என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

ஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெரியோர்களே... தாய்மார்களே!', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து... அரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது? ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்? அதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது. அடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அற...