Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நீ இல்லாத இடமே இல்லை - எம்.எஸ்.வி.

          சமகாலத் தமிழ் இசையில் எனக்குப் பிடித்தது வித்யாசாகரின் பாடல்கள். ஹாலிவுட்டில் ஹான்ஸ் ஜிம்மர் பிடிக்கும். நான் பொதுவாக புதிய இசை ஏதேனும் வந்தால் அவற்றைக் கேட்டு ‘அப்டேட்’ செய்துக்கொள்வதில்லை. இசையைப் பொறுத்தவரை நான் காலத்தில் பின்னோக்கி செல்பவன். என்னிடம் இருக்கும் டிராக்குகள் முக்கால்வாசி குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தையவை, இளையராஜாவைத் தவிர்த்து. என் தமிழ் சினிமா இசைக் கோப்புறையில் இருப்பது வேதா, விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஆர்.கோவர்தனம், கே.வி.மகாதேவன், வி.குமார், ஆகியோர். நான் கௌபாய்ப் படங்களின் விசிறியாதலால் என்னியோ மாரிகோனி, லூயி பகலோவ் ஆகியோர் என் இனிமைப் பொழுதுகளை தினமும் நிறைப்பார்கள். ஆங்கிலப் பாடல்கள் என்றால் ஃப்ராங்க் சினாட்ரா, அவரது மகள் நான்சி சினாட்ரா, ஷிர்லி பாசி மற்றும் டீன் மார்ட்டின். எப்பொழுதாவது மெய்கோ காஜியின் பாடல்களைக் கேட்டு ஜப்பானிய மொழியில் சீன் போடுவதுண்டு. வெறும் வாத்திய இசையில் நான் என்னைப் பறிகொடுப்பது சீனாவின் கூஜங், ஆப்பிரிக்க-கியூபன் பாங்கோ(’பார்த்த ஞாபகம் இல்லையோ’), மற்றும் ஜெர்மன் ஹார்மோனிக்கா(மவுத் ஆர்கன்) ஆகிய வாத்தியங்களிடம். இது எதுவும் இல்லையா? மனிதனின் சீட்டியொலி ஒன்று போதும் எனக்கு இவ்வுலகை மறக்க.

          ஆனால் ஒட்டுமொத்தமாக என்னியோ மாரிகோனியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான்(அவரது பொற்காலத்திற்குப் பிறகு மூன்று தலைமுறைகள் கடந்துவிட்டாலும்). மனிதர் சகட்டுமேனிக்கு இசையை வாரி வழங்கியிருக்கிறார். ராமமூர்த்தியுடன் இணைந்து இசையை ஈன்றெடுத்ததாயிருக்கட்டும், வெளிநாட்டிலிருந்து இசையை இறக்குமதி செய்ததாகயிருக்கட்டும், தன்னளவில் அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஏன், பல நேரங்களில் அசல் தந்த உணர்வை விட இவர் பாடல்களில் அதிக ஒத்துணர்வை நான் அடைந்திருக்கிறேன். உதாரணம் ’காதலிக்க நேரமில்லை’யில் வரும் ’அனுபவம் புதுமை’. என்னைப் பொறுத்த வரை பின்னணி இசையில் மனிதர் உச்சபட்சமாக மிரட்டியெடுத்தது ’ஞான ஒளி’ மற்றும் ’தில்லு முல்லு’ திரைப்படங்களில்.

          எம்.எஸ்.வி.யின் மறைவு நிச்சயமாக ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களில் எனக்குப் பிடித்தவை இவை என்று இங்கே பகிர்ந்துக்கொள்வது ஒரு 21-ம் நூற்றாண்டு சிறுவனால் முடிந்த ஒரு குறைந்தபட்ச நினைவுகூறலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே அவற்றை வரிசைப்படுத்திப் பகிர்ந்துக்கொள்கிறேன். அவை ஒவ்வொன்றும் என்னுள் ஒவ்வொரு நினைவைக் கிளறுபவை.

12. Adios, Goodbye (அன்பே வா):
          இது ஒரு ஆங்கிலப் பாடல். ’அன்பே வா’-வின் ஒரு காட்சியில் அசோகன், சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் ஆகியோர் ஒரு உணவகத்தில் அமர்ந்திருப்பர். அப்பொழுது பின்னணியில் ஒலிக்கும் பாடலே இது. கதாநாயகன் கதாநாயகி ஆகியோரின் மனதில் உள்ளதைப் பிரதிபலிப்பதுபோல் எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் என்னளவில் சிச்சுவேஷன் பாடலுக்கான ஒரு அருமையான எடுத்துக்காட்டு. அவர்களின் காதல் வெற்றி அடையுமா அடையாதா என்ற உச்சபட்ச அழுத்தத்தின் மொத்த பாரத்தையும் இந்தப் பாடல் தன் மேல் போட்டுக்கொண்டு திரைக்கதையை மிக இலாவகமாக உறைய வைக்கும். லூயி ஆம்ஸ்டிராங் பாடிய ‘We Have All The Time in the World' என்ற பாடல் இப்பாடலை சிறிது ஒத்திருக்கும். ஆனால் ஆச்சரியம். லூயி ஆம்ஸ்டிராங்கின் பாடல் வெளிவந்தது 1969-ல். ’அன்பே வா’ வெளிவந்த ஆண்டு 1966. இரண்டுமே 1940's ஜாஸ்(Jazz) அடிப்படையிலான பாடல்கள்.
டிஸ்கி: ’அன்பே வா’ தான் நான் அதிகமுறை பார்த்துள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம். சிறுவயதில் ”கீதா!”, என்று அவரைப் போல் மிமிக்ரி செய்துகொண்டிருப்பேன்.


11. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் (சுமைதாங்கி):
          நான் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாதவன். ஆனால் ஏனோ இப்பாடலில் “வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்” என்கிற வரிகளைக் கேட்கும்போதெல்லாம் காரணமே இல்லாமல் கண்ணீர் பொத்துக்கொண்டு வரும். அதுதான் கண்ணதாசன், ஸ்ரீநிவாஸ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நிகழ்த்திய ரசவாதம்.
 

10. தேடினேன் வந்தது (ஊட்டி வரை உறவு):
          இப்பாடலில் அரை வெளிச்சத்தில் சிவாஜி ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து அனாயசமாகப் புகையை வெளிவிடுவார் பாருங்கள். அந்த கணத்தில் கச்சிதமாக இதுதான் சிவாஜியின் கேரக்டர் என்று புரிந்துபோகும். கே.ஆர்.விஜயா கண்டிப்பாக புன்னகை அரசிதான். சந்தேகமேயில்லை.


9. வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு):
          நான் முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்டது எட்டு வயதில் திருமங்கலத்தில் ஒரு ஆட்டோவில் பயணம் போன போது. இது ஒன்றை வைத்துக்கொண்டு என்னால் அந்த ஆட்டோ பயணத்தை நினைவு கூற முடிகிறது. அதன் பிறகு வகுப்புத் தோழன் குருசரவணனுடன் சேர்ந்து கணக்கு வகுப்பில் LCM, HCF போடாமல் ‘குரங்காய் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்’ என்று சிரித்தபடி பாடியதை நினைவுகூற முடிகிறது. அந்த வகுப்பறை ஒட்டு மொத்தமாகத் தந்த கூட்டு அனுபவங்களையும் நினைவு கூற முடிகிறது. அங்கே தடுக்கி விழுந்திருக்கிறேன். தேவதைக் கதைகளை வாசித்திருக்கிறேன். குருசரவணனின் பெயரும் குரலும் உயரமும் எனக்கு நினைவில் இருப்பதே இந்தப் பாடலினால்தான்.


8. எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது (சிவகாமியின் செல்வன்):
          ’ஆராதனா’வாவது மண்ணாவது! சிங்கிள் ஷாட்டில் சிவாஜி தூள் கிளப்பிய பாடல் இது. ஆனால் அவர் ஏன் அந்தப் பெண்ணின் வாயில் அடிக்கடி ஊதிக்கொண்டே இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
டிஸ்கி: இது எஸ்.பி.பி.யின் ஹஸ்கி.


7. துள்ளுவதோ இளமை (குடியிருந்த கோயில்):
          ஸ்பானிஷ் புல்ஃபைட்டர்களை நினைவு படுத்தும் பாடல் இது. ஹீரோயிசத்தின் உச்சம்! இதன் ரீமிக்ஸ் பாடல் ஒன்றையும் கேட்டிருக்கிறேன். நடிகர் எம்.ஜி.ஆர். என்றால் எனக்கு நினைவிற்கு வருவது இந்தப் பாடல்தான். எனவே நான் அனேகமாகக் கேட்ட முதல் எம்.ஜி.ஆர். பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.


6. நெஞ்சத்தை அள்ளி (காதலிக்க நேரமில்லை):
          எனக்கு நீண்ட காலமாக ஒரு பேராசை. ஒரு காலயந்திரத்தின் மூலம் கடந்த காலம் சென்று இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதை நேரில் காண வேண்டும் என்பதே அது. எத்தனை வாத்தியங்களை இந்தப் பாடலுக்காக உபயோகப்படுத்தியிருப்பார்கள் என்று மலைப்பாக இருக்கிறது(’புதிய பறவை’யில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலிலும் அப்படியே). தமிழ் சினிமாவின் பாடல்களில் சீட்டியொலியை இத்தனை அருமையாக உபயோகப்படுத்தியிருப்பது எனக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில்தான். அதில் ஒன்று இந்தப் பாடல். இன்னொன்று பின்னால் வருவது.


5. கேள்வி பிறந்தது அன்று (பச்சை விளக்கு):
          இந்தப் பாடலிலும் சீட்டியொலி அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். சிறு வயதில் ஏதோ ஒரு விளம்பரப் படத்தில் இந்தப் பாடலை ஒத்த ஒரு இசையைக் கேட்டிருக்கிறேன். அதன்மூலம்தான் இந்தப் பாடல் எனக்கு அறிமுகம் ஆனது. இரவில் கார் பயணம் செல்லும்போது இந்தப் பாடலைக் கேளுங்கள். ஓட்டுனர் கண் அயரும் அபாயத்தை தவிர இதில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் நீங்கள் அம்பானியாகவே இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உங்களின் இடம் என்ன என்று தத்துவார்த்தமாக யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அந்த ஐந்து நிமிடங்களில் நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.


4. அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை):
          ரவிச்சந்திரனின் திரைப்படங்கள் என்றால் எனக்கு நினைவுக்கு வருபவை அதே கண்கள்’ மற்றும் ’காதலிக்க நேரமில்லை’. இரண்டு திரைப்படங்களின் இசைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, இரண்டிலும் உள்ள ஃபாரின் சரக்கு. எம்.எஸ்.வி. பரவாயில்லை. ‘காதலிக்க நேரமில்லை’யில் ஒரு அளவோடு நிறுத்தியிருப்பார். ஆனால் ’அதே கண்க’ளில் வேதா வரைமுறை இல்லாமல் விளையாடியிருப்பார். டினோ ரோஸி என்னும் பிரெஞ்சு பாடகர் 1945-ல் பாடிய பாடல் ’பெசாமெ மூச்சோ’ (ஸ்பானிஷ் வார்த்தை - முத்தமிட்டுக்கொண்டே இரு, என்று பொருள்). அதன் இந்திய இறக்குமதியே ’அனுபவம் புதுமை’. ஸ்ரீதன் இதனை காட்சிப்படுத்திய விதம் இன்றும் அலுக்கவே அலுக்காத ஒரு காட்சியனுபவம். ’வண்ணப்பட நாயகன்’ ரவிச்சந்திரனை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது இந்தப் பாடலுக்குப் பிறகுதான். பின்னே, தமிழில் வெளிவந்த முதல் ஈஸ்ட்மென் கலர் திரைப்படமாயிற்றே!


3. நினைத்ததை நடத்தியே (நம் நாடு):

          அட்டகாசமான வெஸ்டர்ன் இசை இது. ’நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்’, என்று பாடியபடி புரட்சித் தலைவர் ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள்! அதற்காகவே இப்பாடலைப் பார்க்கலாம் (அட, அவ்வளவு ஏன், கீழே உள்ள யூ-டியூப் காணொளியின் படவுருவைப்[thumbnail] பாருங்கள்). மேலும் ஜெயலலிதாவின் நடனங்களில் எனக்குப் பிடித்தது இப்பாடலில் அவர் ஆடிய நடனம்தான்.


2. அதோ அந்த பறவை போல (ஆயிரத்தில் ஒருவன்):
          இப்பாடலைத்தான் என் அலைபேசியில் அழைப்பு மணியாக வைத்திருக்கிறேன். இதில் கோரஸ் பகுதியைக் கேட்கும்போதெல்லாம் இரண்டு இறக்கைகளைத் தோளில் மாட்டிக்கொண்டு வெளியே குதித்துவிடலாமா என்றெல்லாம் தோன்றும். பறவைகளாக வாழ்ந்து பார்த்தவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் உணர்ச்சிகரமாகவும் விடுதலை உணர்வோடும் பாட முடியுமோ என்று எண்ணத்தோன்றும் வகையில் ஒரு அதி அற்புதமான உணர்வெழுச்சியை சாத்தியமாக்கும் பாடல் இது. ஜெயலலிதாவிடம் நம்பியார் ’கையைப் பிடித்து இழுக்கும் படல’த்தை அரங்கேற்ற, அப்பொழுது பாடல் துவங்கும் வேளையில் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். அருகே விழப்போக, கையில் ’ஹார்ப்’புடன் கெத்தாக எண்ட்ரி கொடுப்பார் எம்.ஜி.ஆர். இப்பாடலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இணைத்திருக்கும் ஒவ்வொரு ஃபிரேமையும் ஒரு தனி போஸ்டராக்கலாம். அப்படி ஒரு ஒளிப்பதிவு.
டிஸ்கி: விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணியின் கடைசி திரைப்படம் இது.


1. நீ இல்லாத இடமே இல்லை (முகம்மது பின் துக்ளக்):
          இந்தப் பாடலை ஏன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சத்தியமாகத் தெரியவில்லை. எம்.எஸ்.வி.யின் குரலா, இந்தத் திரைப்படத்துடன் எனக்கு இருக்கும் நெருக்கமா, இதன் வரிகளா, எதுவென்று தெரியவில்லை. சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடித்த தமிழ் பாடல் எதுவென்று கேட்டால் சிறிதும் யோசிக்காமல் இந்தப் பாடலைத்தான் கைகாட்டி வருகிறேன். என் பிறந்த நாளின்போதும் நண்பர்கள் என்னைப் பாடச் சொல்லி வற்புறுத்தியபோது இந்தப் பாடலைத்தான் நான்கு வரிகள் பாடினேன். இப்பாடலின் முதல் வரி எம்.எஸ்.வி.க்கும் பொருந்துகிறதுதானே?


-----------------------------------------------------------------------------------------

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த எந்த ஒரு ஆவணப்படத்தையோ கட்டுரையையோ படிப்பதற்கு முன்பாகவே எம்.எஸ்.வி.யின் குரலில் அந்த மனிதர்களின் வலியை உணர்ந்துக்கொண்டு அவர்களுக்காகக் கண்ணீர் கசிந்திருக்கிறேன். எம்.எஸ்.வி. என்னுள் ஏற்படுத்திய உச்சபட்சத் தாக்கம் அது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி மெல்லிசை மன்னரே. நீங்கள் என் இதயத்திலும் மடிக்கணினியிலும் அலைபேசியிலும் இருக்கிறீர்கள்.

பின்குறிப்பு: சத்தியமாக கே.டி.வி மட்டும் இல்லையென்றால் என் தலைமுறையின் பெரும்பாலானோர் அறுபதுகளின் தமிழ் சினிமாவை மொத்தமாகத் தவறவிட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். என் தம்பியெல்லாம் ’கோலம்பஸ் கோலம்பஸ்’ பாடலையே விட்டேஜ் லிஸ்ட்டில் சேர்க்கிறான்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி