Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 1


என் கடிதத்தைப் பார்த்து என்னை சந்திக்க வந்ததற்கு நன்றி, சகோ. முதலில் பிரைவசியை மீறியதற்கு என்னை மன்னிக்கவும். பட் உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லேன், எங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வமில்லையா? ஆர்வமிருக்கிறதல்லவா? குட்!

மற்றவர்கள் போல் இல்லை நீ. உன்னிடம் நேராகவே விஷயத்திற்கு வர முடியும். புதியவரியல் இலக்கியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அடையாளங்களை நிராகரிக்கும் நமக்கு வாய்த்த முதல் அடையாளம் அதுதான். நம் இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் சொத்து அது. நான் உன்னை எதற்காகக் கண்காணித்தேன் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னால், அதை ஒரு முறை இப்போது வாசித்துவிடேன். இந்தா. ஜஸ்ட் 50 பக்கங்கள் அளவுதான் வரும். ஒரு முறை டக்கென்று வாசித்துவிடு. நான் அமைதியாக இருக்கிறேன். என்ன பார்க்கிறாய்? என்னடா பீச்சிற்கு வர சொல்லிவிட்டுப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறானே என்றா? சாரி சகோ, ஆடியோ புக் வேறொருத்தியிடம் இருக்கிறது, இல்லையென்றால் அதைக் கொண்டு வந்திருப்பேன். புத்தகம் வாசிப்பது நம் தலைமுறைக்குக் கடுப்புதான். ஆனால் இது மிக முக்கியமான விஷயம் அல்லவா? சரி சரி நான் விட்டால் பேசிக்கொண்டே இருப்பேன். நீ வாசி. குட் லக்!யூ ஆர் இன்ட்ரெஸ்டிங்! நீங்களும் என்னைப் போல் வித்தியாசமானவர்தான். நான் இப்போது சொல்லப் போவதில் நீங்கள் அதிகம் ஒத்துணர்வு அடைவீர்கள். ஒரே நாளில் இவ்வளவு நடக்குமா சகோ?
----------------------------------------------------------------------------------------------------------------
சார்மினாருக்கு அருகே டேபிள் விரித்து ஓட்டைக் காசுகளை விற்கிறார்களாம். இருநூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்துப் பைசாக்காசுகள் இரண்டை வாங்கி, அதைப் புகைப்படம் எடுத்து ஒருவன் வாட்சப் செய்திருந்தான். அதைக் கண்டதும் அவனிடம் மன்றாடி, அதில் ஒரு காசை நானூறு ரூபாய் கொடுத்து வாங்கி என் கலெக்‌ஷனில் செருகினேன் (1400 காசுகளை அதில் அடக்கலாம்; தடிபுக்). புத்தகத்தைக் கைகளால் தூரப் பிடித்து அதன்மேல் ஒரு பார்வையைப் படரவிட்டபோது, ஏனோ அந்த ஓட்டைக் காசினால் என் நாணயத் தொகுப்பிற்கு ஒரு முழுமை கிடைத்தது போலிருந்தது. இனிமேல் கண்ட காலிக்கோப்பையெல்லாம் என் கலெக்‌ஷனைக் கண்டு சிரிக்க மாட்டான் அல்லவா?

ஆல்பத்தை ஒரு வெல்வெட் பைக்குள் அடக்கி டேபிளின் மீது வைத்தேன். டிமோன் ஹக்குஹக்கு என்று மூச்சிரைத்தபடி எட்டிப்பார்த்தான்.

“டிமோன் பய்யா!”
“வொவ்!”
“மூச்சா போகணுமா?”
“வொஃப்!”

வாசலில் ஒரு நீலக் கவர் கிடந்தது. வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று டிமோனை வாக்கிங் அழைத்துச் சென்றேன். அந்த கோல்டன் தடிக்கழுதைக்கு இப்போது ஒன்பது வயதாகிறது. ஆர்த்ரிட்டிஸ் காலோடு அவன் லொங்கு லொங்கென்று...

“நாய் வாங்கினால் நான் இருக்க மாட்டேன்”, என்று அம்மா சொல்லிவிட, பகைத்துக்கொண்டு பத்தொன்பதாவது வயதில் இந்த வீட்டிற்கு வந்தேன். ஒரு கையில் லாப்ரடார் பப்பும் மற்றொரு கையில் பெடிக்ரீயுமாக வீட்டிற்குள் நுழைந்ததும்…

“சத்தியா சொன்னான்னு உன்னை அலோ பண்றேன்”, என்று சொல்லிவிட்டுத்தான் செக்ரட்டரி அங்கிள் சாவியையே கொடுத்தார். சத்தியா சொன்னான் என்று 4,000 ரூபாய்தான் வாடகையும் வாங்கினார். இரண்டாவது மாடியில் ஒரு ஹால், பாத்ரூம், கிச்சன். ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கும், என்ன இருக்கும் என்றெல்லாம் உங்களிடம் விவரிப்பது அநாவசியம். எப்படியோ இருந்தது. நல்லவேளையாக விஸ்காம் முடித்திருந்து ஒரு பத்திரிகையில் இன்டெர்னாகச் சேர்ந்திருந்தேன். மாசம் 1,500 ரூபாய் உத்திரவாதமாக வர, அப்படி இப்படி புகைப்படங்கள் மூலமாக 7,000 ரூபாய் தேத்தினேன். “என்னத்த நாயை வளர்க்கிறாய், எங்கே காசைக் காட்டு”, என்று ப்ளூ கிராசிலிருந்தே ஒருமுறை வந்துவிட்டார்கள். கீழ் வீட்டு வரது மாமாதான் கம்ப்ளெயிண்டே கொடுத்தது என்று பிறகுதான் தெரிந்தது. ஒன்றரை வயதிற்குள் டிமோனுக்கு ஒரு டிமோனியைக் காட்டாவிட்டால் அப்படித்தான் காம வவ்வுகள் வரும் (கடைசி வரை காட்டவே இல்லை). அப்படி இப்படி பணி நிரந்தரமாக, மாசம் 18,000 ஆயிரம் வர ஆரம்பித்தது. மூச்சு விட முடிந்தது. நான் யார் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

பத்திரிகையில் பெரும்பாலும் புகைப்படம் எடுப்பதுதான் வேலை. விபத்து கேஸ்கள், கொடூரமான முறையில் கொலை, இவற்றில் ஆர்வம் அதிகம். ஒருமுறை ஆபீசில் சொல்லாமல் நானாக அகதிகள் முகாமிற்குள் சுவரேறி குதித்து புகைப்படம் எடுத்தபோது போலீசிடம் கிட்டத்தட்ட மாட்டிக்கொண்டுவிட்டேன். அந்தப் புகைப்படத்தைப் பத்திரிகை அட்டைப்படமாகப் போட்டாலும், அன்றிலிருந்து எந்தச் சுவரையும் ஏறிக் குதிப்பதில்லை என்று தீர்மானித்தாகிவிட்டது.

இதுபோக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாணயங்கள்; தொலைக்காட்சியில் ரெக்கார்ட் செய்த எலிமெண்டரி சீரியல், யூடியூபில் ‘சைக்கோ கிட்’ சீரிஸ். இவ்வளவுதான் பொழுதுபோக்கு. ஆனால் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவது போன்ற எண்ணம் மட்டும் பதினைந்து வருடங்களாக மாறவில்லை. தையலில் ஏதோ ஒரு நூல் விட்டுப்போயிருப்பதுபோல். என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு... இது.

வழக்கம்போல் வரது மாமாவின் மணத்தக்காளிச் செடியில் சர்ரென்று டிமோன் மூச்சா பெய்ததும், அவன் இடுப்பைச் சுற்றி பெல்ட்டைக் கட்டி, படிகளின் மேல் மெதுவாக இழுத்தேன். புஸ் புஸ் என்று கஷ்டப்பட்டு இரண்டு மாடி மேலே ஏறினான். வீட்டிற்கு வந்து பெல்ட்டைக் கழட்டியதும், அறையின் மூலைக்குச் சென்று மூன்று முறை தன்னைத் தானே சுற்ற ஆரம்பித்தான். வழக்கம்போல் இரண்டாவது சுற்றலில் தொப்பென்று வீழ்ந்து, இனி அடுத்த நாள் காலையில்தான் எழ வேண்டும் என்ற நிம்மதியுடன் சோம்பலாகக் கண் அயர்ந்தான்.

அந்தக் காட்சியை நான் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ‘க்ளங்க்’, என்று ஃபோன் அதிர்ந்தது. வாட்சப்.

‘கவரைப் பிரித்துப் பார்க்கவும்’

எனக்கு பக்கென்றது. வாசல் பக்கம் சென்று கவரை எடுத்து, ப்ராங்காகத்தான் இருக்கும் என்று சாவகாசமாக அதைப் பிரித்துப் பார்த்தேன். ஒரு கடிதம் இருந்தது.

சகோ,

உன்னைக் கவனித்து வருகிறோம். பயப்படாதே. நாங்கள் உன் நண்பர்கள். விருப்பமிருந்தால் கடிதம் கிடைத்தது என்று ஃபோனில் தெரிவிக்கவும். அடுத்த கடிதத்தை அனுப்புகிறோம்.

சகோ.

படித்ததும் என்னடா புல்ஷிட் இது என்று சிரிப்பு வந்தது. கண்டிப்பாக ப்ராங்காகத்தான் இருக்கும், எவன் இந்தக் காலத்தில் லெட்டரெல்லாம் போடுகிறான். ஒரு பத்திரிகைக்காரன் வாழ்க்கையென்றால் இப்படித்தான் இருக்கும் என்று அந்த நம்பருக்கு, “தடிகம் கிடைத்தது கசோ”, என்று அனுப்பினேன். அனுப்பிவிட்டு சிற்றுண்டி சாப்பிடத் தட்டுக்கடை சென்றேன்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு மேலே வந்தபோது வாசலில் மற்றொரு கவர் கிடந்தது.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி