Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Schindler's List (1993)


“ஆஸ்கர் ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகம். இன்று போலாந்தில் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவு என்றால், ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று சுமார் 6000. அவர்கள் ‘ஷிண்ட்லர் யூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்” - என்றபடி இத்திரைப்படம் முடிவடைகிறது. 

          நண்பன் கார்த்திக் ஸ்ரீதர் பரிந்துரைத்ததன் பேரில் 'Schindler's List' படம் பார்த்து முடித்தேன். நம்மூர் இயக்குனர்கள் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கண்ட கண்ட படத்திலிருந்தெல்லாம் திரைக்கதையை சுடுகிறார்களே, சரி, சுடுவதுதான் சுடுகிறார்கள், இதுபோன்ற உலக சினிமாவிலிருந்து சுட்டால் நமக்காவது நன்மை பயக்குமே என்று தோன்றியது. அந்த அளவிற்கு உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய, உருக்கிய படம். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமாச்சே, வழக்கம்போல கணினியின் உபயத்தில் வர்ணிக்கமுடியாத உருவம் எல்லாம் கோரமாய் உறுமும் என்று நினைத்துப் பார்த்தால், முற்றிலும் வேறு ஒரு தளத்தில், எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையைப் பின்னணியில் வைத்து, நெஞ்சை உலுக்கும்  ஆவணப்படம் ஒன்றைத் தந்துள்ளார் ஸ்பீல்பர்க்.

          நாஜி கட்சியைச் சேர்ந்தவர் பக்கா ஜெர்மானியரான தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லர். இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்து ஜெர்மனி போலாந்தைக் கைப்பற்றிய சமயம் அது. போரை வைத்துக் காசு பார்க்கலாம், என்று போலாந்து நாட்டின் க்ரக்கோ கெட்டோ பகுதிக்கு வந்து ராணுவத்தின் சமையலுக்குத் தேவையான உலோகப் பாண்டங்களை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறார். போலாந்து நாட்டு யூதர்களுக்கு சம்பளம் கம்மி என்பதால் அவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார். தொழிற்சாலையை ஏற்று நடத்தும் பொறுப்பையும் ஸ்டெர்ன் என்ற யூதரிடமே ஒப்படைத்து விட்டு, அரசாங்கத்தினருக்கு லஞ்சம் கொடுத்துத் தன் தொழிற்சாலைக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளும் வேலையை மட்டும் இவர் எடுத்துக்கொள்கிறார், பயங்கரமாகப் பணம் சம்பாதிக்கிறார். நாட்கள் நகர்கின்றன.

          உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். யூத இனப் படுகொலையை தீவிரமாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறது ஜெர்மனி. அதன் எதிரொலியாக க்ரக்கோ பகுதியில் உள்ள யூதர்களைப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் இரக்கமே இல்லாமல் இராணுவம் கொன்று குவிக்க, ஷிண்ட்லர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார், அவர்களுக்காக வருந்துகிறார். ஆனால் என்ன செய்வது, இவரும் ஒரு நாஜி ஆயிற்றே. எனவே அதிகாரிகளிடம் இதை வேறு விதமாக சொல்லிப் பார்க்கிறார். “இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என் ஊழியர்களைக் கொலை செய்வதால் உற்பத்தி பாதிப்படைகிறது, என் பணம் வீணாகிறது”, என்று கடிந்து கொள்கிறார். ஆனால் என்னதான் அரசியல்வாதிகளிடம் நெருக்கம் இவருக்கு இருந்தாலும் போரின் சமயத்தில் அதெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. பத்து தொழிலதிபர்களில் ஒருவர் எதிர்க்கிறார், அவ்வளவுதானே, என்கிற மனோபாவம் அதிகாரிகளுக்கு வர, படுகொலைகள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் தனது கட்சியின் செயலுக்காக ஷிண்ட்லர் வருந்துகிறார்.

          போர் இறுதிக் கட்டத்தை நெருங்குவதுபோலத் தெரிகிறது. சோவியத்திடம் ஜெர்மனி தோற்கும் நிலை. உடனே அனைத்து யூதர்களையும் வாயு அறைகளில் அடைத்துப் பொசுக்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வர, தன்னால் இயன்ற வரையில் யூதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் ஷிண்ட்லர். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனக்கென்று ஒரு சிறிய அதிகார மையம் தனது யூத வேலைக்காரர்கள் மத்தியில் வேண்டும் என்று கேட்கிறார், அதாவது ஜெர்மானிய அரசு அதிகம் ஷிண்ட்லரின் யூதர்களைக் கண்டுகொள்ளாத, அனைத்தையும் ஷிண்ட்லரே பார்த்துக்கொள்ளும் அதிகாரம். ஷிண்ட்லரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அவ்வூரின் கொடுமைக்காரத் தலைமை அதிகாரி அவரைக் கண்டு சிரிக்கிறார். வேறு வழியில்லாமல் அவரால் முடிந்த வரை தனக்குக் கீழ் வேலை பார்க்கும் யூதர்களை விலைக்கு வாங்கி, அதோடு நிற்காமல் தனது பணத்தின் ஒரு பகுதியை அந்தத் தலைமை அதிகாரிக்கு லஞ்சமாகக் கொடுக்கிறார் ஷிண்ட்லர்.

          இந்நிலையில் தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்குப் போலாந்தில் உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்து, தொழிற்சாலையைத் தனது சொந்த ஊரான செக்கோஸ்லோவாக்கியாவுக்கு மாற்ற நினைக்கிறார் ஷிண்ட்லர். அப்பொழுது ஆஸ்ட்விட்ச் பகுதியில் இருக்கும் வாயு அறைகளுக்கு யூதர்களை இரயிலில் அடைத்துதான் கொண்டு வருவார்கள். ஷிண்ட்லரின் ஊழியர்களை இரண்டு இரயில்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட நிலையில், பெண்களை ஏற்றிக் கொண்டு சென்ற இரயில் தெரியாமல் ஆஸ்ட்விட்ச்சில் மாட்டிக்கொண்டு விட, மீண்டும் ஒருமுறை லஞ்சம் கொடுத்து அவர்களைக் கஷ்டப்பட்டு மீட்கிறார் ஷிண்ட்லர். போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்ததால் நிறைய ஆயுதங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட, சமையல் பாத்திரங்கள் செய்வதை விட்டுவிட்டு ஆயுத உற்பத்தி செய்யுமாறு ஷிண்ட்லருக்கு உத்தரவு வருகிறது. அந்த ஆயுதங்கள் எப்படியும் யூதர்களைக் கொல்வதற்கும் பயன்படும் என்பதை அறிந்த ஷிண்ட்லர் உற்பத்தியை நிறுத்துகிறார். ஆனால் உற்பத்தி நின்று போனால் அரசாங்கம் தொழிற்சாலையை மூடி அவரது யூதர்களைக் கொன்றுவிடுமே, எனவே மற்ற தொழிற்சாலைகளிடமிருந்து ஆயுதங்களை சிறிதளவு வாங்கி, அதை அவர்கள் உற்பத்தி செய்ததாக சொல்லி விற்கிறார்கள். இப்படியே ஏழு மாதங்கள் கழிகின்றன, ஷிண்ட்லரிடம் இருக்கும் பணம் அனைத்தும் தீர்ந்து போகிற நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனி தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடைகிறது.

          போர்க் குற்றவாளிகள் என்கிற பெயரில் நாஜிக்கள் சோவியத் இராணுவத்தினால் தேடப்படுகிறார்கள். ஷிண்ட்லரும் ஒரு நாஜி ஆயிற்றே ? எனவே ஜெர்மனி தோற்ற அன்று இரவே நாட்டை விட்டு ஓட வேண்டிய கட்டாயம். அந்த நேரத்திலும் அவரது ஊழியர்களைக் கொல்ல ஜெர்மன் படைகள் அவரது இடத்திற்குள் நுழைய, அவர்களது மனதை மாற்றித் தனது ஊழியர்களைக் காப்பாற்றுகிறார் ஷிண்ட்லர். அவருக்கு ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்ட நன்றிக் கடிதம் ஒன்றையும் ஊழியர் ஒருவரின் பல்லை உருக்கி செய்யப்பட்ட மோதிரம் ஒன்றையும் பரிசளிக்கிறார்கள். புறப்படும்போது தன்னால் இன்னும் நிறைய யூதர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று ஷிண்ட்லர் தேம்பித் தேம்பி அழுகிறார். தனது காரை விற்றிருந்தால் இன்னும் ஒரு ஐந்து யூதர்களைக் காப்பாற்றி இருக்கலாமே என்று வெடித்து அழ, அவரது ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைக்கிறார்கள். அடுத்த நாள் காலை சோவியத் வீரர் ஒருவர் வந்து, யூதர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றும் பக்கத்து கிராமத்தில் இனி அவர்கள் நிம்மதியாக வாழலாம் என்றும் அறிவிக்கிறார். பல வருடங்கள் கழித்து அவர்களின் தலைமுறை ஷிண்ட்லரின் கல்லறைக்கு நன்றியுடன் மரியாதை செலுத்த, படம் முடிகிறது.

          ஆஸ்கர் ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகம். இன்று போலாந்தில் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவு என்றால், ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று சுமார் 6000. அவர்கள் ‘ஷிண்ட்லர் யூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும் ஷிண்ட்லரின் குழந்தைத் தொழிலாளர்கள் பலர் உயிருடன் இருக்கிறார்கள்.

          படத்தில் யூதர்களைக் கொல்லும் காட்சிகள் மிகவும் கோரமாக,வலி மிகுந்து இருக்கின்றன. போகிற வருவோரை எல்லாம் சர்வ சாதாரணமாக ஜெர்மானிய சிப்பாய்கள் சுடும்போதெல்லாம் நமக்கு நெஞ்சம் கனத்துப்போகும். புகழ்பெற்றப் பாடலான ‘Bloomy Sunday’-வின் பின்னணியில், ஒளிந்திருக்கும் யூதர்களை ஈவு இரக்கம் இல்லாமல் வேட்டையாடும் காட்சி நிச்சயம் நம்மைக் கண்ணீர் சிந்த வைக்கும். யூதர்களை கும்பலாக நிர்வாணப்படுத்தி உடற்பரிசோதனை செய்யும் சமயம் பார்த்து அவர்களது குழந்தைகளைக் கொல்வதற்காக அவர்களை வண்டியில் அடைக்கிறார்கள். பரிசோதனையில் தேறிய மகிழ்ச்சியில் ஆனந்தமாய் இருக்கும் யூதர்கள் திடீரென்று தங்கள் குழந்தைகளைக் காணாது அதிர்கிறார்கள். கூண்டில் அடைக்கப்பட்ட வண்டியில் தங்களது குழந்தைகள் செல்வதைப் பார்த்தவுடன் மொத்த கூட்டமும் இராணுவத்தை உடைத்துக்கொண்டு வண்டியை அழுதபடியே துரத்தும் காட்சி இருக்கிறதே, யாருடைய கல் நெஞ்சையும் கரைத்துவிடும் அது.

          ஜெர்மானியர்களுக்கு இனவெறி எந்த அளவுக்கு இருந்தது என்று காட்சிப்படுத்திய விதம் இது... தனது பிறந்தநாள் அன்று வாழ்த்து சொன்ன யூத வேலைக்காரியை அன்புடன் முத்தமிட்டதற்காக சிறையில் அடைக்கப்படுகிறார் ஷிண்ட்லர். “அவர்களின் பாவாடைக்குள் நீ ஏன் போக நினைக்கிறாய் ? அவர்களுக்கு எதிர்காலம் எதுவும் இல்லை என்று முடிவாகிவிட்டது. அவர்களையெல்லாம் தொட்டு உன் நேரத்தை வீணடிக்காதே”, என்ற எச்சரிக்கைக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்படுகிறார். படுகொலை முகாம்களுக்குச் செல்லும் இரயிலில் நெருக்கி அடைக்கப்பட்டிருக்கும் யூதர்கள், கைகளை மட்டும் ஜன்னலுக்கு வெளியே நீட்டி சைகை செய்யும் காட்சி நம்மை உறைய வைக்கும், அவர்களைக் கண்டு மனமிரங்கி அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார் ஷிண்ட்லர். அதைக் கண்டு அதிகாரிகள், ”நீ  நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். நம்பிக்கை தருவது போன்ற குரூரமான செயல் உலகத்தில் இல்லை”, என்று சொல்ல, ஷிண்ட்லர் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி நொந்து போவார். பிறகு யூதர்கள் வேறு வழியில்லாமல் ஜன்னலில் படிந்திருக்கும் பனியை நக்குவார்கள், தண்ணீருக்காக…


          ஒரு யூதரை சுடுவதற்காகத் தலைமை அதிகாரி துப்பாக்கியின் குதிரையையை அழுத்த, அது வேலை செய்யாமல் போகிறது. ஒவ்வொரு முறையும் க்ளிக் க்ளிக் என்று சத்தம் மட்டும் வர, ஒவ்வொரு முறையும் அந்த யூதர் கண்களை மூடி நடுங்குவது… சோகத்தின் உச்சம். அத்தலைமை அதிகாரியைத் திருத்த ஷிண்ட்லர் பல முயற்சிகளை மறைமுகமாய் மேற்கொள்வார். படிப்படியாக்க் கொலைகள் குறைய, ஒரு கட்டத்தில் அவர் பிறரை மன்னிக்க ஆரம்பிக்கிறார். கண்ணாடியில் தன்னைப் பார்த்து, “உன்னையும் மன்னிக்கிறேன்”, என்று சொல்கிறார். அப்பொழுது பார்த்து ஒரு யூதச் சிறுவன் ஒரு விஷயத்தில் பொய் சொல்லி விட, சற்றும் யோசிக்காமல் அவனை சுட்டு விடுகிறார். ஷிண்ட்லரின் முயற்சி வீணாகிறது. சக்தி என்றால் என்ன, என்று ஷிண்ட்லர் அவருக்கு விளக்கும் காட்சியில் உண்மை முகத்தில் அறையும்.

அதிகாரி: நீ எவ்வளவு குடித்தாலும் நிதானம் இழக்காமல் இருக்கிறாயே ? இதுதான் உண்மையான புலன் அடக்கமா ? புலன் அடக்கம்தான் சக்தி.
ஷிண்ட்லர்: அந்த சக்தியினால்தான் யூதர்கள் நம்மைக் கண்டு பயப்படுகிறார்களா ?
அதிகாரி: நமக்கு அவர்களைக் கொல்லும் சக்தி இருக்கிறது. அதனால்தான் பயப்படுகிறார்கள்.
ஷிண்ட்லர்: அதுவல்ல சக்தி. ஒருவனைக் கொல்வதற்கு நமக்கு உச்சபட்ச அதிகாரமும் சூழலும் இருந்து, அப்பொழுது நாம் அவனைக் கொல்லாமல் விட்டால், அதுதான் சக்தி.
அதிகாரி: ஓவரா குடிச்சுட்ட ஷிண்ட்லர்…
ஷிண்ட்லர்: இல்லை அமோன். ஒரு அரசனின் முன்னால் குற்றவாளி ஒருவனை நிறுத்துகிறார்கள். அவனுக்குத் தெரியும் தான் சாகப்போகிறான் என்று. ராஜாவின் முன் மண்டியிட்டு உயிர்ப்பிச்சை கேட்கிறான். அரசன் நினைத்தால் உடனே அவனை வெட்டலாம். ஆனால் அவனை மன்னித்து விட்டுவிடுகிறார். அவனை மன்னித்து நீ கிளம்பலாம் என்று உத்தரவிடுகிறார். அதுதான் சக்தி அமோன், அதுதான் சக்தி !

“Schindler’s List’ ஏழு ஆஸ்கர்களை வென்றது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா இது.

ஒரிஜினல் 'Schindler's List' !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்