ஞான விஷ்ணு
முன்குறிப்பு: இந்த வலைப்பூவில் என்னுடைய நூறாவது பதிவு இது. ஜென்னில் ஞானம் அடைதல் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஞானமடைதல்கள் இரண்டு. ஒன்று கீழே இருப்பது. "குருவே! மலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். எங்கிருந்து துவங்குவது?" "உச்சியிலிருந்து." இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்த சியோனொவின் கதை. இந்த வலைப்பூவின் முகப்புப் படத்தில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளை வைத்திருக்கிறேன். எவ்வளவு முக்கியும் அவருக்கு கிடைக்காத ஞானம் ஓர் பவுர்ணமி இரவன்று தான் தூக்கி வந்த குடம் கீழே விழுந்ததும் படக்கென்று சுவிட்சு போட்டாற்போல் கிடைக்கிறது. குடத்தில் தண்ணீரைக் காணோம், தண்ணீரில் நிலாவைக் காணோம். இதுதான் வாழ்க்கை. இதுதான் இப்பேரண்டத்தின் உண்மை என்று சியோனொ கண்டுகொள்கிறார். இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் சென்ற வாரம் அந்த ஞானம் கிடைத்தது. இடம்: திருச்சியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பட்டிமன்றம். நேரம்: சரியாக காலை பதினொன்று மணி நாற்பத்தி மூன்று நிமிடங்கள...