விஜயமது
கல்லூரி சேர்ந்த புதிதிலேயே விஜயமது `நெருங்கிய நண்பன் ஆகிப்போனான். நான் சேர்ந்த முதல் கேங்கில் அவனும் ஒருவன். கிட்டத்தட்ட ஆரம்பகால சிறு சிறு ரேகிங் தவிர்த்து மற்ற அனைத்திலும் நாங்கள் சேர்ந்துதான் இருந்தோம். திருநெல்வேலித் தமிழில் பல கதைகள் சொல்லுவான். மனித உறவுகளை நேசிப்பவன். குடும்ப சூழலியல் சார்ந்த விஷயங்களில் பல இடங்களில் நான் அவனிடம் முரண்பட்டாலும் அவன் அடிக்கடி சொல்லும் “எங்க ஊர்ல நாங்க அப்படித்தான்டா வளர்ந்தோம்”, என்கிற வாதத்தில் நான் அடிக்கடி விழுந்ததுண்டு. அந்த வாக்கியத்தின் கருப்பொருளைத் தேடியதுண்டு. அனைவரிடத்திலும் சிரித்துப் பழகுவான். எல்லாவற்றுக்கும் முன்னால் மனிதத்தையே முன்னிறுத்துவான். அவனைத் தூக்கி வளர்த்த அவன் பெரியம்மாவை ‘அம்மா’ என்றுதான் அழைப்பான். அவன் படிப்பிற்கு பொருளாதார சிக்கல் வரும்போதெல்லாம் தன் நகைகளை விற்று அவனை மேலும் படிக்க வைத்து, அப்பொழுது கல்லூரி வரை கொண்டு விட்டிருந்தார் அவர். அடிக்கடி அவரிடம் ஃபோனில் சிரிக்க சிரிக்க பேசுவான். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் எனக்குப் பேருந...