Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 3


“யார்ரா நீ? என்ன வேண்டும் உனக்கு?”, படபடப்பு அடங்காமல் கேட்டேன். “யார் அனுப்பியது?”

“யாரும் அனுப்பவில்லை சகோ; உன்னைத் தேடி நாங்கள்தான் வந்தோம்”, கர்ச்சீப்பால் மூக்கை மூடியபடி சொன்னான்.

“நாங்கள் என்றால்?”

“சொல்கிறேன். அதற்கு முன் உன் அட்ரீனலின் அளவுகளைக் குறை”

எனக்கு எதுவும் புரியவில்லை. அப்பொழுதுதான் அட்ரீனலின் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன். “அதுவரை எதுவும் மனதில் நிற்காது”, என்றான்.

“உனக்கு என்னதான் வேண்டும்?”

“என்ன அவசரம்? இன்னும் பேச்சு உன்னைப் பற்றித்தான் இருக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் சொல், எங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வமில்லையா?”

ஆர்வமிருந்தது. எனக்கு ஆர்வமிருக்கிறது என்பது அவனுக்கு தெரிந்ததுபோல் இருந்தது.

“உட்கார்ந்து பேசலாமா?”, என்றான். காதலர்கள் இருவர் விட்டுச் சென்ற இடமொன்றில் அமர்ந்தோம். இன்னும் பயம் மிச்சமிருந்தது.

“‘நாங்கள்’ ஒரு இயக்கம். ஆனால் அது உன் மனதில் இயக்கம் என்று வரையறைத்திருக்கும் எதற்குள்ளும் அடங்காத ஒன்று. இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத, கற்பனை செய்து பார்த்திராத ஒன்று.”

“எந்தக் கொம்பாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். எதற்காக என்னைக் கண்காணிக்க வேண்டும்? என் பிரைவசிக்குள் நுழைய நீங்கள் யார்?”

அதே மெலிதான சிரிப்பு.

“சற்று முன் அடுத்தவன் காதலியை ஃபோட்டோ எடுப்பதில் கூச்சமில்லையா என்று கேட்டேனே?”

“கூச்சமில்லை”,

“என் கேள்வி அதுவல்ல. நான் பயன்படுத்திய அந்த வாக்கியத்தில் உனக்கு முழு சம்மதமா?”, என்று கேட்டான். நான் அவனை ஏறெடுத்துப் பார்த்தேன். அதிசயமாக அந்த வாக்கியம் அந்த இடத்தில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.

“இல்லை. நீங்கள் உங்கள் வாக்கியத்தில் அந்தப் பெண்ணுக்குத் தந்த முக்கியத்துவம் எனக்கு அருவெறுப்பை உண்டு பண்ணியது. சட்டில் சாவனிஸம்”, என்றேன் உண்மையாக. இப்படி யாரும் என்னிடம் கேட்டதில்லை. எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வியைப்போல் அது இருந்தது. மெல்ல மெல்ல அட்ரீனலின் அளவுகள் குறைய ஆரம்பித்தன.

“இதோ, இதனால்தான் உன்னிடம் வந்திருக்கிறோம். யூ ஆர் இன்ட்ரெஸ்டிங்!”

“ப்ளீஸ் நான் பரிசோதனை எலியல்ல. டோன்ட் பேட்ரனைஸ்”, என்றேன் கடுப்புடன்.

அவன் துவக்கத்தில் வைத்த சிரிப்பை இம்மியளவும் அகற்றாமல், “சரி, செய்யவில்லை. சில நாட்கள் என்னுடன் வா. அதன்பிறகு உலகம் குறித்த உன் பார்வையே மாறிவிடும்”, என்றான்.

“நான் எதற்காக உங்களோடு வர வேண்டும்?”

“மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. போய் டிமோனுக்கு சோறு வை”, என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தான். டிமோன்! நான் அவனுக்காக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றானே? சுற்றி நடப்பவை அனைத்தும் மர்மமாக இருக்க, என்னை அறியாமல், “பார்க்கலாம். அடித்ததற்கு சாரி”, என்றேன்.

என்னிடமிருந்து விலகியபடி தூரத்திலிருந்து கூவினான். “நீ அடிக்காவிட்டால்தான் ஆச்சரியம், யூ ஆர் இன்ட்ரெஸ்டிங்!”

“டாம்மிட்! உன் பெயர் என்ன?”

“பெயரா? விஷ்ணு என்று வைத்துக்கொள்ளேன்”, மயோப்பியா கண்களால் அதற்குமேல் பார்க்க முடியவில்லை; மறைந்துவிட்டான்.

அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு கடிதம் வரும் என்று உள்ளுணர்வு சொல்லியது. பய உணர்ச்சி மெதுவாக மறைந்து ஆர்வம் மேலிட, கேமராவைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். டிமோனுக்கு சோறு வைத்துவிட்டு, எடுத்த புகைப்படங்களை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு, காத்திருந்தேன். இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்.

கடிதம் வரவில்லை.

கை தன்னிச்சையாக அலைபேசியை எடுத்தது. “உன்னை சந்திக்க வேண்டும் விஷ்ணு”, என்று விரல்கள் தட்டின.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அலைபேசி சிணுங்கியது.

‘என்னோடு உரையாட உனக்கு விருப்பமா என்று தெரிந்துகொள்ளவே மௌனம் சாதித்தேன். மன்னிக்கவும். மாலை அதே இடத்திற்கு வா.’

அறைக்குள் வந்ததும் பலமுறை டிமோனைப் பற்றியே நினைத்து நினைத்து, தலைவலி வந்துவிட்டது. என் கடந்த காலத்தை நினைத்தால் குழப்பமாக இருந்தது. டிமோனுக்காகத்தான் அம்மாவிடம் சண்டை போட்டேன். டிமோனுக்காகத்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவனுக்காகத்தான் பதினெட்டு வயது என்று கூட பார்க்காமல் அடம் பிடித்தேன்.

வெயிட்! கொஞ்சம் பிசிறு தட்டுவது போல் இருந்தது. பதினெட்டு வயதில் குழந்தை போல் அடம்பிடித்து, அம்மாவையே விட்டுவிட்டு வரும் அளவிற்கா டிமோன் எனக்கு முக்கியமானவன்?

தூங்கிப் போனேன்.

அலைபேசி அழைத்தது.

“வா!”

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி