Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 5


தென் சென்னையில் ஆற்றங்கரையோரமாக ஒரு சிறு மைதானம். எந்த இடம் என்று சொல்ல மாட்டேன். எப்படி அப்படி ஒரு மறைவிடத்தைப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு பத்து பேர் ஐந்து பானைகளில் விறகு வைத்து சமைத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் இருபது பேர் அங்கும் இங்குமாக நெருப்புகளைச் சுற்றி உட்கார்ந்தும் நின்றும் படுத்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் கலந்திருந்தது. சுற்றிலும் வேலிகருவைகள் முள்ளு முள்ளாக நீட்டிக்கொண்டிருக்க, அந்த முட்கள் மேல் விறகு வெளிச்சம் பாய்ந்து அவற்றை அந்தரத்தில் மிதக்கும் குட்டி நட்சத்திரங்களாக ஆக்கின.

“வாவ்! சென்னையில் ஹிப்பிகளா?”

“நாட் எக்சாக்ட்லி”

என்னை உள்ளே அழைத்துச் சென்றான். இருந்த முப்பது பேரும் என்னைப் பார்த்த விதத்தை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. கண்ணாடியில் என்னை நானே பார்த்துக்கொள்ளும்போது நான் எப்படி முழிப்பேனோ அப்படி முழித்தார்கள். ஒருவழியாக உலகத்தில் எனக்கான இடத்திற்கு வந்துவிட்டாற்போல் இருந்தது. வேறொரு இடத்தில் இப்படி வேலிக்கருவைகளின் நடுவே ஒரு பிணத்தைப் புகைப்படம் எடுத்திருந்தேன். அது ஞாபகத்திற்கு வர, அதை விஷ்ணுவிடம் சொன்னேன்.

“இப்படி யோசிப்பது சரியா விஷ்ணு?”

“என் வட்டம் என் சதுரம். எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள். ஆத்மாநாம்”

“சரி சரி, போதும்”, சுற்றும் முற்றும் பார்த்தேன். இருவர் நிர்வாணமாகப் படுத்திருந்தனர். ஒரு ஆணும் பெண்ணும் உடைகளைக் களைந்தபடி உறவு கொள்ளத் துவங்கினார்கள். ஒரு பெண் பேண்ட்டுக்குள் கையை விட்டு சொறிந்தார். யாரும் அதை சட்டை செய்யவே இல்லை. அது ஒரு இயல்பான நிகழ்வு போல் அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைப் பார்க்க உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றியிருந்தோரிடம் எதையும் நிரூபிக்கும் அவசியம் இல்லாமல், வக்கிரமாகவும் இல்லாமல், புனிதமாகவும் இல்லாமல், எதுவாகவுமே இல்லாமல் இருந்தார்கள்.

“கலாசாரம் தவறல்ல சகோ. ஆனால் அது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறபோது, சிலர் பாதிக்கப்படுகிறார்கள். நாம் பாதிக்கப்படாதவரை நம்மால் அதை உணர முடிவதே இல்லை. கட்டுப்பட்டால்தான் என்ன என்ற கேள்வியைத் தாண்டி நாம் நகர மறுக்கிறோம்”

“எதற்காக சொல்கிறாய் விஷ்ணு?”

“நாம் சக மனிதர்களால் பாதிக்கப்படுகிறோம். அடையாளங்களால், அடையாளங்கள் தரும் மதிப்பீடுகளால். இந்த உலகம் எப்படி இயங்குகிறது? எருமையின் தோலை உரித்துக் காலில் போட்டுக்கொண்டால் லெதர் ஷூ, எருமைக் கன்றின் தோலை உரித்துக் காலில் போட்டுக்கொண்டால் அது ஹை குவாலிட்டி லெதர் ஷூ. இது இரண்டிற்கும் சமூகம் ஒவ்வொரு மதிப்பீடை வைக்கிறது என்றால் அதன் அடிப்படையில் அசிங்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அடையாளத்தின் போர்வையில்தானே அத்தனை அநியாயங்களும்? பெண்கள் முகத்தை மூடவேண்டும், ஓர்பால் ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது என்பதெல்லாம் என்ன? ஒரு மனிதனின் உயிரைவிட மாட்டின் உயிர் மதிப்பு வாய்ந்தது என்பதை விட இயற்கைக்கு விரோதமான செயல் இருக்க முடியுமா?”, என்று பொரிந்து தள்ளினான்.

அவன் அப்பொழுதுதான் அரசியலே பேச ஆரம்பித்தான். நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டே வந்தேன். அப்படியே நடந்து ஒரு மூலையில் உட்கார்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் பேசினான். அடையாளங்களற்று வாழ்வது என்பது இதுபோன்ற இரவுகளில் இந்தச் சிறு மைதானத்தில் மட்டும்தான் என்றும், அதற்கு வெளியே உயிர்வாழ்வதற்கு அடையாளங்கள் துரதிர்ஷ்டவசமாகத் தேவைப்படுகின்றன என்றும் சொன்னான். நான் ஆமோதித்தேன். ஜாதி, மதம், இனம் போன்றவற்றின் அடையாளங்கள் வழக்கொழிந்து போக வேண்டிய தேவை இருப்பதனால் மட்டுமே அவற்றை நிராகரிப்பதாகவும் உலகில் உணர்ச்சி அதிகம் இல்லாத மக்களுக்கென்று ஒரு அடையாளம் மறைமுகமாகத் தேவையே என்றும் சொன்னான்.

 “இதோ, இந்தக் கூட்டமே முழுக்க முழுக்க அடையாளங்களற்றது என்று சொல்லிவிட முடியுமா? உணர்ச்சியற்ற மக்கள் கூடுவது என்பதே ஒரு அடையாளம்தானே?”, என்றான்.

“அப்படியென்றால் ஏன் சிலர் மட்டும் நிர்வாணமாக இருக்கிறார்கள்?”, என்று கேட்டேன்.

“அப்படி நிர்வாணமாக இருப்பதை இயல்பானது என்று கடந்து செல்வதே முதலில் பெரிய விஷயம் அல்லவா? அதை ஒப்புக்கொள்கிறாயா?”

“ஒப்புக்கொள்கிறேன். ஆனால்...”

“சகோ. தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குள் இன்னும் மிச்சம் இருக்கும் சமூக விழுமியங்களின் வெளிப்பாடு அது. திடீரென்று எல்லாவற்றையும் கழட்டிவிட்டு வர முடியுமா அவர்களால்? எல்லாம் படிப்படியாக நடக்கும். இன்னும் சொல்லப்போனால், துணிமணிகளைக் கழட்டினால்தான் புது மனிதர்கள் என்று நம்மால் வரையறையும் செய்ய முடியாது. அவரவர்கள் கம்ஃபர்ட் ஜோனில் அவரவர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கம் வேற்றுமைகளை அங்கீகரிக்கிறது. இதோ நானே உடையோடுதானே இருக்கிறேன்? எல்லாம் அனாடமி”, என்று கண்ணடித்தான்.

பேச்சு நிர்வாணம் குறித்து சென்றதாலோ என்னவோ, எனக்குள் மிச்சம் இருந்த சமூக விழுமியங்கள் என்னை செக்ஸ் பற்றி சிந்திக்க வைத்தன. எனக்கு அவன் மீது உடல் ரீதியான கவர்ச்சி ஏற்பட்டது. எந்த நாகரிகத்திற்கும் கட்டுப்படவேண்டிய தேவை அங்கு இல்லாதிருந்ததால் மிக சுதந்திரமாக...

“எனக்கு உன்னோடு செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது விஷ்ணு”, என்றேன்.

அவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. தான் ஒரு ஹெடெரோ என்று புன்னகைத்தபடி மென்மையாக மறுத்தான். ஏமாற்றம், நிராகரிப்பு ஏதுமற்ற அந்த ஏகாந்த வெளியில் மனது மகிழ்ச்சியில் திளைத்தது. முகம் அவற்றைக் காட்டாவிட்டால்தான் என்ன? முகம் ஒரு அடையாளம் மட்டுமே. மனித நாகரிகங்களில், வாழ்வுகளில், இந்த வாழ்வுதான் எனக்கு இயற்கைக்கு மிக நெருக்கமாகப் பட்டது. ஒரு பெண் என்னை நோக்கி நடந்து வந்து, “லெட்ஸ் மேட்”, என்றபடி தன் கைகளை என்னிடம் நீட்டினாள்.

“ஆண்டாளின் கைத்தலம் பற்ற என்பது இதுதான்”, என்று நகைத்தான்.

இது தெரிந்த பாடல்தான். அவனோடு முரண்பட்டேன். ஆனால் அப்போது அது முக்கியமாகப் படவில்லை. ஒரு இனம் புரியாத ஆதரவு வட்டத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட, அவனை சட்டை செய்யாமல் அவள் கரம் பிடித்து அவளை உட்கார வைத்தேன். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அன்று நானும் அவளுமாக இப்பிரபஞ்சத்தில் தனியாக இருந்தோம். இப்படித்தான் நான் அவர்களுள் ஒருவன் ஆனேன் சகோ.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி