Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள் - ஸ்ரீதர் சுப்ரமணியம்

          நேற்று ஸ்ரீதர் சுப்ரமணியம் சாரின் பிறந்தநாளுக்கு முகநூலில் பூ.கொ.சரவணன் அண்ணன் வாழ்த்துப் பதிவிட்டு கீழே அவர் புத்தகத்தின் அமேஜான் சுட்டியைத் தந்திருந்தார். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகம் கிண்டில் வடிவில் 120 ரூபாய்க்கு கிடைத்தது. ஒரே மூச்சில் கடகடவென்று வாசித்து முடித்தபோது இந்த உலகத்தை தர்க்க மதிப்பீடு செய்த ஒரு மானுடவியல் பயணத்தில் உடன்சென்றதுபோல் இருந்தது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால விழுமியங்களைத் தொடர்புபடுத்தி நிகழ்கால சிக்கல்கள் குறித்த தன் கருத்தை வரலாற்றுப் பார்வையோடு அவர் முன்வைக்கும்போது ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். இப்புத்தகத்தை நாம் நம் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் அணுகுகிறோமா, அல்லது இப்புத்தகம் விடாமல் கைக்கொள்ளும் தர்க்கத்தை நம் மத, கலாசார, தேசிய அடையாளங்கள் உட்புகுத்தும் முன்முடிவுகளால் உந்தப்பட்டு முற்றாக நிராகரிக்கிறோமா, என்பதைப் பொறுத்து இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் வேறுபடும். இது எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தும்தானே என்று கேட்டால், பல புத்தகங்களில் வெகு அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு பண்பு இதில் இருக்கிறது - இப்புத்தகம் உரையாடலுக்கான வாயிலைத் தொடர்ந்து திறந்து வைத்தபடி இருக்கிறது. எங்குமே உணர்ச்சிகள் மேலிடாமல் தர்க்கம் மட்டுமே வெளிப்படும் 34 கட்டுரைகள். மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் நாம் எங்கிருக்கிறோம் என்று நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள, உச்சபட்ச மனித நேயத்தை நோக்கிய (ஒருகட்டத்தில் ஜீவநேயமும் கூட) பயணத்தை மேற்கொள்ள இந்தப் புத்தகம் வழங்கும் பார்வை நமக்கு மிகவும் உதவும். இதற்கு மூதறிஞர்களின் தடிமனான ஆத்மத்தேடல் புத்தகங்கள்தான் தேவை என்றில்லை. இதுபோன்ற எளிய முகநூல் ஸ்டேட்டஸ் தமிழில் பொட்டில் அடித்தார்போல் வாதங்கள் முன்வைக்கப்படுகிறபோது, அதுவும் மேதைமைத்தனம் எதுவும் எட்டிப்பார்க்காமல் வெறும் தர்க்கத்தை மட்டுமே கேடயமாக வைத்துக்கொண்டு கண்திறப்புகளை முயற்சிக்கும்போது, எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும் உரையாட வேண்டும் என்ற உந்துதல் நமக்கு எழுவதுதான் இதன் வெற்றியும் நோக்கமுமே.

          வன்புணர்வையும் உடலுறவையும் இணைத்துப் பார்த்து, வன்புணர்வை வெறும் பாலியல் இச்சைகளின் விளைவாக சுருக்கி விடுகிறோம். அதன் பண்பாட்டு நீட்சியாக பெண்களுக்கு உடை கட்டுப்பாட்டு போதனைகளையும் உடை சார்ந்த ஒழுக்கத்தையும் மதத்தின் துணைகொண்டு நிறுவனமயப்படுத்துகிறோம். மாறாக, வன்புணர்வு என்பது செக்ஸ் தொடர்பானது அல்ல, ஆதிக்கம் தொடர்பானது. உன்னை விட நான் மேலானவன் என்பதை நிலைநாட்ட மேற்கொள்ளும் செயலே அது. குடும்ப மானத்தைத் தாங்கி நிற்பவராக, தேசத்தின் மாண்பை கட்டிக்காப்பவராக ‘கற்’பின் பெயரால் பெண்களுக்கு பொறுப்புகள் சுமத்தப்படும்போது, பெண்களின் ‘கற்பை அழித்தால்’ இந்த மாண்பைக் குலைக்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றுகிறது. இந்த ‘கற்பு’ என்னும் கருத்தாக்கம் அழிக்கப்படும்வரை பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகியபடிதான் இருப்பார்கள் என்கிறது ஒரு கட்டுரை. ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்காக கவுதம் மேனனுக்கு செம டோஸ் விடும் கட்டுரை ஒன்றும் இருக்கிறது. இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையும் இருக்கிறது; இசைஞானி ரசிகர்கள் பொறுமையாக, திறந்த மனதுடன் அதை வாசிக்கவும்.

          “பிள்ளைகளைக் கல்லூரிக்குப் படிக்கதான் அனுப்புகிறோம், காதலிக்க இல்லை”, என்ற பெற்றோர்களின் வாதத்திற்கு ஸ்ரீதர் தரும் பதில் அசரவைக்கும் ஒன்று. சரி, பெண்ணைப் படிக்க வைக்காமல் பெற்றோர் வேறென்ன செய்வார்கள்? பள்ளிப்படிப்பு முடிந்ததும் வீட்டிலேயே வைத்திருக்காமல் 17, 18 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். யாரோ முன்பின் தெரியாத ஒரு ஆண்மகனோடு அவர்களின் மகள் அப்பொழுது வைத்துக்கொள்ளும் உடலுறவை மட்டும் எப்படி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? 20, 21 வயதில் சக ஆண் ஒருவனோடு தோழமையாகப் பழகினாலேயே எதிர்க்கும் பெற்றோருக்கு இது மட்டும் எப்படி ஏற்புடையதாக இருக்கிறது? சாதித் தூய்மை என்னும் காரணியை விட்டுவிட்டாலும் கூட, “பிள்ளைகளைக் கல்லூரிக்குப் படிக்கதான் அனுப்புகிறோம், காதலிக்க இல்லை” என்ற வாதத்திற்கு இது எவ்வகையிலும் வலுசேர்க்கவே இல்லை அல்லவா?

          மேலும் பல்வேறு விஷயங்களை இப்புத்தகம் தொடுகிறது. மரண தண்டனை, குரானில் வன்முறை, வஹாபிசத்தின் சிக்கல், மாட்டுக்கறி அரசியல், கபாலி திரைப்படம் பேசிய தலித் அரசியல், இந்து தேசம் என்ற ஏமாற்றுவேலை, நாத்திகம், பி.கே.திரைப்படம், ஓர்பால் ஈர்ப்பு, ரயில்வேயில் தனியார்மயம், சினிமா டிக்கெட் விலையேற்றம், திருட்டு விசிடி, மதுவிலக்கு ஏன் முட்டாள்தனமானது, மரபணு மாற்றப்பட்ட விதைகள் எந்திரமயமாதல், போலீஸ் என்கவுன்டர்கள், கார்ப்பொரேட் மீது இருக்கும் வெறுப்பு, விலங்குரிமை,  பாகிஸ்தான்-காஷ்மீர் விவகாரம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், இந்தியாவின் 60 ஆண்டுகால சாதனைகள் மற்றும் சறுக்கல்கள், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகளைத் திட்டியது, பசுமைப் புரட்சி, என்று பல்வேறு தளங்களில் புத்தகம் விரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிக்கலை மையமாக எடுத்துக்கொண்டு, அதை வரலாற்றுப் பின்னணியோடும், மானுடவியல் நோக்கோடும் ஆராய்ந்து, நடைமுறை யதார்த்தம் சார்ந்த அறிவுப்பூர்வமான தீர்வுகளை முன்வைக்கிறது. ஒரு சமூகம் அனைவரையும் இணைத்தபடி முன்னேற்றப் பாதையில் நடக்கும் சாகசத்தை அடிப்படையில் உரையாடல்களே முன்னெடுக்கின்றன. நமக்கான பல உரையாடல்களை, அதன் தேவையை, இப்புத்தகம் புதிதாக வாசிக்க வருபவர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். 34 நீண்ட பேஸ்புக் பதிவுகளை வாசித்ததுபோல் இருக்கும், அவ்வளவே. அடையாளங்கள் கடந்து சக மனிதர்களை லைக் செய்து வெறுப்பற்ற தர்க்கப்பூர்வ கமெண்ட்டுகளால் மானுடத்தை முன்நகர்த்துங்கள் என்று ஊக்குவிக்கும் புத்தகம் இது.

ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
கட்டுரைத் தொகுப்பு
ஸ்ரீதர் சுப்ரமணியம்
பார்வதி படைப்பகம்
196 பக்கங்கள்
ரூ.120/- (கிண்டில் வடிவம்)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி