Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஞான விஷ்ணு

முன்குறிப்பு: இந்த வலைப்பூவில் என்னுடைய நூறாவது பதிவு இது.

          ஜென்னில் ஞானம் அடைதல் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஞானமடைதல்கள் இரண்டு. ஒன்று கீழே இருப்பது.
"குருவே! மலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். எங்கிருந்து துவங்குவது?"
"உச்சியிலிருந்து."
          இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்த சியோனொவின் கதை. இந்த வலைப்பூவின் முகப்புப் படத்தில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளை வைத்திருக்கிறேன். எவ்வளவு முக்கியும் அவருக்கு கிடைக்காத ஞானம் ஓர் பவுர்ணமி இரவன்று தான் தூக்கி வந்த குடம் கீழே விழுந்ததும் படக்கென்று சுவிட்சு போட்டாற்போல் கிடைக்கிறது. குடத்தில் தண்ணீரைக் காணோம், தண்ணீரில் நிலாவைக் காணோம். இதுதான் வாழ்க்கை. இதுதான் இப்பேரண்டத்தின் உண்மை என்று சியோனொ கண்டுகொள்கிறார்.

          இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் சென்ற வாரம் அந்த ஞானம் கிடைத்தது.
இடம்: திருச்சியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பட்டிமன்றம்.
நேரம்: சரியாக காலை பதினொன்று மணி நாற்பத்தி மூன்று நிமிடங்கள் (அப்பொழுது எனக்கு இன்னும் ஞானம் வராதபடியால் வினாடிக் கணக்கு தெரியவில்லை)

          இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு நாட்டுப் பற்று வளர்கிறதா தேய்கிறதா? பட்டிமன்றத்தின் தலைப்பே அட்டகாசமாக இருந்தது. ஒரே பட்டிமன்றத்தில் தமிழினப்பற்று, நாட்டுப்பற்று இரண்டைப் பற்றியும் பேசத் தளம் அமைந்துவிட்டதே என்று நடுவர் அகமகிழ்ந்தார். வழக்கம் போல் மூன்று கணவன்-மனைவி நகைச்சுவைகள், இரண்டு சிறுகவிதைகள், இந்தப் பாவப்பட்ட உலகம் திருந்தி வாழ நடுவர் சொல்லும் முதல் சுற்று முக்கியச் செய்தி, ஆகிய வழக்கங்களுக்குப் பிறகு பட்டிமன்றம் இனிதே துவங்கியது.

          வளர்கிறது என்ற தலைப்பில் பேச வந்த முதல் மாணவர் இரண்டு பக்கங்களுக்கு வீர வசனங்களைப் பேசிவிட்டு, அதனால் நடுவர் அவர்களே இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு நாட்டுப் பற்று வளர்கிறது என்று சொல்லி பலத்த கைதட்டல்களுக்கு இடையே மெதுவாக நடந்து அவர் இருக்கையில் புன்சிரிப்புடன் அமர்ந்தார். நான் என் கைமுடியைப் பார்த்தேன். லேசாக சிலிர்த்துப்போயிருந்தது.

          அந்த மாணவர் அனைத்துக்கும் முன்தோன்றிய செந்தமிழில் யாப்பிசைத்தார் என்றால் தேய்கிறது என்ற தலைப்பில் பேச வந்த முதல் மாணவர் ”அய்யய்யோ!”, என்று ஆரம்பித்தார். நவீன இந்தியாவின் எந்த சமூகப் பிரச்னையைப் பற்றியும் ஒரு அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒரு சராசரி இளைஞன் என்ன சொல்வானோ, அதையெல்லாம் சொல்லிவிட்டு, மறுபடியும் ஒரு “அய்யய்யோ!” போட்டுவிட்டு அமர்ந்தார். கைதட்டல் சத்தம் இம்முறை விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயலையேத் திசை திருப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

          உலகம் காப்பாற்றப் பட்டதில் நடுவருக்கு ஒரே மகிழ்ச்சி. வட்டார வழக்கில் பேசி கூட்டத்தின் கவனத்தை ஈர்த்த அந்த மாணவனின் பேச்சாற்றலை வியந்து போற்றிய அவர், படக்கென்று வட்டார வழக்கில் பேசுவது பாமர மக்களைச் சென்றடையலாம், ஆனால் செந்தமிழ்தான் சான்றோனைச் சென்றடையும் என்று அந்தப் பக்கம் திரும்பி ஒரு கோல் போட்டார். இரண்டு பக்கங்களையும் தொட்ட நடுவரின் வாக்கையும் நாக்கையும் கண்டு பட்டிமன்றதை ஏற்பாடு செய்த பொறுப்பாளர் தன்னடக்கத்தில் தன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டார். பணிவுடன் அடுத்த செவிச் செல்வத்தைப் பருகத் தயாரானார்.

          ”அய்யய்யோ!” பேசிய மாணவரின் குற்றங் குறைகளுக்கு அடுத்து வருபவர் தக்க பதிலடி கொடுக்கப்போகிறார் என்று நினைத்து இருக்கையின் நுனிக்கு வந்து அமர்ந்தேன். ஒரு பேனாவை வெளியே எடுத்து நோட்ஸ் எடுக்க ஆயத்தமானேன். அடுத்து நடந்த க்ளிஷே பற்றித் தமிழ்ச்சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்ததுதான். அதனால் நேரத்தை விரயமாக்காமல் அடுத்த இரண்டு பத்திகளைத் தாண்டவும்.

          வந்தவர் வணக்கம் வைக்க ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டார். சொந்தமாக எழுதியதுபோலும், பரவாயில்லை. இந்திய இளைஞன் என்றைக்காவது கிரிக்கெட்டில் இந்தியாவை ஆதரிக்காமல் இருக்கிறானா என்று அறச்சீற்றத்துடன் மைக்கைக் கடித்தார் (கூட்டத்தினர் தோனி, தோனி என்று கத்தினார்கள்). அடடா, நாட்டுப்பற்று கண்கூடாகத் தெரிகிறதே என்று நடுவர் எதிரணியைப் பார்த்துப் புன்முறுவலுடன் கேட்டுவிட்டு மறுபடியும் ஒரு கணவன்-மனைவி நகைச்சுவையை உதிர்க்க, கூட்டம் கொல்லெனச் சிரித்து தோனியை மறந்து பட்டிமன்றத்திற்குத் திரும்பியது.

          மூன்றாவது நிமிடத்தில் பேச்சாளர் திடீரென்று எதிர்ப்பாராதவிதமாக எங்கிருந்தோ பகத் சிங்கை உள்ளே அழைத்து வந்தார். அன்று இருந்தது ஒரு பகத்சிங், ஆனால் இன்று இருப்பதோ, என்று ஆரம்பிக்கும்போது நேரமாகிவிட்டது என்று மணியடிக்க, சத்தியத்திற்குத் தடங்கல் வரத்தான் செய்யும் என்று ஒரு டைமிங் பஞ்ச் அடித்துக் கைதட்டல்கள் பெற்றமர்ந்தார்.

          பட்டிமன்றம் இப்பொழுதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று நடுவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். எனக்கு மூக்கு நமநமவென்று அரிக்க ஆரம்பித்தது. சொறிந்தேன். இதமாக இருந்தது. மீண்டும் சொறிந்தேன். மீண்டும் இதமாக இருந்தது. இதற்கு மேல் சொறிவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்தபோது நடுவர் அடுத்தப் பேச்சாளரை அழைத்தார். தேய்கிறது என்ற அணியின் முதல் மாணவர் போட்ட “அய்யய்யோ!”விற்கு எதிரணி பதிலே சொல்லாமல் இருந்த வேளையில் அடுத்தத் தாக்குதலா என்று நான் மீண்டும் சொறிய ஆரம்பிக்க, உலகக்கோப்பை இரகத் திருப்பம் ஒன்று அப்பொழுது அரங்கேறியது.

          கிரிக்கெட்டில்தான் ஸ்பாட் ஃபிக்சிங் இருக்கிறது என்றால், பட்டிமன்றத்திலுமா அது சாத்தியம் என்று கேள்வியை எழுப்புவதுபோல் இருந்தது அந்தப் பேச்சாளரின் கருத்துகள். தேய்கிறது என்ற தலைப்பைத் தேயாமல் காப்போம் வாருங்கள் என்று தானே மாற்றிக்கொண்டு மணியடிக்கும்வரை எதிரணிக்கு உதவினார். சூறாவளியாகப் பொங்கி முழங்கிவிட்டு அதனால் நடுவர் அவர்களே, எதிரணி சொல்வது பொய் என்று கூறித் தன் இருக்கையில் வெற்றிப்புன்னகையுடன் அமர்ந்தார். தன் அணியினரை ஒரு பார்வை பார்த்தார். அவர்களின் முகபாவத்திற்கு ஏற்றவாறு கூட்டத்திலிருந்து ”ஏன் பக்கி?” என்று ஒரு குரல் வந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தவராய்த் தன் பார்வையைத் தரையில் பதித்தார். அதற்பிறகு பட்டிமன்றம் முடியும் வரை அவர் தலை தொங்கியபடியேதான் இருந்தது.

          பிரபஞ்சத்தில் சமநிலை வந்துவிட்டதை அறிவிப்பதற்காக நடுவர் தொண்டையை கனைத்துக் கொண்டார். அடுத்த பேச்சாளரை அழைத்தார். அவர் வந்தார். அவருக்கும் நடுவருக்கும் நடந்த உரையாடல் இப்படித்தான் இருந்தது.
"நடுவர் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி."
"கேளுங்கள்."
"உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையா?"
"இருக்கிறது."
"நீங்கள் சத்தியவான்தானே?"
"என் சம்சாரம் பேரு பார்வதிங்க." (கூட்டம் கொல்லெனச் சிரிப்பு)
"எனக்குத் தெரியும் நடுவர் அவர்களே நீங்கள் யார் பக்கம் என்று. நீங்கள் என்றுமே சத்தியத்தின் பக்கம். அறத்தின் பக்கம். நம்பிக்கையின் பக்கம். வளர்ச்சியின் பக்கம். முடிவாக, நீங்கள் எங்களின் பக்கம்! நன்றி."
          நடுவரையே பேசி வென்றுவிட்டாரே என்று கூட்டத்தினர் சீட்டியடித்தனர். நான் அம்மா சத்தியமாக எந்தக் கவரும் வாங்கவில்லை என்று நடுவர் மீண்டும் ஒரு நகைச்சுவையை உதிர்த்தார். அவ்வளவுதான், மொத்தக்கூட்டமும் சீட்டியடிப்பதை நிறுத்தியது. அரங்கமே திடீரென்று சலனமற்றுப் போனது. நடுவருக்கு அதன் காரணம் சற்றுத் தாமதமாகத்தான் உறைத்தது. அன்றுதான் பெங்களூரில் அம்மாவின் வழக்கிற்குத் தீர்ப்பு வந்திருந்தது. திருச்சியே திண்டாடிப்போயிருந்தது. அந்த பயத்தில்தான் கூட்டம் அமைதியாக இருக்கிறது என்பதை உணர்ந்த நடுவர் தான் சொன்னது தன்னைப் பத்து மாதங்கள் ஈன்றெடுத்தத் தாய் என்று விளக்கமளித்துவிட்டு அடுத்தப் பேச்சாளரை அழைக்க, அவரும் “அய்யய்யோ!” பாடி விட்டு அமர்ந்தார். தீர்ப்பு சொல்லும் நேரம் வந்தது.

          நடுவர் தன் தொண்டையை மீண்டுமொருமுறை கனைத்துக்கொண்டார். கூட்டத்தினை ஒருமுறை உற்றுப் பார்த்தார். அனைத்துப் பார்வையும் தன் மீதே படர்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்துகொண்டார். தீர்ப்பு சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிவித்து அந்த வரலாற்றுத் தருணத்தை நிகழ்த்த ஆயத்தமானார். பலத்த கைதட்டல்களுக்கு நடுவே நானும் ஆயத்தமானேன். மூக்கரிப்பு நின்றிருந்தது.

நடுவர் சொன்ன தீர்ப்பு இதுதான்.
“என்னதான் அமெரிக்கா ஐரோப்பாவென்று தமிழன் குடிபெயர்ந்தாலும், மேட்ரிமோனியலில் இந்தியப் பெண்தான் வேண்டும், அதுவும் தமிழ்ப் பெண்தான் வேண்டும் என்று கேட்கிறான் பாருங்கள், அதுதான் நாட்டுப்பற்று மக்களே, அதுதான் நாட்டுப்பற்று!”
          எங்கிருந்தோ சராலென்று ஒரு கருத்து மின்னல் வந்து என்னைத் தாக்கியது. திடீரென்று மூளை கனமானதை உணர்ந்தேன். கண்கள் இருண்டுகொண்டு வந்தன. கண்களை மூடிக்கொண்டேன். திடீரென்று சூரியன் கிட்டத்தில் தெரிந்தது. சூடாக உணர்ந்தேன். செவ்வாய்க் கிரகம், சனிக்கிரகம், இவற்றையெல்லாம் கடந்து சரேல் சரேல் என்று நட்சத்திரங்கள் கடந்து செல்ல பால்வீதியின் விளிம்பிற்கே வந்து சேர்ந்தேன். அதிலிருந்து அப்படியே அண்டம் விட்டு அண்டம் பாய்ந்து சிவத் தாண்டவத்தின் எச்சத்தை நுகர்ந்தேன். ஆதி உண்மை அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் புலப்பட்டது. வெகுவிரைவாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆதி உண்மையை லபக்கென்று பிடித்துக்கொண்டேன். குளிர்ச்சியாக இருந்தது. அளந்து பார்த்தால் ஒரு கிலோ இருந்தது. மைக்ரோ வினாடிகளில் நடந்த அந்த சாகசப்பயணம் முடிந்து மீண்டும் அந்த அரங்கத்திற்கே நான் வந்தபோது நான் புதியத்தோர் மனிதனாக உருப்பெற்றிருந்ததை உணர்ந்தேன்.

          பலத்த கைதட்டல்களுக்கு இடையே அந்த ஈராயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் சம்பவத்தை நிகழ்த்திய அந்த நடுவர் விடைபெற்றார். அவரை அறியாமல் அவர் எனக்கு ஜென் குருவாய் மாறிப் போயிருந்தார். அவர் இருந்த திசையை நோக்கி என்னுடைய ஞானக் கரங்களால் வணங்கினேன். இடம் போதாமல் தலையிலிருந்து வழிந்தோடிய ஞானத்தை என் ஞானக் கன்னத்திலும் ஞானக் கழுத்திலும் அப்பிக்கொண்டேன். என்னுடைய அந்த ஞான செயலை அரங்கம் ஒருமாதிரி பார்த்தது. சபை நாகரிகம் கருதி என் ஞானத்தை என்னோடு வைத்துக்கொண்டு என் ஞானக் கால்களால் ஞான நடை நடந்து ஞான வாழ்க்கையை நோக்கிய என் ஞானப் பயணத்தைத் அன்று முதல் துவங்கினேன்.

- ஞான விஷ்ணு

பின் குறிப்பு: இந்த சம்பவம் நடந்ததற்கு இரண்டு நாட்கள் முன்னால்தான் ஒரு தெருக்கூத்தில் திருவள்ளுவரின் மற்றொரு பெயரான ’ஞான வெட்டியான்’ பாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்குப் பெயர்தான் நல்லூழ் போலும்.

Comments

 1. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பட்டிமன்றம் பிச்சசு உதறியிருக்கீங்க போல இருக்கே

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  WWW.mathisutha.COM

  ReplyDelete
 2. மிக்க நன்றி சகோ :-))

  ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி