Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 8


“சகோ! யோசித்துப் பாரேன். நம் சுற்றுச்சூழலில் விலங்குகளுக்கிடையே ஏதோ ஒரு வகையில் சமநிலை இருக்கிறதல்லவா?”

“ஆமாம். ஹோமியோஸ்டேசிஸ்; அவள் சொன்னாள்”

“நல்லது. உயிரினத்தை லைஃப், இண்டெல்லிஜென்ஸ் என்று இரண்டாகப் பிரிக்கலாம். தொல்காப்பியர் மொழியியல் ரீதியாகப் பிரிக்கும் உயர்திணை, அஃறிணை கான்செப்ட்தான். ஒரு சுற்றுச்சூழலில் இரண்டு உயர்திணை இனங்கள் ஒன்றாக வாழ முடியாது. ஏனெனில் அதிகாரப் போட்டி என்பது உயிர்வாழும் இச்சையைத் தாண்டி, அடையாளம், ஈகோ போன்ற அகக் காரணங்களுக்காக நடக்கும். முடிவற்ற யுத்தத்தில்தான் அது முடியும்”

அவன் சொல்வது கொஞ்சம் புரிவதுபோல் இருந்தது. ஆனால் பேச்சு விபரீதத்தைத் தொட்டுச் செல்வதுபோல் பட, சற்றே கலக்கமடைந்தேன்.

“புரிகிறது விஷ்ணு. மனிதர்களும் புதியவர்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு சுற்றுச்சூழலைப் பகிர்ந்துகொண்டு வாழ மாட்டார்கள் என்கிறாய்.”

“ஆமாம். நம்மால் முடியுமோ இல்லையோ, மனிதர்களால் நிச்சயம் முடியாது”

“சரி, அதற்கு?”

“உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட பெரும் மோதல்கள் நடந்தாகவேண்டும் என்பது இயற்கை...”

“அதற்கு?”, இதயத் துடிப்பு அதிகரித்தது.

“பொறுமையாகக் கேள். இங்குதான் நான் குழப்பத்தில் இருக்கிறேன். இயற்கை சொல்வது ஒன்று. ஆனால் வரலாற்றில் மனிதர்களுக்குள் நடக்கும் யுத்தங்கள் வெறும் உடல் ரீதியாக மட்டும் இல்லை. உளவியல் ரீதியாக, மத ரீதியாக, பொருளாதார ரீதியாக, இப்படிப் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார்கள். அதாவது உயர்திணை வரையறுக்கும் யுத்தத்தில் பல பரிமாணங்கள் உள்ளன”

“இதில் என்ன குழப்பம் விஷ்ணு உனக்கு?”

“எதைத் தேர்வு செய்வது என்பதில்தான். உடல் பலத்தால் வெல்ல வேண்டிய தேவை ஏற்படுமா, அல்லது மெதுவாக மனிதர்களின் இடத்தைப் பிடிப்பதா என்பதுதான். அல்லது இரண்டையும் ஒருசேர செய்ய வேண்டுமா?”

“நான் நிச்சயமாக வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்”, ஒரேடியாக மறுத்தேன். அவன் முகத்தில் லேசாக ஒரு சலனம் தோன்றி மறைந்தது.

“எதுவாயினும் நாம் வெல்ல வேண்டும் சகோ. மனிதர்களுக்கு ஆளும் திறமை இல்லை”, சற்றே கடுமையாக சொன்னான்.

“பேட்ரனைஸ் பண்ணாதே!”

“இல்லை, பண்ண வேண்டியிருக்கிறது. அதுதான் நம் இயல்போ என்று தோன்றுகிறது”

“எனக்குத் தோன்றவில்லையே!”

“இன்ட்ரெஸ்டிங்!”, என்றபடி என்னைப் பார்த்தான்.

“இதோ இதுதான் உன்னிடம் எனக்குப் பிடிக்காதது. நீ என்ன ஏதோ உயர்ந்த அறிவுத் தளத்தில் இயங்குகிறாயோ?”, என்றேன் கடுப்புடன்

“நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்”, என்றான்.

“வெல், பேட் நியூஸ் மிஸ்டர், உன்னோடு நான் மாறுபடுகிறேன்”

“வேறு ஏதாவது பேசலாமா? வழக்கமாக என்னோடு மாறுபடுபவர்களோடு நான் உரையாடுவதில்லை. மற்றவர்களைக் கன்வின்ஸ் செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி”

“நீ என்ன பெரிய ஆல்ஃபா மேலா?”

“வாயை மூடு!”, முதல்முறையாக என்னைப் பார்த்து சீறினான். “சொன்னாளா ஆல்ஃபா மேல் பற்றி?”

“இதையும் சொன்னாள். எனக்கும் ஆல்ஃபா பண்புகள் இருக்கின்றன”, என்றேன்

“ஓஹ்ஹோ!”, என்று என்னை ஒரு பார்வை பார்த்தான். அவன் கண்கள் என் மீது ஆல்ஃபா மேல் என்ற அடையாளத்தை  செலுத்தின. அவனுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற உணர்வு எழ ஆரம்பித்தது. ஆனால் அடங்கமறு என்ற உந்துதலும் அதிகரித்தது. அசைந்து கொடுக்காமல் அவனுக்கு சரிசமமாக நின்றேன். அவன் ஒரு கணம் என்னையே உற்றுப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ, இன்னும் பேசிப் பார்ப்போம் என்று மேலே தொடர்ந்தான்.

“சரிதான். சகோ, உன்னை சுற்றிப் பார். மனிதர்களின் ஆட்சியைப் பார். ஐநா பாதுகாப்புக் குழுவில் உலகைக் காக்கிறேன் என்று யாரெல்லாம் உட்காரப் போகிறார்கள் பார். அனைவரும் அடையாளங்களால் அரித்துத் தின்னப்படுபவர்கள். அவர்களை விடவா நான் அதிகம் பேட்ரனைஸ் செய்கிறேன்?”

“எல்லாம் சரி, ஆனால் வன்முறை கூடாது. அவ்வளவே”, என்றேன் தீர்மானத்துடன்.

“சுற்றிப் பார்! மூன்றாம் உலகப்போருக்கான பொறி ட்விட்டரில் ஏற்பட சாத்தியக்கூறு இருக்கிறதா இல்லையா? பெரிய பெரிய தலைவர்களே பொறுப்பற்று வார்த்தைகளைக் கொட்டப்போகிறார்கள். நானா வன்முறையாளன்?”

நான் அவனை தீர்க்கமாகப் பார்த்தேன். என் முடிவில் எந்த மாற்றமுமில்லை என்பதை அவன் உணர்ந்தான் போலும். “சரி, மற்ற வியூகங்களை சொல்கிறேன் கேள். ஒரு முப்பது வினாடிகள்; அட்ரீனலில் அளவுகளைக் குறைத்துக்கொள்கிறேன்”, என்றபடி கீழே குனிந்து கண்களை மூடினான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆல்ஃபா மேல்... ஆல்ஃபா மேல்... சில வினாடிகளுப்பின் கண்களைத் திறந்து, சற்றே அமைதியாகி சொல்ல ஆரம்பித்தான். “இந்த இயக்கம் மனிதர்களை அழிப்பதற்காக எல்லாம் இல்லை. உன்னை மாதிரி நோஞ்சானை வைத்துக்கொண்டு எப்படி சண்டை போடுவது? உன்னை ரெக்ரூட் செய்யும் காரணம் புரிகிறதா?”

“இல்லை; புதியவர்கள் என்று புரியவைத்தாய். வேறென்ன காரணம்?”

“அவ்வளவுதான் காரணம்”

“என்னது?”, புரியாமல் விழித்தேன். “அவ்வளவுதானா?”

“அவ்வளவுதான் என்பது இப்போதைக்குப் பெரிய படிதான். புதியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மையை உணர்த்துவது; அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு உயர ஊக்கப்படுத்துவது; இவ்வளவுதான் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்திற்குப் பின்னால் நெடுநாளைய அரசியல் இருக்கிறது.”

“என்ன அரசியல்?”, ஆர்வம் மேலிட கேட்டேன்.

“நீ ஒரு தலை சிறந்த ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக உருவெடுக்க வேண்டும் சகோ. கின்னகா ஒரு தலைசிறந்த ஆந்த்ரோபாலஜிஸ்ட் ஆக வேண்டும். இப்படி புதியவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.” ஒரு சமூகமாக மனிதர்களுக்கு மேல் செல்ல வன்முறையற்ற, மெதுவான வழி இதுதான்”

எனக்குப் புரிந்தது. புரிந்ததும் இடம், காலம் புரியாமல் திடீரென்று உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குவதுபோல் இருந்தது. மனிதர்களை வெறுக்காமல் அவர்களோடு இருந்து அவர்களின் முறைப்படியே மேலேறி... வன்முறைக்கு இது எவ்வளவோ தேவலாம். சரியானதும் கூட என்று பட்டது.

“புரிந்ததா?”

“புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் அரசியல் இடத்தைப் பிடித்துக்கொள்வது; அவர்களுக்காகவும் உழைப்பது”, என்னையறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன.

“பார்த்தாயா? பேட்ரனைஸ் செய்ய வேண்டியிருக்கிறது பார்”, என்றான் புன்னகை மாறாமல்.

“ஒப்புக்கொள்கிறேன் விஷ்ணு. இது நிறைவேற நூற்றாண்டுகள் ஆகும். வாவ்! இந்த சிந்தனையே இந்த இயக்கத்திற்குப் பெரும் கவர்ச்சியைத் தருகிறது”

சிரித்தான். “நாம் யார் என்பது நமக்கு மட்டுமே தெரிய வேண்டும். என்றைக்கும் இது மனிதர்களுக்குத் தெரியாமல்; இதனால் யாருக்கும் நஷ்டமில்லை”

“நாம் முன்னேற வேண்டும் என்பதை யாராவது சாதி, மத, இன ரீதியாக அடையாளப்படுத்தியிருந்தால் நான் கண்டிப்பாக மறுத்திருப்பேன். இந்த அடையாளப்படுத்தல் சற்றே மேம்பட்டதாக இருக்கிறது”

“ஆம் சகோ. தேசியத்திற்கும் அப்பாற்பட்டது இது. வன்முறையற்ற சங்கிலியேற்றமும் இயற்கைதான் என்று நிரூபிக்கப்போகும் முதல் உயிரினங்கள் நாம்தான்.”, என்று சிரித்தான். “உன்னிடம் பேசிய பிறகு சற்றே தெளிவாக உணர்கிறேன் சகோ”

நானும் சிரித்தேன். கொஞ்சம் பெருமையாக இருந்தது.

“ஆக, இயக்கத்தின் எதிர்காலத்திற்கு இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே அடுத்த வேலையை கவனிக்கிறேன்”, என்று சொல்லி என் மூக்கில் ஓங்கி குத்தினான்.

நான் இரண்டடி பின்வாங்கி நிலைகுலைந்தேன். “அட்லாஸ்ட் வீ ஆர் ஈவன்”, என்று சிரித்தபடி என் சட்டையைப் பற்றி எழுப்பினான்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி