Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மருத்துவர் அய்யாவிற்கு மறுப்பு

தினமணியில் நடுப்பக்கக் கட்டுரையாக 03/10/16 அன்று வெளியான மருத்துவர் இராமதாஸ் அய்யாவின் இந்தக் கட்டுரைக்கு (ஒருதலை காதலா? தறுதலை காதலா?) என்னுடைய மறுப்புக் கட்டுரை இது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னளவில் மருத்துவர் அய்யாவின் இந்தக் கட்டுரை ஆழமற்ற, எந்தத் தீர்வையும் முன்வைக்காத வகையில் தான் அமைந்திருக்கிறது. தன் தரப்பு யோக்கியமானது என்று நிறுவ இது ஒரு சமூக சிக்கல் என்று ஆய்வுக்கட்டுரை போல் எழுதிச்செல்கிறார். 'தறுதலை' ஆண்களை ஏதோ வில்லன்களைப் போல் பார்க்கும் மருத்துவர் அய்யா, அவர்களை உருவாக்குவது நாம்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். நமது ஆண்களின் உளவியல் இங்கு மிகவும் முக்கியம். சிறிது நேரம் மனித மூளையைப் பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். வாதத்திற்கு உதவும்.

ஒரு பெண் தனக்கு எதிராக ஏதேனும் பேசிவிட்டால் அல்லது காதலை மறுத்துவிட்டால் இந்த ‘தறுதலை’ ஆண் ஏன் அப்பெண்ணிற்கு எதிராக வன்முறையில் இறங்குகிறான்? மனித இனம் எண்ணற்ற நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தாலும் உடலியல் ரீதியாக இன்னும் அதற்குள்(both sexes) 'மிருகத்தனம்' இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. மூளையில் லிம்பிக் பாகம் என்று ஒன்று இருக்கிறது. இந்த லிம்பிக் பாகம் ஆபத்து(மரிக்கும் உந்துதல்) என்ற சிக்னல் வந்தவுடன் உடனே உயிர்பிழைக்க நான்கு டெக்னிக்குகளைக் கையாள்கிறது. 1) தாக்குதல், 2) தப்பித்தல், 3)உறைந்துபோதல், 4) மயக்கமுறுதல் (லாரி மோதப்போகிறது என்று தெரிந்ததும் வலியைக் குறைக்க, ஆதிகாலத்தில் சிங்கம் புலியிடம் மாட்டினால் அதற்காகவும்). மனிதர்களுக்கு இடையே நடக்கும் சிக்கலில் இந்த நான்கும் முழுமையாக உதவாது (உதாரணம்: நீங்கள் யார்மீதாவது கோபப்பட்டால் அப்போது எதிராளி உங்களைத் தாக்கவோ, பயந்து ஓடவோ, மயங்கி விழவோ மாட்டார்; சிறிது நேரம் உறைந்துபோய்விட்டு அடுத்த வேலையை கவனிக்கத் துவங்கிவிடுவார். இந்த மூன்று டெக்னிக்குகளை இங்கு பயன்படுத்த வேண்டாம் என்று அவருக்குச் சொல்லிக்கொடுப்பது முன்மூளை ஆகும்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஹாஸ்யம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், புலம்புதல், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தல், சட்டை செய்யாதல், ஆகியவற்றை முன்மூளை வளர்த்துக்கொண்டது. ஆக எந்த ஒரு பிரச்னையிலும் நாம் எப்படி நடந்துக்கொள்கிறோம் என்பது லிம்பிக் பாகத்திற்கும் முன்மூளைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பொறுத்தே அமைகிறது. லிம்பிக் பாகம்தான் புராதனமானதும் ஆட்டோமேட்டிக்கானதும், எனவே பெரும்பாலும் அதன் கை ஓங்கியிருக்கும். முன்மூளையின் பலம் என்பது பயிற்சியால் வருவது, அதை நாம் Value Education என்கிற பெயரில் பயிற்றுவிக்கிறோம். சாப்பிட்டு விட்டு கை கழுவு என்று வீட்டில் சொல்லிக்கொடுப்பது போன்ற சின்ன சின்ன ஒழுங்குபடுத்தும் விஷயங்களின் மூலம் மெதுவாக முன்மூளை வளர்ச்சியடைகிறது. அதற்கு பள்ளிக்கல்வி, குடும்ப சூழல், மத போதனை, சட்ட போதனை, அனுபவம் போன்றவை உதவுகின்றன. ஆக சக மனிதர்களைப் பற்றிய அன்பும் பரிவும், சூழலியல் குறித்த நிதர்சனப் பார்வையும் புரிதலும் இருந்தால் மூளை Rational-ஆக செயல்பட்டு லிம்பிக் பாகத்தை கட்டுப்படுத்தும்.

சரி, ஒரு பெண் துடுக்காகப் பேசிவிட்டால் ஏன் லிம்பிக் பாகம் வெற்றி பெறுகிறது? ஏன் ஒரு ஆணால் அதனை சகித்துக்கொள்ளவோ, ஹாஸ்யம் என்றோ கடக்க முடிவதில்லை? வீட்டில் மனைவி ஏதேனும் எதிர்த்துப் பேசினால் வாயை மூடு என்று சொல்லும் கணவனின் அதே சிக்கல்தான். நமது வீட்டில் ஆண்-பெண் சமத்துவம் சரியாகப் பேசப்படுவதில்லை. தான் ஒரு ஆண் என்று நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மெதுவாக(பெண் பிள்ளைகள் வீட்டைப் பெருக்க வேண்டும், சமையல் செய்ய வேண்டும், ஆண் பிள்ளை எம்.எஸ். படிக்க இருபது லட்சம் கூட செலவு செய்யலாம், ஆனால் பெண்ணுக்கு அதே காசில் ஜாம் ஜாம் என்று திருமணம் செய்யலாம்) பயிற்றுவிக்கப்படுகிறான். எனவே ஒரு பெண் ஏதேனும் துடுக்காகப் பேசிவிட்டால் சரியான பயிற்சி இல்லாத முன்மூளையுள்ள ஆணின் டெஸ்டாஸ்டிரான் அளவுகள் சர்ர்ர்ரென்று அதள பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. வாழும் உந்துதலை விட மரிக்கும் உந்துதல் வலுப்பெறுகிறது. லிம்பிக் பாகத்திற்கு அதுதான் வேண்டும். உடனே fight or flight mode செயல்படத் துவங்குகிறது. அவன் மிருகம் ஆகிறான். தாக்குகிறான். இதுதான் உடலியல் அறிவியல்.  இதை ஒரு மருத்துவராக இருந்துக்கொண்டு அய்யா பரிசீலனை செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

இதற்கான தீர்வு வெளியில் எங்கும் இல்லை. மருத்துவர் அய்யாவின் வீட்டில், என் வீட்டில், உங்களின் வீட்டில்தான் இருக்கிறது. எதிர்பாலினம் சார்ந்து வீட்டில் எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை. வெளியே செல்லும் பெண்ணிடம் பார்த்துப்போம்மா என்று சொல்லும் நாம் வெளியே செல்லும் ஆணிடம் பார்த்து நடந்துக்கோப்பா என்று சொல்வதில்லை. ஒரு பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கவே பயிற்றுவிக்கிறோம். சினிமா எடுப்பவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து கீழே குதித்துவிடவில்லை, இந்த சமூகம் அவர்களுக்குக் கற்றுத்தந்தவற்றையே அவர்கள் திரையில் பிரதிபலிக்கிறார்கள். ‘இந்தப் பொண்ணுங்களே இப்படிதான், அடிடா அவளை’ என்பதே படைப்பாளியின் உளவியலாக இருக்கிறது. அந்த உளவியல் எங்கிருந்து வந்தது? பிரச்னையின் வேர் வீட்டில்தானே இருக்கிறது? தொல்காப்பியர் காலத்து ‘மடலேறுதல்’ முதல் இந்தக் காலத்து ‘ஆசிட் அடித்தல்’ வரை, காதலிலோ திருமணத்திலோ சுயமாக முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்குத் தரப்பட்டதில்லை, தரப்படுவதில்லை.  மருத்துவர் அய்யா சொல்வதுபோல் இது சமூகச் சிக்கல் மட்டுமல்ல. இது அடிப்படையில் ஒரு பாலியல் சிக்கல். அதை நாம் சரியாக அணுகாததால் தற்போது சமூகச்சிக்கலாக நம் கண் முன்னே விரிந்திருக்கிறது. அதை விட்டுவிட்டு பெண்களைக் காக்க வேண்டும் காக்க வேண்டும் என்கிறார். ஆண்களை ஆண்-களாக வளர்க்கும்வரை பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்காது என்பதே உண்மை. பாலியல் கல்வி வேண்டும் என்று காட்டுக்கத்து கத்துவதற்கு இதுதான் காரணம். மர்மம், இரகசியம், புனிதம், இதெல்லாம் இருக்கும் வரைதானே கவர்ச்சி, ஈர்ப்பு, எல்லாம்? அந்த மர்ம வெங்காயத்தை உடைத்துவிடுவோமே என்பதுதான் இதன் தர்க்கம். இதை மருத்துவர் அய்யா ஏற்றுக்கொள்ள மாட்டார். ‘கற்கக்கூடாததை எல்லாம் கற்று’ பெண்களும் ஆண்களும் ‘கெட்டுப்போய்விடுவார்களே’?

மருத்துவர் அய்யாவே பிரச்னைகளை சொல்கிறார், ஆனால் அவற்றை பிரச்னைகளாகப் பார்க்க மறுக்கிறார்:

1. “பாலியல் தொந்தரவிற்கு உள்ளான பெண்கள் வீட்டில் அதை சொல்வதில்லை” - சொன்னால் நாம் எங்கே பெண்ணோடு துணை நிற்கிறோம்? “அவன் பாக்குற அளவுக்கு என்ன ட்ரெஸ் போட்டிருந்த? இந்த நேரத்துல உனக்கு என்ன வேலை? அவன் சும்மாவா பார்ப்பான்?”, என்று பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் அயோக்கியத்தனத்தை செய்கிறோம். பின் எப்படி அவள் வீட்டில் சொல்லுவாள்? அவரே காரணமும் சொல்கிறார், “எங்கே படிப்பை நிறுத்திவிடுவார்களோ, பணி செய்ய வேண்டாம் என்றுவிடுவார்களோ...”, என்று. அதுதான் சிக்கல் என்றுதான் தெரிகிறதே? இவருடைய தர்க்கத்தின்படி பார்த்தால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பெண்ணின் படிப்பை நிறுத்த பத்து நிமிடம் செலவு செய்து ஒரு photoshop image-ஐ உருவாக்கினால் போதும்.  அந்த இமேஜை உருவாக்குகிறவன் தன் குடும்பத்து ஆணைப் போல் ஒருவன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத் துணிவில்லை, ஆணை ஆணாக வளர்க்கக்கூடாது என்ற கண்ணுக்குத் தெரியும் தீர்வை அங்கீகரிக்க மனதில் திடம் இல்லை. பிறகு சமூகத்தில் ஆம்பிளை அந்தஸ்து என்னாவது? வேட்டியை மடித்துக்கட்டி முஷ்டியை மடக்கியபடி வலம் வர முடியாதே?

2. “காதல் போதை ஊட்டுவதற்குத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன” - காதல் போதை என்பதை மதுபோதைக்கு இணையாக வில்லனாக்குகிறோம். காதல் ஒரு இயல்பான விஷயம். காதல் போதையை திரைப்படம்தான் ஊட்டவேண்டும் என்னும் அளவிற்கு காதல் வறட்சி மிகுந்த சமூகமாக மாறிப்போயிருக்கிறோம் என்பதே உண்மை. சும்மா ‘பழந்தமிழர் காதலுக்கும் வீரத்திற்கும்...’ என்று கம்பு சுத்திக்கொண்டிருக்கிறோம். திரைப்படங்கள் இயல்பைக் காட்டாது, அது நாடகத்தனத்திற்காக மிகைப்படுத்திக்காட்டும். பெண்ணை காதலிக்க அவளைப் பின் தொடரச் சொல்லும், அவள் வழுக்கி விழுந்தால் தாங்கிப் பிடிக்கச் சொல்லும். எதுவும் ஒத்து வரவில்லையா? அவள் தூங்கும்போது தாலியை கட்டிவிடு என்ற அபத்தத்தைக் கற்றுக்கொடுக்கும். இதையெல்லாம் இந்த ‘தறுதலை ஆண்கள்’ பக்தி சிரத்தையாகக் கேட்டுக்கொள்வார்கள். அந்த வகை காட்சிகளை அமைப்பதற்கான உளவியலை மீண்டும் குடும்பமும் சமூகமுமே உருவாக்குகிறது. பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும், பெண்ணைப் புரிந்துக்கொள்வது எப்படி என்று இந்த சினிமாக்கள் பாடம் எடுப்பதுதான் அபத்தத்தின் உச்சமே. அதைக் குடும்பங்களும் பள்ளியும்தான் சொல்லித்தரவேண்டும்.

3. “அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக்கொள்கிறாள்” - சிக்கல் என்னவென்று அவரே எழுதுகிறார், வழக்கம்போல் சிக்கல் இதுதான் என்பதை அறியாமலேயே. ஏமாற்றப்பட்ட பெண்ணின் பெயர் கெட்டுப்போகவேண்டும் என்ற சமூக விழுமியத்தை யார் உருவாக்கியது? “என்னை ஏமாத்திட்டா இனிமே யாரு என்னைக் கல்யாணம் செய்வாங்க?”, என்று காலம் காலமாக வசனம் மட்டும்தான் எழுதுகிறோமே தவிர, ஏன் ஒரு பெண்ணையும் அவளது so called கற்பையும் இப்படி புனிதப்படுத்துகிறோம் என்று நாம் சிந்திப்பதே இல்லை. ஒரு பெண்ணின் ‘கற்பு’ மேல் புனித பிம்பத்தைக் கட்டமைக்கிறோம்; அந்தக் பெண் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டால், அவளுடன் கூட நிற்க துப்பில்லாமல் அய்யகோ புனிதம் கெட்டுவிட்டதே என்று அழுது தீர்க்கிறோம். பின்னே அவமானம் வராமல் என்ன செய்யும்? கற்பு, தாய்மை, பெண்மை, இதன்மேல் புனிதத்தை சவாரி ஏற்றியதன்மூலம் அவர்களுக்கு நன்மைகளைவிட தீமைகளே அதிகம். “இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”, என்று உதட்டளவில் மட்டுமே உச்சரிக்கிறோம். பாலியல் வன்முறைக்கு ஆளானவள் கற்பிழந்தாளாம். கற்பு என்றால் ஒழுக்கம்தானே? அப்படிப்பார்த்தால் நியாயமாக அவன் தானே கற்பிழக்கவேண்டும்? எந்த ஆணின் வீட்டிலும் இப்படி போச்சே போச்சே என்று அழுவதில்லை. ஆம்பளைன்னா அப்படித்தான் என்று சமூகம் அவனை மறைமுகமாக அங்கீகரிக்கிறது. விளைவு? மருத்துவர் அய்யா சொல்வதுபோல் இந்த ‘தறுதலை ஆண்கள்’ காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சுற்றுகிறார்கள். சிக்கலின் வேர் இவர்களிடம் இல்லை, நம்மிடம்தான் இருக்கிறது. அவர்கள் சட்டத்தின்முன் தண்டிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. ஆனால் நிரந்தத் தீர்வு அவர்களைத் திருத்துவதில் இல்லை, நாம் ஒரு சமூகமாகத் திருந்துவதில்தான் இருக்கிறது.

4. “ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவனை நிராகரிக்கும் உரிமையற்றவளாகி உயிரை இழக்கிறாள்” - Exactly! அதே நேரத்தில் ஒரு பெண்ணை அடக்க நினைக்கும் ஆணும் நம் குடும்பத்திலிருந்துதான் வருகிறான், அதையும் இணைத்தே பேச வேண்டும். சும்மா என் குடும்பம் டீசண்டான குடும்பம், யோக்கியக் குடும்பம் என்று நாம் நூல் விட்டுக்கொண்டிருக்கக்கூடாது. நம் குடும்பங்கள் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பு. அதில் சாதி இன்றியமையாத ஒன்று. இக்குடும்ப அமைப்பிலிருந்து அந்த சாதியை வெளியேற்றாதவரை கொலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கும். இவரும் இந்தத் ‘தறுதலை ஆண்க’ளைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

எங்கோ ஒரு இடத்தில் இப்பொழுது பிறந்திருக்கும் ஒரு ஆண் குழந்தை இருபது வருடங்களில் ஒரு ‘தறுதலை’யாக உருவாகும் சூழலை இந்த சமூகமே உருவாக்கியிருக்கிறது.  எங்கோ ஒரு இடத்தில் இப்பொழுது பிறந்திருக்கும் ஒரு பெண் குழந்தை இருபது வருடங்களில் எதற்காக இந்தப் பக்கத்துவீட்டுக்காரர்களுக்குத் தன் கற்பின் மீது இத்தனை கரிசனம் என்றே புரியாமல் ‘கெட்டுப்போகும்’ சூழலையும் இந்த சமூகமே உருவாக்கியிருக்கிறது. 'We' are mass producing these men! இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் இந்த சமூக சிக்கலை அறிவியல் பூர்வமாகவும் திறந்த மனதோடும் அணுகும்வரை, இந்த சமூகத்தில் பாதிக்கப்பட்ட/படுகின்ற/படப்போகும் பெண்களுக்கும் ஆண்-களுக்கும் தீர்வு இல்லை.

Courtesy: Times of India
(ஆண்களின் உளவியலைப் பற்றி அறிந்துகொள்ள டாக்டர் ஷாலினியின் ஆண்களைப் பயிற்றுவிப்போம் கட்டுரை பேருதவியாக இருந்தது)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி