Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சமூகத்தால் சபிக்கப்பட்ட இரும்பு மனுஷிகள்


Courtesy: news reporter
முன்குறிப்பு: இக்கட்டுரை செல்வி.ஜெயலலிதா தன்னுடைய ஆரம்பகாலத் தலைமை அரசியலின்போது கட்சிக்குள்ளும் அமைச்சரவையிலும் ஏன் சர்வாதிகாரத்துடன் நடந்துக்கொண்டார் என்பதைப்பற்றி மட்டுமே பேசுகிறது. கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு பிந்தைய காலத்தில் கட்சிக்குள்ளும், அமைச்சரவையிலும், சட்டசபையிலும், ஊடகத்தின் முன்பும் அவர் கடைபிடித்த சர்வாதிகாரப்போக்கை இக்கட்டுரை எந்த விதத்திலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. எம்.ஜி.ஆரைப் போல் ஜெயலலிதாவின் பிம்பமும் புனிதப்படுத்தப்படப்போகும் ஆபத்து நிலவும் சூழலில், அவரின் பிற்கால சர்வாதிகார நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவையே என்று பதிவு செய்வது மிகவும் அவசியமாகிறது.

          மாண்புமிகு முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காலமாகிய செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பெண்கள் அவரிடம் ஏதோவொரு வகையில் பெண் சுதந்திரத்திற்கான அடையாளத்தைத் தேடுகிறார்கள். தன் கட்சியையும் ஆட்சியையும் தன் முழுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க அவரிடமிருந்த மன உறுதியையும் தெளிவான சிந்தனையையும் அனைவரும் பாராட்டி, அவரை ‘இரும்பு மனுஷி’ என்று புகழ்கிறார்கள். சந்தேகமே இல்லை, அவர் இரும்பு மனுஷிதான். ஆனால் அவரைப் பிரிந்த துயரத்தில் இருக்கும் தமிழகம் இத்தருணத்தில் ஒரு முக்கியமான கேள்வியைத் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது, ஏன் அரசியலில் கிட்டத்தட்ட அனைத்து பெண் தலைவர்களும் இரும்பு மனுஷியாக இருக்கிறார்கள் என்பதே.

          ஜெயலலிதா, இந்திரா காந்தி, மாயாவதி, சோனியா காந்தி, இப்படிப் பல பெண் தலைவர்கள் அரசையோ கட்சியையோ சர்வாதிகாரப் போக்குடன் அடக்கி ஆண்டவர்கள், அல்லது ஆள்பவர்கள் [1]. ஜெயலலிதா செல்லும் வேனின் முன் விழுந்து கும்பிடுவது, அவரைக் கண்டதும் குனிந்து மரியாதை செய்வது, அவரை ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்’ என்று ஒரு சொல்லைக்கூட விட்டுவிடாமல் அழைப்பது, இவை அனைத்தும் ஜெயலலிதா கட்சியதிகாரத்தின் உச்சியில் நிலைக்க உதவும் சிறு சிறு கருவிகள். இப்படித் தன்னைச் சுற்றி சுயமரியாதையற்றக் கூட்டத்தை உருவாக்குகிறார்களே, இப்படி உட்கட்சியில் ஜனநாயகமற்று இருக்கிறார்களே, என்று அவர்கள் மீது விமர்சனங்கள் வருகின்றன. பெண்கள் அப்படி இருந்தால்தான் ஆண்கள் நிறைந்த அரசியலில் அவர்களால் நிலைந்து நிற்க முடியும் என்று எளிதாக இதை நியாயப்படுத்தும் நிலையில்தான் ஆண்-பெண் சமத்துவம் இருக்கிறது. அவர்கள் இரும்பு மனுஷிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது; அவர்கள் இரும்பு மனுஷிகளாக மாற்றப்படுகிறார்கள்.

          இந்திய அரசியலில் ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஆணை விடப் பெண் அரசியலில் நிலைக்க பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது; பல வகைகளில் தன்னைத் தற்காத்துக்கொண்டு இயங்க வேண்டியிருக்கிறது. தன் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை சமமாக அணுகி அறிவோடு உரையாடுவதுதான் ஜனநாயகம். ஆனால் அவர் பெண்ணாக இருந்துவிட்டால் உரையாடல் துவங்குவதற்கு முன்பே ‘அவர் என்ன இருந்தாலும் ஒரு பெண்’ என்ற சிந்தனை துருத்திக்கொண்டுவிடும். இந்த முன்முடிவின் விளைவை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நாம் அரசியலில் பார்த்துவிட்டோம். கருத்துக்கு எதிர் கருத்து என்கிற நாகரிகத்தை விடுத்து, பாலியல் தாக்குதல் மூலமாக ஆண் திமிரை சட்டசபையிலேயே காட்டிய இடம் இது. ஒரு பெண்ணை அரசியலில் வெல்வதற்கும், அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஆணவத்துடன் தமிழக சட்டசபை வரலாற்றில் கரும்புள்ளியாக இடம்பெற்ற சம்பவம் அது. ஜனநாயக அரசியலின் அடிப்படையே அறிவு சார்ந்த உரையாடல்கள்தான். அந்த மனப்பான்மை வராதவரை ஆண்-பெண் சம உரிமை அரசியல் களத்தில் இன்னும் கனவுதான்.

          ஒரு பக்கம் அனைவரையும் சமமாக நடத்துவதுதான் ஜனநாயகம், மறுபுறம் பெண்கள் அப்படி இருந்தால் அரசியலில் நிலைக்கும் சூழல் இல்லை. இப்படி முரண்பட்ட தர்க்கங்கள் அரசியல் சூழல் தாராளமயமாகப் பரிணமிப்பதில் முட்டுக்கட்டை போடுகின்றன. பெண் அரசியல் தலைவர்கள் ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பது அல்ல பிரச்னை. அறிவால் அனைவரும் சமம் என்ற கருத்தாக்கம் அரசியலில் உருவாகாதவரை அங்கு ஜனநாயகம் உயிர்க்காது என்பதே பிரச்னை.

          ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்வதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் அவரது தனிப்பட்ட உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் அரசியல் தலைமையாக நிலைக்கவேண்டுமென்றால், தான் ‘புனிதமானவள்’ என்று நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு இருக்கிறது. இந்தப் புனிதத்தின் அளவுகோலாக எது இருக்கிறது என்றால் அது கற்பாக இருக்கிறது. கற்பொழுக்கம் உடையவராக, இன்னும் சொல்லப்போனால் கற்பு வாழ்க்கையையே துறந்து மக்களுக்காகத் துறவியாய் வாழ்ந்தால்தான் மக்கள் முதலில் அப்பெண்ணைத் தலைவராக ஏற்பார்கள். பிறகு படிப்படியாகத் தாய், தெய்வம் என்று பிம்பங்கள் தொடர்ந்து வரும். இவற்றையெல்லாம் ஒரு பெண் திருமணம் செய்து குடும்பம் நடத்தியபடி இந்தியாவில் சாதிக்கவே முடியாது. ஆனால் ஆண்களுக்கு இந்தக் கட்டாயம் இல்லை. அவர்களால் குடும்பத்தையும் அரசியலையும் தனித்தனியாக பிரித்து வைத்துப் பார்த்துக்கொள்ள முடியும்; குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர முடியும்; அல்லது மக்களுக்காக மனைவியையே துறந்தேன் என்று மனைவியைத் தவிக்க விட்டுவிட்டு நல்ல பெயர் வாங்கவும் முடியும். ஆண்-பெண் சமத்துவமின்மை அரசியலில் இங்கிருந்தே துவங்கிவிடுகிறது.

          எது எப்படி இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் ஜனநாயகவாதிகளாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லைதான். இன்றைய இந்தியாவில் அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் ஜனநாயகவாதிகளல்ல என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு ஜனநாயகவாதியாக இருந்து அரசியலில் நிலைக்கும் சுதந்திரம் இல்லை. நம் சமூக சூழல் அதைக் கடினமாக்குகிறது. பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு இது மிக எளிது. உதாரணத்திற்கு, ஜெயலலிதாவின் தற்போதைய இமாலய பிம்பம் ஒன்று இரண்டு நாட்களில் வந்ததல்ல. பல ஆண்டுகள் பல சவால்களையும் துன்பங்களையும் சந்தித்துதான் அவர் இதை சாத்தியப்படுத்தினார். ஆனால் அனைவரையும் சரிக்கு சமமாக நடத்தி அரவணைத்துச் செல்ல அவர் முயன்றால், மிக விரைவில் அரசியல் அவரைக் கீழே தள்ளி மிதித்துவிட்டுச் சென்றுவிடும் என்பதே கசப்பான உண்மை. அரசியலில் உள்ள ஆண்-பெண் சமத்துவமின்மையின் சக்தி அத்தகையது. இதனால் தொடர்ந்து ஒரு பாதுகாப்பு இல்லாத மனநிலைதான் அவருக்கு இருந்திருக்கும். அரசியல் காட்டில் உலவிய தனிப்பெரும் பெண் சிங்கம் என்று பாராட்டினால், கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் பெண் சிங்கம்தானே என்ற மனப்பான்மையில் அவர் இடத்தைப் பிடிக்க முயலும் ஆண் சிங்கங்கள் மத்தியில் பாதுகாப்பின்மையோடு ஒரு தனிப்பெரும் சிங்கமாக வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. நாம் விரும்பும் நாயகியாக அவர் கட்டாயத்துடன் இருந்த காட்டுச் சிறை அது. ஒற்றைப் பெண்ணாக அவர் அரசியலில் நிலைத்து நின்றது ஒரு மகத்தான சாதனை, சந்தேகமே இல்லை. ஆனால் அரசியலில் பெண்கள் இப்படித் தனிப்பெரும் சிங்கமாகவே இருக்கும்படி இந்த சமூகத்தால் சபிக்கப்படுவது நியாயமா?

          ஜெயலலிதா ஒரு இரும்பு மனுஷி என்று புகழ்ந்துவிட்டு நாம் சர்வசாதாரணமாக நகர்ந்து சென்றுவிடுகிறோம். அவரது ஆதரவாளர்கள் “மீண்டும் ஜெயலலிதா போன்ற பெண் வர மாட்டாரா”, என்று நினைக்கிறார்கள்; சொல்லப்போனால் பல பெண்கள் அரசியலில் முன்னணித் தலைவர்களாக வரவேண்டும்; ஆனால் அது பாதி விருப்பம்தான். பெண்களும் ஆண்களுக்குச் சமமாகப் பாதுகாப்பான மனநிலையோடு அரசியலில் இயங்கவேண்டும். ஆண்களுக்கு நிரூபிக்கத் தேவையில்லாத ஒழுக்கங்களும் பிம்பக் காரணிகளும் பெண்களுக்கும் இருக்கக்கூடாது என்ற நிலை வர வேண்டும். இவற்றையும் சேர்ந்து விரும்பினால்தான் நாம் ஒரு பாரபட்சமற்ற சமூகமாக இருக்க முடியும்; அப்பொழுதுதான் அந்த விருப்பமும் முழுமை பெறும். அப்படி இல்லாமல் அவர் இரும்பு மனுஷியாக இருப்பதனை மட்டுமே நாம் போற்றுகிறோம் என்றால், பெண்களுக்குச் சம உரிமையை ஏற்படுத்தித்தராத  இந்த சமூக சூழலை நாம் கேள்விக்குள்ளாக்காமல் அதை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்றே பொருள். பெண் எழுச்சிக்கான அடையாளமாக அவரைக் காட்டுவதோடு நின்றுவிட்டு, பெண் தலைவர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களையும் சமூக அழுத்தங்களையும் பற்றிப் பேசாமல் நாம் தப்பித்துவிடுகிறோம். அப்படி நாம் தப்பிக்காமல், அவர் அரசியல் வாழ்வின் சவால்கள் நமக்குக் கத்துக்கொடுத்த பாடங்களைக் கருத்தில் கொண்டு, பாலியல் சமத்துவமான அரசியல் சூழல் அமைய நாம் சமூகத் தளத்தில் பாடுபடவேண்டும். அப்படிச் செய்தால் தானாகவே பெண்களால் மேலும் ஜனநாயகத்துடன் அரசியலில் அச்சமின்றி இயங்க முடியும். அதுவரை இந்த சமூகம் இன்னும் பல இரும்பு மனுஷிக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கும்.

          இக்கட்டுரை அவரின் நிர்வாக வெற்றிகள், தோல்விகள் குறித்துப் பேசவில்லை, அது தனி விவாதம் என்பதால். செல்வி.ஜெயலலிதாவின் மறைவிற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

[1] பொது பிம்பங்கள் முதன்மையாகத் தேவைப்படுகிற பெண் தலைவர்களுக்கு மேற்சொன்ன சிக்கல்கள் இருக்கின்றன. சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், ஸ்ம்ருதி இரானி போன்றவர்களது குடும்ப வாழ்க்கை சமூகத்தில் ஒரு counter narrative-ஆக உருவாகாதவரை அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆண்களுக்கோ மைய சமூகப் பண்பாட்டிற்கு எதிராக ‘முறை தவறி இருக்கிறார்கள்’, என்கிற narrative வந்தால் மட்டும் அவர்களுக்கு லேசாக சிக்கல். காந்தி, நேரு அனைவரும் இதில் அடி வாங்கியிருக்கிறார்கள் (சரியோ தவறோ). பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்கள் இதில் கொஞ்சம் safer side-இல்தான் இருக்கிறார்கள். தலைமைப் பதவிக்கு வர ஒரு ஆணைவிட ஒரு பெண் அதிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது, சீரான நிலைமை வரும்வரை யார் எப்பொழுது என்ன சொல்வார்கள் என்ற பாதுகாப்பின்மை அவர்களுக்கு ஏற்படுகிறது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி