Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

செம்பாதை

Picture taken from 'Red Corridor to be Redrawn' - The Hindu, dated 25/07/16
Extremism = தீவிரவாதம்
Terrorism = பயங்கரவாதம்

          நக்சலிசமும் மாவோயிசமும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவை இரண்டும் அழிக்கப்படவேண்டும் என்ற கருத்துள்ளவன் நான். ஆனால் நக்சலைட்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் நான் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்த மாட்டேன். “வன்முறையைக் கையில் எடுத்து மக்களை அச்சுறுத்துபவன் பயங்கரவாதி, பிறகு என்ன?”, என்று அகராதியைக் காட்டும் அளவிற்கு இது எளிய சிக்கல் இல்லை. முதலில் அவர்கள் இந்தியர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தீர்வுக்காக வன்முறையைக் கையில் எடுப்பவர்கள், அப்படி எடுத்தவர்களால் மூளைச் சலவை செய்யப்படுபவர்கள். அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருக்கக்கூடாது என்று நாம் பாடம் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இதில் அரசாங்கத்தின் மீதும் ஒட்டுமொத்தப் பழியை சுமத்த முடியாது. நாம் நக்சல் அமைப்புகளின் வளர்ச்சியையும் பழங்குடியினரின் சிக்கல்களையும் இணைத்தே பார்க்கவேண்டும். இன்று நக்சல்/மாவோ அமைப்புகள் மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கிந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருக்கப் பல காரணிகள் உள்ளன. அவை,

          1. மாவோ/நக்சல் அமைப்புகள் வலுவாக இருக்கும் இடங்கள் பழங்குடியினர் வாழும் பகுதிகள். காலனியத்திற்கு எதிரான எதிர்ப்பின் வழியாக இந்திய தேசியத்தைக் கட்டமைத்த இந்திய தேசிய காங்கிரஸ், வெற்றிகரமாக சுதந்திரப் போராட்டத்திற்குள் வெகு மக்களை இழுத்தது. அதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இருந்தார்கள், அனைத்து சாதி மக்களுக்கும் இருந்தார்கள். இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்திய காந்தி இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்துக்கொண்டே பயணப்பட வேண்டும் என்று நினைத்தார், அப்படியே செய்தார். ஆனால் அதே நேரத்தில் எங்குமே அவர் பழங்குடியின மக்களை இணைத்துக்கொள்ளவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்[1]. சமத்துவம் வேண்டி தாழ்த்தப்பட்டவர் பிரச்னையைக் கையில் எடுத்த காந்தி, மத நல்லிணக்கம் வேண்டி இந்து-முஸ்லிம் பிரச்னையைக் கையில் எடுத்த காந்தி, நாளை இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது பாதிக்கப்படப்போகும் பழங்குடியினர் பற்றிப் பேசவில்லை. அதற்குக் காரணம், சுதந்திர இந்தியா குறித்த காந்தியின் கனவு இன்றைய இந்தியாவிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. காந்தி இந்தியாவை வட்டங்களாக விரிந்துக்கொண்டே செல்லும் கிராமக் குடியரசுகளின் தொகுப்பாகக் கனவு கண்டார்[2]. எனவே காந்தி ஏன் பழங்குடியினர் சிக்கல்களைப் பேசவில்லை என்று குற்றம் சுமத்த முடியாது. அதே நேரத்தில் அவர் பேசாததால் பழங்குடியினர் சிக்கல்கள் மைய அரசியலில் எதிரொலிக்கவில்லை என்பதும் உண்மை. எனவே இயல்பாகவே சுதந்திரத்திற்குப் பிறகு புதிய அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு விசுவாசம் வரவில்லை. இது இன்னொரு அரசாங்கம் என்ற அளவிலேயே பழங்குடியினத் தலைமைகள் பார்த்தன.

          2. இந்தியாவில் ஒரு சமூகம் கூட்டாக வளரத் தேவைப்படுவது அரசியல் அதிகாரம். அந்த அரசியல் அதிகாரம் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அந்த குறிப்பிட்ட சமூக மக்களை சென்றடைத்தால் அந்த இயக்கத்திற்கு நல்ல ஆதரவு கிட்டும். இதுதான் சூத்திரம். அப்படி இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களை அம்பேத்கரால் இணைக்க முடிந்தது, இன்று அம்பேத்கர் என்ற குறியீட்டை வைத்து இன்று அந்த இயக்கம் முன் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு அரசியல் தலைமை கிடைத்ததுபோல் பழங்குடியின மக்களுக்கு யாரும் கிடைக்கவில்லை[1] (ஜெய்பால் சிங்கைத் தவிர்த்து - வெவ்வேறு குடிகள் என்பதால் இணைப்பதிலும் சிக்கல் உண்டு). மேலும் மைனாரிட்டிதானே என்று தேர்தல் அரசியலும் இவர்களை சரியாக கவனிப்பதில்லை. அது விட்ட இடத்தை மாவோ/நக்சல் இயக்கங்கள் பிடித்துக் கொண்டுவிட்டன.

          3. அரை நூற்றாண்டு காலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டு பாதுகாப்பு என்ற கோணத்திலேயே இந்திய அரசாங்கம் அணுகியது. பிரிவினைவாதிகள்/நக்சல்/மாவோயிஸ்டுகளின் இடையூறு இருந்தால் எப்படி வளர்ச்சி வரும், அவர்களை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் AFSPA-வை அமல்படுத்த, அதனால் விளையும் அரசுக்கு எதிரான அதிருப்தியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இடதுசாரித் தீவிரவாத இயக்கங்கள் மக்களை அரசாங்கத்திற்கு எதிராக மேலும் மூளைச் சலவை செய்ய , இப்படி ஒரு வட்டத்திற்குள் இந்தப் பிரச்னை சிக்கிக்கொண்டது.. இந்தக் கொடுமையின் உச்சம் சத்தீஸ்கர் அரசாங்கமே ‘Salwa Judum' என்ற ஒரு அரசு சாரா வன்முறை அமைப்பைக் களத்தில் இறக்கி நக்சலைட்டுகளை வேட்டையாடச் சொன்னதுதான்.

          4. “ஒரு மனிதனின் அடையாளங்கள் அழிக்கப்பட்டால் அவனை ஓரணியில் திரட்டி அவனுக்குள் மாற்றுக் கட்சியினரின் மீது வெறுப்புணர்ச்சியை எளிதான வளர்த்துவிட முடியும்”, என்று எச்சரிக்கிறார் ஆஷிஸ் நந்தி[3]. இந்தப் பகுதியில் உள்ள பன்முகத்தன்மையை அரசாங்கம் கொண்டாடவில்லை. இந்தித் திணிப்பால்(ஒரு காரணி) மொழியடையாளத்தை கோண்ட் மக்கள் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்த நிலையில்தான் மாவோயிஸ்டுகள் காட்சிக்குள்ளே வருகிறார்கள். அவர்கள் அம்மக்களிடம் கோண்டி மொழியில் இயல்பாகப் பேசிப் பழக, அம்மக்களுக்கு ’இவன் நம் ஆள்’, என்கிற பிணைப்பு ஏற்பட்டது. மேலும் தொலைந்துபோன கோண்டி வரிவடிவம் மீட்கப்பட்டதை அறிந்து அதை அவர்கள் இம்மக்களுக்கு அளிக்க, மொத்தமாக இம்மக்கள் மாவோயிஸ்டுகள் பக்கம் சென்றுவிட்டார்கள்[4]. உண்மையில் அரசாங்கம் செய்திருக்க வேண்டிய வேலை இது. இன்று மாவோயிஸ்டுகளுக்கு கோண்டி ஒரு இணைப்பு மொழி. அதே நேரத்தில் ஒவ்வொரு பகுதி மக்களையும் அவர்களின் மொழியிலேயே சென்றடைகிறார்கள்.

          5. சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி வளர்ச்சியை நிராகரிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பழங்குடியினரின் நிலம் என்பது இந்தியாவிற்கு உட்பட்டதே என்ற தர்க்கத்தில் இந்திய அரசாங்கம் அவர்களின் பகுதிகளை சுரங்கப் பணிகளுக்கும் அணை கட்டவும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதில் மூன்று தோல்விகள் உள்ளன.

அ) நிலமிழந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் அரசாங்கம் காட்டிய மெத்தனப் போக்கு. 25 ஆண்டுகளாக மறுவாழ்வு கிடைக்காத மக்கள் பற்றியெல்லாம் செய்திகள் உள்ளன.

ஆ) விவசாயத்தையும் காடுகளையும் புனிதமாகக் கருதும் அவர்களிடம் சரியாகப் பேச்சு வார்த்தை நடத்தாமல் பெரு இயந்திரங்கள் மூலம் காடுகளை அழித்தும், மலைகளை வெடி வைத்துத் தகர்த்தும் வருகிறது அரசாங்கம். அவர்களுக்கு காந்தி, நேரு, சுதந்திரம், வளர்ச்சி எல்லாம் எப்படித் தெரியும்? அரசாங்கம் என்றவுடன் அவர்களின் நினைவிற்கு வருவது, அது பெரு இயந்திரங்கள் மூலம் இயற்கையை அடிக்கும், மரபியல் அழிவுக்கு வழிவகுக்கும், என்பதே.

இ) State-Capitalists nexus. பெரும்பாலும் மறுவாழ்வு தரும் பொறுப்பு தனியார் பெரு நிறுவனங்களிடம் விடப்படுகின்றன, இது குறித்த ஒழுங்குமுறைகள் 2013-ல் இயற்றப்பட்ட  நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும். மீள்குடியேற்றக் சட்டத்தில் உள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி அரசாங்கம் தொடர்ந்து அவசரச் சட்டங்களை அமல்படுத்தி 2013 சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது. அதாவது இந்த அவசர சட்டத்தின் மூலம் பொது கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை, மக்களின் ஒப்புதல் பெறத் தேவையில்லை, சமூக பாதிப்பு மதீப்பீட்டையும் நடத்தத் தேவையில்லை[5]. இந்த அரசு-தனியார் கூட்டுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். மொத்தம் 59,203 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளன என்று ஒடிசா அரசு நீதிபதி ஷா ஆணைக்குழுவிடம் ஒப்புக்கொண்டது. ஒப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒடிசாவின் மொத்த மாநில உற்பத்தியில் அது கிட்டத்தட்ட கால்வாசி பங்கு![6] ஷா ஆணைக்குழுவின் அறிக்கை 2014 பிப்ரவரி 10 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது தொடர்பாக அங்கு ஒரு விவாதமும் நடைபெறவில்லை. ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்பிலான அரசாங்க சொத்து கொள்ளையடிக்கப்பட்டாலும் இதுவரை அது தொடர்பாக எந்த ஒரு அரசு அதிகாரியும் தனியார் அலுவலரும் கைது செய்யப்படவில்லை; இன்னும் ஒரு சுரங்க உரிமம் கூட ரத்து செய்யப்படவில்லை; இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை![6] அரசு-தனியார் கூட்டு ஒரு சிக்கல் என்றால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் போன்றவற்றின் கோரிக்கைகள் கேபினெட்டின் கூட்டு விருப்பத்திற்கு எதிராக இருந்தால்(பல) அவை நிராகரிக்கப்படுவது மற்றொரு சிக்கல்.[2]

          6. கிராம சபைகள் வலுவாக உள்ள கிராமங்களிலும் கிராம சபைகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் இடையே தொடர்ந்த உறவும் இருக்கும் பகுதிகளிலும் நக்சல் இயக்கங்கள் பெரும்பாலும் வலுவிழந்திருக்கின்றன (விதிவிலக்குகள் உண்டு). ஆனால் கிராம சபைகளுக்கான 29 பிரிவுகளில்(பதினொராவது அட்டவணைப்படி) எத்தனை பிரிவுகளை அளிக்கலாம் என்னும் அதிகாரத்தை பஞ்சாயத்து சட்டம் மாநில அரசாங்கத்திடம் விடுகிறது. விளைவு, பல மாநிலங்கள் அதிகாரப் பரவலை சரியாக நிறைவேற்றவில்லை. கேரள அரசு அனைத்தையும் தந்துவிட்டது, தமிழ்நாடு நாலரை, இப்படி வேறுபாடுகள் உள்ளன. அதிகாரப்பரவல் செய்யலாமா, உன் கருத்து என்ன என்று மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்பார்கள். அதிகாரப் பரவல் நடந்தால் தன் அதிகாரம் குறைந்துவிடும் என்ற மாவட்ட ஆட்சியரின் சுய பார்வையும் இந்த அதிகாரப்பரவலுக்குத் தடையாக இருக்கலாம்[2].

          7. நக்சல் மற்றும் மாவோ இயக்கங்களில் படித்தவர்களும் இருக்கிறார்கள். பள்ளியில் எவ்வளவுதான் ஜனநாயகம் பற்றிப் படித்தாலும்(கண்டிப்பாகப் போதாது, இது அதிகப்படுத்தப்படவேண்டும்) நடைமுறையில் தங்கள் பகுதி மக்களுக்கு அது நல்லது செய்யவில்லை என்ற எண்ணம்தான் அவர்களுக்கு வருகிறது. அதே நேரத்தில் பள்ளியில் இந்தியா குறித்து கற்றுத் தருபவையும் போதுமானதாக இல்லை, மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வரலாறு என்று பாட புத்தகம் சொல்வதற்கும் மரத்தடியில் அமர்ந்து ஒரு பழங்குடியின கிழவர் சொல்வதற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. பாட புத்தகம் சொன்ன கருத்து பாட புத்தகத்தோடு நின்றுவிட, நடைமுறை வாழ்க்கை முறை அந்தக் கிழவரின் கோணத்தையே பிரதிபலிக்க, இளைஞர்கள் இந்திய அரசையும் அதன் ஜனநாயகத்தையும் நிராகரிக்கிறார்கள். இன்றும் நக்சல் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் சரிவர இயங்குவதில்லை, நக்சலைட்டுகளே சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கம் அது. எப்படி எல்லா அமைப்புகளிலும் சுரண்டல் இருக்கிறதோ அப்படி மக்களைக் காக்கிறேன் என்று ஆயுதம் ஏந்திய நக்சல் தலைமைகள், பேச்சு வார்த்தை நடத்தினால் அரசாங்கத்தின் கை ஓங்கிவிடும், தன் அதிகாரம் போய்விடும் என்று மக்களை அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து தனிமைப் படுத்தும் செயலையும் செய்தபடி இருக்கிறார்கள்.

          மேற்சொன்னவை பழங்குடியின மக்களிடையே நக்சலிசமும் மாவோயிசமும் வளர்வதற்கான காரணிகள். ஆனால் நிரந்தரத் தீர்வை நோக்கி இந்திய அரசாங்கம் செயல்படுவதற்குத் தடையாக இருப்பது, பழங்குடியின மக்களுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அதே இடது சாரித் தீவிரவாதிகள்தான் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடைய அரசியலை நிராகரிக்கக் காரணங்கள் நிறைய உள்ளன. இந்திய ஜனநாயகத்தை நிராகரிக்கும் அவர்கள் அதற்கு மாற்றாக முன்வைக்கும் அமைப்பு நம்முடைய ஜனநாயகத்தை விட மேம்பட்டதா என்றால் இல்லை. ஒரு தாராளவாத சிந்தனை அவர்களிடம் இல்லை. தொலைநோக்குப் பார்வையும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக “வன்முறையைக் கையில் எடுத்தால் அது காலப்போக்கில் சொந்த மக்களைக் கொல்லவும் பயன்படும்”, என்ற காந்தியின் வார்த்தைகளை அவர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.  செங்கோட்டையில் செங்கொடி பறக்க வேண்டும் என்றால் அதன் பிறகு என்ன? இந்தியாவின் பன்முகத்தன்மையை அரவணைத்துக்கொண்டு எப்படி அவர்கள் முன்னே நகரப்போகிறார்கள்? அவர்களின் மொழிக்கொள்கை, கல்விக்கொள்கை என்ன? அது சர்வதேசத் தரத்துடன் போட்டி போட வல்லதா? அவர்கள் வரையும் அரசமைப்புச் சட்டம் எப்படி இருக்கும்? கன்ஃபூஷியஸிய சமூகத்தில் துளிர்த்த மாவோயிசம் எப்படி இன்று உரிமைகள் பேசும் இந்தியாவில் வெற்றி பெரும்? அரசு இயந்திரத்தில் உள்ள சுரண்டல்களைக் கைகாட்டும் அவர்களின் அமைப்பிலும் சுரண்டல் இருக்கிறதே? அதிகாரக் குவிப்பின் மூலம் மக்களை அடக்கியாள முடிகிறதே? மிகவும் முக்கியமாக அவர்களின் வழிமுறைகளில் ஜனநாயகத்தன்மை இல்லவே இல்லையே! அவர்கள் அங்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள். சுரங்க முதலாளிகளை மிரட்டிப் பணம் வசூலிக்கிறார்கள். பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த சிக்கல் இன்று மிக மிக முக்கியமான விவாதப்பொருளாக ஆக வேண்டிய அதே நேரத்தில் இம்மக்களின் பிரதிநிதிகள் மாவோயிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் அல்ல என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மெத்தனத்தாலும் தவறான கொள்கைகளாலும் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்த நச்சுக்கிருமி ஆக்கிரமித்துள்ளது என்றே அணுகவேண்டும். பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது வேறு, அவர்களுக்காக இயங்குகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் இடது சாரித் தீவிரவாத இயக்கங்களை ஆதரிப்பது வேறு. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

          தரமான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, அடிப்படை உரிமை போன்றவை இல்லாத இடங்களில், நீடித்த ராணுவ இருப்பு இருக்கும் இடங்களில் வேலைவாய்ப்பு மட்டும் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிடாது. அது வளர்ச்சிக்கான ஒரு காரணி, அவ்வளவே. வேலைவாய்ப்பு கொடுத்து கையில் சம்பளம் மட்டும் கொடுத்தால் போதாது. அதை செலவழிக்கும் வழிகளை உருவாக்கி சொத்துருவாக்கம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். ஒருபக்கம் அப்படி வளர்ச்சி நடக்கும்போது மறுபக்கம் அரசு அங்கு தரமான கல்வியையும், சுகாதாரத்தையும்(குறிப்பாக மருத்துவ வசதியையும் nutritional efficiency-யையும்) அடிப்படைக் உட்கட்டுமானங்களையும்(இங்குதான் சிக்கல். போடுகிற சாலையை மாவோயிஸ்டுகள் பெயர்த்தெடுத்துவிடுகிறார்கள்!) ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலக நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மை பெறவேண்டும். அவை மின்மயமாக்கமும் அடைய வேண்டும்.  விளையாட்டு, மற்றும் உள்ளூர் தொழில்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் பெருக வேண்டும். சுரங்க நடவடிக்கைகளில் சட்டம் வரையறுத்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். மேலுள்ளவை பெருக பெருக AFSPA படிப்படியாக தளர்த்தப்பட வேண்டும். இவற்றின் கூட்டு இயக்கத்தால் மக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டு முன்னேற்றம் ஏற்படும். என்று அம்மக்களை நாம் நம்மில் ஒருவராகப் பார்த்து, அவர்களுக்கு உரிமைகளை வழங்கி, இந்தியாவை உண்மையாகவே அனைவருக்குமான இந்தியாவாக மாற்றுகிறோமோ, என்று அங்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைத்து அரசாங்கத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தைப் பெறுகிறோமோ, அன்றுதான் மாவோயிசம் மற்றும் நக்சலிசம் தேவை என்ற கருத்து வலுவிழக்கத் துவங்கும். ஆனால் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நக்சலைட், மாவோயிஸ்ட் என்ற பெயர்களை ஊடகத்தில் நாம் கேட்டுக்கொண்டுதான் இருப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:
1. கிராம சபைகள் - ஒரு பார்வை
2. இந்தியாவும் இந்தியும்

References:
1. Tragedy of Adivasis in Independent India - 36th JP Memorial Lecture by Ramachandra Guha
2. Panchayati Raj: Oxford India Short Introductions - Kuldeep Mathur
3. Talking India - Ashis Nandy, Oxford
4. Many Tongues, One Script – Ushinor Majumdar - Tehelka
5. Not Just a Coal Block - Chitrangada Choudhury - PARI Network
6. Illegal Mining's Ground Zero - Chitrangada Choudhury - PARI Network

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி