இந்தியாவை நேசித்த ஆங்கிலேயர்கள்
இந்தியாவில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரிகள் என்றவுடன் நமக்குப் பெரும்பாலும் முதலில் நினைவிற்கு வருவது ஜெனரல் டையர் போன்றவர்கள்தான். தோல் நிறம் சார்ந்த மேட்டுக்குடித் திமிரும், இந்தியர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்கிற ஏகாதிபத்திய மனப்பான்மையும் இரக்கமற்றத் தன்மையும்தான் எனக்கு முதலில் நினைவிற்கு வந்தன. இந்தியாவின் கலாசார, தட்பவெப்ப மாறுதல்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் காஸ்மோ கிளப்புகளின் அறைகளில் ஏற்படுத்தப்பட்ட சிறு சிறு பிரிட்டன்களில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகள் பற்றிய நமது பார்வை, அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் என்கிற சினத்தைத் தாண்டி, உண்மையில் பெரிதும் பொதுமைப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. எனக்கும் அப்படித்தான் இருந்தது, குஷ்வந்த் சிங் தொகுத்த “Sahibs Who Loved India”, என்கிற புத்தகத்தை வாசிக்கும்வரை. மொத்தம் இருபத்தி இரண்டு கட்டுரைகள். ‘What India meant to me?’, என்ற கேள்விக்கு பதிலாக இருபத்தி இரண்டு ஆங்கிலேயர்கள் மனம் திறந்து எழுதிய பதிவுகளின் தொகுப்பே இப்புத்தகம். மனிதர்க...