Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12 Angry Men (1957)


           நண்பன் ஆதித்யாவின் பரிந்துரையின் பேரில் "12 Angry men" என்னும் திரைப்படம் பார்த்து முடித்தேன். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களின் மீது எனக்குண்டான தனிப்பட்ட விருப்பத்தினை இப்படம் பன்மடங்கு அதிகரித்தது. நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது, என்கிற ஜனநாயக நீதிமுறையின் அடிப்படைத் தத்துவத்தை எத்தனை ஜூரிக்கள் உண்மையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்ற பலமான கேள்வியை இப்படம் எழுப்புகிறது.

           ஒரு 18 வயதுப் பையன் தன் தந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிற்பதாகப் படம் தொடங்குகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவன் கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததற்கான தண்டனை மரண தண்டனைதான் என்கிற சூழ்நிலையில் அவனுக்கு மரண தண்டனை அளிப்பதா வேண்டாமா என்று கலந்துரையாடி ஒரு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஒரு 12 பேரிடம் ஆணையிடுகிறார். அந்தப் பன்னிரண்டு பேரும் கலந்துரையாட ஒரு அறைக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு படம் முழுக்க அந்த அறைக்குள்தான். ஒவ்வொரு ஜூரிக்கும் மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள், எவரும் எவருக்கும் தாழ்ந்தவரில்லை, இந்தப் பன்னிரண்டு பேரும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்படும், அல்லது பன்னிரண்டு பேருமே தண்டனை வேண்டாம் என்று சொன்னால் மட்டுமே தண்டனை ரத்து செய்யப்படும். எனவே அனைவரும் ஒரு ஒருமித்த முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம்.

           யாரெல்லாம் தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்கள் கையைத் தூக்க வேண்டும் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கையாக மேலே எழும்ப, கடைசியில் ஒருவர் மட்டும் அவன் நிரபராதி என்கிறார்! என்னயா உளறுகிறாய், உனக்குத் தெரியுமா, என்று கேட்கிறார்கள். “அவன் நிரபராதியோ இல்லையோ எனக்கு அது தெரியாது, அதே சமயம் அவன் குற்றவாளியா என்பதும் எனக்குத் தெரியாது”, என்கிறார். பன்னிரண்டு பேரும் ஒரே முடிவுக்கு வரவேண்டிய சூழலில் இவரின் இந்த முடிவு கையைத் தூக்கியவர்களுக்குப் பெரும் தர்மசங்கடமாகப் போகிறது. அதிலும் ஒருவர் அன்று சாயங்காலம் ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வேறு வாங்கிவிட்டார். ”என்னயா நீ ? அவன் கொலை செய்ததற்கான சாட்சியங்கள்தான் வலுவாக உள்ளதே, எப்படி அவனை நீ நிரபராதி என்று சொல்லலாம் ?”, என்று கேட்கிறார் அவர். ”சாட்சியங்கள் உண்மையா இல்லையா என்பது நமக்குத் தெரியாத வரையில் எப்படி ஒரு முடிவுக்கு வருவது ? அதுவும் இது ஒரு 18 வயது இளைஞனின் உயிர் சம்பந்தபட்டது என்கிற நிலையில் நீங்கள் சீக்கிரம் கிளம்ப வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை”, என்று இவர் சொல்கிறார். மீதி இருக்கும் பதினொரு பேரும் அவரது மனத்தை மாற்ற என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாக எதிர்வாதம் புரிந்து அவர்களை மடக்குகிறார் இவர். நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக மனம் மாறி இவர் கட்சிக்குத் தாவுகிறார்கள். கடைசியில் இவரது வாதத் திறமையால் அனைவரும் ஒருமனதாக அவன் நிரபராதி என்று முடிவு செய்ய, படம் முடிகிறது. இதற்கு நடுவே தலைமைப்பண்பு, ஆவேசம், கோபம், தெளிவு, ஈகோ, அறிவாற்றல், அவசரம், அலட்சியம், மனிதாபிமானம், இனவெறி, தலைக்கணம், நிதானம், பலம், பலவீனம், என்று நீதித்துறையினரின் பல்வேறு முகங்களை எளிமையான வசனங்களின் ஊடே வெட்ட வெளிச்சமாக்கி, இறுதியில் ஜனநாயக நீதியின் அடிப்படை விதியான ”Benefit of doubt”இன் மேன்மையை உணர்த்துகிறது இப்படம். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய உலக சினிமா இது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்