Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 7


மூன்று நாட்கள் கழித்து சனிக்கிழமை மாலை அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘பீச்சில் அதே இடத்திற்கு வந்துவிடு!’

இந்த முறை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். சென்னையில் இதுபோல் மூன்று இடங்கள் இதுவரை இருக்கிறதாம். அதில் ஒரு இடத்திற்கு வந்தோம். அது எப்படி இருந்தது என்று சொன்னாலே அந்த இடத்தை நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள். எனவே சொல்லமாட்டேன்.

“ஏன் இடம் மாறுகிறோம்?”

“சுற்று முறை. மனிதர்கள் மத்தியில் புது மனிதர்களின் ஹேபிடேட் குறைந்துவிட்டது, என்ன செய்ய”, என்றான்.

“போன வாரம் அந்தப் பெண்ணுடன் பேசியதில் பல விஷயங்கள் புரிந்தன விஷ்ணு”

“வெரி குட். அவளை அறிவாகவும் பார்த்திருக்கிறாய். என்ன புரிந்தது?”

சொன்னேன். அவன் முகத்தில் திருப்திக்கான சுவடுகள் தெரிந்தன. அவன் ஏட்ரியன் ப்ரோடி புருவங்கள் உயர்ந்து. “பரவாயில்லையே!”, என்றன.

“நாம் வேறு ஸ்பீஷீஸா விஷ்ணு?”

மெலிதாகப் புன்னகைத்தான், “உன்னால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடிந்ததா?”

“ஆச்சரியமாக, முடிந்தது”

“நல்லது. இனி உன் முன்னால் நம்மைப் புதியவர்கள் என்றே அழைத்துக்கொள்ளலாம். சிலர் பயந்துவிடுகிறார்கள்”

“எனக்கு இந்தப் புதியவர்கள் கான்செப்டில் இன்னும் சந்தேகங்கள் இருக்கின்றன விஷ்ணு”

“விளக்கங்களுக்குப் பஞ்சமேயில்லை. கேள்”

“எமோஷனலி சாலஞ்சுடு அனைவரும் புதியவர்களா?”

“இல்லை. ஆனால் புதியவர்கள் அனைவரும் ஒரு விதத்தில் எமோஷனலி சாலஞ்சுடுதான்”

“புரியவில்லை”

“டோன்ட் வொர்ரி, சொல்கிறேன். உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாததற்கும் உணர்ச்சியற்று இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? வெறும் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாதவர்களாக இருப்பவர்களுக்கு எனிவே உணர்ச்சிகள் இருக்கும். அவர்களால் இந்த நாகரிக சமூகத்தில் வெளிப்புறம் ஒன்ற முடியாவிட்டாலும் சமூகத்தின் அங்கமாக அவர்களால் குறைந்தபட்சம் உணர முடியும். அப்படி இருந்தால் எனக்கு ஏன் இந்த ஹைப்போதீசிஸ் எல்லாம்? மாறாக, சமூகத்தின் பல நடவடிக்கைகள் மீது ஒவ்வாமை கொண்டு, அது சொல்கிற மனிதத்தையே கேள்விக்குள்ளாக்கி, தன்னை மனிதர்களோடு அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல்களை சந்திப்பவர்கள் புதியவர்கள். எமோஷனலி சாலஞ்சுடு போல் நம்மால் இந்த சமூகத்தோடு ஒன்றமுடியவில்லையே?”, என்றான்.

“இதை எப்படி பரிணாம வளர்ச்சி என்கிறாய்?”

“இங்குள்ள ஒவ்வொருவரிடமும் நான் பேசியிருக்கிறேன். உணர்ச்சியற்றவர்கள் என்ற சொல்லாடல் மனிதர்களின் உணர்வுகளோடு ஒப்பிட்டு வழங்கும் சொல்லாடல், அவ்வளவே. மற்றபடி அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன; ஏன், நம்மிடமே உணர்ச்சிகள் இருக்கின்றன. இல்லையென்று மறுக்க முடியுமா? முதல் நிலையில் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுவதில்லை. சற்றே யோசித்துப் பார். உணர்ச்சிகள் தேவையா இல்லையா என்ற கேள்வி உனக்கு எழுந்ததா?”

“எழுந்தது. ஆனால் அந்தக் கேள்வி அநாவசியம் என்று தோன்றியது”

“எக்சாக்ட்லி! நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. இரண்டாம் நிலையாக, இந்த உணர்ச்சிகள் ஏற்படுத்தும் சாதக பாதகங்கள் பற்றிய புரிதல் நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிறது. நம்முடைய ஒவ்வொரு உணர்வுக்கும் நாம் காரணம் தேடுகிறோம். காரணம் கிடைக்கவில்லையென்றால் ஏதோவொன்றை நாமாகவே கற்பித்துக்கொள்கிறோம். இதனால் நமக்கு உணர்வடக்கம் எளிதில் சாத்தியப்படுகிறது”

“ம்ம்ம்”

“நான்கு நாட்களாக நமக்குப் பிடித்தவரிடமிருந்து எந்தக் குறுஞ்செய்தியும் வரவில்லை என்றால், அவர்கள் பிசியாக இருப்பார்போலும் என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்கிறோம். ஏன் பேசவில்லை, ஏதேனும் காரணம் இருக்குமோ என்று நாம் மண்டையைப் போட்டுக் குடைந்துகொள்வதில்லை. ஒருவேளை இறந்து போயிருந்தால் செய்தி வந்திருக்குமே, என்று அந்த சாத்தியக்கூற்றை எலிமினேட் செய்கிறோம். இரு குழுக்களிடையே இப்படி யோசிப்பது ஆபத்தானது, ஏனெனில் அங்கு பிரச்னை அதிகாரம் சம்பந்தப்பட்டது. ஆனால் இரு தனிமனிதர்களின் உணர்வு சார்ந்த பிரச்னைகளில் இப்படி ஈகோவற்று இருப்பதில் பல நன்மைகள் உண்டு. முக்கியமாக நாம் பாசிட்டிவ்வாக இருக்கிறோம். ஒரு உறவில் நம்பிக்கைதானே எல்லாம்? உண்மை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர்களே என்ன சிக்கல் என்று உணர்த்தும்வரை அவர்கள் பிசியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே?”, என்று சொல்லி சிரித்தான்.

அவன் கண்களில் ஏதோவோர் மாற்றம் தெரிந்தது. இது அவனைப் பற்றியோ என்று கூட எண்ண வைத்தது. என்னது அது? தேவையில்லை, சொல்ல வேண்டும் என்றால் அவனே சொல்லுவான், என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

“எனிவே, கமிங் டு த பாயின்ட்”, தொடர்ந்தான். “ஒப்பீட்டளவில் உணர்ச்சிகள் மங்குகின்றன; தர்க்க ரீதியான பார்வை அதிகரிக்கிறது. இன்றைய மனிதம் அப்படி இல்லை என்ற பார்வை, இனப்பற்றோடு இணைந்து இயற்கையாக நம்மை சமூகம் நோக்கித் திருப்ப வேண்டும். மாறாக, அந்தப் பார்வை நம்மை சமூகத்திடமிருந்து விலக வைக்கிறது. அதனால்தான் இது பரிணாமம் என்று நம்புகிறேன். மற்றபடி எமோஷனலி சாலஞ்சுடாக இருந்தால்தால் புதியவர்கள் ஆக முடியும் என்றெல்லாம் இல்லை. ஆனால் சோ கால்டு சாதாரண மனிதர் ஒருவர் புதியவராக இருக்க சாத்தியக்கூறு குறைவு. இதுதான் என்னுடைய புரிதல்”, என்றான்.

“இப்போது புரிகிறது. சத்தியமாக இப்படி ஒரு இயக்கத்தை என்னால் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது”, என்று சிரித்தேன். அவனைப் பார்த்து, “தேங்க்ஸ்”, என்றேன்.

அவன் பதிலுக்கு ஒரு சிறுபுன்னகையை உதிர்த்தான். அவன் அப்படிப் புன்னகைக்கும் போதெல்லாம் எதையாவது அவனிடம் கொட்டிவிடவேண்டும் போலிருந்தது.

“சே! இத்தனை வருடங்கள் ஒரு கூண்டுக்குள் இருந்திருக்கிறேன். என் வாழ்வில் ஏதோ ஒன்று குறைகிறது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது”

என் தோளில் ஆறுதலாகக் கை போட்டு, “அதனால்தான் உன்னால் இந்த சொசைட்டியோடு ஒன்ற முடியவில்லை”, என்றான். “யோசித்துப் பாரேன். உன்னால் எப்படி டிமோனோடு மட்டும் ஒன்ற முடிகிறது?”

யோசித்துப் பார்த்தேன். எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவனே தொடர்ந்தான்.

“ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலில் நீ யார் என்று உனக்கும், அவன் யார் என்று அவனுக்கும் தெரிந்திருக்கிறது. எனவே எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே ஒரு புலி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு சிங்கங்களோடு திரிந்தால் அது சிங்கமாக ஏற்கப்படலாம். ஆனால் அதன் புலிக்குணங்கள் நோயாகப் பார்க்கப்படும். புரிகிறதா?”

தலையாட்டினேன். “புரிகிறது. ஒரு நாயைப் போல், பூனையைப் போல், ஒட்டாமல், அதே நேரத்தில் விலகாமல், ஏதோவொரு ஒப்பந்தத்தில் வண்டி ஓடுவதுபோல் இருக்கிறது”

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல். வள்ளுவர்”, என்று சிரித்தான். “அந்த ஒப்பந்தம் நமக்குப் பாதகமாய் இருக்கிறது. அதற்காகத்தான் இந்த இயக்கம். இதன் நோக்கம் நெடுநாளைக்கானது”, என்றான்.

“என்ன நோக்கம்?”, என் கண்கள் விரிந்தன. மிச்சமிருந்த கேள்வி அது ஒன்றுதான்.

அவன் சொல்லத் துவங்கினான்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி