Posts

Showing posts from September, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

ஞான விஷ்ணு

முன்குறிப்பு: இந்த வலைப்பூவில் என்னுடைய நூறாவது பதிவு இது.

          ஜென்னில் ஞானம் அடைதல் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஞானமடைதல்கள் இரண்டு. ஒன்று கீழே இருப்பது.
"குருவே! மலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். எங்கிருந்து துவங்குவது?" "உச்சியிலிருந்து."           இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்த சியோனொவின் கதை. இந்த வலைப்பூவின் முகப்புப் படத்தில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளை வைத்திருக்கிறேன். எவ்வளவு முக்கியும் அவருக்கு கிடைக்காத ஞானம் ஓர் பவுர்ணமி இரவன்று தான் தூக்கி வந்த குடம் கீழே விழுந்ததும் படக்கென்று சுவிட்சு போட்டாற்போல் கிடைக்கிறது. குடத்தில் தண்ணீரைக் காணோம், தண்ணீரில் நிலாவைக் காணோம். இதுதான் வாழ்க்கை. இதுதான் இப்பேரண்டத்தின் உண்மை என்று சியோனொ கண்டுகொள்கிறார்.

          இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் சென்ற வாரம் அந்த ஞானம் கிடைத்தது.
இடம்: திருச்சியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பட்டிமன்றம்.
நேரம்: சரியாக காலை பதினொன்று மணி நாற்பத்தி மூன்று நிமிடங்கள் (அப்பொழுது எனக்கு இன்னும் ஞானம் வராதபடியால் வினாடிக் கணக்கு தெரியவில…

திருச்சியில் ஹைக்கூ

சிகப்பு
அபாய நிறம்
உதட்டுச் சாயம்

மனதுக்குள் புழுங்காமல்
வெடித்தழுவது அழகு
சோளப்பொரி

பேசியது போதும்
நீ கிளம்பலாம்
கொட்டாவி

கறுப்பாய்ப் பிறத்தல் குற்றமோ?
பாலில் இருக்கிற கலப்படம் போதாதோ?
குங்குமப்பூ

- வ.விஷ்ணு 
27/09/14
Festember '14

எங்காத்தாதான்!

Image
என் ஆத்தாளைக் கொன்னு பிறக்கையில
எங்கப்பன் ஒன்னை எடுத்து வந்தான்
புதுசா எனக்கு ஜட்டி மாட்டி
பழசா அதுக்கு வேலி வெச்சான்
என்னைக் கழுவுன நீர வெச்சு
அதையுங் கொஞ்சங் குளிப்பாட்டினான்
எம்மொகத்துல சந்தனம் அப்பி
அதும்மேல சாணியடிச்சான்
என் ஜட்டி கிழிஞ்சதும்
என் பொழப்புன்னு ஓடிட்டேன்
அதோ! எங்கப்பன் பொணம் எரியுது பாரு
இப்போ எனக்கும் ஒனக்கும்
ஆறுதலா இருக்கிறது
எங்கயும் போகாத
எங்காத்தாதான்!

- வ.விஷ்ணு

எட்டா(வது) அதிசயம்

Image
கோப்பைத் தேனீரை சப்ப முடிகிறது
எழுதவும் எழுத்தறிவிக்கவும்
எழுந்து போகவும் முடிகிறது
புசிக்கவும் புணரவும்
நன்றாகவே முடிகிறது
ஆனால்
இத்தனை டமாரங்கள் கிடைக்க
ஒரு அதிசயம்
அடகு வைக்கப்பட்டது

எந்தக் கவலையும் இல்லாமல்
கோவணக் கூச்சம் இல்லாமல்
வஞ்சகம் கொஞ்சமும் இல்லாமல்
வாய் நாற்றம் இல்லாமல்
தோன்றிய வேளையில்
அடித்தோமே
அந்தப் பொக்கை வாய்ச் சிரிப்பு
எங்கே போனது?

திரும்பவும் வராது என்று தெரிந்தும்
ஒரு நம்பிக்கையில்
அடகு வைக்கப்பட்ட
அந்தத் தூரிகையில் சிறைப்பட்ட சிறகு
குழந்தையின் சிரிப்பு

- வ.விஷ்ணுபி.கு:
1. இந்தத் ’தூரிகையில் சிறைப்பட்ட’வை எழுதாமல் இருக்க முடியவில்லை. வெகுவாக அது என்னை பாதித்துவிட்டது, எதை எழுத நினைத்தாலும் கை அதுவாகவே இதனை எழுதிவிடுகிறது.
2. ’கோப்பைத் தேனீரும்’, ’வாய் நாற்றமும்’ கவிதையில் நவீனத்தைப் புகுத்திவிட, ’சப்புதலும்’ ’புணர்தலும்’ அதனைப் பின்நவீனத்துவ லெவலுக்கு அழைத்துச் செல்வதாக எனக்குப் படுகிறது.