Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 4


இந்த முறை அவன் திடீரென்றெல்லாம் தோன்றவில்லை. எனக்கு முன்பாகவே காத்துக்கொண்டிருந்தான். ஏற்கனவேயே இப்படிப் பல பேரிடம் பேசியிருப்பதுபோல், ஏதோ ஒரு குறிக்கோள் இருப்பதுபோல். கால்கள் கடற்கரை மணலில் தானாக அவனை நோக்கி நடந்தன. ஏதோ இயக்கம் என்று வேறு சொல்லியிருந்தான். நக்சலைட் கிக்சலைட் ஏதேனும் இருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் அவன் அரசியல் எதுவும் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் அன்று பேசியதை எதற்குள் அடக்குவது என்றே தெரியவில்லை.

“அலைபேசும் காலத்தில் கடிதமே கவனத்தை ஈர்க்கிறது. வா!”

நேராக அவனிடம் சென்று, “ஒப்புக்கொள்கிறேன். ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீ யார்?”, என்று கேட்டேன்.

“நீ யார்?”, என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

“யாரென்றால்?”

“நீ யார் என்று கேட்டால் முதலில் என்ன தோன்றுகிறதோ அதை சொல், போதும்”, என்றான்.

“மனிதன்”, என்றேன்.

அவன் முகம் பிரகாசமடைந்தது.

“உட்கார். மற்றவர்கள் போல் இல்லை நீ. உன்னிடம் நேரடியாக விஷயத்திற்கு வர முடியும்”, சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, “நீ எதையோ தொலைத்தது போல் இருக்கிறாய்; எதைத் தொலைத்தாய் என்றுதான் தெரியவில்லை; அப்படியே தொலைத்ததைக் கண்டுபிடித்தாலும் அதை அடையாளம் கண்டுக்கொள்ள உன்னால் முடியாது; அடையாளம் கண்டுக்கொண்டாலும் அதைப் பயன்படுத்த தற்போதைய நடைமுறைகள் ஒத்துவரவில்லை. சரியா?”, என்றான்.

முதல் முறை எதுவும் புரியவில்லை. ஒரு நிமிடம் மௌனமாக யோசித்துப் பார்த்த பிறகு, “என் சிக்கலை இதைவிட எளிமையாக சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன்”, என்றேன்.

“உன் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லவில்லைதானே?”

“ஆம்! அப்படித்தான் தோன்றுகிறது”

என் கண்களைப் பார்த்து, “நாம் நாமாக இருந்தால் இந்த உலகத்தால் நமக்கு ஈடு கொடுக்க முடியாது”, என்றான்.

“நாம் என்றால்? யார் நாம்?”, முகத்தைத் துருத்திக்கொண்டு கேட்டேன். இப்பிரபஞ்சத்தின் மனிதப் பிரதிநிதியோடு உரையாடுவதுபோல் இருந்தது.

“யார் நாம்? யோசித்துப் பார். எந்த செயற்கை அடையாளங்களும் நம்மைச் சிறைபிடிப்பதில்லை. முன்முடிவுகள் நம் பார்வையை மறைப்பதில்லை. பிற பிராணிகள் மீது வெறுப்பு வருவதில்லை. வெறுப்பும் காதலும் நம்மை மூழ்கடிப்பதில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தாயே, அம்மா என்ன ஆனாள் என்று நினைத்துப் பார்த்தாயா?”, திடீரென்று என் விஷயத்திற்கு வந்தான்.

“இல்லை. அது சரியா தவறா என்றும் தெரியவில்லை”

“எல்லாவற்றையும் சரி, தவறு என்று பார்க்கக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறோம், ‘பரவாயில்லை’”, என்று சிரித்தான். “கீழ் வீட்டு வரது மாமா ஒரு பைசெக்‌ஷுவல் தெரியுமா?”

“ஐ டோன்ட் கேர்”, என்றேன். சிற்சில வினாடிகளில் எத்தனை எத்தனை எண்ணச் சிதறல்கள்? டிமோன், அம்மா... அவனை நிமிர்ந்துப் பார்த்து, “நானும் பைசெக்‌ஷுவல்தான்”, என்றேன்.

“ஐ டோன்ட் கேர் எய்தர்”, என்று மீண்டும் சிரித்தான். “நாம் நல்ல நண்பர்கள் ஆவோம் சகோ”

“நீயும் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாயா?”

“இல்லை, விரட்டப்பட்டேன். உன்னை விட எனக்கு மன உறுதி அதிகம். அதனால்தான் நான் கண்ட கண்ட காரணத்தையெல்லாம் சொல்லவில்லை”

அவனை இடைமறித்தேன். “டிமோனுக்காக நான் வெளியே வரவில்லை என்று நினைக்கிறாயா?”

“டிமோன் ஒரு கருவி அவ்வளவே. நீ ஏன் பிராணி வளர்க்கிறாய்? தனியாக இருக்கிறாய்? யோசித்து சொல்”

“ஏனென்றால் சக மனிதர்களை விட அவை பெட்டர் என்று தோன்றுகின்றன”, என்றேன். என் மனதில் உள்ளவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொட்ட வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. அவனிடம் கொட்ட வேண்டும் போலிருந்தது. விஷ்ணு முழுவதுமாக என் எண்ணப்போக்கினைக் கட்டுப்படுத்தத் துவங்கினான். “ஏன் என்று தெரியவில்லை. டிமோனுக்கு நம் மொழி புரியாது, நம் பழக்கங்கள் புரியாது, எந்த புல்ஷிட் நாகரிகமும் அதற்குத் தேவையில்லை. மான அவமானம் இல்லை. நடு ஹாலில் மயிரைக் கொட்டிக்கொண்டு அம்மணமாகத் திரிகிறான். அவனுடன் இருக்கும்போது நான் நானாக உணர்கிறேன் விஷ்ணு. உன்னை அப்படிக் கூப்பிடலாம் அல்லவா?”

“அப்படியும் கூப்பிடலாம்”, என்றான். “ஒன்று தெரியுமா? மனிதன் ஆறறிவு உள்ள ஜீவன் என்று ஒரு நாய் கூட அங்கீகரிக்கவில்லை. பாரதி கிருஷ்ணகுமார்”, என்று சொல்லி வாய்விட்டு சிரித்தான். எனக்கும் சிரிக்க வேண்டும்போலிருந்தது.

“பட், பிராணி வளர்ப்பு என்பது மனிதனின் டாமினேட் செய்ய நினைக்கும் எண்ணத்தின் ஒரு வடிகால் என்றே நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்”, என்று கேட்டான்.

“இருக்கலாம். யோசிக்கவில்லை. அப்படியென்றால் மனிதர்கள் வேண்டாமென்றுதான் நான் வெளியே வந்தேன் என்று சொல்கிறாயா?”

“இல்லை. இதுதான் மனிதத்தன்மை என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் உலாவும் மனிதம் வேண்டாம் என்று வெளியே வந்தாய். நீ… நீ ஒரு புது மனிதன் சகோ”

“அப்படியென்றால்?”, எனக்கு இன்னும் முழுதாகப் புரியவில்லை. இருபத்தி எட்டு வருடங்கள் இந்த மனிதர்கள் மத்தியில் மனிதனாகத்தான் வாழ்ந்திருக்கிறேன். சிற்சில இச்சைகளுக்கு உட்பட்டு நான் எடுத்த முடிவுகள் ஒரு பெரிய காரண விளைவுச் சுழலில் ஒரு அங்கமாக இணைந்து இன்று என்னை இங்கே உட்கார வைத்திருக்கின்றன, அவ்வளவே. இதை அவனிடம் சொன்னேன்.

“பார்த்தாயா? விதியின் மேல் உனக்கு நம்பிக்கை இல்லை. இதுவே பெரிய டெவலப்மெண்ட்தான்!”, என்றான். மேலும் தொடர்ந்து, “டிமோன் இரவில் தனியாக இருப்பானா”, என்று கேட்டான். அப்பொழுதுதான் சுற்றிப் பார்த்தேன். இருட்டியிருந்தது.

“பலமுறை இருந்திருக்கிறான், ஏன்?”

“இன்றிரவு எங்களோடு இரு. புது மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்”, என்றான்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி