Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 6


அடுத்த நாள் காலை ஆறு மணியளவில் அங்கிருந்த சகோக்கள் எழுப்பிவிட்டார்கள். ஒருவரையொருவர் எந்திரத்தனமாக எழுப்பிக்கொண்டு மீண்டும் அந்த பாழாய்ப் போன நாகரிகத்திற்குச் செல்லத் துவங்கினார்கள். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஆபீஸ் போக வேண்டும் என்ற உந்துதலில் நானும் வீட்டிற்குச் சென்றேன்.

டிமோன், “எங்கேடா போனாய்? ராத்திரி பேய் வந்தது”, என்பதுபோல் பார்த்தான். என்னி்டம் இன்னும் அந்தப் பெண்ணின் வாசம் ஒட்டிக்கொண்டிருந்தது போலும். முகர்ந்து பார்த்துக் குலைத்தான். என் அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ‘சீ யூ நெக்ஸ்ட் வீக் சகோ”, என்று அனுப்பியிருந்தான் விஷ்ணு.

இன்னும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. என் சகோக்களைப் பார்த்தேன், அவர்களுடன் எனக்கே உரித்தான முறையில் பழகினேன். வந்தேன். நாங்கள் ஒன்று கூடுவதன் உளவியல் காரணம் புரிந்தது. அந்தப் பெண்ணிடம் பேசியபோது ஒரு அதிர்ச்சிகரமான உயிரியல் காரணம் கூடப் புரிந்தது. ஆனால் இன்னும் அதன் அரசியல் காரணம் மட்டும் புரியவில்லை. பத்திரிகைத் துறை வேறா? அந்த கோணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அடுத்த வாரம் விஷ்ணுவிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த ஒரு வாரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. புதன் கிழமை ஒரு ஆக்சிடன்ட் கேஸ் என்று இராயப்பேட்டைப் பிணவறைக்கு அனுப்பி வைத்தார்கள். பெரிய தொழிலதிபர் ஒருவரின் மகனாம். போய் பிணத்தைப் பார்த்தால் அவரை அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. அவர் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கூட்டத்தில் இருந்தார். உடனே வாட்சப்பில் இருந்த நம்பரின் மூலம் விஷ்ணுவை அழைத்தேன்.

“சகோ?”

“நம்மாள் ஒருவர் இறந்துவிட்டார்”

“ஓ!”, சில வினாடிகள் மவுனம். “என் ஆழ்ந்த அனுதாபங்கள்”, என்றபடி ஃபோனை வைத்தான். நானும் அவர் உடலைப் போர்த்தச்சொல்லி புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினேன். இப்படி சகோக்கள் நிறைய பேர் இந்த சமூகத்தில் ‘அந்தஸ்தோடு’ இருப்பவர்கள்தான்; அதில் உள்ள போலித்தனத்தின் அருவெறுப்பை சகித்துக்கொண்டு நடிப்பவர்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு ஸ்டாக் மார்க்கெட் அனலிஸ்ட் இருந்தார், சீரியல் நடிகர் கூட ஒருவர் இருந்தார் (அந்த அளவுக்கு நடிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அடையாளமற்று இருக்க அவர்கள் விரும்பினாலும் நம் சகோக்கள் என்ற அடையாளம்தான் அவர்களுக்கு அந்த மைதானத்தில் தைரியத்தையே தருகிறது. அவர்களோடு நான் இரண்டறக் கலந்த பிறகு அந்தக் கூட்டத்தின் செக்யூரிட்டி மற்றும் பிரைவசி குறித்து விஷ்ணுவிடம் பேசவேண்டும் என்று முடிவு செய்தேன்.

போன வாரம் அந்தப் பெண்ணோடு இருந்தபோது சில உயிரியல் டமாரங்கள் தெரிய வந்தன. அவள் ஒரு ஆந்த்ரோபாலஜிஸ்ட். “இதோ, இந்த வாழ்க்கை முறையையும் நம்மால் நாகரிகம் என்று நிறுவனமயப்படுத்த முடியும். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமா என்பதே கேள்வி”, என்றாள் என் மூக்கை நிரடியபடி.

“புது மனிதர்கள் என்ற சொல்லாடலே ஒருவகையில் நிறுவனப்படுத்தல்தானே, மிஸ்?”

“கால் மீ கின்னகா. இல்லை. நாகரிகத்தைத் துறந்ததால் மட்டும் நாம் புது மனிதர்கள் ஆகிவிடவில்லை”, இயல்பாகச் சொன்னாள். “விஷ்ணு இதைப் பரிணாம வளர்ச்சி என்று நம்புகிறான்”

“வாட்..!”

“அப்படி நம்புவதற்கு இடம் இருக்கிறது. அதனாலேயே அவன் ‘மனிதர்கள்’ என்ற சொல்லாடலைக் கூட கைவிட்டுவிட்டுப் புதியவர்கள் என்று நம்மை அழைத்துக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். எல்லாம் ஹைப்போதீசிஸ்தான்”

எனக்கு பயம் வந்துவிட்டது. “அப்படியானால் நான் மனிதனில்லையா?”, என்று கலவரத்துடன் கேட்டேன்.

“கூல் டவுன். பரிணாம வளர்ச்சி என்பது பில்லியன் வருட மெந்நிகழ்வு. மேலும் ஒருவனை மனிதனில்லை என்று சொல்வது இன்றைய நாகரிகத்தில் உயிரியல் கோட்பாடாக இல்லை; மாறாக சமூக விலக்கலுக்கான குறியீடாக இருக்கிறது. கமிங் டு த பாயிண்ட், ஒவ்வொரு தலைமுறையும் மியூட்டேட் ஆகிக்கொண்டுதான் வருகிறது. நாகரிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாததை நோயாகப் பார்க்கிறது; விஷ்ணு அதை பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறான், அவ்வளவே”

“ஓ! அதனால்தான் நம்மை ரெக்ரூட் செய்கிறானா? ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு, அவர்களைக் கன்வின்ஸ் செய்து...”

“இரண்டு காரணங்கள். ஒன்று, மனித இனங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவை ஒரு சோஷியல் அனிமல்தான். அவை கூட்டமாகத்தான் இயங்க முடியும். இரண்டாவது காரணம் நான் மேலே சொன்னதுதான். நாம் ஒரு தனி உயிரினமாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்னும் பட்சத்தில், செக்ரிகேஷன் நேச்சுரலி ஏற்பட்டுவிடும். இதுபற்றி நீ அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள். அவன்தான் கிட்டத்தட்ட ஆல்ஃபா மேல் மாதிரி. மனித இனங்களின் ஆல்ஃபா மேல் கொஞ்சம் காம்ப்ளெக்ஸ். அவன் சர்வாதிகார சுயாதிபத்தியனாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை”, என்றாள்.

கடைசியாக அவள் சொன்னது கொஞ்சம் ஓவர் டோஸ் போல் இருந்தது. “ஓகே சகோ”

”உன்னிடமும் ஆல்ஃபா மேலுக்கான தகுதி இருக்கிறது”

“அப்படியா? எப்படி?”, திடீரென்று ஒரு அல்ப திருப்தி ஏற்பட்டது.

“உன் செக்ஷுவல் ஆக்டிவிட்டியை வைத்து சொல்கிறேன். மேம்போக்கான அப்சர்வேஷன்தான்”

“ஹ்ம்ம்ம்”

“இன்னொரு முறை?”

”இல்லை, களைப்பாக இருக்கிறது”

“சொல்லி வாய் மூடவில்லை. இட்ஸ் ஓக்கே! புதிய ஆண்களுக்கும் ரிஃப்ராக்டரி பீரியட் அதிகமாகத்தான் இருக்கிறது. சாபக்கேடு”, என்றாள்.

”எல்லா பெண்களும் அனார்கஸ்மிக்காக இருப்பது எங்களுக்கு சாபக்கேடு”, என்றபடி விஷ்ணு வந்தான்.

“சோ மச் ஃபார் பிரைவசி!”

கின்னகா அவனை சட்டை செய்யாமல்,.”இந்தா என் விசிட்டிங் கார்டு. மனிதர்களைப் பற்றி புதியவர்கள் கோணத்தில் ஒரு டேட்டாபேஸ் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ஆய்விற்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பேன். வாழ்க்கை போரடித்தால் வா, ஒரு ரவுண்டு போகலாம்”, என்றபடி எழுந்து, மற்றொரு மூலையில் அமர்ந்திருந்த வேறொரு ஆணை நோக்கி செல்லலானாள்.

“கின்னகா ஒரு நிமிடம். அதென்ன கின்னகா?”

“கெஜட்டில் பெயர் மாற்றிக்கொண்டுவிட்டாள்”, என்றான் விஷ்ணு. அதோ உனக்கான பதில், என்பதுபோல் நடந்தபடி கைகளை ஒருமுறை விரித்துக் காட்டினாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாரைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த புல்ஷிட் மாரல் போலீசிடமும் தன்னை நிரூபிக்கத் தேவையில்லாமல், அந்த நள்ளிரவில் இருபது ஆண்களுக்கு மத்தியில் பூரண சுதந்திரத்துடன் அவள் நடந்து சென்றது மனதிற்கு இதமாக இருந்தது. புதிய ஆண்கள் யோக்கியர்கள் என்ற உணர்வு மேலெழுந்து பெருமித… டோன்ட் பேட்ரனைஸ் இடியட், என்று சுயநினைவிற்கு வரும் முன், கிணற்றுக்கடியிலிருந்து விஷ்ணுவின் குரல் கேட்டது.

“அடையாளங்கள் தேவை என்னும் பட்சத்தில், அது அவரவர் விரும்பியவாரே இருக்கட்டும்.”

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி