Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களில் ஆணாதிக்கமும் பெண்ணியமும் - Telegram Debate - 22/10/16


Appandairaj: சிலப்பதிகாரம் ஒரு ஆணாதிக்க சிந்தனையைக் கொண்ட காவியம் என்று யாரேனும் கருதுகிறீர்களா? உரைசால் பத்தினியாக ஒரு பெண் இருந்தால் தான் உயர்ந்தோர் அவளை ஏத்துவார்களா? கோவலன் போன்ற ஒரு ஆண் இல்லற நெறியைத் தவறிய பின்னும் ஏன் கண்ணகி அவனை divorce செய்யவில்லை? பெண்ணுக்கு உரைக்கப்படும் கற்புநெறி ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை? மாதவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து இளங்கோ அடிகள் தேவதாசி முறையை ஆதரிக்கிறாரா?

Mazhai Mugil: ஆனா நம்ம இதெல்லாம் பேசவே கூடாது தலைவா. அப்படி மீறி பேசிட்டோம், அவ்வளவுதான், முடிஞ்சுது. கேட்டா அந்த காலம் அப்படி, சூழல் அப்படின்னு நொணாட்டியம் பேசுவாங்க. எந்தக் காலமா இருந்தாலும் திருமண பந்தத்துக்கான உண்மையும் நேர்மையும் ரெண்டு பக்கமும் இருக்கணும்ங்கிறத ஏத்துக்கவே மாட்டாங்க. 

எனக்கும் கண்ணகி கதாபாத்திரத்தின் மேல முரண்பாடு இருக்கு. கோவலனை முதலில் தண்டிக்க வேண்டியது அந்தம்மா தான். ஆனா மதுரைக் காண்டத்தில் நேரடியா நிக்க வெச்சு கேள்வி கேக்க வேண்டிய இடத்துல, இந்தம்மா தானம் கொடுக்க முடியல, சுற்றத்தாருக்கு உதவி செய்ய முடியலன்னு பேசுவாங்க. காண்டாகும். “உன்னோட தேவைகளை மட்டும் பார்த்துட்டு போயிட்ட நீ. இப்போ அவளை சந்தேகப்பட்டு வந்திருக்க. இடைப்பட்ட காலத்துல என்னோட தேவைகள் அப்படின்னு யோசிச்சியா நீ? எந்த அடிப்படைல உன்னை ஏத்துக்கறது நான்?", அப்படின்னு கேட்டிருந்தா கண்டிப்பா கொண்டாடப்பட வேண்டிய கதாப்பாத்திரம் தான்.

Appandairaj: அதோட மட்டும் நிக்காம ராஜா தப்பு செஞ்சத்துக்கு ஊரையே எரிக்க வேண்டியது. இது என்ன நியாயம்?

Mazhai Mugil: ம்... அதுக்கும் ஒரு வினைவழி கதை சொல்வாங்க :-D

Appandairaj: ஒரு பெண்ணைத் தாழ்வாக நினைப்பது சிலப்பதிகாரத்தோடு நின்றுவிடவில்லை. உலகப் பொது மறை என்று போற்றப்படும் திருக்குறளில் "பெண்வழிச் சேறல்" என்ற அதிகாரம் முழுவதிலும் ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் காட்டுகிறார் வள்ளுவர். ஒருவன் தன் மனைவி சொல்படி நடந்தால் நாசமாய் போய்விடுவான் என்றா ஒரு “உலகப் பொது மறை” சொல்லும்? தமிழ் இலக்கியங்களுள் பெண்ணடிமைத்தனம் ஊறி உள்ளது என்பதற்கு இதுவே தக்க சான்று.

பள்ளிகளில் இந்த நூல்கள் சிறுவயது முதலே கற்பிக்கப்படுகிறது. இதுவா நம் இளைய தலைமுறையினரை வழிநடுத்தும் முறை? எந்த ஒரு இலக்கியமும் perfect ஆக இருக்காது. ஆனால் அதனை criticize செய்யத் தவறினால் நுங்கம்பாக்கம் சுவாதி கொலையோடு நிற்காது இந்த ஆணாதிக்க சமூகம்.

Prasanna: Kovalan realised his mistake and came back with the mind to have good life with Kannagi. So what Kannagi did was correct. Tamil society was a matured one in which Kannagi was a part of. Had Kannagi not forgive Kovalan, their life would have further deteriorated. So kannagi did the right thing.

Mazhai Mugil: What if Kannagi did the same as Kovalan?

Prasanna: If Kannagi did the same, then Kovalan too should forgive and accept her. I have seen that in real life which happened in my native town.

Mazhai Mugil: அப்ப சரி தல.

Appandairaj: சிலப்பதிகாரம் பற்றிய திராவிட இயக்கத்தின் முரண் கருத்துநிலை - முனைவர் கி.பார்த்திபராஜா - "சிலப்பதிகாரம் விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித் தனத்தில் வளர்ந்து, முட்டாள் தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசமாகும்" (விடுதலை;செப்.23,1964) என்பது சிலப்பதிகாரம் பற்றிய பெரியாரின் கருத்தாகும்.

Vishnu: கற்பு என்று ஒன்றே இல்லை என்று பெரியார் 75 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டுச் சென்றாலும் இன்றும் கண்ணகியைக் கற்புக்கரசியாக முன் நிறுத்துவதுதான் பெரிய முரண் (100 பெரியார்ஸ் வந்தாலும் ஊஹும்). ஒரு சமூகமாக நாம் இன்னும் எவ்வளவு தூரம் முன்னே நகர வேண்டியிருக்கிறது என்பதை அது காட்டுகிறது.

அதே நேரத்தில் நான் இளங்கோவடிகளைப் பெண்ணிய நோக்கில் மொத்தமாகத் திட்ட மாட்டேன். அவருடைய காலத்தின் சமூக விழுமியங்களை அவர் தன்னுடைய காப்பியத்தில் அப்படியே பிரதிபலித்திருந்தால் அப்பொழுது அவரை தாராளமாகத் திட்டலாம். ஆனால் தன் காலத்தில் புரட்சியாகத் தெரிந்திருக்கும் விடயங்களை ஒருவர் சொல்லியிருக்கிறாரா என்பதை வைத்துதான் படைப்பாளியின் உளவியலை நாம் மதிப்பிட வேண்டும்.

சிலப்பதிகாரம், திருக்குறள் இரண்டுமே சங்கம் மருவிய கால நூல்களே. திருக்குறள் அதுவும் நீதிநூல். அப்படிப்பட்ட நீதிநூலில் ஆணாதிக்க வாதமாக அந்தக் குறள் இருக்கிறது. மனைவி சொல்படி நடந்தால் நாசம் என்று ஒருவர் நீதி போதிக்கிறார் என்றால் அது பிற்போக்குவாதம்தான். திட்டலாம். திருவள்ளுவரை மற்ற விடயங்களில் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் பெண்ணிய நோக்கில் திருக்குறளை ஆராயும்போது அவர் நிறைய சறுக்குகிறார். ஆனால், இளங்கோவடிகளை நான் திட்டாமல் இருக்க சில காரணங்கள் உள்ளன.

1. சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் நல்லொழுக்கமன்று என்றே கருதப்பட்டது, கண்டிக்கப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தில் அது கண்டிக்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ அதிகாரத்தில் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்காமல் குற்றவாளிகளாகப் பார்க்கிறார். உன் அன்பை நாடாமல் பொருளை நாடும் அப்பெண்களோடு சேர்ந்தால் முதலில் இன்பமாக இருப்பது போல் தோன்றும், ஆனால் துன்பம் தான் வரும் என்கிறார். அவர்கள் எப்பொழுது எவனிடமிருந்து பணம் சுருட்டலாம் என்று எதிர்ப்பார்ப்பார்கள் என்கிறார். மற்றபடி சும்மா அங்கும் இங்குமாக ஆண்களைப் பழிக்கிறார். ஆனால் இளங்கோ மாதவியைக் குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இருக்கிற அமைப்பிற்கு உட்பட்டு அவளையும் dignified-ஆகவே நடத்துகிறார்(மணிமேகலையைப் பின்னர் மாதவிதான் துறவியாக்குகிறாள்). அவள் பொருளுக்காக மட்டும் பழகவில்லை, கோவலனிடம் அவளுக்கு அன்பிருந்தது என்பதைக் காட்ட அவள் காதல் கடிதம் எல்லாம் எழுதுவதுபோல் காட்டுகிறார் (திருவள்ளுவர் இதை bullshit என்று கடந்திருக்கலாம் :p) . இத்தனைக்கும் தன் காதலை வெளிப்படையாகச் சொல்லக் கூட பெண்களுக்கு உரிமை இல்லாத காலம் அது.

2. கண்ணகியின் மூலமாக இளங்கோ பதிவு செய்யும் பிற்போக்குத்தனங்களை எல்லாம் தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் கண்ணகி இன்றைய பெண்ணியப் புரட்சிக் கூறுகள் கொண்டவளாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது? சங்கப் பாடல்களில் பிரிவில் வாடும் தலைவி, தலைவன் அருகில் இல்லையே என்று புலம்புவதுபோல்தான் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பெண் தனியாக விடப்பட்டால் அவளை சமூகம் எப்படி நோக்கும் என்று சிலம்புதான் சொல்கிறது. நீ இல்லாமல் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், விருந்தினர் உபசரித்தலும் இல்லாமல் இருந்தேன் என்று சொல்கிறாள் கண்ணகி. இதை இந்தக் காலத்தில் படித்தால் கண்டிப்பாக மொக்கையாகத்தான் இருக்கும். ஆனால் “தன் காலத்தில் உயரிய விழுமியங்களாக கருதப்பட்டவையைக் கணவன் இல்லாத பெண் செய்ய இந்த சமூகம் விடாது”, என்கிற அவலத்தை தமிழில் முதன்முதலில் பதிவு செய்தது இளங்கோதான். மற்றபடி அவனை டைவர்ஸ் செய்துவிட்டு வந்திருக்குமாறு இளங்கோ எழுதியிருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் டூ மச். 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காவியத்தில் வரும் ஒரு பன்னிரண்டு வயது சிறுமியிடம் நாம் இன்றைய புரட்சியை எப்படி எதிர்பார்ப்பது?

3. பெண்ணுக்கும் புகார்கள் இருக்கின்றன, என்று பெண்களுக்கு இடமும் குரலும் கொடுத்தது இளங்கோதான். இன்று நம்முடைய பிரதமரைப் பார்த்து “அடே நீதி தவறியவனே”, என்று ஒரு பெண் சொல்ல முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்(அவளை anti-national என்றுவிடுவார்கள், அது வேறு விஷயம் :p). ஒரு ஆணாதிக்க சமூகத்தில், அரசபையில், உடல் பலம் இல்லாத, அரசியல் exposure இல்லாத ஒரு பெண் கையறு நிலையில் நீதி வேண்டி நிற்கிறாள். அவளால் என்னதான் செய்ய முடியும்? அவளுடைய காலச் சூழல் கற்றுக்கொடுத்ததுபோல் மார்பை அறுத்துக்கொண்டு கூச்சல் போடத்தான் முடியும். இளங்கோ காலத்தில் அதுவே புரட்சிதான்.

4. கண்ணகி ஊரை எரித்தாள், பொதுச் சொத்தை நாசம் செய்தாள் என்று விவேக் நகைச்சுவையில் வருவதுபோல் மேம்போக்கான பார்வையில் விமர்சிக்கிறோம். அவள் கற்பில் மதுரை எரிந்ததா? அதற்காக நன்றாக நானும் திட்டுகிறேன். ஆனால் அதே நேரத்தில், நீதியிழந்த அரசால் ஒரு பெண் பாதிக்கப்பட்டாள், என்ற இளங்கோவின் கோபத்தின் வெளிப்பாடாகவே நான் மதுரை எரிப்பை நோக்குகிறேன். அவர் வெளிப்படுத்திய விதம் சர்ச்சைக்குரியது, தாராளமாக எதிர்க்கலாம். ஆனால் இளங்கோவின் அந்த உளவியலை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

நாம் இன்று சர்வதேசியம் பற்றிப் பேசுகிறோம். இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் மற்ற கிரகங்களில் குடியேறுவார்கள் என்று கற்பனை செய்துக்கொள்வோம். 2000 ஆண்டுகள் கழித்து செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு மனிதர் “சே, இந்த 21ம் நூற்றாண்டு ஆசாமிகள் மிகவும் பிற்போக்கானவர்கள், சர்வதேசியம் சர்வதேசியம் என்று குறுகிய நோக்கில் உலகத்தைப் பற்றி மட்டும் கத்தியிருக்கிறார்கள். அவர்கள் பிரபஞ்சவியம் அல்லவா பேசியிருக்க வேண்டும்?”, என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இளங்கோவை நாம் அணுகும் விதம் இருக்கிறது. இன்றைய புரட்சிக் கூறுகளை வைத்து சிலர் பாரதியாரை முற்றாக நிராகரிப்பதும் அப்படித்தான் இருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”, என்பது பிற்போக்குத்தனம்தான். ராஜ்தீப் சார்தேசாய் சானியா மிர்சாவை நேர்காணல் செய்தபோது, “எப்பொழுது நீங்கள் ‘செட்டில் ஆகி’ குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்”, என்று கேட்டார். அதற்கு சானியா பதிலுக்குக் கேட்ட கேள்வி, “இதே கேள்வியை ஒரு ஆணிடம் கேட்க உங்களுக்கு இயல்பாகத் தோன்றியிருக்குமா?”. ராஜ்தீப் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இந்த உளவியல் சிக்கல் இன்றுவரை தொடர்ந்தபடிதான் உள்ளது.

மற்றபடி சிலப்பதிகாரத்தை திராவிட இயக்கம் தூக்கிப்பிடிக்க அரசியல் காரணங்கள் இருக்கின்றன. தமிழ் இலக்கியத் தளத்தின் மைய நீரோட்டத்தில் கம்ப ராமாயணத்தை வைக்க நடந்த அரசியலை எதிர்கொள்ள திராவிட இயக்கம் கையில் எடுத்தது சிலப்பதிகாரத்தை. பெரியாருக்கு இந்த இலக்கிய அரசியல் எல்லாம் பெரிதாக முக்கியமில்லை. பெரியாரின் அரசியல் பெண் விடுதலை. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பெண்களுக்குக் கற்பு வெங்காயத்தை போதித்துவிடப்போகிறார்களே, என்ற நியாயமான கரிசனத்தில் அவர் சிலப்பதிகாரத்தைத் திட்டினார். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதற்கேற்றவாறு நாம் இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம், அவ்வளவே. ஆனால் அதை அந்தக் காலச் சூழலோடு பொருத்திப் பார்த்து, கொஞ்சம் தாராளவாதத்துடன் அணுகவேண்டும் என்பதே என் பார்வை. மற்றபடி திருவள்ளுவர் வெளிப்படையாக ஆணாதிக்கம் பேசுகிறாரா? நன்று. தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்றலாம். சிலப்பதிகாரம் என்றவுடன் நினைவுக்கு வருவது கற்புக்கரசி கண்ணகி என்று யாராவது சொன்னால் அப்பொழுது நாம் கட்டாயமாக சிலம்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் (“ஏன்டா, சிலம்புல எவ்வளவு ஹைலைட்ஸ் இருக்குது? கற்புக்கரசிங்குற?” :D).

Appandairaj: சங்க காலத்தில் காந்தருவ மணம் என்ற பெயரில் premarital sex இலக்கியங்களில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. ஒரு பெண்ணிற்குத் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. காளிதாசரும் இளங்கோ அடிகளும் கிட்டத்தட்ட சமகாலத்தவர்  என்று எடுத்துக்கொண்டால் (விவாதத்திற்குரியது), காவியத் தலைவியாகப் பெண்ணைப் படைத்தத்தில் இளங்கோவடிகள் பெரிய புரட்சி ஏதும் செய்யவில்லை. புலியை முறத்தைக் கொண்டு துரத்திய வீரத்தமிழ் மகளிரை இழிவு செய்திருக்கிறார். அகநானூற்றில் பெண் திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சுதந்திரம் இருந்தது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட பெண்களைப் பிற்போக்குச் சிந்தனையுடன் இருட்டடிப்பு செய்திருக்கிறார் இளங்கோ.

2000 ஆண்டுகளுக்கு முன்பியற்றப்பட்ட அகநானூற்றிலும் இன்ன பிற இலக்கியங்களிலும் பெண்ணியக் கூறுகளை compare செய்து பார்க்கும்போது சிலப்பதிகாரம் ஒரு பிற்போக்கு இலக்கியமே.

Vishnu: பெண்கள் திருமணத்திற்கு முன்னரே கூடுவது சங்ககாலத்தில் ஒழுக்கமாக இருந்திருக்கிறது என்பதை வைத்து பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது என்று எளிமைப்படுத்தும் ஆபத்து இருக்கிறது. சங்க காலம் பாலியல் வறட்சி இல்லாத காலம் என்று வேண்டுமானால் சொல்லலாம். “ஐயய்யோ, எங்கள் களவு மணத்திற்கு சாட்சி யாருமே இல்லையே, தலைவன் ஏமாற்றி விடுவானோ?”, என்று பெண் புலம்புவதுபோல்  “யாரும் இல்லை தானே கள்வன், தானது பொய்ப்பின் யான்எவன் செய்கோ”, என்ற பாடலில் வருகிறது. பெண் insecure-ஆகத்தான் இருந்திருக்கிறாள். சங்க கால மடலேறுதலுக்கும் இந்தக் கால ஆசிட் அடித்தலுக்கும் அடிப்படையில் வித்தியாசம் எதுவுமில்லை. “என் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஊர் முழுக்க நான்தான் உன் காதலன் என்று டமாரம் அடித்து விடுவேன்”, என்று தலைவன் மிரட்டுகிறான். “மடலேறுவேன் என்று மிரட்டு, ஆனால் மடலேறாதே”, என்று தொல்காப்பியர் சொல்கிறார் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

சங்ககாலத்தில் பெண்ணியக் கூறுகள் மிகுந்து இருந்தனவா? ப்ரோ!

1. இற்செறிப்பு: களவு வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. பகலில் சந்தித்தால் பகற்குறி, இரவில் சந்தித்தால் இரவுக்குறி. பகலில் சந்திக்க தலைவி தன் இல்லத்தை விட்டு சாக்கு போக்கு சொல்லி வெளியே வருவாள். அதன் பெயர் இல்வரை இகந்தது. ஆனால் லவ் மேட்டர் வீட்டில் தெரிந்துவிட்டால் அப்பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிடுவார்கள். அதற்குப் பெயர்தான் இற்செறிப்பு. இப்பொழுது நம் தலைவர் இரவில் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். தலைவி வீட்டை விட்டு வெளியே வராததால் அதன் பெயர் இல்வரைக்கடாதல்.

2. மடலேறுதல்: ஏற்கனவேயே கூறியாயிற்று. ஒரு பாடலில் தோழி தலைவனின் காதலுக்கு உதவ மாட்டேன் என்பாள். அதற்கு அவன், “எனக்கு அவளை அடைய வேறு வழிகள் இருக்கின்றன”, என்று நம்பியார் ரேஞ்சுக்கு சவால் விடுவான்.

3. உள்ளுறை உவமம்: உள்ளுறை உவமம் ஒரு சிறந்த இலக்கிய உத்தி, சந்தேகமே இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் பெண்களால் காமத்தை பற்றி வெளிப்படையாகப் பேசக்கூடாது, என்று புலவர்கள் அதற்கு உள்ளுறையையைப் பயன்படுத்தினார்கள். இதை நான் சொல்லவில்லை. வெள்ளை வாரனார் சொல்கிறார்.

4. அம்பல், அலர், கௌவை: என்னமோ பெண்கள் அந்தக் காலத்தில் காதலிக்க சமூகம் அனுமதித்தது என்றெல்லாம் சொல்வார்கள். பெண்ணைச் சுற்றியுள்ளோருக்கு அவள் காதலிப்பது ஜாடை மாடையாகத் தெரிந்தால் அதன் பெயர் அம்பல். வெளிப்படையாகவேயே தெரிந்துவிட்டால் அலர். அப்படித் தெரிந்தபின்னர் அவள் காதுபட பிறர் பேசுவது கௌவை. இந்த மூன்றும் நடக்காதபடி தலைவி மிக கவனமாகக் காதலிக்க வேண்டும். Transparency, freedom வெங்காயமெல்லாம் கிடையாது. “குருதிப் பூவின் குலைக்காந்தட்டே” பாடலில் “நீ கொடுக்கும் குறிஞ்சிப்பூ எங்க ஏரியாவில் நிறைய பூப்பதுதான், அதைத் தலைவி சூடினால் சந்தேகம் வரும், போப்பா தம்பி”, என்று தோழி சொல்வதுபோல் வருகிறது.

5. வரைவு கடாதல்: Insecurity இல்லாத pre-marital sex-தான் சுதந்திரம். இல்லையென்றால் அதன் பெயர் emotional exploitation. “யப்பா நீ சிக்கிரம் வந்து கல்யாணம் பண்ணு, இல்லேன்னா பொண்ணு செத்துருவா”, என்று “சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு” பாடலில் தோழி சொல்கிறாள்.

6. நதுமலர் வரைவு: வீட்டில் லவ் மேட்டர் தெரிந்தால் பெற்றோர் வெகுண்டெழுந்து பெண்ணை வேறொருவனுக்குத் திருமணம் செய்வித்துவிடுவார்கள். அதற்குப் பெயர்தான் நதுமலர் வரைவு.

7. சங்கப்பாடல்களில் ஒன்று தலைவி வீட்டில் இருப்பாள், இல்லையென்றால் தலைவனோடு இருப்பாள், அவ்வளவுதான். தனியாக வெளியே எங்கும் சென்றதாகக் குறிப்பு இல்லை. கோவலனை இழந்ததும் துணையிழந்த பெண் சந்திக்கும் துயரங்கள் என்ன என்று சிலம்புதான் சொல்கிறது. சங்க கால மருதப் பாடல் ஒன்றில் பரத்தையர் வீட்டிற்குச் சென்று தலைவன் வீடு திரும்புவான். தோழி அவனைப் பார்த்து, “பொண்ணு கோவமா இருக்குது, சூதானமா நடந்துக்கோ”, என்பாள். இவ்வளவுதான் வருகிறது. அதனால்தான் கண்ணகி “இந்த சமூக வழக்கத்தை செய்ய முடியவில்லை”, என்று சொல்லும்போது அது கோவலனுக்குக் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்ததுபோல் இருந்திருக்கும் என்கிறேன்.

ஒரு பெண், புலியை முறத்தால் விரட்டினாள் என்று எழுதுவதன் பொருள், “எங்கள் நாட்டில் பெண்களே வெறும் முறத்தால் புலியை விரட்டிவிடுவார்கள், அப்பொழுது ஆண்கள் நாங்கள் எப்படி இருப்போம்? எங்கிட்ட மோதாதே”, என்பதே :p

மேலும், குறிஞ்சி நிலத்திலிருந்து மருத நிலத்திற்கு migrate ஆகி, வயல் வெளியில் settle ஆனபோது ‘civilisation' வந்தது என்றும், அங்கிருந்து பெண்களுக்கு அடக்குமுறை அதிகமானது என்றும் சொல்கிறார்கள். இயல்பாகவே பழங்குடி சமூகத்தில்,
அ) பெண் என்பவள் பெரும் சொத்தாகக் கருதப்பட மாட்டாள்.
ஆ) அவளும் ஆண் செய்யும் பணிகளையே செய்வாள்(வேட்டையாடுதல், தினையெடுத்தல், தேன் இழைத்தல்).
இ) பாலியல் சார்ந்த aversion அவர்களுக்கு இருக்காது. அது ஒரு இயல்பான விஷயம் என்று கடந்துவிடுவார்கள்.

இதனை நாம் anthropological நோக்கில் பார்க்கவேண்டும். இது சங்க காலத்திற்கென்று தனி பண்பு இல்லை. ஒரு tribal society-யின் கூறுகள் சங்கப் பாடல்களில் பிரதிபலித்திருக்கின்றன, அவ்வளவே. இதை நாம் இன்றைய பெண் சுதந்திரத்தோடு போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றே நான் கருதுகிறேன்.  

இளங்கோவடிகளுக்கு முன்பே காளிதாசர் கதாநாயகியைப் படைத்துவிட்டால் இளங்கோ செய்தது புரட்சி இல்லையா? இது என்ன ஓட்டப்பந்தயமா யார் முதலில் வருவது என்று? சமூகத்தின் அமைப்பைக் கேள்வி கேட்டு, கலகக்குரலை எழுப்பும் அனைவரும் புரட்சியாளர்கள்தான். சங்ககாலப் பாடல்களிலிருந்து சிலப்பதிகாரம் எடுக்கும் leap அப்படிப்பட்டது ப்ரோ :-)

Appandairaj: 142 characters-இல் நினைத்தைச் சுருக்கமாக கூறும் generation இது. உன் முழுநீள கட்டுரைகளைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. சொல்வதைச் சுருங்கச் சொன்னால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.

Vishnu: இதை நானும் இந்தக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான கே.ஆர்.விக்னேஷும் "எழுத்து பேதி" என்றழைப்போம் :-D அது போக மாட்டேன் என்கிறது, முயல்கிறேன்.

Appandairaj: Haha! பிறகு படித்து பதிலளிக்கிறேன்.

Kumaran: அருமை! எப்படி நண்பரே இதுபோல் பழையதைப் புதியதோடு இணைத்து பேச முடிகிறது? மிகுந்த பரிச்சயம், ஆழ்ந்த புரிதல், நகை, அகண்ட பார்வை நலம். புதிய முறையில் தமிழ் இலக்கியத்தை அணுக வித்திட்டுள்ளீர். வினாவைத் தொடுத்த அப்பாண்டை ராஜ், மற்றும் விஷ்ணுவிற்கு நன்றி. அருமை.

Vishnu: அதே நேரத்தில் சங்க இலக்கியத்தில் பெண்ணியக் கூறுகளே இல்லை என்று மொத்தமாகப் புறக்கணித்துவிடவும் முடியாது. தன்னுடைய சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, தலைவியின் அகவாழ்வு உரிமைகளை மீட்டெடுக்கவும் காக்கவும் தோழி முயல்கிறாள்.

1. தலைவியின் காதல் அதிகமாகிவிட இதைத் தலைவனுக்கு உணர்த்தினால்தான் அவன் ஏமாற்றமாட்டான் என்று தோழி நினைக்கிறாள். எனவே தலைவன் வரும் சமயம் பார்த்து தலைவியிடம், “உன் ஆள் என்ன பெரிய இவனா?”, என்று அவன் காதுபட இயற்பழிக்கிறாள். தலைவன் அருகில் இருக்கிறான் என்பதை அறியாத தலைவி, வெள்ளந்தியாகத் தோழியிடம், “எங்கள் காதல் ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயந்தன்று, நீரினும் ஆர்அள வின்றே’”, என்று சொல்கிறாள். இதன்மூலம் தோழி தலைவனுக்கு, “பாத்தியாடா! சொக்கத் தங்கம்! ஏமாத்திடாத!”, என்று குறிப்பால் உணர்த்துகிறாள்.

2. “குருதிப் பூவின் குலைக்காந் தட்டே” பாடலில் தலைவனின் கையுறையைத் தோழி மறுக்கிறாள். அதன் குறிப்பு, “அவளுக்கு உன்னைப் பிடிக்கல, இனிமேலும் பின்னாடி வந்து டார்ச்சர் பண்ணாதே”, என்பதே.

இன்னும் இருக்கலாம், ஆனால் என்னுடைய குறைந்த வாசிப்பிற்குள் என் நினைவிற்கு வந்த பெண்ணியக் கூறுகள் இந்த இரண்டுதான். அதுவும் இவை ‘பெண்ணியம் இருக்கா இருக்கா?’ என்று தேடி, வலிந்து பெண்ணிய coating தரப்பட்டவை. எனக்கே மேலே உள்ளவற்றைப் படிக்கும்போது மொக்கையாகத்தான் இருக்கிறது. தன் காதலைக்கூட வீட்டில் தெரியப்படுத்த எவ்வளவு procedure! தலைவி தோழியிடம் குறிப்பால் உணர்த்த, தோழி அதை செவிலியிடம் குறிப்பால் உணர்த்த, அதை செவிலி நற்றாயிடம் குறிப்பால் உணர்த்த, இப்படி ஒவ்வொருவரும் ‘அறத்தோடு நின்று’(அது இலக்கிய அழகியலாக இருந்தாலும்) முடிப்பதற்குள்...தலைவி பாவம்.

Appandairaj: சங்க காலத்தில் இருந்த Premarital sex பெண்ணின் insecurities-ஓடு நிறைந்திருந்தது என்று உதாரணம் சகிதம் இருந்த உன் வாதத்தை ஏற்கிறேன். ஆனால் நீ கூறிய உதாரணங்களில் தலைவியாக என்னால் கண்ணகியை வைத்துப் பார்க்க முடியவில்லை. கற்புக்கரசியாக சித்தரிக்கப்படும் கண்ணகியைப் புகழ்வோர் மத்தியில் இச்சங்ககாலப் பெண்களை வைத்தால் அவர்கள் அப்பெண்களை ஒழுக்கங்கெட்ட பெண்கள் என்றே கூறுவர். திருவள்ளுவர் மொழியில் சொன்னால் வரைவின் மகளிர் என்று. இப்போது தமிழ்நாட்டில் உள்ள conservative society-இல் இந்த mentality-யே ஓங்கியுள்ளது. அதற்காகவே சிலம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் என்பது என் கருத்து. மற்றப்படி நீ சொன்னது போன்று இளங்கோவின் பெண்ணிய புரட்சியைப் பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் நன்று.

காளிதாஸரின் எடுத்துக்காட்டு ஒரு பெண்ணை மையமாக வைத்து காவியம் எழுதினார் என்பதே. அபிஞானசாகுந்தளம் என்ற நூலே அது. காந்தருவ மணத்தை அவர் பேசி இருந்தாலும் பெரிய பெண்ணிய புரட்சிகள் எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் வியாசரின் மகாபாரதத்தில் சகுந்தளைக்கு இருந்த பெண்ணிய சுதந்தரங்கள் கூட காளிதாஸ சகுந்தளைக்கு இல்லை.

Tribal society-யின் ஆரம்ப காலங்களில் பெண்ணாதிக்கம் மேலோங்கி இருந்தது. நீ கூறிய பாலின சமத்துவம் இருந்ததாக தோன்றவில்லை. ஒரு Tribal Group-இற்கு ஒரு வயதான matriarch தலைவியாக இருந்து வழிநடத்துவாள். இது ஆப்பிரிக்காவின் சில கலாச்சாரங்களில் இன்னும் தொடர்கிறது. ஆனால் இது hypothesis மட்டுமே. எதையும் உறுதியாகக் கூற முடியாது. ரூஸோ "noble savage" என்று சொல்வது போல் prehistoric மனிதர்கள் optimal and best ஆக இருந்திருக்கலாம். வளர்ச்சி என்ற பெயரில் பின்னோக்கி போயிருக்கலாம். மார்க்ஸும் இந்த கருத்தை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu: ரைட்டு. அப்படி இப்படி “சிலப்பதிகாரம் ஒரு ஆணாதிக்க சிந்தனை கொண்ட காப்பியம்” என்ற எளிமைப்படுத்தலிலிருந்து “இளங்கோவின் பெண்ணியப் புரட்சியை யாரும் பார்ப்பதாக எனக்குத் தெரியவில்லை”க்கு வந்தாச்சு. Significant progress in our discussion!

Tribal society-யில் பாலின சமத்துவம் இருந்தது என்று நான் எங்கும் சொல்லவில்லை. மனிதன் settle ஆனபோது ஆணாதிக்கம் மிகுந்தது என்றே சொன்னேன். அதைத்தான் சங்க இலக்கியத்தில் பழங்குடி சமூகத்தின் கூறுகள் என்றும் அதையும் இன்றைய பெண் சுதந்திரத்தையும் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டேன். Peace ✌️🏽

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி