Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 12


“என்ன? புத்தகமா”, புரியாமல் கேட்டேன்.

“ஆமாம். நான் ஏற்கனவேயே கொஞ்சம் எழுதியிருக்கிறேன். கின்னகாவிற்கு என் இடம் தெரியும். அவளோடு சென்று அது கிடைக்கிறதா பார். அப்படியே உன் காயின் ஆல்பத்தையும் எடுத்துக்கொள். அதற்காக என்னை மன்னித்துவிடு.”

“இல்லை விஷ்ணு. உன் இடத்தில் நான் இருந்திருந்தால்...”

“கட் த புல்ஷிட். எனிவே, நீ தனியாக ஒரு புத்தகம் எழுதவேண்டும். புதியவரியல் இலக்கியம் என்று ஒன்று உருவாக வேண்டும். நம் குரல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். நம் உணர்வுகள், ரசனைகள், விருப்பங்கள், போன்றவை எவ்வாறு நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து மாறுபட்டது என்று பதியப்பட வேண்டும். அதில் எதுவும் கறுப்பு வெள்ளையாக இருக்கக்கூடாது. அது உணர்வுகளின் சலசலப்புகளைத் தாண்டிக் குரூரமான நேர்மையுடன் இருக்க வேண்டும். நேரில் நாம் இருப்பதுபோல் கட் த புல்ஷிட் என்று விஷயத்திற்கு வர வேண்டும். அடையாளம் தேவை என்னும் பட்சத்தில், அது நாம் விரும்பியவாரே இருக்கட்டும்.”, என்றான்.

“சரி விஷ்ணு. நான் எழுதுகிறேன்”, என்றேன்.

“அடையாளங்களை வெறுத்தாலும், நம் அடையாளத்தைப் பதிவு செய்வது முக்கியம் சகோ. மறந்துவிடாதே!”

“ஐ வோன்ட். புத்தகம் எழுதுகிறேன். அதில் உன்னைப் பற்றிச் சொல்வேன். உன் பெயர் நூற்றாண்டுகள் கடந்து நிற்கப்போகிறது”, என்று அவன் கைகளைப் பிடித்தேன். அவை சுரணையற்று இருந்தன.

“நான் கொஞ்சம் கொஞ்சமாக சாகிறேன் சகோ. சாக்ரட்டீஸ் போல் இறப்பைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் வலி உயிர் போகிறது. சாக்ரட்டீஸ் ஒரு புதியவராக இருந்திருப்பாரோ என்று இப்பொழுது தோன்றுகிறது”, என்று சிரித்தான். மூச்சுவிடுவது கடினமாகிக் கொண்டே வந்தது.

“யூத்தனைஸ் செய்துவிடவா விஷ்ணு?”, என்று டாக்டர் கேட்டார்.

“இல்லை வேண்டாம். எனக்கு மெர்சி தேவையில்லை. சகோ, டிமோனை பத்திரமாகப் பார்த்துக்கொள். காயின் ஆல்பத்திற்கு அடுத்தபடியாக டிமோனைக் கொல்ல உத்தேசித்திருந்தேன். ஒரு ஆல்ஃபா மேலாக நான் உன்னைப் பகைத்துக்கொண்டேன், அவ்வளவே. அது உனக்கு விரைவில் புரியும் சகோ.”

நான் அமைதியாக இருந்தேன்.

“இருபத்தியோராம் நூற்றாண்டில் கடிதமா என்றுதானே பிரித்துப் பார்த்தாய்? எப்படி என் ரிட்டாரிக்?”, என்று கண்ணடித்தான்.

“என் வாழ்க்கையையே பத்து நாட்களில் புரட்டிப் போட்டுவிட்டாய் நீ”, என்றேன் நன்றியுடன். “நான் யார் என்று இப்போது முழுமையாகப் புரிகிறது. நான்… நான் ஒரு புதியவன்!”

“ம்ஹும். புதியவர்களுக்கெல்லாம் தலைவன்.”, என்றான் தீனமாக. “சிலுவையில் உள்ள ஆணிகளை அவன் பிடுங்க வேண்டும். ஆணிகளையாவது. விஷ்ணு.”, என்று ஒரு கடைசி புன்சிரிப்பு சிரித்துவிட்டு, என்னைப் பார்த்தபடியே மெல்லக் கண்மூடினான். புதியவர்களின் அந்த ஆதித் தலைவன் இறுதியாக ஒரு முறை சுயநினைவோடு மூச்சை இழுத்து விட்டுப் புகாரின்றி இறந்துபோனான்.

கின்னகா என் தோளில் கை போட்டு, “புதியவர்களின் ஆல்ஃபா மேல். அவன் சர்வாதிகார சுயாதிபத்தியனாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை”, என்றாள். நான் அவன் கண் இமைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இன்று இவன் நான்காவது மர ஆக்சிடன்ட் கேஸ். வார்தா புயல் புரட்டிப்போட்டிருக்கிறது”, என்றார் டாக்டர். கூட்டம் மெதுவாக சிரம் தாழ்த்தியது.

அவன் உடலை மருத்துவமனையில் சேர்ப்பித்தோம். கின்னகா அவன் அம்மாவிற்குத் தகவல் சொல்லிவிட்டு, “கமான் லெட்ஸ் கோ”, என்றாள். இருவரும் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தோம்.

“ஆக நான் இந்த வாரம் உன் வீட்டில் தங்கும் தேவை இனி இல்லை. சண்டைதான் இல்லையே”, என்றாள்.

“ஆமாம்”

“சரி. நான் என் வீட்டிற்குச் செல்கிறேன். பார்ப்போம்”, என்றபடி பிரிந்து சென்றாள். நான் நடந்தபடி என் வீட்டிற்குச் சென்றேன். உள்ளே மூலையில் எப்பொழுதும் படுக்கும் இடத்தில் டிமோன் மூச்சின்றி இறந்து போய்க் கிடந்தான். நான் அவனருகே சென்று முட்டி போட்டு ஒரு முறை அவனைத் தடவி கொடுத்தேன். பிறகு ஓசையின்றி எழுந்து கின்னகாவை அலைபேசியில் அழைத்தேன்.

“கின்னகா. உன் துணை தேவைப்படுகிறது”

வெடெரினரி ஆம்புலன்ஸை அழைத்து ஆக வேண்டிய காரியங்களை செய்து டிமோனை எரித்து, எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப காலையாகிவிட்டது. கணினியின் முன் அமர்ந்து ராஜிநாமா கடிதம் எழுத ஆரம்பித்தேன். என் உணர்வுகள் எப்படி இருந்தன என்று விவரிப்பது கடினமாக இருக்கிறது. மனித இனங்களின் ஆல்ஃபா மேல் கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் என்ற கின்னகாவின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு பெரும் சுமை மூளையில் ஏற்றப்பட்டதுபோல் உணர்ந்தேன். பணம் படைத்த இயக்கத்தவரிடம் பேசி அடுத்த இரண்டு நாட்களில் என் பொருளாதாரத் தேவையை திடப்படுத்தினேன்.

அடுத்த சனிக்கிழமை மைதானத்தில் கூட்டம் கூடியது. விஷ்ணு மீது வீசிய பார்வையை அப்போது அனைவரும் என் மீது வீசினர். அந்தப் பார்வையில் சுயம் பிரதிபலித்தது. சில பார்வைகளில் நன்றியுணர்வு மேலிட்டது. ஒரு பார்வை மட்டும் பயமின்றி கேள்விக்குறிகள் நிறைந்ததாக இருந்தது. என் புருவங்கள் உயர்ந்தன.

“இன்ட்ரெஸ்டிங்!”

------------------------------------- x x ----------------------------------------

பார்த்தாயா சகோ? பத்தே பத்து நாட்களில் வாழ்க்கை, சிந்தனை அனைத்தும் மாறலாம். இது எழுதப்பட்டு சுமார் நூற்றைம்பது வருடங்களானாலும் இன்னமும் இது புனித நூல் ஆகாமல் இருக்கக் காரணம் இதில் எவரும் கறுப்பு வெள்ளையாக இல்லை. எந்த அடையாளங்களும் புனிதப்படுத்தப்படவில்லை. அதே போல் அடையாள மறுப்பும் புனிதப்படுத்தப்படவில்லை. இது எப்படிப் புனித நூலாக ஆகியிருக்க முடியும் என்று மனிதர்கள் கேட்பார்கள். அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் நூல் என்பது நமக்கு நெருக்கமானதுதானே? மனிதர்களுக்குப் பேரிடியான ஒரு விஷயம் சொல்கிறேன், கேள். கின்னகா பெற்றெடுத்த மகள் ஒரு புதியவளாக உருவாகி நம் இனத்தின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிட்டாள். நாம் நிச்சயமாகப் புதியவர்கள்தான்! உயிரியல் ரீதியாகப் புதியவர்கள்! நாம் மனிதர்கள் அல்ல சகோ!

உன்னிடம் எதையும் நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் முன்பே ஒரு புத்தகம் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது, ஆனால் அது கண்டுபிடிக்கப்படவில்லை. கின்னகா ஆவணப்படுத்திய செய்திகளும் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்படாமல் மறைந்திருக்கிறது. அவளும் குறுகிய காலத்தில் இறந்து போயிருக்கிறாள். அவள் செய்த ஆய்வுகள் என்னவாயின, புதியவர்கள் கோணத்தில் எவ்வாறு மனித நாகரிகத்தை நோக்குவது போன்ற கேள்விகள் அவளுக்குப் பிறகு மற்றவர்களால் தேடப்பட்டு வருகின்றன. சீக்ரட் சொசைட்டி என்றாலே எல்லாமே சீக்ரட்டாகத்தான் இருக்கும் போல.

