ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020
அமைதிப் பிரகடனம் மட்சூயி கசூமி, மேயர், ஹிரோஷிமா நகரம் ஆகஸ்ட் 6, 2020 ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது. மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும். சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது. வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில் ...