Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திலீபன் அண்ணன்

          விகடன் மாணவப் பத்திரிகையாளராக சேர்ந்து ஆறு மாதங்கள் ஆன பிறகும் பெரிதாக சோபிக்காமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் கல்லூரியில் மதிப்பெண்கள் பங்குச் சந்தை நிலவரமாக சரிந்துக்கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் எதுவுமே செய்யவில்லையென்றாலும் பிரஸ்காரன்டா என்று கல்லூரிக்குள் எனக்கு ஒரு இமேஜ் உருவாகிக்கொண்டிருந்தது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் இப்படிக் கேட்டார்.

"விஷ்ணு?"
"சார்?"
"நீங்க ஜர்னலிஸ்டுன்னு காலேஜ்ல பேசிக்கிறாங்களே?"
"ஆமாம் சார். விகடன் ஸ்டூடன்ட் ஜர்னலிஸ்ட்"
"எதுல எழுதறீங்க? நான் தொடர்ந்து வாசிச்சிட்டுதான் வர்றேன்..."
"என் விகடன் ஆன்லைன்ல எழுதினேன் சார். என் போதாத‌ காலம், மூனு மாசத்துக்கு முன்னாடி அதை நிறுத்திட்டாங்க"

          அவர் முகம் சுருங்கிவிட்டது. அதற்குப் பிறகு என் மதிப்பெண்கள் பற்றி அவர் கேட்க ஆரம்பித்தவுடன் பேச்சு வார்த்தை தோல்வி என்று புரிந்துவிட்டது. ஒரு மாதம் கழித்து பையன் சரியில்லை என்று என் பெற்றோருக்கு அவரிடமிருந்து அழைப்பு சென்றது. என்னை நிரூபிக்க வேண்டிய சுமை வந்து சேர்ந்தது.

          இரண்டு மாதங்கள் கழித்து ஒரு வழியாக ஆனந்த விகடனில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. மிகப் பெரிய திருப்பம் அது. அலுவலகம் சென்று முதல் பிரதியை வாசனை பார்த்து நல்ல செய்தியுடன் வீட்டுக்குத் திரும்பினால்...

          அம்மா உர்ரென்று உட்கார்ந்திருந்தார்.

"எதுக்கு சார் உங்க பையனுக்குத் தேவையில்லாம ஹால் டிக்கெட் அடிச்சு பேப்பரை வேஸ்ட் பண்ணிட்டு? மரங்களைக் காப்போம்", என்று தரை நக்கலாக ஒரு பேராசிரியரிடமிருந்து என் அப்பாவுக்கு அழைப்பு சென்றிருந்தது. இனிமே ரிப்போர்ட்டரா இருந்து கிழிச்சது போதும் என்ற எண்ணத்தை வீட்டிற்குள் வெற்றிகரமாகக் கடத்தியிருந்தார் அப்பேராசிரியர். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் பேசி, அழுது, புலம்பி, என் வாழ்க்கை எஞ்சின்களுடன் இல்லை என்று மன்றாடி, எல்லாம் ஓய்ந்த பின் என்னுடைய உலகத்தின் மிக மகிழ்ச்சிகரமான‌ செய்தியான‌ என் ஆனந்த விகடன் கட்டுரையைப் பற்றி சுரத்தே இல்லாமல் சொன்னேன்.

          வீட்டில் புன்னகைத்துத் தோளில் தட்டிக்கொடுத்தார்கள், இன்னும் பண்ணுடா என்று.

          அடுத்த நாள் அப்பேராசிரியரை அழைத்து ஏன் சார் அப்படி வீட்டில் சொன்னீங்க, என்று கேட்டேன். "நீங்க காலேஜ் பஸ்ல வர்றதால லோடு அதிகமாகி பெட்ரோல் ரொம்ப செலவாகுது தம்பி. பஸ்ஸோட மைலேஜ் பத்தி உங்களுக்கே தெரியும்...", என்று பதில் வந்தது.

          ஆனந்த விகடன்! ரெண்டு பக்கம்! கொட்டை எழுத்து! கண்டுக்கத்தான் யாரும் இல்லை!

          சோர்ந்து போய் கேண்டீனில் தனியாக என் கட்டுரையைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது.

"ஹலோ விஷ்ணு! நான் திலீபன் பேசுறேன்"
"சொல்லுங்கண்ணே"
"உங்க கட்டுரை படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது. மீதி இருக்கற நாலு மாசம் நாம சேர்ந்து வர்க் பண்ணுவோமா? என்ன சொல்றீங்க?"

          ஆச்சரியமாக இருந்தது. திலீபன் அண்ணன் என் செட்தான். ஆனால் விஷ்ணு என் செட் என்று சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் அவருக்கு இல்லாத நிலையில் நான் அப்பொழுது இருந்தேன். ஜூனியர் விகடனில் மனிதர் கலக்கிக்கொண்டிருந்தார். அலுவலகத்தில் ஒரு நாள் சந்தித்தோம்.

"மீதி இருக்கிறது நாலு மாசம். பெருசா அடிக்கணும்", என்றார். மண்டையாட்டினேன்.
"வாரா வாரம் ஜூவி, டாக்டர். சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ ஏவி. என்ன சொல்றீங்க?"
"எதுக்கு நான்?", என்றேன்.
"நாம‌ நல்ல டீம் ஆவோம் விஷ்ணு", என்றார்.

          எனது மேய்ப்பனுடன் ஊரை சுற்றினேன். சில நாட்களிலேயே நல்ல நண்பன் ஆனேன். ஏற்கனவேயே சில அரசியல் கட்சிகளின் செயற்குழுக் கூட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள், கொலை, என்று சொற்ப ஜு.வி.அனுபவங்கள் இருந்தன. திலீபன் அண்ணனுடனும் புகைப்படக்காரர் நாகராஜ் அண்ணனுடனும் நான் கைகோர்த்ததும் விகடனில் எனது இரண்டாம் அத்தியாயம் துவங்கியது.

          அரசு கால்நடை மருத்துவர்களை மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்த ஆறு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து தேர்வு, அதுவும் ஓப்பன் தேர்வு, என்று டி.என்.பி.எஸ்.சி செக் வைக்க, 741 கால்நடை மருத்துவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை வந்தது. ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்தோம். பயந்து போய் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அரசு வேலை என்று இருபது வருட தனியார் பணியை விட்டிருந்தார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் வேலை கிடைத்து விட்டதே என்று மூப்பு அடிப்படையைத் தூக்கியிருந்தார்கள். "உங்களை மாதிரி இளவயசு பசங்க முன்னாடி அழக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகதான் கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன் தம்பி", என்றார் ஒருவர். இதைக் கட்டுரையாக்கலாம் என்று முடிவு செய்தோம்.

          படிக்கக் காகிதங்கள் குவியல் குவியலாக வந்து சேர்ந்தன. இரண்டு நாட்கள் தூங்கவில்லை. பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், நாளிதழ் செய்திகள், அரசாணைகள், மாநில மற்றும் துணைச்சேவையின் விதிமுறைகள் என்று ஒரு வரிவிடாமல் முழுவதுமாகப் படித்தோம். விரிவான கட்டுரை 21.04.13 அன்று ஜுனியர் விகடனில் வெளியானது. விருதுநகரிலிருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ஆர்டிகிள் வந்ததும் என்ன மாயம்னே தெரியல‌, முதல்வர் அவர்களின் நேரடிப் பரிசீலனையில் இப்பிரச்னை சென்றுள்ளதுன்னு தகவல் வந்திருக்கு. இனி ஆபத்து இல்லைன்னு நினைக்கிறேன்”, என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அதன் தொடர்ச்சியாக அதுவரை நடந்திரவே நடந்திராத தேர்வு ஒத்திவைப்பு அப்பொழுது நடந்தது. பிறகு தேர்வு மொத்தமாக ரத்தானது. சென்ற மாதம் பொங்கல் வாழ்த்தை எனக்கும் திலீபன் அண்ணனுக்கும் அனுப்பியிருந்தார் அவர்.

          ஒருநாள் முண்டகக்கன்னியம்மன் கோயில் பகுதி டாஸ்மாக் கடையால் அங்கு பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பிற மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த, அங்கு விரைந்தோம். காவல்துறையினர் வந்ததும் ஆண்கள் மெதுவாக வீட்டிற்குள் சென்று விட, பெண்கள் தைரியமாக எதிர்த்து நின்றார்கள். ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று காவல்துறையினர் எச்சரிக்க, “இட்டுனு போய்யா!”, என்று பதில் வந்தது. சுமார் ஏழு போலீஸ் வேன்கள் அணிவகுத்து நிற்க, ஒவ்வொருவராக வரிசையில் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் வேனில் ஏறியதை நாங்கள் வியப்போடு பார்த்தோம். அங்கும் அம்பத்தூர் டாஸ்மாக் அலுவலகத்திலும் சந்திக்க வேண்டிய மனிதர்களையும் சேகரிக்க வேண்டிய செய்திகளையும் சேகரித்து முடித்தோம். மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த‌ டாஸ்மாக் கடை மூடப்பட்டது என்ற செய்தி கிடைத்தது

          நடுநடுவே டாக்டர் விகடனில் கட்டுரைகள், ஹிப்ஹாப் தமிழாவின் 'இறைவா' இசை வெளியீட்டு விழா என்று சென்றுக்கொண்டிருந்தோம்.  பொதுக்கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு, உலக சினிமா பற்றிய கட்டுரைகள், தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப், என்று மிக சுறுசுறுப்பாக இயங்கினோம். பணி முடிய ஒரு மாத காலம் இருந்தபோது ஆனந்த விகடனில் இரண்டாவது பிரேக் கிடைத்தது. இருவரும் இணைந்து அதை செய்தோம்.

          இரண்டு வருடங்களுக்கு முன் வாசகர் சத்தியநாராயணனுக்கு மாணவப் பத்திரிகையாளர்கள் விகடன் தாத்தா சிலையைப் பரிசளித்தார்கள் என்று செய்தி வந்ததே? எங்கள் ஐடியாதான்! கிட்டத்தட்ட 20,000 ரூபாய் செலவானது. நாகராஜ் அண்ணன் அழகாக சிலையை வடித்தார். மொத்த செட்டும் ஆளுக்கு கைக்காசைப் போட, கலெக்டர் ஆசையில் இருந்த என்னை காசு கலெக்டர் ஆக்கி அழகு பார்த்தார் திலீபன் அண்ணன்.

          திலீபன் அண்ணனுக்கும் நாகராஜ் அண்ணனுக்கும் அவுட்ஸ்டான்டிங் அவார்ட் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. அசுர உழைப்பைக் கொட்டியிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒவ்வொரு மூன்று மாதமும் மிதிவண்டி இடுக்கில் பிழைத்து விகடனில் 'ஒரு வாய்ப்பு தந்து பார்ப்போம்' என்று அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு நிறைவு விழாவுக்கான அழைப்பே வராது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் விழாவில் எனக்கு டிஸ்டிங்ஷன் விருது கிடைத்தது ஆச்சரியத்தின் உச்சம்.

          அன்று இயலாமையின் விளிம்பில் இருந்த என்னை ஏன் அவர் அழைத்தார் என்பதன் மர்மம் இன்று வரை எனக்குத் விளங்கவே இல்லை. இத்தனைக்கும் அவருக்கு என் பங்களிப்பு அவசியமும் இல்லை. என் ஒரு வருட பத்திரிகைப் பணியில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மனிதர் இவர். ஒரு கோணத்தில் பார்க்க அண்ணன் இயக்குனர் சேரன் மாதிரியே இருப்பார். அவரைப் போலவே இவரும் சினிமாவின் மீது தீராத காதல் கொண்டிருப்பவர். இலங்கைத் தமிழ்த் திரைத்துறை மீது தனி மதிப்பு வைத்திருப்பவர். அவர் பரிந்துரைத்த 'வன்னி எலி' பார்த்துவிட்டுத் தூங்க முடியாமல் கிடந்திருக்கிறேன். விகடனில் பணியாற்றும் போதே பல்வேறு இயக்குனர்களிடம் துணை இயக்குனராக சேர முயற்சித்துக்கொண்டிருந்தார். நான் விகடனை விட்டு வெளியே வந்த பின்னர், இரண்டு வருடங்கள் டாக்டர் விகடனில் முழுநேரமாகப் பணியாற்றினார். இப்பொழுது அண்ணனுக்கு அடுத்த அத்தியாயம் துவங்கவிருக்கிற‌து.

          இந்தப் பதிவை நான் எழுதியதன் நோக்கமே இதுதான். இயக்குனர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார் அண்ணன். செய்தியைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கணம் சென்னை மாநகரத்தை இருவரும் சேர்ந்து கால்நடையாய் அளவிட்ட‌ நினைவுகள் வ‌ந்து போயின. இனிமேல் அண்ணனைப் பார்க்க அப்பாயின்மெண்டுதான்! வாழ்த்துகள்ண்ணே!
"அந்த ஆடு-அருவா, இந்த மனுசன்-குடை. ரெண்டுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே இல்ல?"

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி