Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கேப்டன் கோலியும் கீப்பர் தோனியும்: கொண்டாடப்பட வேண்டிய தனித்துவமான உறவு

          கேப்டன் பொறுப்பு கைமாறியுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று அவர்களிடையேயான உறவு என்பது ஒருவருக்கொருவரின் கருத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

-------------------------------------------------------------------------------

Scroll.in வலைதளத்தில் சேத்தன் நருலா எழுதிய ‘The unique relationship between captain Virat Kohli and keeper MS Dhoni is one India should cherish' என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கோலியின் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது.

-------------------------------------------------------------------------------


Courtesy: Dibyangshu Sarkar/AFP

          இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - 40-வது ஓவரின் முதல் பந்தை பும்ரா முழுநீளத்தில் வீச, அது ஆன்டில் பெகுலுக்வாயோவின் பின்னங்காலில் பட்டென்று இறங்கியது. ’அவுட்!’ என்று பும்ரா அப்பீல் எழுப்ப, அம்பயர் பால் ரெய்பெல் இல்லை என்று தலையாட்டினார். உடனே அம்பயரை மறந்துவிட்டு அனைவரும் பேட்ஸ்மேன் ஸ்டம்பிற்குப் பின்னே பார்வையை செலுத்தினர்.

          ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி, பும்ராவோடு சேர்ந்து அப்பீல் கேட்டபடி அம்பயர் நோக்கி நடந்துவந்தார். அம்பயர் ‘இல்லை’ என்றதும் திரும்பி தோனியைப் பார்த்தார். அம்பயர் இல்லை என்றதும் தோனியிடம் மேல்முறையீடு செய்வதைப் போல் இருந்தது அந்தப் பார்வை! DRS அப்பீல் (Decision Review System) கேட்கலாமா வேண்டாமா என்று தோனியின் கருத்திற்காக கோலி காத்திருந்தார். வர்ணனையில் சஞ்சய் மஞ்ரேக்கர் சொன்னார்: “உறுதியான முடிவு வேண்டுமென்றால் கோலி திரும்பி தோனியைப் பார்க்கத்தான் வேண்டும்!”

          அந்த வர்ணனை ஒரு நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது என்றாலும், களத்தில் தோனியின் கருத்தைக் கேட்காமல் DRS அப்பீல் செய்ய கோலிக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பந்து பேட்டை உரசிச் சென்றதா, அல்லது நேரடியாகக் காலில் இறங்கியதா என்று பும்ராவிடம் கோலி கேட்டுக்கொண்டே இருந்தார். பிறகு மீண்டும் ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்தார். தோனிக்கும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் DRS கேட்கலாம் என்று தலையசைக்க, கோலி அம்பயரிடம் அப்பீல் செய்தார். முடிவு பும்ராவிற்கு சாதகமாக வந்தது. பெகுலுக்வாயோ அவுட் ஆனார்.


DRS - தோனி ரெவ்யூ சிஸ்டம்!

          சமூக வலைதளங்களில் பரவலாக நகைச்சுவைக்கு உள்ளாக்கப்படும் ஒரு விஷயம், தோனி ரெவ்யூ சிஸ்டம் (DRS). எளிமையாக சொல்லவேண்டுமென்றால், களத்தில் நின்று விளையாட்டைக் கூர்ந்து கவனிக்கும் தலைசிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவர் தோனி. ஸ்டம்பிற்குப் பின்னால் நிற்கையில் அவருக்கு இருக்கும் அதீத விழிப்புணர்வு; அதற்கு அருகே வேறெந்த வீரரும் நெருங்க முடியாது. DRS குறித்து முடிவெடுக்கையில் மற்ற கீப்பர்களைவிட தோனி பல தொலைவு முன்னே இருக்கிறார். நிச்சயமாக வ்ரித்திமான் சாஹாவையும் பார்த்திவ் பட்டேலையும் விட முன்னே இருக்கிறார் என்று சொல்ல முடியும்.

          2016-17ல் வரிசையாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் சாஹாவும் பார்த்திவ்வும் கோலிக்குப் பெருத்த ஏமாற்றங்களைத் தந்தனர். DRS முடிவுகளில் அவர்கள் அதிகமாக சொதப்பினார்கள். அதே காலகட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஸ்டம்பின் பின்னாலிருந்து தோனியின் குரல் உறுதியாக வந்துகொண்டிருந்தது. டெஸ்டில் சாஹாவும் பட்டேலும் ஒரு செய்கையையும் காட்டாது நின்றனர். ஆனால் இந்த இருவரின் மீது முழு தவறையும் சுமத்திவிட முடியாது என்பது உண்மையே. ஒவ்வொரு முறையும் ஸ்பின்னர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு DRS அப்பீலுக்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள். அதன் விளைவாக இந்திய அணிக்கு பல முறை போட்டியின் ஆரம்பத்திலேயே அப்பீலை இழக்கும் நிலை ஏற்பட்டது.

          உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். ஜூன் 8 அன்று சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. 20வது ஓவரில் ஜடேஜாவின் பந்து குசல் மெண்டிஸின் காலில் பட, அவுட் நிச்சயம் என்று ஜடேஜா அம்பயரை நோக்கி பெருங்குரல் எடுத்து கத்தினார். அம்பயர் ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் நோ சொல்லிவிட்டார். ஜடேஜா பரபரத்து கோலியை அங்கும் இங்கும் தேட, தோனி சர்வ சாதாரணமாக பந்தை நோக்கி நடந்து அதை எடுத்து ஜடேஜாவிடம் வீசினார். ஜடேஜாவுக்குப் புரிந்துவிட்டது. அதோடு கதை முடிந்தது. ஜடேஜாவை சம்மதிக்க வைக்க எந்த கலந்தாய்வும் நடக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. எதிர்காலத்தில் தோனி கீப்பராக இல்லாத ஒரு போட்டியில், இதே போன்ற ஒரு சூழல் ஏற்படுமாயின், இந்தியா அந்த சந்தர்ப்பத்தில் DRS அப்பீல் கேட்டு தவறிழைக்கவே வாய்ப்பு அதிகம்.


Courtesy: IANS

          DRS அப்பீல் குறித்து முடிவெடுக்கும்போதுதான் தோனி இப்படி என்றில்லை. களத்தில் சக வீரர்கள் தோனியின் பால் அளவு கடந்த மரியாதையை வைத்திருக்கிறார்கள். நிகரற்ற புகழின் உச்சியில் இருக்கும் விராத் கோலியால் கூட தோனியை ஒதுக்க முடியாது என்பதே உண்மை. தோனி கேப்டன் பதவியைத் துறந்துவிட்டவராக இருக்கலாம். ஆனால் களத்திற்கு உள்ளே இன்றும் தோனியின் பின்னே ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. ஒரு சாதாரண வீரராக இன்று களமிறங்கினாலும், அனைவரின் பார்வையையும் தன் மீது திருப்பும் காந்த சக்தியை தோனி இன்னும் மிச்சம் வைத்திருக்கிறார்.

          இந்த வருடத்தின் துவக்கத்தில் தோனி தன் கேப்டன் பதவியை கோலியிடம் ஒப்படைத்தார். டெஸ்ட் கேப்டனாக தோனி 2014-15 வரை தொடர்ந்திருக்கலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு இன்று வரை இடம் இருக்கிறது. ஆனால் ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவியை தோனி துறந்ததற்கு இதைவிட வேறு சரியான தருணம் இருந்திருக்க முடியாது. தோனியின் உச்சபட்ச சாதனை, அழுத்தம் மிகுந்த இந்தப் பொறுப்பை எப்பொழுது கோலியிடம் முழுமையாக(ஒருநாள்+T20) ஒப்படைக்கலாம் என்று சரியாக முடிவெடுத்து செயல்பட்டதுதான். கோலியின் தலைமையில் இங்கிலாந்துக்கெதிராக தட்டுத் தடுமாறி டெஸ்ட் தொடரை வென்றவுடன் ஒருநாள் மற்றும் T20-யிலும் தோனி கேப்டன் பதவியைத் துறந்தார். அன்றைக்கு அது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. ஆனால் இன்றைக்கு நாம் அதை பின்னோக்கிப் பார்க்கும்போது, தோனியின் விலகல் ஆச்சரியத்தை அளிக்கவே இல்லை. மாறாக அது இயல்பான, சரியான முடிவாகப் படுகிறது.


கோலியின் வயது

          இங்கிலாந்துக்கெதிரான அந்த டெஸ்ட் தொடரில்தான் கோலி என்னும் நாயகனின் எழுச்சியை உலகம் கண்டது. அவரது கணகச்சிதமான பேட்டிங்கின் மூலம் ரன்கள் குவிந்தவாறு இருந்தன. அவரது தலைமையின் கீழ் ஒட்டுமொத்த அணியும் ஒற்றுமையாகத் ஒன்று திரண்டது. போட்டிகளின் துவக்கத்தில் சொதப்பினாலும் சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு எளிதான வெற்றிகளை சாத்தியமாக்கியது. இன்று இதை சொல்ல வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அன்று கோலியின் மாயத்தில் மயங்கியே இங்கிலாந்து அணி தொடரைப் பறிகொடுத்ததுபோல் இருந்தது என்று சொன்னால் அது மிகையே அல்ல. கோலியை உலக அணிகள் கவனிக்கத் துவங்கின. ஆஸ்திரேலிய அணியும் ஆஸ்திரேலிய ஊடகமும் அவரைக் குறிவைத்து சீண்ட ஆரம்பித்தது கோலியின் அசுர வளர்ச்சிக்கு ஒரு தெளிவான சான்று. ஓய்வு பெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களெல்லாம் கோலியைப் பற்றி பேட்டி கொடுத்த காட்சிகள் அரங்கேறின.

          2016-ன் இறுதிக்குள் இந்திய அணி கோலியின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துவிட்டது. ஒரு அணி எவ்வாறு விரைவாகவும் தடையின்றியும் ஒரு தலைமையிலிருந்து இன்னொரு தலைமைக்குக் கைமாறி சூழலைப் பழகிக்கொண்டது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறில்லை. இதில் தோனியின் பங்கு மெச்சத்தக்கது. தலைமை கைமாறுகையில் அணியின் உளவியலில் ஏற்படும் இந்த மாற்றத்தை எதிர்பார்த்து தோனி பக்குவமாக ஒதுங்கிக்கொண்டார். மேலும் தனது கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வரும் வேளை நெருங்குகையில் விளையாட்டை சவுகரியமான ரசித்து ஆட விரும்பினார். மிஞ்சிப் போனால் அதிகபட்சமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடலாம் (அதுவும் தன் உடற்தகுதியை இழக்காது தக்கவைத்துக்கொண்டால்). தோனியும் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார். எனவேதான் தன்னிடம் மிச்சமிருக்கும் கிரிக்கெட்டை நன்றாக அனுபவித்து விளையாடி விடைபெற வேண்டும் என்று விரும்புகிறார். இது அனைத்து கிரிக்கெட் வீரரும் இயல்பாக விரும்பும் ஒன்றுதான்.

          கைமாறிய தலைமை பொறுப்பு. அழுத்தங்களற்ற முதிர்ந்த தோனி. அணியை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட கோலி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் தோனி-கோலி உறவு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பதிவு செய்வது அவசியம். இன்று அவர்களிடையேயான உறவு என்பது ஒருவருக்கொருவரின் கருத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் உலகத்திலேயே தலைசிறந்த கேப்டனாக விளங்கிய தோனி, தற்போது கேப்டன் பொறுப்பு இல்லாமல் வெறும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக மீண்டும் சுதந்திரமாகக் களமிறங்குகிறார். அதே நேரத்தில் ஒரு அனுபவமிக்க முன்னாள் கேப்டனின் வழிகாட்டுதலின் கீழ் கோலி தன்னுடைய தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பெறுகிறார். களத்தில் அதை நம்மால் நேரடியாகக் காணவும் முடிகிறது.

          பேட்டிங் வரிசையில் தோனிக்கு எந்த இடம் சவுகரியமாக இருக்கிறது என்பதை கோலி அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். வெளியிலிருந்து ஒரு பார்வையாளராகப் பார்க்கும்போது இது எளிமையாகத் தோன்றலாம். “இதில் என்ன இருக்கிறது, நான்காவது இடத்தில் தோனி களமிறங்கி லோயர் ஆர்டருக்கு வழிகாட்ட வேண்டும். அடுத்த ஃபினிஷரை வளர்த்தெடுக்க வேண்டும், அவ்வளவுதான்”, என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடலாம். ஆனால் அந்த முடிவு அவ்வளவு எளிதாக எடுத்துவிடக்கூடியதல்ல.

          தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தோனிக்குக் கச்சிதமாகப் பொருந்தும். மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஃபினிஷிங் திறனை வளர்க்க ஒற்றை ஆளாக தன் கிரிக்கெட் வாழ்வு முழுவதையும் செலவிட்டவர். ஃபினிஷிங் என்பது ஒரு பெரும் பொறுப்பு. தன் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் தோனியை வேறொரு சொகுசான இடத்திற்கு மாற்றினால் ஃபினிஷிங் செய்யும் அழுத்தம் வேறொருவர் தலையில் விழும். இப்போதைக்கு அவர் ஐந்தாவது இடத்தில் பேட் செய்கிறார்; கடைசி ஓவர்களில் நங்கூரம் பாய்ச்சி லோயர் ஆர்டர் சரியாமல் பார்த்துக்கொள்கிறார். இந்தத் திறமை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது என்றாலும், இதுவரை அணி நிர்வாகத்திற்கு அது ஒரு பிரச்னையாக மாறவில்லை.

          அதே நேரத்தில், ஒரு அணித் தலைவராக கோலி தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்பதை தோனியும் உணர்ந்திருக்கிறார். பல சமயங்களில் ஒரு வீரர் தனியாளாக சாகசம் புரிந்து வாண வேடிக்கைகள் காட்டலாம். ஆனால் அந்த வீரர் அணித்தலைவர் ஆனால், அந்தத் தலைமைப் பொறுப்பு அவரின் சாகச மனநிலையை சற்றே மட்டுப்படுத்தும். கோலிக்கு இதுவரை அவ்வாறு எதுவும் நிகழவில்லை. சொல்லப்போனால் கோலியின் உற்சாகம் பிற வீரர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது என்பதே உண்மை. கோலியின் இன்றைய டெஸ்ட் அணியைப் பார்த்தால், அது தோனியின் அணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உளவியல் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஒருநாள் அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை.


தவறுகளிலிருந்து கற்கும் வாய்ப்பு?

          அதே நேரத்தில், தவறுகள் செய்து சுயமாகப் பாடம் கற்றுக்கொள்ளும் தருணங்கள் கோலிக்கு வாய்க்காமல் போவது என்னவோ உண்மைதான். ஒரு சிறந்த உதாரணம், மேலே கூறிய அதே இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் வெற்றி கைநழுவி செல்லத் துவங்கியது. அப்பொழுது கோலி தோனியிடம் சென்று ஆலோசனை கேட்டார். பார்ட்-டைம் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் என்று தோனி பரிந்துரைக்க, அப்படித்தான் அந்தப் போட்டியில் யுவராஜ் சிங், கேதார் ஜாதவ் போன்றவர்களை கோலி பந்து வீச அழைத்தார். கோலியே கூட பந்துவீசினார்.

          சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி நிமிடத்தில் பரபரப்பான வெற்றியை இந்தியா பெற்றபோது கோலி சொன்னார், “தோனியின் திட்டங்களும் கணிப்புகளும் துல்லியமாக பலிக்கின்றன. போட்டியின் எந்த கட்டத்திலும் அவருடைய ஆலோசனை உதவிகரமாக இருக்கிறது. இலங்கைக்கு எதிரான சென்ற போட்டியில் பார்ட்-டைம் பந்துவீச்சாளர்களைப் பரிந்துரைத்தார். இன்று ஸ்லிப்பை எவ்வளவு நேரம் வைத்துக்கொள்ளலாம், பீல்டிங் அமைப்பு எவ்வாறு இருக்கிறது, போன்றவற்றில் மட்டும் ஆலோசனைகள் கேட்டேன். பெரும்பாலும் தன்னம்பிக்கை இழந்து சோர்வடையும்போது மன உறுதிக்காக அவரிடம் செல்வேன்.”

Courtesy: yahoo.com

          தன்னுடைய இறுதிக்கட்ட கிரிக்கெட்டை தோனி விளையாடிக்கொண்டிருக்க, ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக கோலி தன்னை வளர்த்தெடுத்துக்கொண்டு வருகிறார். இந்தக் குறுகிய காலகட்டத்தில் இந்திய அணியின் அடையாளம் என்பது எதிரெதிர் முனையில் இருக்கும் இரண்டு தனித்துவமான வீரர்களின் கலவையாக இருக்கிறது. ஒருவர் மைதானத்திற்கு உள்ளே, வெளியே இரண்டிலும் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் உணர்ச்சிப் பிழம்பு. மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திவிடக்கூடியவர். இன்னொருவர், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மிக அமைதியான, தன்னிலை இழக்காத வீரர். நெருக்கடியான நிலையிலும் கூட தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சிறிதளவு கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிதானமாக நிற்பவர்.

          கேப்டன் கோலி - கீப்பர் தோனி: தனித்துவமான உறவு இது. எக்காலத்திலும் கொண்டாடப்பட வேண்டியது.


- சேத்தன் நருலா

(தமிழில்: வ.விஷ்ணு)

This article was originally published in Scroll.in: ‘The unique relationship between captain Virat Kohli and keeper MS Dhoni is one India should cherish' - Chetan Narula
https://thefield.scroll.in/840612/the-unique-relationship-between-captain-virat-kohli-and-keeper-ms-dhoni-is-one-india-should-cherish

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி