Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அவ‌ள்


ஒரு வேலை விஷ‌ய‌மாக‌ ம‌த்திய‌ கைலாஷில் இற‌ங்கும்போது எதேச்சையாக‌ அவ‌ளைப் பார்த்தேன். அவ‌ளுக்கே உரித்தான‌ அந்த‌ ந‌ட‌ன‌ ந‌டையுட‌ன் க‌ல்லூரிப் பேருந்திலிருந்து அவ‌ள் இற‌ங்க‌, ஒரு நிமிட‌ம் ப‌ழைய‌ நினைவுக‌ளில் ஆடிப்போய் அவ‌ளையே பார்த்த‌ப‌டி நின்றேன். என்னை அறியாம‌ல் என் கை அவ‌ளை வ‌ந்த‌னிக்க‌, அவ‌ளும் என்னைப் பார்த்தாள்; நின்றாள்; "ஹேய் !!"

என்னை நோக்கி ஒரு ம‌யிலிற‌கு காற்றில் மித‌ந்த‌ப‌டி வ‌ந்த‌து. த‌லையை இருபுற‌மும் ஆட்டினேன்; ம‌யிலிற‌குதான். ப‌ழைய‌ ஞாப‌க‌ங்க‌ள் ஒன்றோடு ஒன்றாய் என்னை என்னுள்ளே எங்கெங்கோ இழுத்துக்கொண்டு செல்ல‌ வெளியே என் உட‌ல் அவ‌ளை வ‌ந்த‌னித்துக்கொண்டிருக்கும் என் கையைச் சும‌ந்த‌ப‌டி அப்ப‌டியே நின்றுகொண்டிருந்த‌து.

+2 முடித்து SRM ஈஸ்வ‌ரியில் என‌க்கு சீட் கிடைத்து எல்லாம் சுப‌ம் என்று இருந்த‌போது திடீரென்று என‌க்காக‌வே ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்லூரிபோல் கேயாஸ் திய‌ரியின் புண்ணிய‌த்தில் என‌க்கு SSN க‌ல்லூரியில் இட‌ம் கிடைக்க‌, அத‌ன் அப‌ரிமித‌மான‌ சுத‌ந்திர‌த்தாலும் முற்போக்குத் த‌ன்மையாலும் வ‌ன‌வாணி விஷ்ணு கொஞ்ச‌ம் காணாம‌ல் போனான். இப்பொழுதும் என் க‌ண்ணெதிரில் ம‌யிலிற‌கால் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு வ‌டிவ‌ம்தான் தெரிந்த‌து; அந்த‌ உருவ‌ம் அத‌ன் கைக‌ளால் சில‌ புத்த‌க‌ங்க‌ளை அத‌ன் மார்பில் மேல் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்த‌தைக் க‌ண்ட‌தும் ஒருக‌ண‌ம் ப‌ளிச்சென்று எங்கிருந்தோ ஒரு மின்ன‌ல் என் இத‌ய‌த்தை ப‌த‌ம் பார்க்க‌, ஓ! நீ இன்ன‌மும் இந்த‌ அழ‌கான‌ ப‌ழ‌க்க‌த்தை விட‌வில்லையா ? அந்தப் ப‌த்தாம் கிளாஸ் விஷ்ணு அந்த‌ மின்ன‌லைப்போல் ஒருக‌ண‌ம் என் ம‌ன‌க்க‌ண் முன் வ‌ந்துபோனான். ப‌ள்ளியில் அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் அவ‌ள் என் வ‌குப்பில் தான் ப‌டித்தாள்; என்னைப்போல‌வே த‌மிழின் மீது ஒரு ப‌ற்று; என‌க்கு இருப்ப‌தைப்போல‌வே த‌மிழ் சாரிட‌ம் ந‌ல்ல‌ பெய‌ர்; என்னை மாதிரியே ஒரு அண்ண‌ன் ? வேண்டாம் !

ச‌க்தி அவ‌ளை வைத்துதான் என்னை ஒட்டு ஓட்டென்று ஓட்டுவான். "மாமா உன் ஆளோட‌ பேருக்கு என்ன‌ அர்த்த‌ம்‌டா ? கேட்டு சொல்லுடா மாமா ! மாமா !", என்று அட‌ம்பிடித்துக் க‌டுப்பேற்றுவான். எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது ப‌தின்ப‌ருவ‌ம் லேசாக‌ எட்டிப்பார்க்க‌ அவ‌ளை நான் சைட் அடித்திருக்கிறேன்; அதை நான் ப‌ள்ளியின் க‌டைசி தின‌த்த‌ன்று அவ‌ளிடமே ஒப்புக் கொள்ள‌வும் செய்தேன், அது வேறு விஷ‌ய‌ம். அவ‌ள் ஒன்றும் பெரிய‌ அழ‌கி எல்லாம் இல்லை‌. ஆனால் அழ‌கு ம‌ட்டும்தான் ஈர்ப்பிற்குக் கார‌ண‌மாக‌ இருக்க‌முடியும் என்று நான் என்றுமே எடுத்துக்கொண்ட‌தில்லை. அவளிட‌ம் என‌க்கு ஒரு இன‌ம் புரியாத‌ ஈர்ப்பு ஒன்று நிலையாக‌ ஆனால் நிலைய‌ற்ற‌தாக‌ இருந்தாலும், அதை நான் என்றும் காத‌ல் என்று த‌ப்ப‌ர்த்த‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌வில்லை. ஆனால் இந்த‌ ச‌க்தி இருக்கானே ! சும்மா இருப்பானா ப‌ய‌புள்ள‌ !

"திஸ் இஸ் டீன் ஏஜ் மாமா ! எதுவுமே த‌ப்பில்ல‌ !"
"டேய் பொட்ட‌ ! நா எதுவுமே இல்லை‌னு சொல்லிட்ருக்கேன், எதுவுமே த‌ப்பில்லையாம் !"

கால‌ப்போக்கில் அவ‌ள் என‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்பியாகிப்போனாள். கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ச‌க்தியும் அவ‌ள் பேச்சைக் குறைத்துக் கொண்டு 'புதிரா புனித‌மா' ப‌டிக்க‌ ஆர‌ம்பிக்க‌, அந்த‌ ஈர்ப்பு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ம‌றைய‌த் தொட‌ங்கிய‌து.

ப‌த்தாம் கிளாஸ் முடித்த‌வுட‌ன் ச‌க்தி வேறு ஒரு ப‌ள்ளிக்கு மாற்ற‌லாகிப் போனான். அவ‌ளும் வேறு ஒரு பிரிவிற்குச் சென்று விட்டாள். சில‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளினால் நான் ப‌த்தாம் வ‌குப்பிற்குப் பிற‌கு கொஞ்ச‌ம் ந‌ல்ல‌வ‌னாகிப்போனேன் (அதைப் ப‌ற்றி வேறொரு ச‌ம‌ய‌ம்). "ச‌ரி, புது வாழ்வு வாழ்வோம்", என்று வாழ்ந்து முடித்த‌ ஞானியைப்போல் சிந்தித்துப் பார்த்த‌தில் அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ம் என‌க்குப் பிடித்த‌ த‌மிழில் எதுமே செய்யாம‌ல் கால‌த்தை வீணாக்கியிருப்ப‌து புரிந்த‌து. ச‌ரி, கொஞ்ச‌ம் த‌மிழுக்கு ஏதாவ‌து செய்ய‌லாம், என்று த‌மிழ் சாரிட‌ம் ஆண்டு விழா நாட‌க‌த்தில் ந‌டிக்க‌ வாய்ப்பு கேட்டுப் போனேன். அவ‌ர் என்னைப் பார்த்த‌தும், "வாய்யா துரியோத‌னா !", என்று நாட‌க‌த்திற்குள் இழுத்து விட்டுவிட்டார் (அத‌னால் C.Sc. கிளாஸ் க‌ட்டாக‌, C language என‌க்குப் புட்டுக்கொண்ட‌து வேறு விஷ‌ய‌ம்). அந்த‌ நாட‌க‌த்தை ஒரு போட்டியில் அர‌ங்கேற்றிய‌‌போது நாட‌க‌த்திற்கு மூன்றாம் ப‌ரிசும் என‌க்கு 'ந‌‌வ‌ர‌ச‌ நாய‌க‌ன்' விருதும் கிடைத்த‌து. அதைக் கேட்ட‌தும் த‌மிழ் சார், "அடுத்த‌ வ‌ருஷ‌மும் நீதாண்டா !", என்று சொல்லிவிட்டு என்னையே நாட‌க‌த்திற்குத் திரைக்க‌தையும் வ‌ச‌ன‌மும் எழுத‌ச்சொன்னார் (இத‌னால் என‌க்கு C++ -உம் புட்டுக்கொண்டு விட்ட‌து). த‌மிழ் சார் சொன்ன‌த‌ற்கிண‌ங்க‌ நான் 'எம‌லோக‌த்தில் ச‌ல‌ச‌ல‌ப்பு' என்ற‌ க‌தை ஒன்று எழுதினேன் (நான்தான் எம‌ன் என்று சொல்ல‌ வேண்டிய‌தில்லை; பார்த்தாலே தெரியும்). க‌தையில் ஒரு ந‌ர்ஸ் ரோல் வ‌ந்த‌து; அத‌ற்கு யாரைப் போட‌லாம் என்று யோசித்துக் கொண்டிருந்த‌போது, எதிர்பாராத‌ வித‌மாக‌ அவ‌ள் வ‌ந்தாள், த‌‌ன் கைக‌ளால் ஒரு புத்த‌க‌த்தை மார்பில் இறுக்கி அணைத்துக் கொண்டு !

இத‌னால் இடையில் விட்டுப்போன‌ எங்க‌ள் ந‌ட்பு மீண்டும் தொட‌ர‌லாயிற்று. மீண்டும் ச‌க‌ஜ‌மாய்ப் பேச‌ ஆர‌ம்பித்தோம். நாட‌க‌த்தினை ந‌டிக்க‌ப் ப‌யிற்சி செய்து பார்ப்ப‌து என்ப‌து ஒரு சுக‌மான‌ அனுப‌வ‌ம். ஆம், அனைவ‌ரும் ஒரு குழுவாக‌ ஜாலியாக‌ அர‌ட்டை அடித்துக்கொண்டே ஒருங்கிணைத்து ப‌யிற்சி செய்யும் க‌ண‌ங்க‌ள் எங்க‌ள் ப‌ள்ளி வாழ்வின் பாஸிட்டிவ் சிக‌ர‌ங்க‌ள். க‌தையில் நித்தியான‌ந்தாவைப் parody செய்யும் ச‌த்தியான‌ந்தா ரோல் ஒன்றை வேண்டுமென்றே வைத்திருந்தேன். அவ‌ர் பேசும் வ‌ச‌ன‌த்திற்காக‌ புதுப்புது ஏ-ஜோக்குக‌ளைக் க‌ண்டுபிடிக்கும் முய‌ற்சியில் அனைவ‌ரும் இற‌ங்கினோம்.

"ல‌ட்ச‌க்க‌ண‌க்கானோர் வ‌ந்து என் உரையைக் கேட்க‌ ஆர்வ‌மாய் இருந்த‌ன‌ர் !"
"அவ‌ர்க‌ளிட‌ம் நீர் என்ன‌ சொன்னீர் ?"
"த‌ர‌முடியாது என்று சொல்லிவிட்டேன் !"

இதுபோன்ற‌வை த‌மிழ் சார் என்னும் த‌ணிக்கை அதிகாரியால் சென்ஸார் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

நாட‌க‌ப் ப‌யிற்சி என்கிற‌ சாக்கில் நாங்க‌ள் இருவ‌ரும் மீண்டும் க‌ல‌ந்துரையாட‌ ஒரு வாய்ப்பு கிட்டிய‌தால் நிறைய‌ பேசினோம். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். எங்க‌ள் ந‌ட்பு இன்னும் ஆழ‌மாக‌ வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்த‌து. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "விஷ்ணூஊஊ", என்று அவ‌ள் அழ‌காக‌க் கூப்பிடும்போது அந்த‌க் க‌ட‌ந்த‌கால‌ ஈர்ப்பு என‌க்குள் கொஞ்ச‌ம் எட்டிப்பார்க்கத்தான் செய்த‌து.

இம்முறை ஒரு மாத‌ம் ந‌ன்றாக‌ப் ப‌யிற்சி செய்த‌தில், எங்க‌ளுக்கு முத‌ல் ப‌ரிசும் சித்திர‌குப்த‌ன் வேட‌ம் பூண்ட‌ கௌத‌ம் ச‌ங்க‌ருக்கு 'சிற‌ந்த‌ ந‌டிக‌ர்' விருதும் கிடைக்க‌, த‌மிழ் சார் ச‌ந்தோஷ‌த்தில் திக்குமுக்காடிப் போனார். இன்றுவரை என்னை யாரிட‌மாவ‌து அறிமுக‌ம் செய்து வைக்கும்போது, "விஷ்ணு இவ‌ன் பெய‌ர். நான் க‌ண்டெடுத்த‌ முத்து !", என்று பெருமையுட‌ன் கூறுவார். அவ‌ர் நீண்ட‌ ஆயுளுட‌ன் வாழ‌ வேண்டும்.

நாட‌க‌த்தில் வெற்றி பெற்ற‌தால் கிங்கிர‌னாக‌ ந‌டித்த‌ ஆதித்யா அவ‌ன் ஹோட்ட‌லில் ட்ரீட் வைத்தான். அப்போது அவ‌ள் என்ன‌ருகிலேயே இருக்க‌ விரும்பிய‌துபோல் இருந்த‌து. என்னுட‌ன் பேச‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே என்னுட‌ன் பேசிய‌துபோல் இருந்த‌து. செல்ல‌மாக‌ அடித்தாள். என‌க்குத் த‌லை கிறுகிறுத்த‌து.
"விஷ்ணு, ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்டா நீ !", என்றாள் திடீரென்று.
"ஏன் அப்டி சொல்ற‌ ?"
"அதெல்லாம் அப்டிதான்", ஏனோ அவ‌ள் த‌ரையைப் பார்த்தே ப‌தில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
"எதெல்லாம் எப்டிதான் ?", நான் விட‌வில்லை.
"போடா ! இதெல்லாம் உன‌க்கா புரிய‌னும், புரியும் !", செல்ல‌மாக‌ என்னை ஒரு த‌ட்டு த‌ட்டிவிட்டு சிரித்துக் கொண்டே குதித்து குதித்துச் சென்றாள்.
நான் அவ‌ளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என‌க்குக் த‌லைகால் புரிய‌வில்லை. ப‌ய‌புள்ள‌ ! அவ‌ள்மேல் ஈர்ப்பு இருந்த‌து ஒரு கால‌த்தில்தான் என்ற‌ உண்மை என் இத‌ய‌த்திற்குத் தெரிந்திருந்தாலும் அது இப்பொழுதும் இருக்கிற‌து என்று காட்டிக்கொள்ள‌ விரும்பிய‌துபோல் அது ப‌ட‌ப‌ட‌ என்று அடித்துக்கொண்ட‌து. என்னை என்னால் க‌ட்டுப்ப‌டுத்திக் கொள்ள‌ இய‌ல‌வில்லை. அப்ப‌டியானால் ? அப்ப‌டியானால் ?

அத‌ன் பிற‌கு என்னைப் பார்க்கும்போதெல்லாம் "விஷ்ணூஊஊ", என்று இனிமையாக‌ ஊளையிடுவாள், "ந‌ல்ல‌வ‌னே !", என்று ஏராள‌மாய் விளிப்பாள், ஆனால் கார‌ண‌த்தை சொல்ல‌மாட்டாள். என்னால் அத‌ற்கு மேலும் பொறுமையாக‌ இருக்க‌ முடிய‌வில்லை. அத‌னால் அவ‌ளுக்கு ஒரு பெரிய‌ க‌டித‌ம் ஒன்றை எழுதினேன். புத்த‌க‌ங்க‌ளை அவ‌ள் த‌ன் உட‌லோடு அப்ப‌டி ஒட்டி வைத்து ந‌ட‌ந்து செல்லும் அழ‌கைப் ப‌ற்றியெல்லாம் அதில் குறிப்பிட்டு, க‌டைசியில் "என்னை எதுக்கு ந‌ல்ல‌வ‌னேனு கூப்பிட‌ற‌ ? ச‌ஸ்பென்ஸ் தாங்க‌ முடிய‌ல‌", என்றும் வ‌ரிக‌ளைச் சேர்த்திருந்தேன். அதைப் ப‌ள்ளியின் இறுதி நாள‌ன்று அவ‌ளிட‌ம் கொடுத்தேன் (அதில்தான் அந்த‌ எட்டாம் கிளாஸ் சைட் மேட்ட‌ரெல்லாம் வ‌ரும் !).

அடுத்த‌ நாள் சாய‌ங்கால‌ம் என‌க்கு அவ‌ளிட‌மிருந்து எஸ்.எம்.எஸ். வ‌ந்த‌து.
"விஷ்ணூஊஊ லெட்ட‌ர் ரொம்ப‌ சூப்ப‌ர். ஐ வில் மிஸ் ஸ‌ச் குட் பிரெண்ட்ஸ் லைக் யூ. பை தி வே, அன்னிக்கு ந‌ல்ல‌வ‌னேனு நான் சொன்ன‌துக்குக் ரீச‌ன், என‌க்கும் 'அவ‌னுக்கும்' கொஞ்ச‌ நாளா ச‌ண்டை. அவ‌ன் ப‌டிக்கிற‌ ஸ்கூல்ல‌ இந்த‌ டிராமாவைப் போட்ட‌தால‌ அவ‌ன் கூட‌ப் பேச‌ற‌ சான்ஸ் கிடைச்சுது. இப்போ நாங்க‌ ம‌றுப‌டியும் சேர்ந்துட்டோம் ! தேங்க்ஸ் டு யூ டா !"

இர‌ண்டு முறை ந‌ன்றாக‌ப் ப‌டித்துப் ப‌டித்துப் பார்த்தேன். பிற‌கு "யூ ஆர் ஆல்வேஸ் வெல்க‌ம் !", என்று ம‌ன‌திற்குள் அவ‌ளுக்கு ரிப்ளை செய்தேன். இதைவிட‌ ஒரு அருமையான‌ போக்க‌ர் முக‌ம் வேறு எவ‌னுக்கும் வாய்த்திருக்காது ! கார‌ண‌மில்லாம‌ல் எங்கிருந்தோ சிரிப்பு பொத்துக்கொண்டு வ‌ந்த‌து, ஆனால் ஏனோ சிரிக்க‌ விரும்ப‌வில்லை ! "விஷ்ணூஊஊ, ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்டா நீ", என்று என்னை நானே சொல்லிக்கொண்டேன். ம‌ன‌திற்குள் ஏதோ ஒன்று ச‌த்த‌மில்லாம‌ல் வெடிக்க‌, திடீரென்று மூளை தெளிவாக‌ சிந்திக்க‌ ஆர‌ம்பித்த‌து. ஏதோ ஒரு பெரிய‌ பார‌ம் ம‌ன‌த்திலிருந்து இற‌ங்கிய‌துபோல‌ நான் உண‌ர‌, சிறிது நேர‌த்தில் விஷ‌ய‌த்தைத் துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த‌ வேலையைப் பார்க்க‌ப்போனேன்...

"ஹாய் டா எப்டி இருக்க‌ ?", ம‌யிலிற‌கு தெளிவாகி அவ‌ளான‌து.
"ம்ம்ம், ஃபைன் நீ ? காலேஜ்லாம் எப்டி போகுது ?"
"ம்ம்ம், ந‌ல்லா போகுது டா"
"ம்ம்ம்"
"ச‌ரி டா அடிக்க‌டி பாப்போம், கிள‌ம்ப‌னும்", அள‌வாக‌ப் பேசி ச‌ட்டென்று வெட்டிவிட்டு 'பைபை' சொல்லிச் சென்றாள்.

நான் அவ‌ள் சென்ற‌ திசையையே பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் எங்கிருந்தோ அந்த‌க் கார‌ண‌மில்லாத‌ சிரிப்பு பொத்துக்கொண்டு வ‌ந்த‌து, ஆனால் இம்முறை ம‌ன‌ம்விட்டு சிரித்தேன் ! ஒருவேளை அவ‌ளும் இப்போது 'அவ‌ன்' சென்ற‌ திசையைப் பார்த்த‌ப‌டி சிரித்துக்கொண்டிருக்க‌லாம் !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி