வணக்கம் வாழவைக்கும் சென்னை!
சென்னை என்னை மாற்றிய அளவிற்கு இதுவரை வேறு எதுவும் என்னை மாற்றியதில்லை. புதிய பள்ளியில் பி.டி.மாஸ்டர் புதிய மாணவர்களைத் தனியாக நிற்க வைத்தார். ஒவ்வொருவரிடமும் எந்த ஊரு, என்ன ஆடுவ என்று விசாரித்துக் கொண்டே வந்தார். நானோ அப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதன்முதலாக ஒரு கூடைப்பந்து வலையைப் பார்க்கிறேன். அப்படியே வாய்பிளந்து நின்றுகொண்டிருந்தேன். “நீ எந்த ஊரு?” “உன்னைத்தான்டா, பிஞ்சு போன நெட்டையே பாத்துட்டு இருக்க?”, அப்பொழுதுதான் கவனித்தேன். “எந்த ஊரு?” “திருமங்கலம், மதுர கிட்ட” ”ஸ்கூல்ல என்ன ஆடுவ?” “ஹும்ம்ம், கிரிக்கெட்! பெறவு கோலி, கிட்டிபுல், பம்பரம்…”, எதற்கு எல்லோரும் சிரித்தார்கள் என்று அப்பொழுது புரியவில்லை. “என்னடா?” “நெஜமா சார்! நல்லா வ்ளாடுவேன். கிட்டியில எக்ஸ்டிரா கிச்சாங் நான் கேட்டதே இல்ல” “அதெல்லாம் இருக்கட்டும், வேற என்ன ஆடுவ?” “பம்பரத்துல கோஸ் எடுத்துக் காட்டறேன் சார், கையில ரெண்டு நிமிஷம் சுத்தும்…”, சிரிப்பு அதிகமானது. ”என்னடா நக்கலா? புரியாதவன் மாரியே பேசிட்டு இருக்க?” ...