Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சாரல் தமிழ் மன்றம் - தமிழ்த் தளிர்

          இன்று சாரல் தமிழ் மன்றத்திற்கு மகத்தான நாள். அதன் வருடாந்திர நிகழ்வான ’தமிழ்த் தளிர்’ இன்று பெரு வெற்றி விழாவாக நிறைவடைந்திருக்கிறது. இந்த வருடம் இதனை விமரிசையாகவும் அதிக மாணவ மாணவிகளின் ஆதரவோடும் நடத்த வேண்டும் என்ற எங்களின் பெருங்கனவுக்கு ஒரு படி மேலாக விழா அமைந்ததைப் பார்த்தபோது சாரல் தமிழ் மன்றத்தை எங்களுக்கு முன்னால் நடத்திய அண்ணன்களும் அக்காக்களும்தான் நினைவிற்கு வந்தனர். முதல் மூன்று ஆண்டுகள் நாங்கள் தமிழ்த் தளிருக்காக செய்த சிறிய பணிகள் அத்தனைக்கும் பின் இதனை இறுதியாண்டில் இன்னும் சிறப்பாக வேறு தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினோம். அது நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக நடந்திருக்கிறது என்னும்போது இன்னும் பொறுப்பு கூடுகிறது.

          எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடக்கும் தமிழ் சார்ந்த போட்டிகளை உள்ளடக்கிய தமிழ் கலைவிழாவே ’தமிழ்த் தளிர். கல்லூரியின் ‘Instincts’ கலைவிழாவில் நடக்கும் சாரல் தமிழ் மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளின் வெள்ளோட்டம் இது என்றும் வைத்துக்கொள்ளலாம். இம்முறை எட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். பரிசோதனை முயற்சியாக ‘பொன்னியின் செல்வன் வினா-விடை’ போட்டியை அறிமுகப்படுத்தினோம். பொன்னியின் செல்வனையெல்லாம் எங்கள் கல்லூரி மாணவ மாணவிகள் படித்திருப்பார்களா என்கிற சுய விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கி இன்று போட்டிக்கு அறுபது மாணவ மாணவிகள் வந்திருந்தபோது ”அடங்கொக்கமக்கா!”, என்றுதான் தோன்றியது. வந்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வனைப் படித்திருந்தனர்.

          சென்னை புதுக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் அகமது மரைக்காயரைத் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைந்திருந்தோம். “என்ன? பொறியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றமா?”, என்று ஆச்சரியப்பட்டார். அவரது சிந்தனைத் தளத்திலிருந்து சற்றே கீழிறங்கி, ரொம்ப நேரம் இருக்கையில் உட்கார வைக்க முடியாத எங்கள் கல்லூரி மாணவர்களிடம் சுவாரசியமாகப் பேசினால் நன்றாக இருக்கும் என்ற சமரசத்தோடு அவரை அணுகியபோது சரியென்று ஒப்புக்கொண்டார். துவக்க விழாவை விமரிசையாக செய்ய வேண்டும் என்ற கனவுடன் அனைத்து வேலைகளையும் ஒன்றரை நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு முடித்திருந்தோம். ஒரே ஒரு வேலை மட்டும் மிச்சமிருந்தது. துவக்க விழாவிற்குக் கூட்டம் சேர்ப்பது. அரை மணி நேரம் பேசுவதற்காக சிறப்பு விருந்தினர் மூன்றரை மணிநேரம் பயணம் செய்கிறாரே? அதற்காக இந்த முறை தமிழ்த் தளிருக்கான விளம்பரங்களைத் தாரைப்பொறி வேகத்தில் முடுக்கிவிட்டு, ஒவ்வொருவருக்கும் தமிழ்த் தளிர் பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி அழைத்தோம். கடைசி நேரக் கையிருப்பிற்காக இரண்டு முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தயாராக வைத்திருந்தோம். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் முன்னூறு இருக்கைகள் கொண்ட அரங்கத்தை நானூறு மாணவர்கள் நிறைத்தபோது மிகவும் மனநிறைவாக இருந்தது. மிகச் சிறப்பாகப் பேசிய அகமது மரைக்காயர் அய்யாவுக்கும் ஏக திருப்தி. ”நீங்கள் உங்கள் கல்லூரி மாணவச் செல்வங்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு அமைதியாக அவ்வளவு நேரம் உட்கார்ந்து கேட்டார்கள் பார்த்தீர்களா? என்னால் நம்பவே முடியவில்லை”, என்றார் தன்னடக்கத்துடன்.

          வழக்கமாக சுமார் எண்பது பேர் போட்டிகளில் கலந்துக்கொள்வார்கள். இம்முறை அதனை இரட்டிப்பாக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோமே தவிர அன்று இருநூற்றி ஐம்பது போட்டியாளர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. சில நிமிடங்கள் சமாளிக்க முடியாமல் திணறிவிட்டோம். கேள்வித் தாள்கள் தீர்ந்துப்போய் புதியன‌ அடித்துக்கொண்டு வந்தால் இரண்டே நிமிடங்களில் அவைவும் தீர்ந்துபோகும் நிலைக்கு வந்தன. சில போட்டிகள் தாமதமாக முடிந்தன. சில போட்டிகள் ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்தன என்று போட்டியாளர்கள் கேட்கும்படி இருந்தன.

          இன்றைய நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக சாரல் தமிழ் மன்றத்திற்குப் புத்துணர்ச்சியையும் புது இரத்தத்தையும் பாய்ச்சியிருக்கிறது. அடுத்து வரும் மாணவ மாணவிகள் இதனை மேலும் மேலும் மெருகேற்றி, கல்லூரியின் முதன்மை விழாவாக இதனை வெகு விரைவில் மாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

          சரியாக சென்ற தமிழ்த் தளிரில் தான் முதல்முறையாக ’புத்தகத் திறனறிதல் சந்திப்பு’, என்னும் நிகழ்வைத் துவக்கினோம். பூ.கொ. அண்ணன் ‘The Life and Times of C.N.Annadurai’ புத்தகம் பற்றி எடுத்துச் சொன்னார். அது நிகழ்ந்து ஒரு வருடம் முடியப்போகிற இந்த வேளையில் இருபத்தி இரண்டாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு நாளை நிகழ இருக்கிறது. தமிழ்த் தளிரோடு நெருங்கிய தொடர்புடைய அந்நிகழ்வும் சிறிது சிறிதாக மெருகேறி வருவதை நினைத்துப் பார்க்கையில் செல்லும் திசை சரிதான் என்ற மகிழ்ச்சியும், வழி தவறினால் விளக்குகள் இருக்கின்றன என்ற நிம்மதியும் ஏற்படுகின்றன. சாரல் தமிழ் மன்றம் வேகமாய் வளர்கிறது. வெகு வேகமாய் வளர்கிறது.

          துவக்க விழா வெற்றிகரமாக முடிந்ததிலிருந்து இப்பொழுது வரை ‘Ballata per un pistolero’ படத்தின் பாடல் சுற்றிச் சுற்றி மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை சாரல் தமிழ் மன்றத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.


Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி