ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்...