Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?


பழவேற்காடு ஏரி
          பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது.

          இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் இருப்பதற்கான காரணம், பழவேற்காடு என்னும் ஒரு சிறிய கிராமம்தான்!

          1502-ஆம் ஆண்டு பழவேற்காட்டில் இறங்கி 1505-ஆம் ஆண்டு அதிகாரத்தைப் பிடித்த போர்த்துகீசியர்கள், சில அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்னை காரணமாக 1570-ஆம் ஆண்டிலேயே பழவேற்காட்டிலிருந்து வெளியேறி கோவாவை கவனிக்கத் துவங்கிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட டச்சுக்கார்ர்கள் மசூலிப்பட்டினத்தில் வந்திறங்கி, பழவேற்காடு வந்து சேர்ந்தனர். 1613-ஆம் ஆண்டு பழவேற்காட்டில் மேற்கத்தியவர்களால் கட்டபட்ட தென் இந்தியாவின் முதல் கோட்டையான ‘கெல்ட்ரியா’ உருவானது. இரண்டு வருடங்கள் கழித்து ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்னாலேயே முதன்முதலாக ஈஸ்ட் இந்தியா கம்பெனியை ஆரம்பித்த டச்சு செல்வச் செழிப்புடன் இருந்தது. எனவே எவ்வளவு முயன்று சண்டை போட்டும் ஆங்கிலேயர்களால் ’கெல்ட்ரியா’வைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே வேறு வழியில்லாமல், ‘அடப்போங்கடா, நீங்களும் உங்க கெல்ட்ரியாவும்’, என்று பழவேற்காட்டைக் கைப்பற்ற முடியாமல் இன்றைய மைலாப்பூரில் வந்திறங்கினார்கள். மைலாப்பூருக்கு வடக்கே இருந்த சென்னிராயர்பட்டினம், தாமேர்ள சென்னப்ப நாயக்கரிடமிருந்து வாங்கப்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டை 1644-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்படித்தான் மதராசப்பட்டினம் உருவானது!

          இந்தியாவிலேயே முதன்முதலாக மேற்கத்திய நாணயங்கள் செய்யப்பட்ட இடம் பழவேற்காடுதான்! ’கெல்ட்ரியா’ கோட்டையில் நாணயங்கள் செய்யப்பட்டு நெதர்லாந்துக்குக் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டது.

நெதர்லாந்து நாணயங்கள்
          டச்சு அரசுக்கு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய துறைமுக மையமாக செயல்பட்ட பழவேற்காட்டில் 1650-களில் மிகக்கொடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து புயல் மற்றும் சூராவளியால் பாதிக்கப்பட்ட பழவேற்காடு, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது.

          1825-ஆம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பியது. ஐரோப்பாவில் நடந்த ஆங்கிலோ-டச்சுப் போரில் டச்சு தோற்க, வேறு வழி இல்லாமல் டச்சு அரசாங்கம் பழவேற்காட்டிலிருந்து வெளியேறியது. ஆனால் அப்பொழுது மதராசப்பட்டினம் ஆங்கிலேயருக்குத் தென்னிந்தியாவின் வணிக மையமாக மாறிப்போயிருந்தது, எனவே இங்கிலாந்தும் பழவேற்காட்டை நிராகரித்தது. நிராகரித்ததோடு நிற்காமல் டச்சு இருந்த சுவடே தெரியக்கூடாது என்று ’கெல்ட்ரியா’வை உருத்தெரியாமல் அழித்தது.

          இப்படி வரலாற்றையே மாற்றி அமைத்த ‘கெல்ட்ரியா’ கோட்டையின் மிச்சமுள்ள செங்கற்களை இன்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க முட்புதர்களால் சூழப்பட்டு, இருந்த சுவடே இல்லாத அளவிற்கு அரசாங்கத்தின் பராமரிப்பற்று இருக்கிறது, வரலாற்றை திசை திருப்பிய ’கெல்ட்ரியா’!

கெல்ட்ரியா கோட்டை?
          பழவேற்காட்டின் மற்றொரு சிறப்பம்சம், அர்வி மொழி. தமிழும் அராபிய மொழியும் கலந்த ஏழாம் நூற்றாண்டு மொழியான ‘அர்வி’, உருதுவிலிருந்து நிறையவே மாறுபட்டது. முகலாய மன்னர்கள் உருது மொழியை ஊக்குவிக்கதுபோல் அர்வி மொழியை யாரும் ஊக்குவிக்காததால் ’அர்வி’ மொழி பெரிய அளவில் வெளியே தெரியவே இல்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் முகம்மதியர்கள் இதை ரகசிய மொழியாக உபயோகித்திருக்கிறார்கள். இன்று அழியும் நிலையில் உள்ள ’அர்வி’ மொழி மிகக்குறைந்த அளவில் காரைக்கால், ராமநாதபுரம், இலங்கை என்று உலகிலேயே நான்கைந்து இடங்களில் மட்டுமே பேசப்படுகிறது. இன்று பழவேற்காட்டில் இரண்டே இரண்டு முதியவர்களுக்குத்தான் ’அர்வி’ மொழி தெரியும்!

          பழவேற்காட்டைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க சுட்டிக்காட்டப்படும் அதிமுக்கியமான சிறப்பம்சம், பழவேற்காட்டின் கட்டிடக்கலை. இங்கு இருக்கும் பள்ளிவாசல்கள் இரண்டும் முற்றிலும் தமிழக கட்டிட வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக காரணம், இங்கு வசிக்கும் தமிழ் இஸ்லாமியரான மரைக்காயர்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் இவர்கள், முகலாயர்களின் வருகைக்கு முன்னாலேயே மண்ணின் மைந்தர்களாக மாறிவிட்ட அளவிற்கு மிகப் பழமையான வரலாறு கொண்டவர்கள். பனை ஓலைகளில் பொருட்கள் செய்வதைப் பரவலாக்கியவர்கள் இவர்கள்தான்! நிஜாம் மற்றும் முகலாயர்களின் வாசனை கூட இல்லாமல் இவர்களது கலாசாரமும் வாழ்க்கையும் தமிழகத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. அதற்கு சான்றாக இருப்பதுதான் அந்தப் பள்ளிவாசல்கள். அதன் மேற்பகுதியில் பாரசீக விதானம்(Dome) இல்லாமல், தூண்களில் பல்வேறு பூக்களின் சிற்பங்களுடன், முகலாயக் கட்டிடக்கலையில் சாயல் கொஞ்சமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தமிழகக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் அவை.

          பழவேற்காட்டில் உள்ள கல்லறைகளில் காணப்படும் சிற்பக்கலை இன்று உலகில் எங்குமே இல்லை. சிற்பத்தை செதுக்குவதுதான் நமக்கு இன்று தெரியும். ஆனால் சிற்பத்தில் புடைப்பை ஏற்படுத்தி(emboss) இருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட கலை நுணுக்கம் இன்று அழிந்து போய்விட்டது. இன்று அக்கல்லறைகளின் சிற்பங்கள் தகுந்த பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருக்கிறது. அரசாங்கம் இனியும் தாமதித்தால் அக்கலை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்.

கல்லறை
          பழவேற்காட்டுக் கட்டிடக்கலையின் மற்றொரு ஆதாரம், ஆதிநாராயணர் கோவில். 13-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் வணிகர்களுக்காகக் கட்டப்பட்டது. தென் இந்தியாவில் எங்குமே கிடைக்காத ‘Laterite’ கற்களால் கட்டப்பட்டு, வரலாற்று ரீதியாகப் பல்வேறு கட்டிடக் கலையம்சம் பொருந்திய இக்கோயில் கடந்த 150 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது. அக்கம் பக்கம் விசாரித்தால் கோயிலைப் பற்றி ஏகப்பட்ட பேய்க்கதைகள் சொல்லும் அளவிற்கு அனாதரவாக, சிதிலமடைந்த நிலையில் சமூக விரோத செயல்களுக்கு சாட்சியாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தக் கோயிலின் நிலம் இன்று யாருக்கும் சொந்தம் கிடையாது. யாராவது ஆக்கிரமிப்பு செய்து தினமும் ஒரு கல் என்ற ரீதியில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அக்கோயிலை ஒரேடியாக இடிப்பதற்குள் தமிழக அரசு அதைப் பாதுகாக்க முன்வரவேண்டும். இதே போல்தால் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சம்மேஷ்வரர் கோயிலும்.

ஆதிநாராயணர் கோயில்
          இப்படி நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய சிற்பங்களுக்கும் கட்டிடங்களுக்கும் நாம் போதிய மதிப்பும் கவனமும் செலுத்தாத காரணத்தால் அவை எல்லாமே அழியும் நிலையில் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் பழவேற்காடு சில சமூக அமைப்புகளின் கவனத்தைப் பெற்றது. அவை எல்லாமும் காலப்போக்கில் பழவேற்காட்டைக் கைவிட்டுவிட, இன்று ’ஆர்தே’ என்ற ஒரே ஒரு அமைப்பு மற்றும் அங்கு இயங்கி வருகிறது.

          பழவேற்காட்டின் பிரதான தொழில் மீன்பிடித்தல். ஏரியில் கிடைக்கும் பழவேற்காட்டு நண்டு மற்றும் டைகர் ப்ரான்(prawn) வேறு எங்கும் கிடைக்காது. ஆனால் கடந்த பத்து வருடங்களின் அதன் அளவு பாதியாக சரிந்து விட, மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பொழுது பனை ஓலை செய்யும் தொழிலை மீண்டும் செய்யுமாறு மரைக்காயர்களை ’ஆர்தே’ ஊக்குவிக்க, தற்போது அத்தொழில் நாற்பது குடும்பங்களுக்கு அப்படி இப்படி உணவளித்துக் கொண்டிருக்கிறது.

          பழவேற்காட்டில் இந்நேரம் சுற்றுலாத்துறை கவனம் செலுத்தி இருந்தால் பொருளாதாரம் செழித்து கல்வியும் வளர்ந்திருக்கும், ஆனால் போதிய கவனம் செலுத்தாததால் முக்கால்வீத குடும்பங்களில் இன்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகாத நிலை இருக்கிறது. சென்னையின் பிறப்புக்குக் காரணமான வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் இன்று வளர்ச்சியில் பின்தங்கி, வரலாறு மறைக்கப்பட்டு, ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா, என்று காத்திருக்கிறது.

கவனிக்குமா தமிழக அரசு?

ஆர்தே அமைப்பு

          ஆர்தே அமைப்பின் நிறுவனர் திரு.சேவியர் பெனடிக்டிடம் பேசினேன். “நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்துதான் ‘ஆர்தே’ அமைப்பை ஆரம்பித்தோம். 2003-ல் ஒருநாள் பறவைகளைப் பார்ப்பதற்காகப் பழவேற்காடு வந்திருந்தபோது சில பராமரிப்பற்ற, சிதிலமைந்த கட்டிடங்களைப் பார்க்க நேர்ந்தது. கட்டிடவியல் பொறியாளர்களான எங்களுக்குப் பார்த்தவுடனே அவைகளின் வரலாற்று முக்கியத்துவம் தெரிந்துவிட்டது. அந்த ஊர் ஒளித்து வைத்திருக்கும் வரலாறு பற்றி அம்மக்களுக்கே போதிய அறிவு இல்லாத்துதான் இதற்குக் காரணம் என்று புரிந்தது. எனவே, தன்னிறைவு பெற்ற பழவேற்காட்டை அம்மண்ணின் வழக்கங்களும் பிடிப்புகளும் மாறாமல் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘ஆர்தே’ அமைப்பைத் துவக்கினோம். நாங்க பெரிய சமூக சேவகர்கள் எல்லாம் கிடையாது, நல்லது செய்ய நினைக்கற சாதாரணக் கட்டிடவியலாளர்கள்தான்.

          கடந்த ஐந்து ஆண்டுகளாக ’கெல்ட்ரியா’ கோட்டைக்கு எதிரே Pulicat interpretation centre என்ற ஒன்றை உருவாக்கி, வருகிற சுற்றுலாப் பயனிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பழவேற்காட்டின் மகத்துவத்தை ஆதாரத்துடன் விளக்கி வருகிறோம். மேலும் உள்ளூரில் உள்ள மூட நம்பிக்கையற்றப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க உள்ளூர் மக்களுக்கு மத்தியில் பழவேற்காடு தினம், படகுப் போட்டி, கட்டைக்கூத்து போன்றவற்றை நடத்தி வருகிறோம்.

          யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. முக்கியமாக அரசாங்கத்தின் முனைப்பு இதில் அதிகம் தேவைப்படுகிறது. யுனெஸ்கோ மட்டும் அறிவித்து விட்டால் பழவேற்காடு அசுர வளர்ச்சி அடையும். அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். அதே சமயம் அப்படிப்பட்ட வளர்ச்சி அவர்களின் சுய அடையாளத்தை சிதைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தன் சுய மண்ணின் பிடிப்பு போய்விடாத, தன்னிறைவு பெற்ற பழவேற்காடுதான் எங்களது குறிக்கோள். ஆனால் அந்த ஊரைபற்றி உள்ளூர் மக்களுக்குத் தெரியாமல் இருக்கும்வரை அங்கு ஒரு முன்னேற்றமும் நடக்கப் போவதில்லை, அதைத்தான் தற்போது தொடர்ந்து செய்து வருகிறோம்”, என்று முடித்தார்.

- வ.விஷ்ணு
படங்கள்: ரா.மூகாம்பிகை
(2013)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி