மீண்டும் வனவாணி
வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளிக்கு இன்று சென்றிருந்தேன். நான் ஹேண்ட்பால் விளையாடிய இடத்தில் பிரைமரி ப்ளாக் கட்டிடம் உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கோல்போஸ்டாக உபயோகித்த மரத்தை வெட்டமுடியவில்லை போலும், கட்டிடத்திற்கு நடுவே நாங்கள் விளையாடியதற்கு சாட்சியாக எங்கள் கிறுக்கல்களை சுமந்துகொண்டு கம்பீரமாகத் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது அம்மரம். கிட்டத்தட்ட எனக்கு வகுப்பெடுத்த எல்லா ஆசிரியர்களையும் சந்தித்தேன். “அதோ, யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவோம்னு நாலு கேஸு அங்க உக்காந்திருக்கு பாரு”, என்றுதான் கடைசி பெஞ்சு மாணாக்கர்களான எங்களை சாய் சார் விளிப்பார். இன்று அதை இன்னொரு முறை சொல்லவைத்து ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று விரும்பினேன். வந்தவர் பதில் வணக்கம் ஒன்றைப் போட்டுவிட்டு அவ்வளவு பெரிய உடம்புடன் திடீரென்று காணாமல் போனார். புவியியல் ஆசிரியையிடம், “இந்த ப்ரில்லியண்ட் பையன் மேல டஸ்டரைத் தூக்கி அடிச்ச மாதிரி, வேற யாராவது ப்ரில்லியண்ட் பையன் கிடைச்சானா உங்களுக்கு?”, என்று கேட்டேன். ”ஹாஹா, அதுதான்டா முதலும் கடைசியுமா ஒரு பையனை அடிச்சது”, என...