Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இரண்டாம் உலகமும் உலகத் திரைப்படங்களும்

முன்குறிப்பு: இது திரை விமர்சனம் அல்ல. வெறும் தேடுதல் வசதிக்காக ’திரை விமர்சனம்’ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, அவ்வளவே

          ஒரு நல்ல திரைப்படத்திற்கு வசனம், நல்ல திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்குனர் டச், இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு திரைப்படத்தினுடைய முக்கியப் பணி, ரசிகனை இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர வைப்பது. திரைப்படத்திற்கு entertainment முக்கியம். ஆனால் நம் ஊரில் entertainment என்றால் பொழுதுபோக்கு, காமெடி, ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைகள் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டார்கள். Entertainment என்பதன் உண்மையான அர்த்தம், பார்க்கிறவர் திசை திரும்பக் கூடாது, பார்க்கிற இரண்டரை மணி நேரமும் இயக்குனர் என்ன காட்டுகிறாரோ, எதைக் காட்டுகிறாரோ, அதைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற விளிம்பிற்கு அவர் சென்றிருக்க வேண்டும். இதனை மகேந்திரன், ஹிட்ச்காக், டரண்டினோ, மிஷ்கின், சிம்புதேவன், ஷங்கர் ஆகியோரது திரைப்படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் (இதில் முதல் ஐவர் நல்ல படைப்பாளிகள், ஷங்கர் நல்ல வெகுஜன இயக்குனர் மட்டுமே, என்பது என் அபிப்பிராயம்).

          ஒரு படத்தை அறிவு ரீதியாக நாம் எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். ”செம கேமரா ஆங்கிள்”, “இந்த இடத்துல டைரக்டரோட டச்ச நீங்க பாக்கலாம்”, “இங்க இவர் ஒரு குறியீடு வெச்சிருக்காரு”, ”இதுதான் பின் நவீனத்துவ இயக்கம்”, “சம்பந்தமே இல்லாம இடத்துல சம்பந்தமே இல்லாத மியூசிக் போட்டு ஒரு புது ட்ரெண்ட உருவாக்கி இருக்காருப்பா!”, இப்படி நாம் ஆயிரம் உலகத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஜல்லியடிக்கலாம், ஆனால் ஒரு திரைப்படம் என்பது எத்தனை டெக்னிகலாக பலமாக இருக்கிறது என்பதல்ல. திரைப்படம் ஒரு ஆயுதம். அது நம் உணர்வைத் தொடுகிறதா என்பதே விஷயம். திரைப்படம் என்பது டிவி போலவோ வாஷிங் மெஷின் போலவோ கிடையாது, இது டெக்னிகலாக பெட்டராக இருக்கிறதா என்று கம்பேர் செய்வதற்கு. திரைப்படத்தை நாம் உணர்வு ரீதியாக அணுகவேண்டும். டெக்னிகலாக ஆயிரம் புதிய விஷயங்கள் இருந்தாலும் அது மக்களின் மனதைத் தொடவில்லையென்றால் அது முழுமையான நல்லத் திரைப்படம் இல்லை. என்ன, அதன் டெக்னிகல் விஷயங்களுக்காக அதை வரவேற்கலாமே தவிர அதைக் கொண்டாடவெல்லாம் முடியாது(அவதார் என்னைப் பொறுத்த வரையில் கொண்டாடப்பட வேண்டிய சினிமா இல்லை). அதேபோல் ’இரண்டாம் உலக’மும் என் உணர்வைத் தொடவில்லை, எனவே அது என்னைப் பொறுத்தவரை கொண்டாடப்படவேண்டிய சினிமா இல்லை, ஆனால் நிச்சயம் வரவேற்கலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால், இதே ஜானரில் இன்னொரு படம் வந்து அது நமது உணர்வைத் தொட்டு, அது நமது ரசனையை மாற்றினால், அதை நாம் கொண்டாடலாம். கூடவே இதற்கு முன்னோடி ’இரண்டாம் உலகம்’தான் என்றும் ட்ரிப்யூட் வைக்கலாம். ஆனால் முன்னோடி என்பதற்காகவே எந்த உணர்வையும் தொடாத இப்படத்தைக் கொண்டாடவெல்லாம் முடியாது.

          திரைப்படம் என்பது என்னைப்போல் ஏதோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டு அறிவுக்கொழுந்து மாதிரி பேசுபவர்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. நல்ல திரைப்படம் ஒரு அடிப்படைப் பாமரரின் உணர்வைத் தொட வேண்டும். ஈரானியத் திரைப்படம் ஒன்று இங்கு சரியாக ஓடவில்லையென்றால் நாம் அந்தத் திரைப்படத்தைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். இங்கு வேறு ஒரு ரசனையைக் கொண்டுள்ள மக்களை அது கவரவில்லை என்றால் அது யார் தவறு? இன்னும் சொல்லப்போனால் மக்களின் ரசனையை மாற்ற முடியாத ஒரு உலகத் திரைப்படத்தைவிட நமது ரசனையை மாற்றிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படத்தை நாம் அதிகமாகக் கொண்டாடலாம். அதேபோல் ’ஓ.ஆ’ திரைப்படம் ஈரானைக் கவரவில்லை என்றால் அவர்கள் அத்திரைப்படத்தைக் குப்பைத் தொட்டியில் போடலாம். ரசனை என்பது ரிலேட்டிவான விஷயம் ஆனால் இங்குதான் அதனை அப்சல்யூட்டாக அணுகுகிறோம். நமக்குப் பிடிக்காத ’குட்டிப்புலி’ இங்கு சக்கைப்போடு போட்டால், ”தமிழ் சினிமா சீரழிகிறது” என்கிறோம்(காரணங்கள் இருக்கின்றன, ஆனால் ஃபிலிம் மேக்கிங் ஒரு காரணம் அல்ல). ஆனால் நாம் நல்ல திரைப்படம் என்று சொல்லும் ஒரு திரைப்படம் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே, ”தமிழர்களின் ரசனை மாற வேண்டும்” என்கிறோம். ஏதோ ஈரானிய, கொரிய திரைப்படங்கள் மட்டும்தான் திரைப்படங்கள் என்பது போலவும் நம்முடைய திரைப்படங்கள் குப்பை போலவும் ஒரு மனப்பான்மை.

          நான் ’நவீன’ திரைப்பட விமர்சகர்கள் மீது இதை ஒரு விமர்சனமாகவே வைக்கிறேன். ரசனை என்பதற்குப் பொதுவான ஒரு அளவுகோலை வைத்து, ”கொரியன் சினிமாவும் ஈரானிய சினிமாவும்தான் கெத்து, நாம இன்னும் வளரணும்” என்று அவர்கள் வைத்திருக்கும் மதிப்பீட்டை நான் மறுக்கிறேன். பரத நாட்டியத்தையும் ஹார்லெம் ஷேக்கையும் ஒப்பிட்டு, பரத நாட்டியம்தான் உசத்தி என்றோ ஹார்லெம் ஷேக்தான் உசத்தி என்றோ சொல்வது எப்படி அபத்தமோ, அதே அளவு அபத்தம்தான் அவர்கள் செய்வதும், என்பது என் அபிப்பிராயம்.

          ஒரு நாட்டு மக்களின் ரசனையை வைத்தே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன, சில திரைப்படங்கள் அந்த ரசனையை மாற்றுகின்றன (அதைத்தான் நாம் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம் என்கிறோம்), ஆனால் இந்தப் புதிய ரசனை பழைய ரசனையை விட மேம்பட்டது என்கிற எண்ணம் தவறு. எந்த எனர்ஜியாக இருந்தாலும் எனர்ஜி எனர்ஜிதான், அதேபோல்தான் ரசனையும். ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம் நாம் எது திரைப்படம் என்று எண்ணி வந்தோமோ, திரைப்படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்று நம்பி வந்தோமோ, அதை உடைத்தெறிந்து ஒரு புதுவிதமான ரசனை விரும்பிகளைத் தமிழகத்தில் உருவாக்கியது. ஒரு ரசனையை மடைமாற்றிய விதத்தில் அது கொண்டாடப்பட வேண்டிய படம். அதற்காக ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தினால் ஏற்படும் ரசனைதான் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று சொல்வது தவறு(அந்தத் தப்பை இந்தப் புது ரசனைக்காரர்கள் பலர் செய்கிறார்கள், அது வேறு விஷயம்).

          இரண்டாம் உலகம் சாதித்திருப்பது இதைத்தான். இதுதான் தமிழ்த் திரைப்படம் என்று நாம் இதுவரை நம்பியிருக்கும் பல விஷயங்களிலிருந்து கொஞ்சமும் பிசகாமல் அப்படியே, அதே ரசனையை, வேறொரு தளத்தில், செல்வராகவனின் ’டச்’சுடன் சேர்த்து கொடுத்திருக்கிறது, அவ்வளவே. ’அவதா’ரை நாம் எதற்காகப் போய்ப் பார்த்தோமோ அதே காரணங்களுக்காக ’இரண்டாம் உலக’த்தையும் போய்ப் பார்க்கலாம், எங்களுக்கும் அப்படிப் படம் எடுக்கத் தெரியும் என்கிற பெருமிதத்துடன்.

          ’இரண்டாம் உலகம்’ தமிழ் சினிமாவின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டெல்லாம் இல்லை. ஆனால், செல்வராகவன் தமிழ் சினிமா விதிகளுக்கு உட்பட்டு ஒரு புதிய பாதையைப் போட்டிருக்கிறார், அதற்கு இப்பொழுதே நாம் பாராட்டலாம், வரவேற்கலாம். புதிய பாதையையும் போட்டு, அது நமது ரசனையையும் மாற்றினால், அப்பொழுது அதை நாம் கொண்டாடலாம். சொல்லப்போனால், இந்தப் புதிய பாதையைக் குறைந்தபட்சம் நாம் அங்கீகரித்தாலே இரண்டாம் உலகத்திற்கு விமர்சன ரீதியாகப் பாதி வெற்றிதான். அதை நாம் நிச்சயமாக செய்தாக வேண்டும். புதிய முயற்சிகளுக்கு நாம் தருகிற ஊக்கமே புதிய தமிழ்ப் படைப்புகளைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையைத் தயாரிப்பாளர்களுக்குத் தரும். அதுவே நல்ல தமிழ் இயக்குனர்கள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும். இறுதியில் இரண்டும் இணைந்து தமிழ்த் திரைப்படப் பார்வையாளர் வட்டத்தை பெரிதாக்கி, தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தைத் தாண்டி தமிழ் தெரியாத மக்களையும் சென்றடைய வைக்கும். இதனை நாம் இரண்டாம் உலகத்திலிருந்தே துவங்கலாம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்