Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மீண்டும் வனவாணி


          வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளிக்கு இன்று சென்றிருந்தேன். நான் ஹேண்ட்பால் விளையாடிய இடத்தில் பிரைமரி ப்ளாக் கட்டிடம் உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கோல்போஸ்டாக உபயோகித்த மரத்தை வெட்டமுடியவில்லை போலும், கட்டிடத்திற்கு நடுவே நாங்கள் விளையாடியதற்கு சாட்சியாக எங்கள் கிறுக்கல்களை சுமந்துகொண்டு கம்பீரமாகத் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது அம்மரம். கிட்டத்தட்ட எனக்கு வகுப்பெடுத்த எல்லா ஆசிரியர்களையும் சந்தித்தேன்.

“அதோ, யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவோம்னு நாலு கேஸு அங்க உக்காந்திருக்கு பாரு”, என்றுதான் கடைசி பெஞ்சு மாணாக்கர்களான எங்களை சாய் சார் விளிப்பார். இன்று அதை இன்னொரு முறை சொல்லவைத்து ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று விரும்பினேன். வந்தவர் பதில் வணக்கம் ஒன்றைப் போட்டுவிட்டு அவ்வளவு பெரிய உடம்புடன் திடீரென்று காணாமல் போனார். புவியியல் ஆசிரியையிடம், “இந்த ப்ரில்லியண்ட் பையன் மேல டஸ்டரைத் தூக்கி அடிச்ச மாதிரி, வேற யாராவது ப்ரில்லியண்ட் பையன் கிடைச்சானா உங்களுக்கு?”, என்று கேட்டேன். ”ஹாஹா, அதுதான்டா முதலும் கடைசியுமா ஒரு பையனை அடிச்சது”, என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், கிளம்பும்போது, ”அடிச்சப்போ ரொம்ப வலிச்சுதாடா?”, என்று கேட்டார்.

          என்னுடைய தமிழைப் பத்தாவது வரை கடைசி பெஞ்சுக் கவிதைகளில் விரயமாக்கிக் கொண்டிருந்தேன். அதை மாற்றி எனக்குத் தமிழில் எப்படி உபயோகமாக சிந்தனை செய்வது என்று சொல்லிக் கொடுத்தவர் வித்யாசேகரன் என்கிற வித்யாசாகர் ஐயா. என்னைக் கண்டதும் அப்படியே ஆரத்தழுவிக் கொண்டு இருபது வருடங்களுக்கு முன்னால் பள்ளிப்படிப்பை முடித்தவர்களிடம் எல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். ”தமிழாசிரியராக இதுதான் என்னுடைய கடைசி வருடம். இந்த வருட ஆண்டு விழா நாடகத்திற்கு நீதான் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்கணும் விஷ்ணு”, என்று உணர்ச்சி வசப்பட்டார்.

          பள்ளியில் முதன்முதலாக என்னை அரசியல் பேச அனுமதித்தவர் என் ஆங்கில ஆசிரியை. “என்னடா இன்னும் இங்லீஷை ஞாபகம் வெச்சுருக்க? நீங்கல்லாம் தமிழ்க் காவலர்கள் ஆச்சே?”, என்று கலாய்த்தார். என்னை சப்போர்ட் செய்ய தமிழாசிரியை ஒருவர் உள்ளே நுழைய, இருவரையும் அப்படி இப்படி சமாளித்து வெளியே வருவதற்குள் முழி பிதுங்கிவிட்டது. வெளியே வந்து பார்த்தால் என்னை அடிக்கடி பிரின்சிபால் ரூமுக்கு அனுப்பி வைக்கும் இந்திரா டீச்சரும் பிரின்சிபாலும் ஒருசேர இருந்தார்கள். “ஒரே சமயத்துல எங்க ரெண்டு பேரையும் பாத்துட்ட, அலைச்சல் இல்ல பாரு!”, என்றார் இந்திரா டீச்சர். ”இதை நான் ஸ்கூல்ல படிக்கும்போது செஞ்சிருந்தா மாடி ஏறி இறங்கியிருக்க மாட்டேனே”, என்றேன். சிரித்தார். மனநிறைவோடு விடைபெற்றேன்.

          எங்கெங்கோ திசைமாறி, கெட்டதின் விளிம்பிற்கெல்லாம் சென்றவன், அதிலிருந்து மீண்டு, மீண்டும் யிங் யாங்கிற்குள் செல்ல காலத்தின் உதவியுடன் உறுதுணையாக இருந்தவர்கள் இவர்கள். இன்று என் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் இவர்கள் போதித்த பள்ளிக்காலப் படிப்பினைகள் இருந்தாலும், அதைப் பற்றி ஒருபோதும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேயாஸ் தியரியைக் கைகாட்டி விட்டு அடுத்த செட் மாணவர்களைக் கவனிக்கச் செல்லும் கடவுள்கள் இவர்கள்.

நன்றி உணர்வு மேலிடுகிறது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி