் பெற்று, அதுவே பின்னர் திருமங்கலம் ஆயிற்று. முருகன் தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் வந்தபோது இங்குதான் மாங்கல்யம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல மதத்தவரும் சாதி/மதபேதமோ சச்சரவோ இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். மதுரைக்கு ஒரு மீனாட்சியம்மன் இருப்பதுபோல் திருமங்கலத்திற்கு என்று ஒரு மீனாட்சியம்மன் இருக்கிறார். உசிலம்பட்டி, விருதுநகர் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கோயில் அருகில் இருப்பதால் அவர்கள் மதுரை செல்வதற்கு பதில் இங்கேயே மீனாட்சியம்மனை தரிசிக்கின்றனர். முஸ்லிம் மதத்தவரும் இங்கு கணிசமாக இருக்கின்றனர். மேலப்பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மசூதிகள் உள்ளன. அற்புத நாதர் தேவாலயம் போன்ற கிறித்தவர்கள் தொழும் இடங்களும் திருமங்கலத்தில் உண்டு.

          மதுரை போன்ற ஒரு மாநகரத்தின் அருகில் இருக்கும் ஒரு ஊர் இவ்வளவு அமைதியாகவும் எளிமையாகவும் இருப்பது ஓர் ஆச்சரியம். இத்தனைக்கும் திருமங்கலத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லாமலில்லை. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய CIDCO (City and Industrial Development Corporation - நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்),  MEPCO இரும்பு மற்றும் அலுமினியத் தொழிற்சாலை போன்றவற்றைத் தனதருகே வைத்திருக்கிறது. இங்கு தொழில் புரிய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. திருமங்கலத்தின் landmark என்றால் பி.கே.என். மேல் நிலைப்பள்ளிதான். பல ஐ.ஏ.ஸ். அதிகாரிகளை உருவாக்கிய பட்டறை அது. ரகளையான தேர்தல்கள், வியர்வைத் துளி சொட்ட சொட்ட போலியோ சொட்டு மருந்தை பிள்ளைகளுக்கு கொடுத்து விட நீண்டு நிற்கும் அம்மாக்கள் வரிசை என கலர்ஃபுல் கதைகளைத் தன்னூடாகத் தேக்கி வைத்திருக்கும் பள்ளி இந்தப் பள்ளி!
         
          தொழிற்துறையில் தோய்ந்தாலும் தன் வேரான விவசாயத்தை திருமங்கலம் மறந்துவிடவில்லை. மெதுமெதுப்பான பஞ்சு, கரங்களில் கபடி ஆடும் வேர்க்கடலை, சுர்ரென ஏறும் மிளகாய், மொறுமொறு சோளம், கம்பு, போன்றவை விளைவிக்கப்படுகின்றன. திருமங்கலத்தின் பிரதான சாலைகளைவிட்டுக் கொஞ்சம் ஊரிற்கு உள்ளே சென்றால் நாற்புறமும் ஒரே பசுமைதான். அங்கே ஒரு முக்கியமான வஸ்து நம்மை வரவேற்கும். அவர்தான் திருவாளர் பம்ப்செட்! அதில் அப்படியே கொஞ்சம் முழுகி, அதன் நுரைகளில் தலை துவட்டி, கோவணக்காரத் தோழர்களோடு சிரித்து சட்டையை முறுக்கி மேலேறும்பொழுது நெஞ்சம் கனத்துப் போயிருக்கும். அந்த கனத்தை வாங்கிக்கொள்ளப் பனைந்தோப்பு வரவேற்கும். நுங்கு, பதநீர் சல்லிசான காசிலே அங்கு கிடைக்கும். ஓலையின் பச்சை வாசனை மூக்கினுள் பாய அதிலிருந்து ஒழுகும் பதநீரை உதட்டில் ஒட்டாமல் நாவின் அடியில் தேக்கித் தொண்டைக்குழிக்குள் இறக்கும்பொழுது ஏற்படும் கிறக்கம்... அது ஒரு அனுபவம்!

          சென்னையின் சாதாரண வெயிலுக்கு அனைவரும் குடைபிடித்துச் செல்வதை நான் ஏளனமாய் பார்த்ததற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. அங்கு சித்திரை வெயிலில் வெறும் கால்களில் நடக்கவே முடியாது. அப்படியும் நண்பர்களுடன் நெருஞ்சி முள் குத்தகுத்த கிட்டிபுல், கோலி, பம்பரம், கிரிக்கெட் போன்றவற்றை விளையாடுவேன். முக்கியமாக பம்பரத்தை கீழே சுற்றவிட்டு பின்னர் ஒரு கயிறு மூலம் அதை கையில் பிடித்து சுற்றவைப்பதில்(இதனைக் 'கோஸ்' என்பார்கள்) என்னை மிஞ்ச ஆளில்லை என்னும் பெருமை எனக்கு. சென்னை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடியோகேம் ஆடும் எத்தனை சிறுவர்கள் இது போன்ற சிறுவயது நினைவுகளை இழக்கப்போகிறார்கள்? மதுரை விமான நிலையம் செல்லும் வழியின் இருபுறமும் சூரியகாந்தி மலர்கள் மஞ்சள் நிறத்தைத் தெளித்துக்கொண்டிருக்கும். அதன் ஊடே ஒரு ரப்பர் டயரைக் குச்சி மூலம் ஓடஒட விரட்டும் சிறுவர்களில் கண்களில் தெரியும் மகிழ்ச்சியை இன்று கம்யூட்டரில் கார் ரேஸ் விளையாடும் எத்தனை சிறுவர்களிடம் காணமுடியும்?

          எங்கள் சிறுவயது சேட்டைகளினால் நிம்மதியை இழந்தவர்கள் பலபேர். ஆனாலும் வியர்வை பொங்க நாங்கள் அவர்கள் வீட்டு கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்க, அவர்கள் தராமல் போனதில்லை. அவர்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியைக் கிரிக்கெட் ஆடி உடைத்தாலும் அவர்களின் புதுவீட்டிற்கு எங்களை அழைக்காமல் போகமாட்டார்கள். எங்கள் பக்கத்துத் தெருக்காரரின் கோழிகளைப் பலமுறை பிடித்துக்கொண்டு ஓடியிருக்கிறோம். ஆனாலும் எங்களை என்றுமே "கண்ணுங்களா!", என்றுதான் விளிப்பார். நானும் என் தந்தையும் பம்புசெட்டில் குளிப்பதைக் கண்டு ஞாயிறுதோறும் எங்களுக்காக கையில் கேப்பங்கூழுயுடன் காத்திருக்கும் அங்கு வசிக்கும் அந்த மூதாட்டியின் முகம் இன்றும் என் நினைவில் உள்ளது. ஆம், இங்கு மனிதர்களை சம்பாதிப்பதும் சுலபம்தான்.

          இங்கு "ஏய் சாவுகிராக்கி!" கிடையாது. எனக்குத் தெரிந்த அருண்சங்கர் என்ற ஆட்டோக்காரர் இன்றும் யாராவது முதிய‌வரைப் பார்த்தால் அவரை ஆட்டோவில் இலவசமாக ஏற்றி அவர் சொல்லுமிடத்தில் இறக்கிவிடுவார். பின்னர் "பெரியவரே, பைய போங்க" என்று அவர் சொல்ல, அந்த முதியவர் மனமுவந்து கொடுக்கும் இருபது ரூபாயில் இன்பம் காண்பார்('பைய' என்றால் மெதுவாக). எனக்காக சிவரக்கோட்டையிலிருந்து அவன் அம்மா சமைத்த உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொண்டு வருவான் பன்னீர்செல்வம். இங்கு பங்காளிகள் அதிகம், ஆனால் பங்காளிச் சண்டைகள் குறைவு. இங்கு அரிவாள்கள் இளநீர் வெட்டவே அதிகம் பயன்படுகின்றன.

          மதுரைக்கும் விருதுநகருக்கும் இடையே ஒரு முக்கியமான இரயில் நிலையமாக திருமங்கலம் இரயில் நிலையம் உள்ளது. மூன்று வயதில் இரயில்களில் பின்னால் இருக்கும் 'X' குறியின் வண்ணத்தைப் பார்த்தே அது முத்துநகர் எக்ஸ்பிரஸா இல்லை தஞ்சாவூர் திருநெல்வேலி ஃபாஸ்ட் பாசெஞ்சரா என்று சொல்லிவிடுவேன்! தினமும் அந்த இரயில்வே கேட்டில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குத் தாமதமாய் சென்று பிரம்பால் அடிவாங்குவேன். ஆனால் என்றுமே அந்த ஆசிரியை மீது எனக்கு பகை உணர்ச்சி ஏனோ ஏற்பட்டதில்லை! ஒருவேளை இரயில் தந்த சினேகம் காரணமாக இது பெரிதாக இல்லாமல் போயிருக்கலாம்.

          எனக்கு மண்வாசனை என்றால் என்ன என்பதை உணரவைத்தது இந்த ஊர்தான். தினமும் வேர்க்கடலைக்காரனின் சப்தம் கேட்டு "மணி நாலரை" என்று சொன்ன நாட்களை மறக்கமுடியாது. தினமும் ஒருவர் "காரப்பொரி, பாப்கார்ன்!" என்று ஸ்டைலாக சொல்லிக்கொண்டே பாப்கார்ன் விற்க வருவார். அவரை ஏமாற்றி கொஞ்சம் காரப்பொறியை அடித்து கொண்டு போவதை ரசித்துச் சிரிப்பார். வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரத்தில் உள்ள 'ஓம்' பொறிக்கப்பட்ட வேல் தெரியும். அதைப் பார்த்து, "அதோ அந்தக் கோயிலுக்குள்ளதான்டா உன் தாத்தா இருக்காரு", என்று என் பாட்டி சொன்னத‌ன் அர்த்தம் இன்றுதான் எனக்கு உறைக்கிறது.

          சோனை மீனா நகரில் உள்ள அத்தனை மக்களையும் என் பெற்றோருக்குத் தெரியும். திருமங்கலத்தில் உறவு வட்டாரம் பெரிது! இப்பொழுது சென்னையில் என் வீட்டில் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குப் பக்கத்து வீடு காலியாக இருக்கிறதா, அல்லது யாராவது குடியேறியிருக்கிறார்களா என்பதுகூடத் தெரியாது! என் திருமங்கல சுற்றத்தார் அனைவரும் இப்போது என் நினைவுகளாகத்தான் வலம் வருகிறார்கள்.

          திருமங்கலத்தில் காவல்காரர்களுக்கு இணையாக காவல் தெய்வங்களும் விழித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு மண் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மதிப்பு அதிகம். திருவிழா நாட்களிலும் ஜல்லிக்கட்டின்போதும் திருமங்கலமே அல்லோலகல்லோலப்பட்டிருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது அந்த நாட்களில் திருமங்கலத்திற்கு வந்து அந்த மண்ணின் புழுதியைத் தாங்கிச் செல்லவேண்டும். அங்கு கிடைக்கும் மனித வளத்தை, உணர்ச்சிகளை, அன்பினை உள்வாங்கி ஒரு பி.ஹெச்.டி. கூட பண்ணலாம்!

          NH-7 வந்துவிட்டது, ஊரின் எல்லை அதுதான். ஒரு நெகிழ்வான, நிறைவான, இன்னும் சொல்வதென்றால் ஒரு வாழ்வை வாழ்ந்த நிறைவை உங்கள் மனஇணுக்கில் நுழைத்துவிடும் திருமங்கலத்தின் செம்மண் நிறம், உங்கள் சட்டையோடு ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த நிறத்தில்தான் எத்தனை உயிரோடு உறவாடிய பெருமிதம் பொங்குகிறது! "அடிக்கடி ஊருக்கு வாங்க தம்பி", என சொல்கிறதோ என் அன்னை ஊர்!

Comments

  1. அருமை நண்பரே...
    தூங்காநகரின் துணைநகரம் - நம் திருமங்கலம்
    உமது பணி சிறக்க வாழ்த்துகிறோம்... :)

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி