Posts

Showing posts from 2016
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஷெர்லாக்கின் கடிதம்

Image
          மனித உணர்வுகள் பற்றிய நமது தேடலில் நாம் அதிகம் மை சிந்திவிட்டோம். ஆனால் நம் கடிதப் போக்குவரத்து ஆரம்பித்தபோது நமக்கு அதைப்பற்றி என்ன புரிதல் இருந்ததோ, அதேதான் இப்பொழுதும் இருக்கிறது; நாம் இம்மியளவும் முன்நகரவில்லை. பல சமயங்களில் நான் ஒரு பெரும் பிளவின் விளிம்பில் நின்றபடி உரக்கக் கத்துகிறேன். அப்பொழுது மறுபக்கத்திலிருந்து வரும் பதில் உண்மையிலேயே உன்னுடையதுதானா, அல்லது அவை வெறும் என் வார்த்தைகளின் எதிரொலியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது; அந்த சந்தேகத்தில் வியப்புதான் மேலிடுகிறது. இக்கரையிலிருந்து நான் நோக்கும்போது, இந்த உலகின் நிம்மதியின்மைக்குக் காரணம் மனித உறவிற்கான தேடல்தானோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், இம்முறை எப்படியாவது மனித உறவுகளின் நடைமுறை வழக்கங்களைப் புரிந்துக்கொண்டுவிட வேண்டும், என்று முனையும் என் தோழியைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அவள் தோல்வியுற்று, அத்தேடலால் விளையும் காயங்களுக்கு மருந்தாக ஓயாத பொறுமையுடன் உடலுறவுச் சடங்கைப் நடத்திவிட்டு வருகிறாள். ஒவ்வொரு முறையும் விடை கிடைக்காமல் அவள் திரும்பும்போது, அவள் மேலும் மேலும் ஏமாற்றத்துடன் திரும்ப

நன்றி சோ

Image
            இன்று காலை எழுந்ததும் சோ காலமானார் என்ற செய்தி அலைபேசியில் வந்ததும் ஒரு கணம் ‘முனுக்’கென்று இதயத்தில் வலித்தது. இதற்கு முன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குஷ்பு தவறுதலாக சோ இறந்துவிட்டார் என்று சொன்னபோது ஏற்பட்ட வலி. அதற்குப் பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுதுதான் சோவின் நினைவே வந்தது. சோவின் சிந்தனையை விட்டு வெகு தூரம் தள்ளி வந்து, மற்ற பிற கருத்தாக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சோ அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதெல்லாம் அவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சோவைப் பற்றிய நினைப்பு முடிந்து போனது. ஆனால் தற்போது நினைத்துப் பார்த்தால் இன்று ஒரு மாணவனாக நான் தொடர்ந்து அரசியலை வாசித்தபடி இருப்பதற்குக் காரணம் சோ தான்.           சென்ற வாரம் என் உறவினர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது பன்னிரண்டு வயது நிரம்பிய என் மாமா பையன் என்னிடம், “யப்பா எப்படித்தான் பாலிடிக்ஸ் பேசுறீங்களோ, போரடிக்குது”, என்று கிசுகிசுத்தான். அவனிடம் நான், “அரசியலை மொத்தமா வெறுக்காம அதை சுவாரசியமா தெரிஞ்சுக்க ஆரம்பிக்கிறதுதான் சரி. உ

காமஞ்சேர்த்தாளே!

Image
  புலவர்: சில்கிளிச்சிறகார் திணை: கைக்கிளை துறை: உட்பொருள் அறியாமையால் காமஞ்சேர்த்தத் தலைவிக்கு எடுத்துரைக்கத் தோழியில்லாமையை எண்ணித் தலைவன் வருந்துதல் சில்வியப் பாலை சொல்லியப் பின்னும் சில்லிடைச் சிலையோள் சில்கிளிச் சிறகோள் பல்லிடை யாடச் சிரித்தனள் - அஃதில் கல்பக் காமம் கடுகிலு மல்ல களிநடம் புரியா கண்ணே மணியென மதியகல் ஏந்தும் மடந்தைத் தோழி மறைமதி யானாளே - அன் நன்நலம் நோக்கும் நற்றாய் மகளே மூலக் கவிதை: சூசகம் - நிலா பாரதி

சம்பாரணும் காந்தியும்

Image
          26/10/16 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் ஜாக் புஷ்பதாஸ் எழுதிய “Champaran and Gandhi: Planters, Peasants and Gandhian Politics" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திரு. அண்ணாமலை அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்ட ஒரு விஷயத்தை என் நினைவில் உள்ளவரை, என் நடையில் தருகிறேன்.           “காந்தி வழிநடத்திய இந்திய தேசிய காங்கிரஸினால் எல்லாம் சுதந்திரம் வந்துவிடவில்லை. இரண்டாம் உலகப்போரினால் பிரிட்டனுக்கு பொருட்சுமை ஏறியது, அது தாங்காமல்  ‘போராடுகிறார்கள், கொடுக்கிறோம்’ என்கிற சாக்கை வைத்து நாசூக்காக வெளியேறிவிட்டார்கள், அவ்வளவுதான்”, என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு வரலாறைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் இயக்கம் சந்தித்த ரணங்களையும் செய்த சாதனைகளைகளையும் இப்படி ஒரே வாக்கியத்தில் எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள்.           பல கல்லூரிகளுக்கும், குறிப்பாக வட மாநிலங்களில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றச் செல்லும்போது அங்குள்ள மாணவ மாணவிகள் அவரிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி, “சுதந்திரப் போராட்டத்தில் கா

செம்பாதை

Image
Picture taken from 'Red Corridor to be Redrawn' - The Hindu, dated 25/07/16 Extremism = தீவிரவாதம் Terrorism = பயங்கரவாதம்           நக்சலிசமும் மாவோயிசமும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவை இரண்டும் அழிக்கப்படவேண்டும் என்ற கருத்துள்ளவன் நான். ஆனால் நக்சலைட்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் நான் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்த மாட்டேன். “வன்முறையைக் கையில் எடுத்து மக்களை அச்சுறுத்துபவன் பயங்கரவாதி, பிறகு என்ன?”, என்று அகராதியைக் காட்டும் அளவிற்கு இது எளிய சிக்கல் இல்லை. முதலில் அவர்கள் இந்தியர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தீர்வுக்காக வன்முறையைக் கையில் எடுப்பவர்கள், அப்படி எடுத்தவர்களால் மூளைச் சலவை செய்யப்படுபவர்கள். அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருக்கக்கூடாது என்று நாம் பாடம் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இதில் அரசாங்கத்தின் மீதும் ஒட்டுமொத்தப் பழியை சுமத்த முடியாது. நாம் நக்சல் அமைப்புகளின் வளர்ச்சியையும் பழங்குடியினரின் சிக்கல்களையும் இணைத்தே பார்க்கவேண்டும். இன்று நக்சல்/மாவோ அமைப்புகள் மத்திய, கிழக்கு மற்

சென்னை 377

Image
Wall painting at Chennai Central by NIFT           ‘கல்லூரி சாலை’ பாடலில் வரும் அகலமான செட் சாலையைக் காட்டி “மெட்ராஸ் காட்றாங்க பாரு!”, என்று என் பாட்டி எனக்கு சோறூட்டியதுதான் மெட்ராஸ் பற்றிய என் முதல் நினைவு. சூளைமேட்டில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்லும் வழியில் கூவத்தைக் கடந்தபோது முதன் முதலாக என் மூக்கு பொத்தப்பட்டது இரண்டாவது நினைவு. ஆனால் சென்னைக்கு வந்தபிறகு இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட நினைவுகளை இந்நகரம் எனக்குத் தந்துவிட்டது, தந்துகொண்டிருக்கிறது.           வரலாற்றில் ஆர்வம் வந்த புதிதில் சென்னையின் கடந்த காலத்தை கற்பனை செய்து பார்த்ததுண்டு. தேவன் பார்த்த ‘டிராம் ஓடிய மெட்ராஸ் ‘ரஸ்தா’க்கள்’, ‘ரத்தம் ஒரே நிற’த்தில் வரும் கறுப்பர் நகரம், போன்றவற்றை சிறுவயதிலேயே வாசித்துவிட்டதால், சென்னை சாதாரண நகரில்லை, நெடும் வரலாற்றைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் இரசவாத நகரென முதலிலேயே தெரிந்துவிட்டது. அதன் சரித்திரப் பக்கங்களை அவ்வப்போது நமக்குத் திறந்துகாட்டும் அழகே தனி. அப்படித்தான் எனக்கு சென்னை பிரான்ஸ்சிஸ் வொயிட் எல்லீஸை அறிமுகம் செய்து வைத்தது.           சென்னையி

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி

Image
          11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை. * காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி? அவர் தொழிலே பேசுவதுதானே? அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை

கிராம சபைகள் - ஒரு பார்வை

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் 80 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் இருந்தனர். தற்பொழுது 70 சதவீதம் இருக்கின்றனர். திட்டக்குழுவின் படி 47.4 சதவீத பழங்குடியினரும் 42.3 சதவீத ஒடுக்கப்பட்டோரும் வறுமையில் உள்ளனர். மக்கள்தொகை ஏற ஏற கிராம இந்தியாவின் பிரதான வாழ்வாதாரமான விவசாயத்தின் மீதான அழுத்தமும் அதிகரித்தபடி உள்ளது. 2001 கணக்கெடுப்புப்படி கிராமபுறப் பெண்களில் 46.6 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், சில மாநிலங்களில் மூன்றரை வருடங்களுக்கும் குறைவாகவே பள்ளிக்கூடம் செல்பவர்கள். மகப்பேறு இறப்பு விகிதம் பற்றி சொல்லவே தேவையில்லை. 2004-06 வருடங்களில் உத்தரப் பிரதேசத்தில் 1000 பிறப்பிற்கு 440 தாய்மார்கள் இறந்த சோகம் உண்டு. கிராமப்புறங்களில் மக்கள் தினம்தோறும் சந்திக்கும் சிக்கல்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வு. நில உரிமைக்காரர்களுக்கும் கூலி விவசாயிகளுக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளி பல மாநிலங்களில் அகலம். விளைவு, அடிக்கடி இவர்களது வேற்றுமைகள் மோதல்களில் முடிவதுண்டு. இரண்டு, சமூக வாழ்வு இன்றும் சாதியமைப்பினால் சில குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் சமூக பொருளாதார ந

இக்கவிதை முடிவடைய விரும்புகிறேன்.

Image
“அரைசதம் அடித்தாயிற்று. இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதே ஒரு சாதனைதான்.”, என்று முகநூலில் பதிவிட்டதுபோல் நேற்றொரு கனவு கண்டேன். ஐம்பது வயதில் நான் என்னவாகியிருப்பேன்? தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரியும். குறைந்தபட்சம் இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகும் இக்கவிதை முடிவடைய.

“ஆண்”

Image
  பெண்களுக்கெதிரான வன்கொடுமை பற்றி ஓவியம் ஒன்று வரையத் துவங்கினேன். பத்து நிமிடங்கள் கழித்து கலைந்த கூந்தலுடன் நழுவிய சீலையைக்கூட பொருட்படுத்தாமல் முகத்தைக் கைகளால் தற்காத்தபடி அவள் அழுதுகொண்டிருந்தாள். திடீரென்று அவளுடைய கண்கள் என்னைப் பார்த்துக் கெஞ்சின, தன்னை அடிக்க வேண்டாம் என்று. கருணையுடன் அவளை நோக்கினேன். அப்பொழுது அவள் கண்கள், “இப்படி அடிக்கிறாயே, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?”, என்று கத்தியது. திடீரென்று வந்ததே பாருங்கள் கோபம். “என்ன திமிர் இவளுக்கு!”, என்று ஆவேசத்துடன் அவளுடைய கணவனை வரைந்து அவள் கைகளை விலக்கி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தேன். - வ.விஷ்ணு

மறுபிறப்பெடுத்த வலைப்பதிவாளன்

Image
அந்த வலைப்பதிவாளனுக்கு ஒரு பழக்கம். வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிடும் வேளையில் தான் மதிக்கும் வயதான ஆளுமைகளுக்கு அஞ்சலிப் பதிவை எழுத ஆரம்பிப்பான் அவன். ஆசையொன்றும் இல்லை அவனுக்கு. ஆனாலும் அந்த வலைப்பதிவாளனுக்கு இப்படி ஒரு பழக்கம். “அவர் சொன்னதுபோல், அரசிலைகளின் ஆதிக் குலவைக்குக் காதுயர்த்தித் திரும்பிப் பார்க்கும் காமதேனு நான்”, இது ஒரு கவிஞருக்கான பதிவில். “அதிகாலையில் சோம்பல் முறித்தபடி கடிகார ஒலியை அணைக்கும் முன் தலையங்கத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் என் தலைவனின் நினைவு எனக்கு வரும்”, இப்படி சேமித்து வைத்திருந்தான். “இதோ எனக்குப் பிடித்த இவரின் பத்து பாடல்கள்”, பட்டியலிட்ட பிறகு ஒருபடி மேலே போய் பதிவிற்குத் தலைப்பும் வைத்தான். இப்படித் தன் கணினியில் சேமித்து சேமித்து சமயம் வந்தபின் தன் வலைப்பதிவில் பதிவிட வைத்திருந்த அவன், ஒரு நாள் பாவம் இறந்தே போனான். அவனின் சில பதிவுகள் இன்னமும் பதிவிடப்படாத நிலையில், அவன் கணினியை நான் எடுத்துக்கொண்டு வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிட்ட வேளையில் அவனுக்காக சேமித்து வைத்திருந்த “மறுபிறப்பெடுத்த வலைப்பதிவாளன்” என

பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.

Image
பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.  மூன்றரை நிமிடங்கள் மென்று சுவரோரம் துப்பிக் கடக்கப்  பெட்டிக்கடையின் முன்னே நின்று சில்லறையைத் தேடுகையில்  அகப்படும் அந்தத் துண்டுச் சீட்டைக்  காணாமல் கசக்கி எறியும்போது  புகை இழுக்கப்பட்ட சிறுபீடித் துண்டின் முனையில் தினம்தினம் கருகுகின்றன‌ தாய்ப்பால் அழுகைகளும் சக‌உடல்வாசனைகளும் நிறைந்த நம் பயணங்கள். ஒரு குப்பைத் தொட்டி போதும். அடுத்தமுறை ஒரு குப்பைத்தொட்டியின் முன் நின்று உங்களது மகத்தான பயணத்தின் நினைவை சுமந்தபடி உங்களது மகத்தான பயணத்தை சாத்தியப்படுத்திய அப்பயணச்சீட்டை  குப்பைமேட்டுக் காற்றில் இறகென மிதக்கவிடுங்கள். - வ.விஷ்ணு