ஆனால் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புதியவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. இப்போதோ இந்தப் புத்தகத்தின் காரணமாகப் புதியவர்கள் முன்பை விட இன்னும் சற்றே தெளிவடைந்து நம் இயக்கத்தில் எளிதாக இணைந்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் மனித சமூகத்திற்கும் இந்தப் புத்தகத்தினால் புதியவர்களைப் பற்றித் தெரிந்துவிட்டது. பிரச்னைகளுக்கான தீர்வு புதிய பிரச்னைகளை உருவாக்குவது இயற்கையே. எனிவே, இப்போது நம் இயக்கம் இருபத்தி ஏழு நாடுகளில் செயலில் இருக்கிறது. இதுவே பெரும் முன்னேற்றம்தான்.

மனித சமூகமும் முன்பைப் போல் இல்லை சகோ. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளங்களைத் துறந்தபடி வருகிறார்கள். அவர்களுக்கிடையேவும் நியூடிசம் பரவி வருகிறது. உடைகள் பயன்பாடு என்பதைத் தாண்டி ஃபேஷன் ஆகிவிட்டதால் நியூடிசத்தின் தாக்கம் பெரும் வேகத்தில் வளரவில்லை. இப்படி மனிதர்களுக்கிடையே அடையாளங்கள் அழியும்போது நாம் உண்மையிலேயே வேறு இனம்தானா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கின்னகாவின் தொலைந்து போன ஆய்வுகளில் இதற்கு பதில் கிடைக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்து ஜீனோம் சீக்வன்ஸில் வேரியேஷனைக் காண முடியவில்லை. அதனால் கின்னகாவின் மகள் கொடுத்த நம்பிக்கை சற்றே தளர்வதும் உண்மைதான். தட் திங் அசைட், மனிதர்கள் தங்களின் அடையாளத்தைத் துறக்கத் துறக்க நாமும் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறக்க வேண்டி வரும். ஆக, காலத்திற்கு ஏற்றார்போல் இந்தப் புத்தகத்தை மறுவாசிப்பு செய்யவும் நம் கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கவும் வேண்டியிருக்கிறது. சிலர் இந்தப் புத்தகத்தின் உரைநடையை மட்டும் ஆய்வு செய்யாமல், தன்னிலை கதை சொல்லியாக ஆரம்பித்த கதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏன் தன்னிலைக் குரல்கள் வளர்ந்தன என்ற ரீதியில் ஆய்வு செய்கிறார்கள். சிலர் எப்படி இரண்டாவது அத்தியாயத்திலேயே மனிதர்கள் தன்னிச்சையாகப் பேட்ரனைஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று உளவியல் திறனாய்வு செய்கிறார்கள். அதுபோக எழுத்தாளராக இல்லாமல் ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக இருந்ததால் எப்படி துவக்கத்திலும் ஆங்காங்கும் எழுத்து நடை தடுமாறியிருக்கிறது என்று லிங்க்விஸ்டிக் அனாலிஸிஸ் எல்லாம் செய்கிறார்கள். மேலும், விஷ்ணுவின் கடைசி வார்த்தைகள் புனைவுபோல் நாடகத்தன்மையோடு இருக்கின்றன என்றும் அதனால் அந்த உரையாடல் உண்மையாகவே நடந்ததுதானா என்றும் சந்தேகிக்கிறார்கள். புதியவர்கள் இப்படி என்றால் சில மனிதர்கள் யார் இந்த சத்தியா என்று வெட்டித்தனமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘எல்லாம் அனாட்டமி’ என்னும் வாக்கியத்தைப் பிளேகியரிசம் என்கிறார்கள். பெற்ற அம்மாவை கவனிக்காதவனெல்லாம் ஒரு ‘மனிதனா’, என்கிறார்கள். மொத்தத்தில் இப்போது ஆய்வு செய்ய நிறைய விஷயங்கள் நமக்குக் கிடைத்து விட்டன. புதியவர்களின் ஆல்ஃபா மேல் பண்புகள் காலப்போக்கில் என்னன்ன மாற்றங்களை சந்தித்திருக்கின்றன, புதியவர்களும் பிராணி வளர்ப்பும், மனித நாகரிகத்தின் பார்வையில் புதியவர்கள், அந்தப் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னன்ன, என்று உரையாடல்கள் பலப்பல நடந்து வருகின்றன. இவையெல்லாம்தான் நம் சொத்துகள், சகோ.

சரி, இருட்டிவிட்டது. இன்றைக்கு இது போதும். சில நாட்கள் என்னுடன் வா. நிறைய கற்றுக்கொள்ளலாம். அடுத்த வாரம் இயக்கம் கூடும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். நிறைய விவாதிக்கலாம். விளக்கங்களுக்குப் பஞ்சமேயில்லை. பிறகு இன்னொன்று. கடித ரிட்டாரிக்குக்கு மன்னிக்கவும், இனிமேல் அலைபேசியிலேயே தொடர்பு கொள்வோம். யூ ஆர் ரியலி இன்ட்ரெஸ்டிங்! வருகிறேன்... என்ன? என் பெயரா? விஷ்ணு என்று வைத்துக் கொள்ளேன்.


Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி