Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 9


“விஷ்ணு! என்ன இது? விடு!”

“ஒரே இடத்தில் இரண்டு அறிவுஜீவி இனங்கள் சாத்தியப்படலாமோ என்னவோ. ஆனால் ஒரே குழுவில் இரண்டு ஆல்ஃபா மேல்கள் சாத்தியமில்லை”

“விஷ்ணு நோ!”, உடல் தானாக அவன் பிடியிலிருந்து தப்ப நினைத்தது.

“உன்னை இயக்கத்தில் இணைப்பது என் கடமை, அதே நேரத்தில் என் போட்டியாளனை அழிக்கும் கட்டாயமும் எனக்கு இருக்கிறது. இயக்கத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்தாகிவிட்டது. தேங்க்ஸ் டு யூ. இனி என் எதிர்காலம். இதுதானே இயற்கை? இல்லை என்று சொல்லாதே, கெட் தி லாஜிக்”, என்றபடி என் முகத்தில் அறைந்தான்.

“விஷ்ணு வேண்டாம்”, அனைவரும் எங்களைத்தான் பார்த்தார்கள். ஒரு மாதிரி இருந்தது.

“டொண்ட் வொர்ரி; உன்னை இப்பொழுது அடிக்கப் போவதில்லை. உன்னை உடல் ரீதியாக மட்டும் வெல்வது என் நோக்கமில்லை. உன்னை வைத்து ஒரு சிறிய பரிசோதனை. யூ ஆர் இன்ட்ரெஸ்டிங்!”

“என்ன பரிசோதனை? விஷ்ணு, விளையாடுகிறாய்தானே? போதும்”

“உடல் பலத்தால் வெல்வதா? அல்லது மெதுவாக இடத்தைத் தக்கவைப்பதா? அல்லது இரண்டுமா? இரண்டுமே!”, என்று கண்கள் இரண்டின் மேலும் விரல்களால் லேசாக அழுத்தம் கொடுத்தான்.

“ஆ..!”, வலியில் அலறினேன்.

என்னை அப்படியே கீழே தள்ளிவிட்டு, “எழுந்துகொள். இன்றைக்குப் போதும்”, என்றபடி நிமிர்ந்து பார்த்தான். அனைவரையும் ஒரு முறை நோட்டம் விட்டு, விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு வெளியே சென்றான்.

அடிபட்டவன் எப்படி இருப்பான் என்று முதல் முறையாக உணர்ந்தேன். மூக்கிலிருந்து உஷ்ணக்காற்றின் வெளியே இரத்தச் சாரல் அடிப்பது போல் இருந்தது. நுனி நாக்கில் இரும்புச் சுவை பட்டது. ஒரு ஓரமாய் நின்று நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த கின்னகா என்னருகே வந்து கை நீட்டினாள்.

“கின்னகா... முதல்முறையாக வெறியை உணர்கிறேன். அவனுடன் நான் சண்டை போட நினைக்கவே இல்லை”

“பின்வாங்கும் ஆல்ஃபா மேல் பண்பு. கார்டிசால், அட்ரீனலின் இரண்டும் ஏறி இறங்கியபடி இருக்கும். என் கையைப் பிடித்துக்கொள்”, என்றாள். அவள் கை பற்றி மேலெழுந்தேன். உடல் நடுங்கியபடி இருந்தது.

“எனக்கு யாரையேனும் இப்போது அடக்க வேண்டும்போல் இருக்கிறது”

“இயல்புதான். உன் டெஸ்டோஸ்டிரோனைக் கூட்ட உடல் இடும் கட்டளை அது. நான் தயார். வருகிறாயா?”

“இல்லை. நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.”

“இன்ட்ரெஸ்டிங்!”, என்றாள். “இதைக் கேட்டதும் இப்போது எனக்கு விருப்பமாக இருக்கிறது”

நான் அவளைப் பார்த்தேன். திடீரென்று எங்கிருந்தோ தைரியம் வந்தது. உடல் நடுக்கம் மெல்ல, குறைய ஆரம்பித்தது.

“ஒரு முறைதான், ஓகே?”, என்றேன் பலவீனமாக.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் பொழுது விடிந்தது. தூக்கமில்லை. நல்லவேளையாக ஞாயிற்றுக்கிழமையாதலால் பொறுமையாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் யார் என்ற உண்மை தெரிந்ததும் ஆச்சரியமாக டிமோனைப் பற்றிய நினைப்பு சிறிது சிறிதாக மங்க ஆரம்பித்ததை நினைத்துப் பார்த்தேன். டிமோன்தான் என் வாழ்க்கை, புல்ஷிட்! எனிவே, என்னோடு இருக்கும் சக உயிரினம் அது, அதற்கு சோறு போட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்த மேம்பால நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த பேருந்துகளின் மேல் தாவித் தாவி சென்ற அணில்களைப் போல் எனக்குள் எண்ணங்கள் தாவியபடி இருந்தன. அம்மா... என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள் அல்லவா?

வீட்டின் கீழே வந்து படியேற ஆரம்பித்தேன். விஷ்ணு ஏதோ பரிசோதனை என்று சொன்னது எண்ணத்தில் நின்று தொல்லை கொடுத்தது. என்னவாக இருக்கும்? உணர்ச்சிகள் பெரிதுமற்ற ஒரு புதியவனை எதிர்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு ஒரு கணம் பயத்தை உண்டு பண்ணியது. என்னைப் பற்றி சகலமும் அறிந்தவன் அவன். நான் யார், தனிமைப் பொழுதுகளில் என்ன செய்வேன், எப்படி சிந்திப்பேன், உட்பட அனைத்தும் அவனுக்குத் தெரியும். அயோக்கிய ராஸ்கல்! அவனை எப்படி எதிர்கொள்வது? என்ன இப்போது? நானும் புதியவன்தானே, பார்த்துவிடலாம் என்று ஒரு அசட்டு தைரியமும் இருந்தது. ஒரு வாரத்தில் எவ்வளவு நடந்துவிட்டது! என் வாசனையை நுகர்ந்து டிமோன் ‘வஃப், வஃப்’, என்று குலைக்க ஆரம்பித்தான்.

“வந்துட்டேன்டா பய்யா!”, கதவைத் திறக்க அங்கே சோம்பலாக உட்கார்ந்திருந்தான். முன்பெல்லாம் கதவைத் திறந்த அடுத்த நொடி என் மீது பாய்ந்து மூக்கை நக்குவான். “கண்ணுடா டேய்!”, என்று கத்துவேன்.

“எங்கேடா போயிருந்த? ராத்திரி பேய் வந்தது”, என்பது போல் பார்த்தான்.

நான் குனிந்து அவனைப் புன்னகையோடு பார்த்து நெற்றியில் தடவினேன்.

வெயிட்.

எழுந்தேன்.

விஷ்ணுவின் நினைப்பு குறுக்கிட்டது. இந்தப் பார்வையை இவன் போன வாரமும் வீசினானே? எச்சரிக்கை உணர்வு மேலெழ கண்கள் தன்னிச்சையாக லாக்காரை நோக்கி சென்...

பாதியிலேயே தெரிந்துவிட்டது. லேட்டரல் பார்வையில் லாக்கர் திறந்து கிடந்தது. உள்ளே காலியாக இருந்தது.

“டாய் மவனே!”, என்று உரக்கக் கத்தினேன். முட்டிபோட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றேன். கோபம் தலைக்கேறி பார்வையை என்னவோ செய்தது. ஓஹோ! இப்படித்தான் விளையாடுகிறானா அவன்? அவன் கண்ட புதியவர்களின் நான்தான் அதிகம் உணர்வுகளுக்கு பலியாகாமல் இருக்கிறேன் என்று இன்ட்ரென்ஸ்டிங், இன்ட்ரெஸ்டிங்! படுபாவி! என்னால் எவ்வளவு தூரம் அப்படி இருக்க முடியும் என்று பரிசோதிக்கிறானா? புதியவர்களில் தலைசிறந்தவனை மதிப்பிடுகிறானா? அப்படியென்றால் இயக்கத்தில் நான்தான் தலை சிறந்தவனா? அதை அவனால் ஒப்புக்கொள்ள முடியாமல்தான் என்னை வீழ்த்தப் பார்க்கிறானா?

உடனே என் அலைபேசியை எடுத்து “டேய் செத்தடா நீ!”, என்றேன்.

“இவ்வளவுதானா நீ? கோபப்படுகிறாய்?”, என்று சிரித்தான்.

“அதை மரியாதையாகக் கொடுத்துவிடு விஷ்ணு! உன் மீது எனக்கு இன்னும் மரியாதை இருக்கிறது”

“நீ அசாதாரணமானவன் எல்லாம் இல்லை என்று தெரிந்துவிட்டது. உன்னோடு சண்டை போட்டுவிட்டு, உன்னைப் பரிசோதனை செய்யப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, தெளிவான அறிவோடு உடனே என்னால் உன் வீட்டிற்குச் செல்ல முடிந்தது. நீ வார்ம் அப் எல்லாம் செய்து ரெடியாக இருப்பாய் என்று நினைத்தேன். இவ்வளவுதானா நீ?”

“எங்கே இருக்கிறாய் நீ? ஒழுங்காக சொல்லிவிடு!”

“அடுத்த வாரம், அதே மைதானத்தில் இயக்கம் கூடுகிறது. யார் ஆல்ஃபா மேல் என்று பார்த்துவிடலாம்”

“மவனே நீ செத்தாய்”, என்று அழைப்பைத் துண்டித்தேன்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி