Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நேரு நினைவு தினம்

மேற்கு ஐரோப்பிய சிந்தனைப் பரப்பில் இயங்கும் அறிவுஜீவிகளுக்கு நேருவின் மீது அதீத விமர்சனப் பார்வை இருப்பதைக் கடந்த மூன்று மாத உரையாடல்களில் என்னால் உணர முடிந்தது (சில அதிரடியான விதிவிலக்குகள் உண்டு; முடிந்தால் இன்னொரு பதிவில்). அரசு இயந்திரத்திற்குள் இயங்கும் ஒருவர் அவ்வியந்திரத்தின் வன்முறை ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிறார். அந்த நிலையே அவரை காந்தியத்திலிருந்து விலக வைத்துவிடுகிறது என்று ஒரு சிலர் கருத்து கொண்டிருந்தார்கள். “நேருவுக்கு காந்தியைத் தாண்டிய தனித்த அடையாளம் உண்டு, ஆனால் அதே நேரத்தில் காந்திக்கு நெருக்கமாக அவரை வைக்காமல் வேறு யாரை வைக்க முடியும்?” என்று நான் வாதிட்டேன். ஒவ்வொரு முறையும் நேருவின் குடும்பம் என்று அவர்கள் சொல்லும்போதும் இடைமறித்து ‘இந்திராவின் குடும்பம்’ என்று திருத்தியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியை நாசிசத்திலிருந்து காப்பாற்றியவர் என்று சர்ச்சிலின் மீது அதீத மதிப்பு என்னுடைய சில ஐரோப்பிய நண்பர்களுக்கு உண்டு. ஆனால் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளான ஒரு நாட்டிலிருந்து வந்த நான் சர்ச்சிலை ஒரு மோசமான தலைவராக சித்தரித்தபோது அவர்களின் அடிப்படையிலேயே நான் கைவைத்துவிட்டதாக எண்ணினார்கள். “உலகம் ஐரோப்பாவைச் சுற்றி மட்டும் இல்லை. சர்ச்சிலின் பாசிச எதிர்ப்பு அவருடைய புவியரசியல் கணக்கு தப்பான பிறகே ஏற்பட்டது” என்று சொல்லிவிட்டு, “சர்ச்சிலுக்கும் முன்பாகவே பாசிசத்தின் அபாயத்தை உணர்ந்துகொண்டவர் நேரு,” என்று கிடைத்த கேப்பில் நேருவை உள்ளே இழுத்தேன். அமெரிக்கா, சோவியத், பனிப்போர், பெர்லின் சுவர், அணு ஆயுத போர் அபாயம், இன அழிப்பிலிருந்து தப்பிய யூதர்களின் வாக்குமூலம், மீள்கட்டமைப்பு, நாட்டோ செயல்பாடுகள், அகதிகள் பிரச்னை என்று கடந்த அரை நூற்றாண்டு காலமாக மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரம் பெர்லின். மேலும் கால் நூற்றாண்டுகளுக்கு ராணுவத் தளங்களுக்கு அருகே வாழ்ந்தவர்கள். எனவே காலனிய அடக்குமுறையை சந்தித்த நாடுகளின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் அவர்கள் அக்கறை செலுத்த முடியாத நிலையில் இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆப்பிரிக்காவில் அவர்களின் முன்னோர்கள் இழைத்த அநீதி குறித்த அறிவு பெரிதாக இல்லை என்றாலும், ஹோலோகாஸ்ட் குறித்த குற்றவுணர்ச்சி இன்னும் அவர்களிடம் இருந்தது. நேருவைப் பற்றி சொல்ல சொல்ல ஒருகட்டத்தில் யாருய்யா இந்த நேரு என்று ஆர்வமடைந்தார்கள். “நீங்க நேட்டோ vs வார்சா ஒப்பந்தம்னு பரபரப்பா இருந்தீங்க. மூனாவதா அணிசேரா நாடுகள்னு ஒரு க்ரூப் இருக்கு” என்று விளக்க நேர்ந்தது. ஒரு பாரில் ஒரு ரஷ்ய அரசியல் அறிவியல் நண்பன் காந்தியின் அகிம்சை அணுகுமுறையை விமர்சித்தபோது அவனுடன் ஒரு பஞ்சாபி நண்பன் சேர்ந்துகொண்டு பகத் சிங்கிற்கு இப்படித்தான் காந்தி துரோகம் இழைத்தார் என்று சொல்லத்துவங்கினான். “காந்தி பல தளங்களில் இயங்கினார், பல ஆண்டுகள் வாழ்ந்தார், மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியுமோ என்னவோ. எனவே காந்தி மீது விமர்சனங்கள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு அரை மணி நேரம் காந்தி குறித்து நாம் உரையாடினால், காந்தி குறித்த உங்களின் சில பார்வைகளை என்னால் மாற்ற முடியும், அதே வாய்ப்பு உங்களுக்கும் இருக்கிறது” என்றேன். அந்தப் பஞ்சாபி நண்பன் சென்ற பிறகு ரஷ்ய நண்பன் என்னிடம் “ஏன் மழுப்பினாய்?” என்று கேட்டான். “என்னால் உரையாட முடியும். ஆனால் பிரிவினையின் கோரத்தை அனுபவிக்காத பகுதியிலிருந்து வந்தவன் நான். பிரிவினையில் தன் உறவுகளை இழந்த வடு இன்னும் இருக்கும் ஆள் அவன். கால் நூற்றாண்டு காலமாக எல்லைப் பகுதியில் ராணுவ நடமாட்டத்தின் நடுவில் வளர்ந்தவன். அந்த வடுவைக் கீறும் தைரியம் எனக்கு இல்லை. அவனுக்கு இருக்கும் அனுபவ அறிவும் என்னிடம் இல்லை. பஞ்சாப் இன்றுவரை பிளவுபட்டுத்தான் இருக்கிறது. காந்தியை நான் அவனிடம் வலியத் திணித்தால் அந்த காந்தி அவன் மனதை மேலும் புண்படுத்துவார். ஆனால் ஏதோவொரு புள்ளியில் அவன் காந்தியோடு கோபத்துடன்கூட இணைவான்”, என்றேன். “ஓ இவ்வளவு இருக்கா?” என்றான். “இந்த நக்கினு போன நாட்டைத்தான் நேரு பதினெட்டு வருசம் காப்பாத்தி ஏதோ கரை சேர்த்தார்” என்று மீண்டும் நேரு பக்கம் தாவினேன். “யூரோசென்ட்ரிக்காக இருக்கிறோம் என்று எங்களை சொல்கிறாய். ஆனால் நீ காஷ்மீர் சென்ட்ரிக்காக யோசித்தால் நேருவை இப்படித் தாங்குவாயா?” என்று கேட்டான். ஒரு வினாடி துணுக்குற்று, கண்டிப்பாக மாட்டேன் என்று ஒப்புக்கொண்டேன். “பல நேரங்களில் இந்த அனுபவ அறிவின் போதாமைதான் நம் உலகத்தை சுருக்குகிறது. எங்கள் நாட்டில் இடஒதுக்கீட்டின் மீது நேருவுக்குத் தட்டையான புரிதல் இருந்தது. அந்தப் புரிதலின்மைக்குக் காரணம் அனுபவ அறிவின்மைதான்” என்றேன்.

ஒருகட்டத்தில் நண்பர்கள் “போதை தெளியவேண்டும், கொஞ்சம் நேரு பற்றி சொல்லேன்” என்று கலாய்க்கத் துவங்கினார்கள். கடந்த மூன்று மாதங்களாக நேருயும் காந்தியும் ஒரு தொடர்பற்ற எண்ணச்சிதறலாக அவ்வப்போது மனதில் வந்துபோகிறார்கள் (இந்தப் பதிவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது). பெரியாரும் அடிக்கடி வந்துபோகிறார் (அது இன்னொரு பதிவில். “தமிழ்நாட்டில் சிலருக்கு மாஸ்கோ என்று பெயர் இருக்கிறது தெரியுமா?” என்று சொன்னபோது ரஷ்யாகாரன் வாயைப் பிளந்தான்).

நேருவுக்கு நீங்காத தேவை இருக்கிறது; இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கும். அவரைக் கைவிடுவது வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி.

#NehruDeathAnniversary

டான்ஸ் பெர்பாமன்ஸ் எல்லாம் செய்து வைத்திருந்தேன். தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தாலும் (குறிப்பாக சூப்பர் ஓவர் கணக்காக சஸ்பென்ஸ் வைத்த டாக்டர் திருமாவளவன்), வடக்கில் அடித்த பெரும்பான்மை அந்த பெர்பாமன்சுக்கு ஆப்படித்துவிட்டது. அடுத்த தேர்தலில் அந்த டான்ஸ் ரீலீஸ் ஆகவில்லை என்றால் அதற்கு நேருதான் காரணம். சம்பந்தமே இல்லாமல் எது எதற்கோ பழி சுமக்கும் நேரு இதற்கும் சுமக்கட்டும்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி