Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 2


என் வாழ்வில் இதற்குமுன் இப்படி நடந்ததில்லை. வாசலில் அந்தக் கவரைக் கண்டதும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உடல் சற்றே வியர்க்க ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல் கவரைப் பிரித்தேன். இந்த முறை கடிதம் கொஞ்சம் நீண்டு, உரிமையோடு எழுதப்பட்டிருந்தது.
சகோ,

தகவலுக்கு நன்றி. உன் இருபதாவது வயதிலிருந்து உன்னைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். உன் அடிப்படைத் தகவல்கள், உன் பின்னணி, உன் விருப்பு வெறுப்புகள், உன் வீட்டுப் பொருட்கள், என அனைத்தையும் ஆய்வு செய்திருக்கிறோம். பிரைவசியை மீறியதற்கு மன்னிக்கவும்...
இந்த வாக்கியத்தைக் கண்டதும் என் வாசிப்பு தடைப்பட்டு தாங்க முடியாத கோபம் பீறிட்டு எழுந்தது. எந்த அயோக்கியன் இதை செய்தது? லேசாக பயம் எட்டிப்பார்க்கத் துவங்கியது. பத்திரிகைத் தொழிலில் யாரையும் நான் பகைத்துக் கொள்ளவில்லையே? நான் கட்டுரையாளனும் இல்லை, வெறும் புகைப்படங்கள் எடுப்பவன்தான். எந்தப் பெரிய மனிதரையும் நகைச்சுவையாகக் கேண்டிட் கோணங்களில் படமெடுக்கவில்லை. எந்தத் தலைவரின் பேச்சையும் ட்ரொல் செய்து யூடியூபில் பதிவேற்றவில்லை. பின்னே யார் இதையெல்லாம் செய்வது?

மேலே வாசிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த வாக்கியங்களை வாசிக்க வாசிக்க என் கார்டிசால் அளவுகள் சர்ரென்று மேலெழும்ப ஆரம்பித்தன.
...அவற்றின்மூலம் உன் எண்ண ஓட்டம், உளவியல், பாலியல் இச்சைகளின் வலிமை போன்றவற்றை நாங்கள் கணித்து முடித்துவிட்டோம். அதனால்தான் தீர்க்கமாகச் சொல்கிறேன். நீ வீட்டை விட்டு வெளியே வந்ததற்குக் காரணம், டிமோன் இல்லை. இது எங்களுக்குத் தெரியும்; நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புவது, இது உனக்குத் தெரியுமா என்பதையே.

சகோ.
படித்ததும் ஒரு கணம் கால் தரையில் நிலைகொள்ளவில்லை. கடிதத்தைக் கீழே போட்டுவிட்டு டிமோனுக்கு அருகில் சென்றேன். உடல் கடிகாரத்தின் வினாடி முள் இதயத்தை டிக்டிக்கென்று குத்த ஆரம்பித்தது. நான் வீட்டை விட்டு ஓடி வந்தது யாருக்கும் தெரியாது. உங்களிடமே இப்பொழுதுதான் சொன்னேன். என் நண்பர்களுக்கும் தெரியாது; அந்தத் தூரத்தில்தான் நான் அவர்களை வைத்திருந்தேன். சத்தியா யாரிடமும் சொல்ல மாட்டான். இது நிச்சயமாக ப்ராங்காக இருக்க முடியாது என்று மூளையில் ஒரு குரல் சொல்லிற்று. இன்னொரு குரல் என்னிடம் பேசாமல் அட்ரினலைக் குறை என்று என் உடலுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தது. திரும்பி டிமோனைப் பார்த்தேன். டிமோனுக்காகத்தான் நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்; இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 340 நாய் வகைகளை இணையத்தில் ஆராய்ந்து, அதில் லேப்ரடார் தான் வேண்டும் என்று அரை நாள் வீட்டில் பட்டினி கிடந்து, பிடிவாதம் பிடித்து...

இதைப் பன்னிரண்டு வயதில் செய்திருந்தால் வாங்கிக் கொடுத்திருப்பார்கள் போலும்; பதினெட்டு வயதில் அப்படி முரண்டு பிடித்ததை அப்பொழுது நினைத்துப் பார்க்க எனக்கே புதுமையாகத்தான் இருந்தது. டிமோன் என் வாழ்வை நிறைப்பவன்...

இந்த எண்ண டாமினோக்கள் என் உடலுக்குக் கேடு விளைவிப்பதுபோல் தோன்ற, தலையை ஒருமுறை பலமாக ஆட்டினேன். கவனத்தைத் திசை திருப்புவது என்பது எனக்கு எளிதான காரியம். ஐந்தே நிமிடங்களில் எலிமெண்டரியில் மூழ்கி விட்டேன்.

ஆனால் ஏதோ ஒன்று விடுபட்டிருப்பதுபோலவே தோன்றுகிறதே? ஒருவேளை கடிதம் சொல்வது உண்மையாக இருக்குமோ?

தொலைக்காட்சியை அணைத்தேன். ஆச்சரியமாக அந்தக் கடிதம் என் கவனத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டுவிட்டது. எவ்வளவு முயன்றும் அந்த நினைப்பை என்னால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. படகுக்கடியில் காதலர்கள் நெருக்கமாக அமர்ந்திருப்பதுபோல் கேண்டிடாகப் படம் வேண்டும் என்று ஆபீசில் கேட்டிருந்தது நல்லவேளையாக அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இதுதான் சரிப்படும் என்று காமெராவைத் தூக்கிக் கொண்டு மெரினா சென்றேன்.

நான் மாடல்களை வைத்துப் படமெடுக்காமல் உண்மையான காதலர்களைப் படம் பிடிக்கிறேன் என்று ஆபீசில் தெரிந்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஊடக அறத்தை மீறிவிட்டாய் என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்களோ, அல்லது என் திறமையைக் கண்டு வியந்து கவர் ஸ்டோரிக்காக சாமியார் மடங்களைச் சுற்ற விடுவார்களோ, ஐ டோண்ட் நோ. எனக்கு நண்பர்கள் இல்லை; கத்திரி வெயிலில் மாடல்களைத் துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை, அவ்வளவே. அஃபீஷியல் பொசிஷனில் அமர்ந்து 600 எம்.எம் நிக்கான் லென்ஸை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் காதலர்களைச் சக்கிக்கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான் அந்த நிழல் வந்தது.

“ஸோ மச் ஃபார் பிரைவசி!”

நிமிர்ந்து பார்த்தேன். டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து என் வயதுக்காரன் ஒருவன் நின்றுக்கொண்டிருந்தான். எழுந்தேன். உயரம் ஐந்து பதினொன்று இருக்கும். சரியான உடல்வாகு. முகத்தில் டேன் அடித்திருக்க, அவன் அணிந்திருந்த கண்ணாடி, முகத்தில் வெண்வடிவங்களை ஏற்படுத்தியிருந்தது. அதன் மூலம்தான் அவன் வெளுப்பென்றே தெரிந்தது.

“சட்டம் தெரியுமா?”, ஏட்ரியன் ப்ரோடி புருவத்தை உயர்த்தி அவன் கேட்டான்.

“காகங்களைப் படமெடுக்க எதற்கு சட்டம்?”

“இன்ட்ரெஸ்டிங்!”

“என்ன இன்ட்ரெஸ்டிங்?”

“உன் பிரைவசியென்றால் அசாத்திய கோபம் வருகிறது. ஆனால் அடுத்தவன் காதலியை ஃபோட்டோ எடுப்பதில் கூச்சமில்லையா?”, என்றான்.

அதைக் கேட்டதும் உடலில் ஜிலீரென்று பயம் கவ்வியது. கடிதக்காரனா? அவனை உற்றுப் பார்த்தேன். அவன் மெலிதாகப் புன்னகைத்தான். கீழே இருந்த அவன் நிழல் என்னை மெல்ல மெல்ல விழுங்குவதுபோல் அதிகரிக்க...

“ஆர் யூ ஹலூசினேட்டிங்?”, என் லிம்பிக் சிஸ்டம் திடீரென்று உயிர்த்தெழுந்தது. அட்ரீனலின் சரக்கென்று மேலெழும்பி அரைக்கிறக்கத்தை ஏற்படுத்த, காதருகில் ஸ்பிரிட் லெவல் கழண்டது. இடம் காலம் உணர முடியாமல் பார்வை குறுகலாகி உயிர்வாழும் இச்சை உடல் முழுவதும் ஆக்கிரமித்தது. என்ன ஏது என்று யோசிக்காமல் கையை மடக்கி அவன் மூக்கில் பொக்கென்று ஒரு குத்து விட்டேன். ஒரு கணம் பின்வாங்கி ஆகாயத்தைப் பார்த்தான். ஆனால் அடுத்த வினாடி சுதாரித்துக்கொண்டு, கர்சீப்பால் மூக்கைப் பொத்தியபடி மீண்டும் என்னை புன்னகைக் கண்கள் மாறாமல் பார்த்தான்.

“இன்ட்ரெஸ்டிங்!”

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி