Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சர்க்கஸ்ல இருந்து வந்துட்டியா?

        
          '82 ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்ட என் வாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிணைந்து இருக்கும் பகுதி சென்னை. வேளச்சேரிக்குக் குடிவந்து சிலகாலமே ஆனாலும் இங்கேதான் என் நினைவெல்லாம் நிறைந்து கிடக்கிறது. இந்தப் பகுதியைப் பற்றி எனக்கு எந்தக் குறைபாடுகளும் இல்லை!' என கவனம் ஈர்க்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.
 
''இப்போது வேளச்சேரி சென்னையின் அங்கமாக ஆகிவிட்டாலும் நான் இங்கேவந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஒரு தனி கிராமமாகத்தான் இருந்தது. இராமாயணத்தை எழுதிய ஆதிகவி வால்மீகி இங்கே வாழ்ந்ததாகவும் அதனால், இது வேதஸ்ரேணி என அறியப்பட்டு பின் வேளச்சேரி என ஆனதாகவும் நம்பிக்கை உண்டு. வயற்காடுகள் சூழ்ந்து இருந்த இந்தப் பூமி இன்று கட்டடங்களையும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தையும் தனதாக்கிக்கொண்டுவிட்டது. ஆனால், இப்போதும் அது தன் அற்புதமான அமைதியை இழக்கவில்லை. பல சென்னைவாசிகளுக்கு எப்போதும் இரைந்துகொண்டு இருக்கும் தி.நகரும், புரசைவாக்கமும் பிடித்து இருக்கிறது. ஆனால், அமைதி தவழ்கிற ஒரு மண் இது. காற்றாட, தரமணிவரை நாங்கள் இதன் அமைதியை ரசித்தபடியே நடந்துபோன காலங்கள், காலப்போக்கில் வாகனங்களின் பெருக்கத்தில் தொலைந்துபோயின.

 
இங்கே பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள். கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம்வரை இந்தப் பகுதியில் இருக்கும் என்பது என்னுடைய அனுமானம். சகாய மாதா தேவாலயம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறபோது, கிராமத்துத் திருவிழாவில் நாமும் நிற்பதுபோன்ற உணர்வு கொடுக்கும். ஒரே கட்டடத்தில், அடுக்ககத்தில் 40 முதல் 50 பேர் இருந்தாலும் இங்கே தவழும் அமைதியை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இது நகரத்தின் வேகத்தைக் காட்டாமல் இருந்தாலும் இங்கே எண்ணற்ற சௌகரியங்கள் கிடைக்கப்பெற்று உள்ளன. சென்னையின் மேயராக ஸ்டாலின் இருந்தபோது அவருடைய வீடு இங்கு அமைந்து இருந்தது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

80-களில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை நினைக்கிறபோதே நெஞ்சம் கனக்கிறது. மாதக்கணக்கில் தண்ணீர் வராமல் குழாய்கள் துருப்பிடித்துப்போயின. தலைக்கு ஒரு குடம் எனப் போய் தண்ணீர் பிடித்துவந்து தாகம் தீர்த்த காலங்கள் வறண்ட நினைவுகளாக இருக்கின்றன. அதுதான் 'தண்ணீர் தண்ணீர்’ நாவலுக்கு அடிப்படை.

 
சாதிப்பெயர்களை சென்னை முழுக்க ஒழித்த காலத்தில், இந்த வேளச்சேரி தப்பித்துக்கொண்டது இப்போதும் ஆச்சரியம் தருகிற நிகழ்வுதான் எனக்கு. பிராமணர் தெரு என்று ஒரு தெருவும் அதன் அருகில் தெலுங்கு பிராமண தெருவும் இப்போதும் அதே பெயரோடுதான் இருக்கின்றன. ஏழைகள் மிகுந்து இருக்கிற இந்தப் பகுதியில் பெண்களின் உழைப்பு மற்றும் சாமர்த்தியத்தைச் சொல்லியே ஆக வேண்டும். எங்கேனும் சின்னச் சின்ன வேலைகள் செய்தாலும் அந்த ஏழைப் பெண்கள் தங்கள் பெண்களுக்கு 10 பவுனுக்குக் குறையாமல் திருமணத்தின்போது  வரதட்சணை  செய்வதை இங்கே பார்க்கிறேன்.

பல்லவர் காலத்துக்குப் பிறகு, கட்டப்பட்ட யோக நரசிம்மர் கோயிலில் எப்போதாவது மழை பெய்தால் நீர்மட்டம் உயர்ந்து கோயில் பகுதிகள் மூழ்கிவிடும். அதனால், 'ஜலதோஷம் பிடிச்சுக்கிச்சுப் பெருமாளுக்கு’ என்பார்கள். மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது, சிவபெருமான் எமனிடம் இருந்து தண்டத்தைப் பறித்துக்கொண்டார். இங்கே தவம் செய்து எமன் அந்தத் தண்டத்தைத் திரும்பப் பெற்றதாக ஐதீகம். இங்கே உள்ள கோயிலுக்குத் தண்டீஸ்வரர் கோயில் எனப் பெயர்வந்தது அதனால்தான் என்பார்கள். இங்கே கடைகளில் எல்லாப் பொருளும் கிடைத்தவண்ணம் இருக்கிறது இன்று. என் காலத்தில் புடவை வாங்க மைலாப்பூர் வரையிலும், படுக்கப் பாய் வாங்க  பூக்கடைவரையும் போய்  இருக்கிறோம்.

 
இந்தப் பகுதியில் நீங்கள் கட்சி அலுவலகங்களைப் பார்க்க முடியாது. தெளிவான அரசியல் பார்வை கொண்ட மக்கள் என் பகுதி மக்கள். கட்சி உணர்வு அவர்களிடம் பெரும்பாலும் கிடையாது. 70 சதவிகிதத்துக்குமேல் எப்போதும் ஓட்டு போட்டுவிடுவார்கள். யாரைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெளிவாக முடிவெடுப்பவர்கள்.
 
பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் சகோதரர் ஆர்.கே.ராமச்சந்திரனுடன் பேசியபடி பல கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் வெள்ளை ஆடை அணிவதுதான் எல்லோருக்கும் வழக்கம். வண்ண ஆடைகள் அணிந்தால், 'சர்க்கஸ்ல இருந்து வந்துட்டியா?’ என ஆண்களைக்  கிண்டலடிப்பார்கள்.
 
நடுவில் சிலகாலம் மூளைக்காய்ச்சல்வந்து  கோமாவில் படுத்துவிட்டேன் நான். இப்போதும் பேனா பிடித்தால் கைகள் பின்னிக்கொள்கின்றன. முன்னே மாதிரி எழுதவருவதில்லை. நான் சுற்றித் திரிந்த பகுதிகளின் ஊடாக இப்போது முன்னே மாதிரி, தள்ளாத முதுமை, நடக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது.

 
என் எழுத்தைப்போல யாருக்கும் எந்தச் சங்கடமும் தராததாகவே இந்த வேளச்சேரி இருக்கிறது என நான் நினைக்கிறேன்!'' என்று ஊரையும் தன்னையும் இணைத்து நெகிழவைக்கிறார் அசோகமித்திரன்.

- பூ.கொ.சரவணன்,   வ.விஷ்ணு
படங்கள்: ப.சரவணகுமார்

என் விகடன் - 12/10/12

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி