Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சென்னை வானவில் திரைப்பட விழா - 2015


மு.கு: பி.கு.வில் உபயோகப்படுத்த என் தமிழ் இலக்கியப் பேராசிரியரிடமிருந்து ஒரு வார்த்தையைக் கடன் வாங்கியிருக்கிறேன். அவர் என்னை மன்னிக்கட்டும்.

          இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தோஸ்ட் அமைப்பு ஒருங்கிணைத்த சென்னை ரெயின்போ திரைப்பட விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்றபோதுதான் ஒருபால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள் திருநம்பிகள் ஆகியோரைப் பற்றிய தெளிவான நேரடிப் பார்வை கிடைத்தது. சென்ற வருடம் திரைப்பட விழா குறித்து எந்தத் தகவலையும் நான் படிக்கவில்லை. நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு Chennai Rainbow Film Festival 2015 அறிவிப்பைப் பார்த்தவுடனே இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடன் வந்த புகைப்படக்காரர் மூகாம்பிகை அக்காவுக்குத் தகவல் சொல்லி, இருவரும் கிளம்பிச் சென்றோம். என் அம்மாவையும் அழைத்து செல்லத் திட்டமிட்டிருந்தேன். பணிகள் காரணமாக அவரால் வர இயலவில்லை. உறவுக்கார அக்கா ஒருவர் ஒரு நாள் வந்தார்.

          முதல் நாளன்று இயக்குனர் வசந்த், “இது மாதிரி விழாக்களில் குவாலிட்டியை விட கண்டெண்ட் முக்கியம்”, என்று சொன்னபோது எனக்குள் அது பல நினைவுகளைக் கிளறி விட்டது. போன வாரம் பார்த்த திரைப்படத்தின் காட்சிகள் கூட எனக்கு மறந்துவிடும், ஆனால் CRFF 2013-இல் திரையிட்ட படங்கள் ஒன்றைக்கூட இந்த இரண்டு வருடங்களில் என்னால் மறக்க முடியவில்லை. அப்படி பார்த்து பார்த்து தேர்வு செய்து திரையிட்டிருந்தார்கள். இந்தியாவில் ஒருபால் ஈர்ப்பு உள்ளாவதை உளவியல் ரீதியாக அணுகாமல் மேற்கத்திய வழக்கத்தால் விளைந்த கலாசார சீரழிவாக அணுகுவது தவறானது என்று புரியவைத்தார்கள். தன் துணையை இழந்த பின் ஒரு கே முதியவர், முதியோர் இல்லத்தில் சேர்கிறார். அவர் ஒரு கே என்று தெரிந்தபின் முதியவர் என்றும் பார்க்காமல் சக மனிதர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்புக் கேள் என்று மிரட்டுகிறார்கள். முதியவர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, “நானும் மனிதன்தான். இந்த அறையில் இருக்கும் மற்றவர்களைப் போல்தான் நானும்”, என்று கதறுகிறார். கடைசியில் தன் இளமைக் காலப் பொழுதுகளைத் தன் துணையுடன் கழித்த அந்த ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்து, வானத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தவாறே ஆதரவற்று இறந்து போகிறார்.  ஆப்பிள் ட்ரீ என்ற இந்தப் படம் முதியவர்களுக்கு சராசரியாக இருக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் அவர்கள் கேக்களாக வேறு இருந்தால் எப்படியெல்லாம் அவர்கள் சமூகத்தில் அவமதிக்கப்படுவார்கள் என்று பேசியது. நாஸ்தவர்ணங்கள் என்ற திரைப்படத்தில் கூவாகம் திருவிழாவில் ஆதரவற்று இறந்து போவார் சிவன் வேடமிட்ட ஒரு திருநங்கை. அவரது நெற்றிக்கண் மட்டும் திறந்திருக்கும்!

          சென்ற முறை திரையிடப்பட்ட அளவுக்கு இந்த வருடம் திரைப்படங்கள் ஆழமாக இல்லை. ஆனால் கேக்கள் பற்றிய explicit திரைப்படங்கள் நிறைய திரையிடப்பட்டன. பெரிய திரையில் ஆணும் ஆணும் படுக்கையில் முத்தமிட்டுக்கொள்வதை முதல் தடவையாகக் கூட்டத்தில் கைதட்டல்களுக்கு இடையே பார்ப்பது நிச்சயம் சங்கடமான அனுபவமாக இருக்கும். இங்கு ஒரு பூ ஆண், ஒரு பூ பெண் என்று உருவகம் செய்வதைக் கடந்து ஒரு தலைமுறைதான் ஆகிறது என்கிற நிலையில் சென்சார்ஷிப்பே இல்லாத நாடுகளிலிருந்து வந்த கே, லெஸ்பியன்கள் பற்றிய படங்களை ஒரு mainstream cinema-வாக அங்கீகரிக்க நிச்சயம் நேரம் தேவைப்படும்.

          முதல் நாளன்று ஒரு வாசகம் அட ஆமாம், என்று எண்ண வைத்தது. “Heterosexuality is not normal; it is just common”. வானவில் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் டிரெண்டானபோது நிறைய நண்பர்கள் அவனா நீ, கொரில்லா செல் போன்ற சொற்களை உபயோகித்துக் கலாய்த்திருந்தார்கள். திருநங்கைகள் குறித்த கிண்டல்கள் எதையும் நான் பார்க்கவில்லை. திருநங்கைகளுக்கு சமூக அங்கீகாரம் ‘முழுமையாக’க் கிடைக்கும் நாள் தமிழகத்தில் வெகு தூரத்தில் இல்லை. ஒருபால் ஈர்ப்புள்ளவர்கள்தான் இன்னும் ரொம்ப தூரம் கடக்கவேண்டியிருக்கிறது. பலர் இதனை சாதி விட்டு சாதி காதலுடன் ஒப்பிட்டு எளிமைப்படுத்திவிடுவதைப் பார்க்கிறேன். இங்கு கல்லூரிகளில் பெண்-ஆண் பேசக்கூடாது நோட்ஸ் பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்று ஆயிரம் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு பின்னால் பெண்ணுக்கு இணை ஆண் என்பது இயற்கை என்னும் குறைந்தபட்ச சமூக அங்கீகாரம் இருக்கிறது. அதைத்தாண்டித்தான் இந்த சாதி ஆணுக்கு அதே சாதி பெண் இணை என்று கிளை விடுகிறது. உண்மையில் இது மிக மிக எளிமையானது. என் பாலியல் சார்பு எனக்கானது. சிம்பிள். தமிழகத்தில் பல விடுதிகளில் லெஸ்பியன் பழக்கம் இருக்கிறது என்பதை நண்பிகள் மூலம் உறுதிசெய்துக்கொண்டேன். கே பற்றித் தெரியவில்லை. தெரிந்தால் ஆணும் ஆணும் பேசக்கூடாது என்று சொல்வார்களோ? எதிர்காலத்தில் ஆண்-ஆண் பெண்-பெண் திருமணத்திற்கு மட்டும் சாதி முட்டுக்கட்டை போட்டால் அதை விடக் காமெடியான தருணம் இருக்க முடியாது(99% வாய்ப்பில்லை, சாதிக்கும் இரத்த சந்ததிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால்)

          இந்த முறை இரண்டு திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. Mi Realidid என்னும் ஸ்பானிஷ் திரைப்படம்தான் அங்கு திரையிடப்பட்டவையில் திரைமொழியை அதிகமாக உபயோகித்த திரைப்படம். ஹீரோ ஒரு கற்பனைக் காதலனுடன் வாழ்கிறான் (நிஜத்தில் கையடித்தபடி). ஆனால் அவனின் காதலனை நிஜத்தில் எங்காவது எவனோடாவது பார்த்துவிட்டால்(கவனிக்கவும் எவனோடாவது) என்ன செய்வது என்று அவனுக்குள் பலவித உளவியல் போராட்டங்கள். படத்தின் கடைசி ஷாட் ‘கொக்கா மக்கா கிரிஸ் நோலன்’ ரகம்! அதேபோல் Good Night My Love திரைப்படம் ஸாம்பிக்கள் உலவும் உலகத்தில் ஒரு கறுப்பின லெஸ்பியன் ஜோடி பற்றிய குறும்படம். கடைசியில் அவர்கள் ஸாம்பிக்கள் அல்ல, அது எதன் உருவகம் என்று உறைக்கும்போது ஒரு கூஸ் பம்ப்ஸ் அடிக்கும் பாருங்கள். அட்டகாசமான தருணம் அது. மத்திய ஆஸ்திரேலிய மலைப்பகுதியில் பழங்குடி மக்களுக்காக ஹேர்ஸ்டைஸ் சலூன் வைத்திருக்கும் திருநங்கை ஸ்டார் லேடி பற்றிய ஆவணப்படமும் அழகிதழகிது.

          திருமதி.வித்யா அவர்கள் வந்திருந்தார். அவரது பையன் ஒரு கே. அந்த உண்மையை எப்படி அவர் எதிர்கொண்டார் என்று அவர் விவரித்தபோது அங்கே வந்திருந்த நிறைய ஆண் ஜோடிகள் அழுதனர். பலத்த கைதட்டல்களுக்கு இடையே பலர் எழுந்து நின்று ‘ஐ லவ் யூ அம்மா!’, என்று பறக்கும் முத்தங்களைப் பரிசாக அளித்தனர். வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் பாறைகள். இரண்டாம் நாள் முடிவில் ஆர்.ஜே.சனோபர் சுல்தானாவின் இரசிகன் ஆகிவிட்டேன். குழு விவாதத்தை அவர் தொகுத்து வழங்கிய விதம் செம! நெல்சன் சேவியருக்கு சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருது. கவின் மலருக்கு சிறந்த எழுத்தாளர் விருது. வா.வ.இல்லை, வணங்குகிறேன்.

          இரண்டு வருடங்களுக்கு முன் நடுத்தர வயது கே அங்கிள் ஒருவருடன் பேசினேன். அவர் அப்போதே எனக்கு ப்ளோஜாபில் விருப்பம் உள்ளதா(அவர் நிறைய பசங்களுக்கு அதை பண்ணியிருக்கிறார்) என்று கேட்டார். அதை மறந்துவிட்டார் போலும். இந்த முறை சந்தித்தபோதும் செக்ஸ் தொடர்பாக நிறைய பேசினோம். ப்ரொபோஸ் செய்தார். நான் ஹெடெரோ என்பதை மென்மையாக அவருக்கு நினைவூட்டியபின் அவர் இரண்டு வருடங்களாக யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த விஷயங்களை வரிசைப்படுத்தி சொன்னார், சும்மா கேளுப்பா, எதுவும் பேசாத, என்றபின். அவருக்குத் தன் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

          அரை மணி நேரம் அவருடன் பேசினேன். பத்து நிமிடங்கள்தான் செக்ஸ் பற்றி. மீதி நேரம் முழுவதும் ஷேர் மார்க்கெட் பற்றி. கே லெஸ்பியன்கள் என்றால் எப்பொழுதும் செக்ஸ் பற்றியேதான் நினைத்துக்கொண்டிருப்பார்களா என்ன? ஒரு ஷேர் மார்கெட் அனலிஸ்ட் யாரிடம் காதல் வயப்பட்டால் நமக்கு என்ன ஓய்? போய் அவரை கன்செல்ட் செய்து நாலு காசு பார்த்துப் புள்ளைக்குட்டியைப் படிக்க வையும் போம்!

பி.கு.1: அமெரிக்கா எல்லாம் ஏற்கனவேயே லேட். நாம்தான் இன்னும் பம்பாடு வெங்காயத்தைக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

பி.கு.2: LGBT Rights என்று சொல்வது தவறு. Human Rights for LGBT People என்று சொல்வதே சரி.

பி.கு.3: வருங்காலத்தில் படிவங்களில் பாலினத்தைக் கண்டறிய ரேடியோ பட்டன்கள் போதாது. ஓய்வு நேரத்தில் ஃபேஸ்புக் செட்டிங்ஸ் சென்று பாலினத் தேர்வு பகுதியில் மேயவும்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி