Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

விஜயமது


          கல்லூரி சேர்ந்த புதிதிலேயே விஜயமது `நெருங்கிய நண்பன் ஆகிப்போனான். நான் சேர்ந்த முதல் கேங்கில் அவனும் ஒருவன். கிட்டத்தட்ட ஆரம்பகால சிறு சிறு ரேகிங் தவிர்த்து மற்ற அனைத்திலும் நாங்கள் சேர்ந்துதான் இருந்தோம். திருநெல்வேலித் தமிழில் பல கதைகள் சொல்லுவான். மனித உறவுகளை நேசிப்பவன். குடும்ப சூழலியல் சார்ந்த விஷயங்களில் பல இடங்களில் நான் அவனிடம் முரண்பட்டாலும் அவன் அடிக்கடி சொல்லும் “எங்க ஊர்ல நாங்க அப்படித்தான்டா வளர்ந்தோம்”, என்கிற வாதத்தில் நான் அடிக்கடி விழுந்ததுண்டு. அந்த வாக்கியத்தின் கருப்பொருளைத் தேடியதுண்டு. அனைவரிடத்திலும் சிரித்துப் பழகுவான். எல்லாவற்றுக்கும் முன்னால் மனிதத்தையே முன்னிறுத்துவான். அவனைத் தூக்கி வளர்த்த அவன் பெரியம்மாவை ‘அம்மா’ என்றுதான் அழைப்பான். அவன் படிப்பிற்கு பொருளாதார சிக்கல் வரும்போதெல்லாம் தன் நகைகளை விற்று அவனை மேலும் படிக்க வைத்து, அப்பொழுது கல்லூரி வரை கொண்டு விட்டிருந்தார் அவர். அடிக்கடி அவரிடம் ஃபோனில் சிரிக்க சிரிக்க பேசுவான்.

          கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் எனக்குப் பேருந்து விபத்து ஏற்பட, இரண்டு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. செமஸ்டர் தேர்வு சமயம். மீண்டும் கல்லூரிக்குள் நுழைந்தேன். அப்பொழுது விஜயமதுவிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது, “அம்மா இறந்து விட்டாள்", என்று. நன்றாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று எந்த அறிகுறியும் இல்லாமல் அவன் மடியிலேயே உயிரை விட்டிருந்தார் அவன் பெரியம்மா.

          உடனே நானும் தமிழ்மணியும் திருநெல்வேலிக்கு விரைந்தோம். அப்படி இப்படி அட்ரஸ் பிடித்து அவன் வீட்டிற்குப் போய் சேர்ந்தபோது எல்லாம் முடிந்திருந்தது. மொட்டை மாடியில் கதறி அழுதான். அவனது வறண்ட கண்களும் களையிழந்த முகமும் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ”தொலைஞ்சு போன மாதிரி இருக்குடா”, என்று விம்மினான். பெரியம்மாவின் ஆன்மாவிற்கு அவன் செய்யும் மிகப் பெரிய கடமை அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வருவதுதான் என்று அவனை தேற்றினோம். வார்த்தைகள் வராத தருணங்களில் தட்டிக்கொடுத்தோம். சென்னை திரும்பி தேர்வுகளை எழுதி முடித்தோம்.

          கல்லூரி நேரம் முடிந்ததும் பின்மாலை நேரங்களில் உணவகங்களில் கணக்கெழுதும் வேலை செய்ய ஆரம்பித்தான். கல்லூரி மூன்றரை மணிக்கு முடியும். ஐந்தரை மணி போல் உணவகத்தில் வேலை செய்ய ஆரம்பிப்பான். பதினொரு மணி வாக்கில் அறைக்கு வந்து அன்றைய பாடங்கள், மற்ற வேலைகள் என்று செய்ய, படுக்கப் போக இரவு இரண்டு மணி ஆகிவிடும். மீண்டும் காலை ஐந்து மணிக்கு எழுந்து கல்லூரிக்குக் கிளம்ப வேண்டும். செமஸ்டர் தேர்வு சமயத்தில் இன்னும் கஷ்டம். படிக்கத் தேவையான தெளிந்த மனதும் சிந்தனையும் எப்பொழுதும் கிடைக்காது. இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் கல்லூரியில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். எண்பது சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களை எடுத்து வந்தான்.

          இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு ஐ.டி. கம்பெனிகளில் அவனுக்கு வேலை கிடைத்தது. முகத்தில் சிறு புன்னகையோடு அவற்றைக் கடந்தான். ”நான் படிச்ச துறையில எனக்கு வேலை கிடைக்காம ஊருக்குப் போறதில்ல”, என்று சங்கல்பம் செய்துக்கொண்டான். அதன்படியே இங்கிருந்தபடி இராப்பகலாக உழைத்தான். இரண்டு மூன்று நேர்முகங்களில் தோல்வியே கிடைத்தது. ஆனாலும் விடாமல் தன் பணியையும் பார்த்துக்கொண்டு படிப்பையும் பார்த்துக்கொண்டு அசுரத்தனமாக உழைத்தான். தற்போது ஃபோர்டு நிறுவன நேர்முகத்தில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்துவிட்டது. ”எனக்கெல்லாம் எங்கடா கோர் கம்பெனி”, என்று இரண்டாம் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் நொந்துக்கொள்வான். அவன் கேள்விகளுக்கெல்லாம், வலிகளுக்கெல்லாம், தூக்கமில்லா இரவுகளுக்கெல்லாம் இன்று வாழ்க்கை பதிலளித்திருக்கிறது.

          வாழ்தலுக்கான போராட்டத்தில் விடாமல் தொடர்ந்து நீந்தும் அவன் மன வலிமை எனக்கு மிகப்பெரிய விளக்கு. தன்னைச் சுற்றிலும் நண்பர்களையும் தோழிகளையும் வைத்துக்கொண்டு எதிர்வரும் சிக்கல்களை அனாயசமாகக் கடப்பான். அவனது குடும்ப சிக்கலையோ மனப்பிரச்னைகளையோ அதிகம் வெளியே சொல்லமாட்டான். ஏன், அவனது ஓய்வற்ற வாழ்க்கை முறை பற்றி என் வகுப்பில் சில பேருக்காவது தெரியுமா என்பதுகூட சந்தேகம்தான். அவனது நீண்டநாள் கனவு தன் சொந்த ஊரில் உணவகம் வைத்து நடத்துவது. சீக்கிரம் செட்டில் ஆகி ஊர் பக்கம் போய் கூப்பிடு மச்சி. பழக்கத்துல அல்வா குடுத்துடாத.

          தவழ்கிற வயதில் தெரியாமல் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து கை காலை ஆட்டியபடி மூச்சுத் திணறியிருக்கிறான். கடைசி மூச்சு விட்டு ஓய ஆரம்பிக்கும் அந்த இறுதிக் கணத்தில் ஒரு கரம் சரியான சமயத்தில் அவனைத் தூக்கி வெளியே எடுத்திருக்கிறது. ஒருவழியாக அப்படி இப்படி பிழைத்துக்கொண்டான். அவனை அன்று காப்பாற்றியது வேறு யாருமல்ல, அவன் பெரியம்மாதான். மிக்க நன்றி ”அம்மா!”

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி