Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எம்.பி.ஏ. விவசாயி !

கொஞ்ச நேரம் விவசாயம் பேசுவோம்.

விவசாயம், இந்திய உயிர்களை, அதன் பொருளாதாரத்தை, இன்று வரை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் நம் தேசத்தின் ஆதார சக்தி, முதுகெலும்பு. தற்போதைய விவசாயத்தின் நிலையில் நல்ல அம்சங்கள் கெட்ட அம்சங்கள் இரண்டுமே இருக்கின்றன. இந்தியாவின் GDP-இல் விவசாயத்தின் பங்களிப்பு 18.5 சதவீதம். நம் இந்தியப் பொருளாதாரம் உயிர்ப்போடு இருப்பதற்கு விவசாயம் செய்யும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த கோணத்தை மனதில் நிறுத்திப் பார்க்கிறபோது விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், தொய்வுகள் போன்றவற்றைப் புறக்கணிப்பது யாருக்கும் நல்லதல்ல என்பது தெளிவாகிறது. இது முதலில் புரிய வேண்டும். சரி, விவசாயம் சந்திக்கும் பிரச்னைகள் என்னன்ன ?

National Crime Records Bureau (NCRB) சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி கடந்த 2010ல் மட்டும் 15,964 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். 2009-ம் வருடம் இன்னும் மோசம், 17,398 தற்கொலைகள். கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது. ஏகப்பட்ட விதர்பாக்கள் இந்தியாவில் இருந்தவண்ணம்தான் உள்ளது. இதற்கு ஏகப்பட்ட காரணங்கள், பிரச்னைகள். நியாயமான விலை தராதது, அண்டை மாநிலங்களுக்குள் நிலவும் தண்ணீர் பிரச்னை, பருவமழை பொய்த்துப் போவது, ரசாயன மருந்துகளால் மண் கெட்டுப் போகும் தன்மை, நகரமயமாக்கல்,  நிலஅபகரிப்பு, விளை நிலத்தில் கட்டிடம் கட்டுவது, இப்படிப் பல காரணங்களால் தன்னைச் சுற்றிலும் இருக்கும் மக்களை வாழவைத்துவிட்டு அனாதரவாக, அனாதையாக மடிகிறான் விவசாயி. விவசாயி தற்கொலை என்பது சாதாரண விஷயம் கிடையாது, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வான் அவன். அரசாங்கமும் இன்னபிற சக்திகளும் விவசாயிகளுக்குச் செய்யும் துரோகத்திற்கு அவர்கள் குடும்பமே பலியாகும் அவலம் இன்றும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. விவசாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அது. பசுமைப் புரட்சியின் காரணமாக ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் இந்திய விவசாயம் திடீர் முன்னேற்றத்தை உற்பத்தியளவிலும் தொழில்நுட்ப அளவிலும் கண்டது. அந்த புரட்சி அந்தக் காலகட்டத்தில் தேவைப் பட்டது, need of the hour ஆக இருந்தது. ஆனால் அது ஒரு நிரந்தரத் தீர்வைக் கொடுக்கவில்லை, சொல்லப்போனால் இப்போது விவசாயம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு அதற்கும் பங்கு உண்டு. அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், மண்ணின் சத்துகளை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டு அதிக உற்பத்தியைத் தரும் பயிர்கள், என பசுமைப் புரட்சி நிகழ்ந்தபோது இவைகளைப் பலரும் வரமாகத்தான் பார்த்தார்கள், ஆனால் போகப் போகதான் புரிந்தது, அது ஒரு necessary evil ஆகப் பயன்பட்டது என்று. பசுமைப் புரட்சி உண்டாக்கிய எதிர்விளைவுகளைத்தான் விவசாய நிலங்கள் தற்போது சந்தித்துக்கோண்டிருக்கின்றன. மண் மலட்டுத்தன்மை கொண்டதாகி விட்டது, பூச்சிக்கொல்லி மருந்துகளால் பயிர்களும் நச்சுத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன, யூரியா அது இது என்று நிலத்தைப் பாடாய்ப் படுத்துகிறோம். சுஜாதா சொல்வார், "இயற்கையை ரொம்பவே அடிக்கிறோம்; அது திருப்பி அடித்தால் நம்மால் தாங்க முடியாது”, என்று. ஆக தற்போது இன்னொரு விவசாயப் புரட்சி தேவைப் படுகிறது. இந்த முறை விவசாய அனுபவசாலிகள் முன்வைக்கும் யோசனை, “இயற்கை விவசாயம்”.

எதையுமே ஓவரா சுரண்டக் கூடாது என்பதே நாம் காலம் காலமாக இயற்கையிடம் கற்றுக் கொண்டு வருகிற பாடம். இன்னும் அரை நூற்றாண்டில் பெட்ரோல் காலியாகிவிடும். இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் இயற்கைத் தங்கம் காலி, அதேபோல் தான் விவசாயமும். விவசாய நிலத்தின் வளத்தை ஒரு வரைமுறை இல்லாது அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அது கடைசில ஒன்றுக்கும் உதவாத நிலம் ஆகிடும். தங்க முட்டை போடும் வாத்தை வெட்டுபவனின் கதையை சின்ன வயதில் படித்திருப்போம். உடனே எல்லா முட்டையும் வேணும் என்று வாத்தை வெட்டுவான், உள்ளே எதுவும் இருக்காது, அதேபோல்தான் இங்கும். இயற்கையின் எழுதப்படாத விதிகளை மீற முற்படும் ஒரே உயிரினம் மனித இனம்தான். இந்த இடத்தில்தான் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. ஆக இன்னொரு விவசாயப்புரட்சி தேவை என்பது புரிந்துவிட்டது. நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாய விஞ்ஞானிகள் இதற்குப் படாதபாடு படுகின்றனர். இளைஞர்களே, நம் தேசத்தின் முதுகெலும்பு வளைந்துகொண்டிருக்கிறது, அது ஒடிந்து விழுவதற்குள் விவசாயத்தைக் காப்பாற்றுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்கின்றனர், படிப்படியாக விவசாயிகளை மீண்டும் இயற்கை விவசாய முறைக்கே திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், அவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டு பலர் விவசாயத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள், சமீபத்தில் கூட நீயா நானாவில் “இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் எங்களால் தர முடியும் என்று எப்போது சொன்னார்களோ, அப்போது நான் வேலையை விட்டு விவசாயத்தில் இறங்கினேன்” என்று கௌதம் என்ற ஓர் இந்தியக் குடிமகன் பேசியிருப்பார். அதேபோல் இன்னொரு இயற்கை விவசாயி, விருதுநகரில் நிலம் வாங்கி விவசாயம் செய்துகொண்டு இருக்கிறார். பெயர் திரு. சரவண குமார்.

நம்மாழ்வாரினால் கவரப்பட்டு சில ஆண்டுகளாகவே இயற்கை விவசாயம் செய்து கொண்டிருப்பவர். பை தி வே, சார் படிச்சது எம்.பி.ஏ. ! எம்.பி.ஏ. முடித்துவிட்டு என்னவெல்லாம் செய்யலாம் ? நாம் என்ன செய்வோம் ? மாதா மாதம் லட்ச லட்சமாக சம்பாதித்து இருக்கலாம், சொந்தமாக ஒரு நிறுவனம் துவங்கி இருபது வருடங்களில் ஆண்டு வருமானத்தைக் கோடிக் கணக்கில் கொண்டு போய்த் தன் வருங்கால சந்ததியினரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி இருக்கலாம். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசியபடி வெளிநாட்டில் சுலபமாகக் குடிபெயர்ந்திருக்கலாம், விவசாயம் பற்றி அவர் யோசிக்கக் கூட அவசியம் இல்லை. ஆனால், அவர் தேர்ந்தெடுத்தது விவசாயத்தை ! தன் கடமை என்ன என்பதை நன்கு உணர்ந்து, தன் இடம் எங்கு இருக்க வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து, இந்திய விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் எல்லோருடைய கடமை என்று சூளுரைத்து, தற்போது முழு நேர இயற்கை விவசாயியாய் நம் கண்முன்னே உயர்ந்து நிற்கிறார் திரு. சரவண குமார். சிலருக்கு இது சிரிப்பாக இருக்கலாம், என்னய்யா இவரு பொழைக்கத் தெரியாத மனுஷரா இருக்காரே என்று. நாளைய விவசாயம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்ற உண்மையை செயலில் நிகழ்த்திக் காட்டும் இவரா ‘பொழைக்கத் தெரியாதவர்’ ? இந்த தேசம் எதிர்பார்க்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாக, யாரையோ youth icon என்று சொல்கிறோமே ? இவரைப் போன்ற ஆட்கள்தான் உண்மையான youth icon-கள் !

ஒரு உண்மையான குடிமகனாக, விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தப் புறப்பட்டிருக்கும் அடுத்த தலைமுறையில் ஒருவராக, ஒரு வழிகாட்டியாக வளர்ந்துள்ள திரு. சரவண குமாரை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவரைப் போன்ற மனிதர்களால்தான் எதிர்கால இந்தியாவின் மீது நம்பிக்கை வளர்ந்து நானும் எதையாவது என் நாட்டிற்குச் செய்ய வேண்டும் என்கிற கனல் என்னுள் விதைகிறது.

பி.கு: “ஃபோட்டோ எல்லாம் எதுக்கு தம்பி, அதெல்லாம் வேண்டாம்”, என்று மறுத்துவிட்டார்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி