Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது.

கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்டிற்கு பெற்றோரின் நண்பர்களோ உறவினர்களோ வந்தால் உண்டியலை எடுத்துக்கொண்டு அவர்கள் முன்பு நின்றுவிடுவேன். தெருவில் உள்ள வீடுகளுக்கு விருந்தினர் எவறேனும் வந்திருக்கிறார்களா, புதிய வண்டி ஏதாவது நின்றிருக்கிறார்களா என்று பார்த்து, புதிய மனிதர்களின் நடமாட்டம் கண்ணில் பட்டால் அவர்களிடத்தில் அட்டையை நீட்டுவேன். இரண்டு வாரங்கள் கழித்து திரட்டிய பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்து ஒருவரையொருவர் வின்னர் என்று பார்த்துக்கொண்டோம்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், இரண்டு வாரங்களுக்கு ஒரு ஒரு ரூபாயாகத் திரட்டி, அதை ஆசிரியர்கள் மொத்தமாகத் திரட்டி அனுப்ப ஒரு மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு, அது குஜராத்தையோ காஷ்மீரையோ அடைய மற்றொரு வாரம் எடுத்து, அங்கிருந்து முகாம்களுக்குச் சென்று சேர ஒரு இரண்டு நாட்கள் ஆகி, என்று பொதுமக்களின் நிவாரண நிதி சென்று சேரவே ஒரு மாதம் வரை ஆகிவிடும். அந்த நிதியை வைத்து பொருட்களை வாங்க இன்னும் சில நாட்கள் ஆகும். ஆனால் இன்று தொழில்நுட்பத்தின் உதவியால் அவை சில நிமிடங்களில் நிகழ்ந்துவிடுகின்றன. அதிகபட்சம் சில நாட்கள்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி