Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 10


அடுத்த அரைமணி நேரத்திற்குக் கைகால் ஓடவில்லை. விஷ்ணுவின் நினைப்பு பயமுறுத்தியது. அவன் என்னைவிட உடல் வலிமை மிக்கவன். இப்படி எத்தனை பேருடன் சண்டையிட்டிருக்கிறானோ? சண்டை என்றால் எப்படி இருக்கும்? என்னையும் விஷ்ணுவையும் வளர்த்த இந்த சமூகம், இந்த ஆல்ஃபா மேல் சண்டையையெல்லாம் விட்டு நகர்ந்து பல்லாயிரம் வருடங்கள் ஆகிவிட்டனவே! என்ன செய்யப் போகிறேன்? எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தனவே தவிர படபடப்பு அடங்கவில்லை. பாக்கெட்டில் கைவிட்டு பர்சிலிருந்த கின்னகாவின் விசிட்டிங் கார்டை வெளியே எடுத்தேன்.

“கின்னகா, உன்னோடு பேச வேண்டும்”

“என்னை அழைப்பாய் என்று விஷ்ணு சொல்லியிருந்தான். பிசியாக இருக்கிறேன், ஃபோனை வை”, என்று துண்டித்தாள். மீண்டும் அழைத்தேன்.

“எங்கிருக்கிறாய்? வாழ்க்கை போரடிக்கிறது”

“சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் உளவியலைப் பதிவு செய்துகொண்டிருக்கிறேன். வா.”

பழக்கத்தில் தன்னிச்சையாக அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். எந்த பத்திர உணர்வையும் அந்தப் பூட்டு அப்போது தரவில்லை என்பதைப் படியிறங்கும்போதுதான் உணர்ந்தேன். டிமோனிடம் வேறு சொல்லிக்கொள்ளவில்லை. ஆர்த்ரிட்டிஸ் காலோடு அவனால் முடிந்தவரை என்னிடம் லாக்கர் பற்றி உணர்த்த முயற்சித்தான். கொஞ்சம் சின்ன பையனாக இருந்திருந்தால் குதித்து குதித்துக் காட்டியிருப்பான். பாவம் வயசாகிவிட்டது. வாழ்ந்து முடிந்த தாத்தாவுக்கு வீட்டில் மதிப்பற்று இருப்பது எப்படி இருக்குமோ இப்போது அப்படி இருக்கும் டிமோனுக்கு. வரவர அவனை நான் மதிப்பதே இல்லை. இன்னும் ஒரு வாரம்தான் இருக்... சே!

தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டேன். இருபது நிமிடங்களுக்குப் பிறகு கின்னகாவைக் கண்டுபிடித்து,

“கண்ட கண்ட நினைப்பெல்லாம் வருகிறது கின்னகா”, என்றேன்.

“இன்ட்ரெஸ்டிங் மேட்டர் ஒன்று சொல்கிறேன் கேள். இவர்களில் சில பேரிடம் மட்டும்தான் மொபைல் இருக்கிறதாம். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் தன் மனைவி மக்களோடு...”

“ப்ளீஸ் எனக்கு உன் உதவி தேவை”

“எனக்குப் புரிகிறது. ஆனால் வேலைக்கு நடுவே இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என்னோடு வா; நடுநடுவே பேசலாம்”

அவள் ஒவ்வொருவரையாக சந்தித்தாள். பீகார், மணிப்பூர் முதல் மதுரை வரை இடம் கலவையாக இருந்தது... அவள் எடுத்த நேர்காணல்களிலெல்லாம் உள்ளம் செல்லவில்லை. அதை அவள் “A Neo sapiens' guide to understand anthropocene" என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்துவாள். விரும்பினால் அதைப் படித்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது என்னைப் பற்றிப் பேச்சு வந்தது.

“விஷ்ணுதான் ஜெயிக்கப் போகிறான். ஆனால் நான் நீ ஜெயிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். மாற்றம் ஏற்படும் இடங்கள் என்றுமே ஆராய்ச்சி செய்ய சிறந்தவை.”, என்றாள்.

“தோற்றால் என்னால் அவனுக்கு அடங்கி ஒடுங்கி இருக்க முடியாது. அதே நேரத்தில் நான் சாகவும் விரும்பவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த ஒரு வாரத்தில் என்னால் உபயோகமான எதையேனும் கற்றுக்கொள்ள முடியுமா?”

“இணையத்தில் தேடி ரிஃப்ளெக்ஸ் பயிற்சி செய். குறைந்தபட்சம் அடிகளைக் கணித்து வலிக்குத் தயாராகலாம்.”

“எனக்கு இந்த ஆல்ஃபா மேல் எல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யலாமே?”, என்று கேட்டேன்.

“படிப்படியாக அதெல்லாம் வரும். சமூகம் தனக்குத் தேவையானதைத் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும். மேலும் ஆல்ஃபா மேலுக்கான பண்புகள் மட்டும்தான் சமூகத்தில் மாறுகின்றனவே தவிர ஆல்ஃபா மேல்கள் மறைவதில்லை.”

“நான் இதைக் கேட்க இங்கே வரவில்லை”

“என் நேரத்தை வீணாக்காதே, கிளம்பு”

“சரி இந்த ஒரு வாரம் உன்னால் என் வீட்டில் தங்க முடியுமா?”

“முடியும். கிளம்பு.”

இப்படி சிறு சிறு வார்த்தைகளாகத் தான் உரையாடல் நகர்ந்தது. அது எனக்கு முழுக்க முழுக்க பயனுள்ளதாக இருந்தது என்று சொல்லமுடியாது. நான் வெல்ல வேண்டும் என்று நினைத்தாளாம், ஆனால் நான் வெல்ல மாட்டேனாம். அவள் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைத்தான் சொல்லியிருப்பேன் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால்  உயிர்வாழும் இச்சை எண்ணத்தை எதிர்திசையில் கொண்டு போனது புதுவகையான அவஸ்தையாக இருந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கயிறால் இழுக்கப் படுவதைப் போல். ஆனால் பரவாயில்லை, ஒரு வாரம் என்னுடன் தங்குகிறாளே, என்று நினைத்து வீட்டிற்கு வந்தேன்.

சென்ற வாரம் பீச்சில் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்த ஒரு வாரத்திற்குள் எந்த பாதிக்கப்பட்ட ஒரிஜினல் காதலனும் தேடி வந்து வெட்டிவிடக் கூடாது. இருக்கிற சிக்கல்கள் போதாதென்று இது வேறு. நேரம் மிக மெதுவாக நகர்ந்தது. கீழே மெத்தையை விரித்து, இணையத்தில் ரிஃப்ளெக்ஸ் பயிற்சியைக் கற்றுக்கொள்ள முயன்றேன். மிகவும் கொடுமையான ஆறு மணி நேரம் அது. ஒருவழியாக அதை முடித்து அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். டின்னர் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கின்னகா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

“ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்போதும் அது செக்ஸில் முடிவது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது கின்னகா”

“ஏன்?”

“தெரியவில்லை. நான் உன்னை ஒரு பொருளாகப் பார்க்கவில்லை என்பது மட்டும் உறுதி”

“நீ என்னைப் பொருளாகப் பார்க்கவில்லை. நான் உன்னை நம்பி இல்லை. உனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. அதை என்னிடமிருந்து என் சம்மதத்தோடு பெறுகிறாய். எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. அதை உன்னிடமிருந்து உன் சம்மதத்தோடு பெறுகிறேன். வாட் பார்ட் ஆஃப் திஸ் பாதர்ஸ் யூ?”

“இல்லை, உன்னைப் பற்றிப் பேச எவ்வளவோ இருந்தும் நான் உன்னை செக்ஸோடுதான் அதிகம் இணைத்துப் பேசுகிறேன்.”

“உன் பார்வையில் கோளாறு இல்லாதவரை இட்ஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னொரு முறை?”

“நீயே என்னைக் கொன்றுவிடுவாய் போலிருக்கிறது”

“இட்ஸ் வர்த் இட். இல்லை என்று சொல்லப் போகிறாயா?”

“டிமோன் பார்க்கிறான். வருத்தப்படுவான்”

உள்ளே குபீரென்று சிரித்திருக்கிறாள். மெலிதாக சிரிப்பு அவள் உதட்டோரம் தெரிந்தது.

“இப்படியே ஏழு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிடுகிறேன். எனக்கு உதவு”, என்றேன்.

“கடைசி ஆசை. ஷ்யூர்!”

அப்பொழுது அலைபேசி ஒலித்தது. விஷ்ணு. இவனை நான் எதிர்பார்க்கவில்லை.

“என்ன வேண்டும் சொல்லுங்கள் மிஸ்டர். ஆல்ஃபா மேல்”

“என் கடைசி ஆசையை நிறைவேற்று சகோ, உடனே மைதானத்திற்கு வா”

“வாட் த ஃபக்!”, என்று கூவினேன்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி