Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இந்தியாவை நேசித்த ஆங்கிலேயர்கள்


          இந்தியாவில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரிகள் என்றவுடன் நமக்குப் பெரும்பாலும் முதலில் நினைவிற்கு வருவது ஜெனரல் டையர் போன்றவர்கள்தான். தோல் நிறம் சார்ந்த மேட்டுக்குடித் திமிரும், இந்தியர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்கிற ஏகாதிபத்திய மனப்பான்மையும் இரக்கமற்றத் தன்மையும்தான் எனக்கு முதலில் நினைவிற்கு வந்தன. இந்தியாவின் கலாசார, தட்பவெப்ப மாறுதல்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் காஸ்மோ கிளப்புகளின் அறைகளில் ஏற்படுத்தப்பட்ட சிறு சிறு பிரிட்டன்களில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ஆங்கிலேய அதிகாரிகள் பற்றிய நமது பார்வை, அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் என்கிற சினத்தைத் தாண்டி, உண்மையில் பெரிதும் பொதுமைப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. எனக்கும் அப்படித்தான் இருந்தது, குஷ்வந்த் சிங் தொகுத்த “Sahibs Who Loved India”, என்கிற புத்தகத்தை வாசிக்கும்வரை.

          மொத்தம் இருபத்தி இரண்டு கட்டுரைகள். ‘What India meant to me?’, என்ற கேள்விக்கு பதிலாக இருபத்தி இரண்டு ஆங்கிலேயர்கள் மனம் திறந்து எழுதிய பதிவுகளின் தொகுப்பே இப்புத்தகம். மனிதர்கள் இந்தியாவை அவ்வளவு நேசித்திருக்கிறார்கள். ஏகாதிபத்தியம் என்கிற கட்டமைப்பிற்குள்ளே அவர்கள் செயல்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்தும் இந்தியர்கள் மீதான மனிதம் எட்டிப்பார்த்திருக்கிறது. இருக்கிற அமைப்புகளுக்கு உள்ளாக அவர்கள் மெய்யான தீர்வைத் தேடியிருக்கிறார்கள். குடிமைப் பணியாளர்கள் மட்டுமில்லாது, பத்திரிகையாளர்கள், நீதியரசர்கள், எழுத்தாளர்கள், என்று வெவ்வேறு பணிகளைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் அவர்களது இந்திய அனுபவத்தை வார்த்தைக்கு வார்த்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்கள்.

          அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்குத் தற்செயலாக வந்தவர்கள்தான். அவர்களுக்குத் தெரிந்த இந்தியாவெல்லாம் ரூட்யார்ட் கிப்ளிங் வர்ணித்த இந்தியாதான். வெயிலும் புழுதியும் வியாதியும் ஏழ்மையும் இருந்த இந்தியாவிற்கு இவர்களில் பெரும்பாலானோர் வந்திறங்க உலகப்போர்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கிந்தியாவின் வாசல் வரை வந்துவிட்ட ஜப்பான் ஆதரவுப் படைகளை எதிர்கொள்ள ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் படைத்தளபதிகளாக வந்திறங்கினார்கள். காந்தியின் உப்பு சத்தியாகிரகத்திற்குப் பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்கான குரல் உலக கவனம் பெற்றவுடன் இந்தியாவிற்கு நிறைய ஆங்கிலேயர்கள் பத்திரிகையாளர்களாக வந்திறங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தியா என்றால் ராஜாக்கள், வேட்டை, யானைப்படை, மலைப்பிரதேசங்கள், அழுக்கான இந்தியக் குடிமக்கள், இப்படித்தான் ஆரம்பத்தில் கருத்து இருந்திருக்கின்றன. ஆனால் இந்தியா அவர்களுக்கு அவற்றைத் தாண்டி வேறொரு பரிணாமத்தைக் காட்டியிருக்கிறது. பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பல்வேறு வியாதிகள் மூலம் படாத பாடாய்ப் படுத்தியெடுத்தும் இருக்கிறது. அவர்கள் இந்தியாவையும் இந்தியர்களையும் கணத்திற்குக் கணம் இரசித்திருக்கிறார்கள்.

          ரோஷனாரா கிளப்பின் துணைத்தலைவராக இருந்த ரௌலாண்ட் ஓவன் இந்தியாவின் அழகு கிராமங்கள் பற்றியும் இந்தியாவில் காணக் கிடைக்கும் மனிதத்தன்மை பற்றியும் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும்போது, “நான் இந்தியாவைப் பற்றி நினைப்பதையெல்லாம் சரியாகக் கொட்டிவிட்டேன் என்றால் இல்லை, சரியான வார்த்தைகளைப் பிரயோகிக்க நான் சரோஜினி நாயுடுவாக ஆனால் மட்டுமே முடியும்!”, என்கிறார்.

          Times of India Weekly பம்பாய் இதழின் ஆசிரியராக இருந்த ஸ்டான்லீ ஜெப்சன், இந்தியர்கள் ஒரு முழுத் தெருவுக்கு சேர்ந்து ஒரே ஒரு செய்தித்தாளைத்தான் வாங்குகிறார்கள் என்று மென்மையாகக் கடிந்துக்கொள்கிறார். ஆறு அணாவிற்கு செய்தித்தாளை விற்றோம், ஒரு மூன்று நான்கு செய்தித்தாள்களை வாங்கிப் போட்டால்தான் என்ன, படித்துவிட்டுப் பொருட்களின் மேல் சுற்றிவைத்துக்கொள்ளப் பயன்படுத்தலாமே, என்கிறார். அவரின் செயலாளர் ஆர்.வி.அய்யர் பற்றிய அவரது நினைவுகூரல் வித்தியாசமானது. செய்தித்தாள் ஆசிரியருக்கு நிறைய கடிதங்கள் வர வர அவற்றிற்கு பதிலளிக்க நேரம் அதிகமாக அதிகமாக, ஆர்.வி.அய்யர் சில பொதுவான பதில் கடிதங்களை உருவாக்கி வைத்துவிட்டார். இதனால் ஜெப்சனுக்கு வேலை எளிதாகிவிட்டது. வந்த கடிதத்தின் கருப்பொருளிற்கு ஏற்ப, இதற்கு லெட்டர் நம்பர் D-ஐ பதிலாக அனுப்பிவிடுங்கள் என்றுவிடுவாராம்!

          இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மானியப் பிரச்சாரங்களை எதிர்கொள்ள இவரின் பத்திரிகைக்கு பிரிட்டன் அரசாங்கம் ஆதரவளித்தது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் எதிரான பிரச்சாரங்களை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று வேறு உத்தரவு வர, blitzkrieg, Hurricane Fighter போன்ற வார்த்தைகளைக் கண்டு டரியல் ஆகியிருக்கிறார்கள் இவர்கள். ஒரு கட்டத்தில் ஜப்பானின் ஆபத்தை உணர்ந்து சீன மொழிக்கும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற உத்தரவு வந்தவுடன் அச்சாளர்கள் மிரண்டு போய்விட்டார்கள். சீன மொழி என்றால் மேலிருந்து கீழ் எழுத வேண்டுமே? இடமிருந்து வலமாக எழுத்துகள் வருவது போல்தானே இயந்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது? ஜெப்சன் அதற்கு ஒரு தீர்வை வழங்கினார். செய்தியில் உள்ள படத்தைத் திருப்பிப் போட்டு விடுங்கள். மொத்த செய்தித்தாளையும் மக்கள் திருப்பிப் படிப்பார்கள்!

          இந்திய கிராம மக்கள்தான் உலகிலேயே உறுதியானவர்களும் மற்றும் நல் விளைச்சலுக்குத் தகுதியானவர்களும் ஆவர் என்பது ஜெப்சனின் கருத்து. போர் முடிந்தவுடன் இந்தியாவில் உள்ள கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ள வகையில் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதரவைக் கேட்டிருக்கிறார். ஆனால் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவர் உயிருடன் இருந்த வரை அடிக்கடி தன் ரெக்கார்டில் இந்தியாவின் தேசிய கீதத்தைக் கேட்டு, பணிவுடன் சிரம் தாழ்ந்துக்கொள்வார், பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்த இந்தியாவின் நினைவாக.

          எழுத்தாளர் ஹோரேஸ் அலெக்சாண்டர் இந்தியா வரும் வரை இந்தியாவில் பிரிட்டன் நல்லாட்சி செய்துக்கொண்டிருக்கிறது என்றே நம்பினார். கனடாவையும் ஆஸ்திரேலியாவையும் எப்படி தன்னாட்சி செய்யத் திறமை வாய்ந்த ஜனநாயக நாடாக மாற்ற பிரிட்டன் உழைத்ததோ(அவரது பார்வையில்) அதுபோல் இந்தியாவையும் மாற்றிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணினார், அவர் இந்தியா வரும் வரை. ஆனால் இந்தியாவில் பல அதிர்ச்சிகள் அவருக்குக் காத்திருந்தன. ஒரிசாவில் ஒரு ஆங்கிலேயர் தன் தோட்டக்காரரைக் காட்டி இவர்களைப் போன்ற ஆட்களெல்லாமா தன்னாட்சி செய்ய லாயக்குள்ளவர்கள், என்று கேட்டிருக்கிறார். இளம் வயதில் இந்தியாவிற்கு வந்த அந்த ஆங்கிலேயர் இருபது வருடங்கள் கழித்து நோய்வாய்ப்பட்ட அறிவுடன் இப்படிக் கூற என்ன காரணம் என்று அலெக்சாண்டருக்குப் புரியவில்லை. மேலும் ஒரிசாவில் ஓப்பியம் பழக்கம் அதிகரித்துள்ளதே, அதற்கு அரசாங்கள் எதுவும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று வேறொரு அதிகாரியை இவர் கேட்க, அவரோ, நீங்கள் பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கே வந்தது இவர்களின் ஓப்பியம் பழக்கத்திற்கு வருந்தத்தானா என்று கேட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க, இந்தியா எவ்வளவு சீக்கிரம் பிரிட்டனின் பிடியிலிருந்து விலகிக்கொள்கிறதோ, அத்தனை நல்லது என்ற முடிவிற்கு வருகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம், விநோபாபாவேயின் பூதான் இயக்கம், முதல் ஐந்தாண்டுத் திட்டம், சொந்த அரசமைப்பு சட்டத்தின் அமல்படுத்தல், வேலை செய்யாது என்று நினைத்த, ஆனால் முழுமையாளர்களின் பார்வையில் சிறிதாவது வேலை செய்த இந்தியாவின் ஜனயாயக அமைப்பு, இத்தனையையும் பார்த்துவிட்டுத்தான் நாடு திரும்பியிருக்கிறார் அலெக்சாண்டர்.

          இந்தியாவின் நிருபராக கார்டியன் நியமித்த டாயா சிங்கின் கிராமப்புறங்களில் சற்றே சிரமப்பட்டிருக்கிறார். 1959 வரை இந்தியாவின் பழங்குடி மக்களிடம் நாடு எப்போதோ சுதந்திரம் அடைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். இப்போதைய தெலங்கானா பகுதியில் ஒரு சமூக ஆர்வலரான இளைஞரிடம் அவர் ஒன்றை சொன்னார். அதைக் கேட்டதும் அவர் மனதுடைந்துபோய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவர் சொன்ன வாக்கியம், “லெனின் இறந்துவிட்டார்”.

          டாயா சிங்கினின் கணவர் மௌரிஸ் சிங்கின் ஒரு குடிமைப் பணி அதிகாரி. இந்தியாவின் சமூக சிக்கல்களை மற்றவர்களை விட சற்றே ஆழமாக அறிந்துவைத்திருந்தவர். கொஞ்சம் பேச்சு கொடுத்தால் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, உத்திரப்பிரதேசத்தில் சாதி எப்படி தேர்தல் முடிவுகளை வெகுவாக பாதிக்கிறது, கேரளாவில் உள்ள ஈழவர் இன மக்களுக்கும் கம்யூனிசத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்று விலாவரியாக உள்ளே சென்றுவிடுவார். ஆனால் தன்னுடைய பரந்த வாசிப்பிற்கும் அறிவின் விசாலத்திற்கும் அவர் காரணமாக சொல்வது அவர் உறுப்பினராக இருந்த ஒரு கிளப்பில் வேலை செய்த ஒரு ரெவன்யூ கிளார்க்கை. அவர்தான் மௌரிஸுக்கு மராத்தி கற்றுக்கொடுத்தவர்! மதக்கலவரங்களைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசாங்கம் தோல்வியடைந்தது பற்றியும் விவரமாக எழுதியிருக்கிறார் மௌரிஸ். ”திடீரென்று ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு கிடப்பார்கள், காரணம் மதத்தைத் தவிர வேறு ஒன்றுமே இருக்காது. கிராம அளவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஆங்கிலேய அரசாங்கம் மிகவும் பலவீனமான அமைப்பாகவே இருந்திருக்கிறது”, என்று தன் கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார் மௌரிஸ். சிறுபான்மை இஸ்லாமியர்களின் அச்சம் குறித்த இவரது தெளிவான பார்வையும் இவரின் கட்டுரையில் கிடைக்கிறது.

          The Statesman பத்திரிகையின் இணை ஆசிரியராக இருந்த ஃபிலிப் கிராஸ்லாண்ட் முக்கியமான ஒன்றை கவனித்தார். சிறிது சிறிதாக இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற சிந்தனை ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் வர ஆரம்பித்தது என்பதுதான் அது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் சிந்தனைக்கு முட்டுக்கட்டை ஒன்றும் ஏற்பட்டது. ”இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும், ஆனால் அதற்காக இந்திய மக்கள் இன்னும் தயாராகவில்லை, என்ற மேட்டிமை குணம் அவர்களின் சிந்தனைக்குத் தடையாக இருந்தது”, என்கிறார் கிராஸ்லாண்ட். நேரடி நடவடிக்கை நாளின் கோரத்தை மொட்டை மாடியிலிருந்து நேரில் பார்த்திருக்கிறார். ”இந்தியாவிற்கு ஆயுதங்கள் பெரிதாக ஏந்தாமல் சுதந்திரம் கிடைத்த விதம் இந்தியா, பிரிட்டன் இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் விதத்திலேயே இருந்தது, நாங்கள் எதிரிகளாகத் தோற்கப்பட்ட உணர்வுடன் திரும்பி செல்லவில்லை, மாறாக நண்பர்களாக மகிழ்ச்சியுடன் கைகுலுக்கியவாறு பிரிந்து சென்றோம்”, என்கிறார்.

          ஜே.ஏ.கே.மார்ட்டினுக்கு இந்தியாவில் பிடித்த விஷயமே அவர் இந்தியாவில் இருக்கவோ அல்லது இந்தியா மீதான அபிமானத்தை வெளிக்காட்டவோ அவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். “உண்மையில் இந்தியாவில் என்னுடைய அனுபவங்கள் என்னை ஒரு நல்ல கிறிஸ்தவனாக மெருகேற்றியது என்று நம்புகிறேன்”, என்கிறார் அவர்.

          பெக்கி ஹால்ராய்டிடம் அடிக்கடி இங்கிலாந்தில் கேட்கப்படும் கேள்வி, “நீ என்ன இந்துவாகவே மாறிவிட்டாயா என்ன?”, என்பதுதான். இந்து மதம் ஏன் ஆங்கிலேயர்களுக்குப் புரியமாட்டேன் என்கிறது என்பதற்கு அவர் பதிலாக வைப்பது இந்து மதத்தில் உள்ள பெண்ணியத்தை(அவரது பார்வையில்). அமெரிக்காவில் பெண்ணிய இயக்கம் ஒன்று கடவுளை நிராகரித்தபோது ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தந்த பதில், “ஏனென்றால் கடவுள் ஆணாக இருக்கிறார்”. அதை நினைவுகூர்ந்து ஹால்ராய்டு இந்து மதம் ஆண் பெண் சமத்துவத்தை ஆண் பெண் தெய்வங்கள் மூலம் வலியுறுத்தியிருக்கிறது என்கிறார். “இந்தியா ஒரு பணக்கார இளவரசி, வறுமையில் சிக்கி வாடும் ஏழை. இதயத்தில் அன்பு பொங்குகிறவள், ஆனால் காரணமேயில்லாமல் குரூரமாய் வஞ்சிப்பவள். பொறுமையின் சிகரம் அவள். கடுமையான சம்பிரதாயங்களைக் கொண்டவள், ஆனால் கடைசி தருணங்களில் அவற்றைக் கைவிட அனுமதிப்பவள். வெவ்வேறு கலாசார அலைகளால் அடித்து செல்லப்படுபவள், அதனாலேயே மேலும் மேலும் சீரமைக்கப்படுபவள். பன்முக அடையாளங்களை மதிப்பவள், வடிவில்லாத குழப்பவாதி அவள்.”, இந்தியாவை இப்படித்தான் விவரிக்கிறார் ஹால்ராய்ட்.

          அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று ஆசிரியரான ஆர்தர் ஹ்யூக்ஸ் பிரிட்டனின் கற்க முடியாத சிலவற்றை இந்தியாவில் கற்றார். பான் மெல்லுவது, வாளியில் தண்ணீர் பிடித்து வந்து குளிப்பது, தெரியாத்தனமாக அடுத்தவர் காலை மிதித்துவிட்டால் உடனே மன்னிப்பு கேட்பது, உண்பதற்கு முன் கைகழுவுவது, உண்டபின் வாயைக் கொப்பளிப்பது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது என்று நடைமுறை வாழ்வில் இந்தியராகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் தன்னால் செய்ய முடியவில்லை என்கிறார் வருத்தத்துடன். அது இதுதான். ”என்னதான் இந்திய முறையில் குத்த வைத்து உட்கார்ந்து மலம் கழித்தாலும் கைக்கு எட்டும் தூரத்தில் டாய்லட் பேப்பர் இல்லாவிட்டால் காட்டில் திக்குத் தெரியாமல் தொலைந்ததுபோல் ஆகிவிடுகிறது.”.

          Daily Telegraph நிருபர் ஃபிலிப் நைட்லீயின் கட்டுரை கவித்துவம். இந்தியாவை அணு அணுவாகக் கொண்டாடியிருக்கிறார் அவர். தான் சந்தித்த ஒவ்வொரு இந்தியரின் பெயரிலிருந்து ஆரம்பித்து தன் மதுபான லைசென்ஸ் எண் வரை அத்தனையையும் நினைவில் வைத்து, அவரது இந்திய நாட்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆங்கிலேயர் என்றால் நளினமாக, சுத்தபத்தமாகத்தான் பேசவேண்டுமா என்ன? பேதியின் கோரத்தை வெட்கத்தைவிட்டு விவரித்த சிலருள் இவரும் ஒருவர். படாத பாடு பட்டிருக்கிறார் மனிதர். ஸ்ரீநகரில் ஒரு சாலையோர உணவகத்தில் ஒரு தமிழகக் குடும்பம் உணவை வாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தமிழிலோ ஆங்கிலத்திலோ அந்த வெயிட்டர் பேசவில்லை. இந்தியில் இவர்கள் பேசவில்லை. நடுவில் நைட்லீ புகுந்து இரண்டு இந்தியர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பு வேலை செய்தார்!

          இரண்டாம் உலகப் போரில் இராணுவ மேஜராக இருந்து பின்னர் பத்திரிகையாளராக பணியாற்றிய C.R.மாண்டி வட மாநிலத்தவருக்கு தென் மாநில மக்களின் நிறத்தால் அவர்கள் மீது சற்றே வெறுப்புணர்வு இருந்தது போல் பட்டது என்கிறார். ”அதே நேரத்தில் தென் மாநிலத்தவர்கள் வரன் தெடும்போது மாநிற வரன்களையே தேடினர். எனக்கு வடக்கு, தெற்கு இரண்டு பகுதியினரும் நல்ல துணையாக இருந்தனர். ஆனால் பேச்சுத் துணைக்கும் அரசியல் அரட்டைகளுக்கும் சரியானவர்கள் கல்கத்தாகாரர்கள்தான், என்கிறார் திடீரென்று! ஜெனரல் டையர் போன்றவர்கள் விதிவிலக்குகள்தான் என்றும் பல அதிகாரிகள் இந்தியர்களுக்கு உண்மையாக உழைத்தார்கள் என்றும் தன் கட்டுரையில் பதிவு செய்கிறார் மாண்டி. மாண்டி மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறார். இதுதான் அவரது அனுபவம். ”இடார்சி சந்திப்பு இரயில் நிலையத்தில் காந்தி இரயில் பெட்டிக்குள்ளே இருக்க, வெளியே அவரை தரிசிக்க நிறைய பேர் காத்திருந்தனர். நானும் பரவசத்தில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தைப் பயன்படுத்தி யாரோ பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள்!”

          ஆரம்பத்தில் பொதுவுடைமைவாதியாக இருந்த இராணுவ வீரர் ராலே நாக்ஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திடம் பிடிபட்டு கைதியாக இருந்திருக்கிறார். வீரர் எவான் சார்ல்ட்டனும் மாட்டியிருக்கிறார். எவான் சார்ல்ட்டனின் இந்தியனாக இருப்பது பற்றிய வார்த்தைகள் அற்புதமானவை. “இந்தியாவின் மீது எனக்கு இருந்த அபிமானத்தை நான் வேட்டி அணிந்துதான் வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. டெல்லியில் நான் காந்தி குல்லாய் அணியவில்லை. இந்தியர்களிடம் பொதுவான ஒரு குணம் இருக்கிறது. செயற்கையாக வெளித்தோற்றம் மூலம் நடிக்க முற்படும் ஆசாமிகளை அவர்கள் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். இந்திய உணவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை மறைப்பதில் ஒரு நன்மையும் இல்லை. இந்திய இசை புரியாவிட்டாலும் இரசிப்பதுபோல் பாசாங்கு செய்யும்போது நீங்கள் உங்களைத்தான் ஏமாற்றிக்கொள்கிறீர்கள். எனக்கென்னவோ ஆங்கிலேயர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதை இந்தியர்கள் எவ்வளவுக்கெவ்வளவு வெறுக்கிறார்களோ அதே அளவு எந்த இந்தியத்தன்மையைப் பார்த்தாலும் பரவசமடையும் ஆங்கிலேயர்களையும் அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கிறார்கள். இதுபோன்ற ஒரு கட்டுரையில் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். எனக்கு இந்தியா எப்படி இருந்தது? எனக்கு அங்கு வேலை இருந்தது. சில காட்சிகள் நன்றாக இருந்தன, சில இசையை, சில வாசனைகளை கேட்டேன், முகர்ந்தேன், மாற்றங்கள் நடந்த காலகட்டத்தில் அதன் சாட்சியாய் விளங்கினேன். தற்பொழுது லண்டனில் அமர்ந்து சில பெயர்களை மறக்காமல் நினைவு கூர்கிறேன். போதுமே?”

          சர் நார்மன் கிப்பிங்கின் வார்த்தைகள் இவை. “இந்தியாவில் வேலை செய்த ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் அவர்களின் இதயத்தின் ஒரு பகுதியை இந்தியாவில் விட்டு, இந்தியாவின் இதயத்தின் ஒரு பகுதியை எடுத்துச் சென்றனர், என்று நினைக்கிறேன்.”.

          அதிகாரி செட்ரிக் டே இந்தியாவின் தூய்மைவாதிகளைக் காய்ச்சி எடுக்கிறார். ”மதுபானத்தைத் தடைசெய்ய வேண்டுமென்கிறார்கள். சிலபேர் சம்பந்தமேயில்லாமல் உடலுறவையும் தடை செய்ய வேண்டுமென்று கிளம்பியிருக்கிறார்கள். இந்த உலகிற்கு காமசூத்திரத்தை அளித்த நாட்டிலா இந்த கதி? இந்தியாவில் உள்ள பல கோவில்களில் மகிழ்ச்சியாக வாழும் கலையை எர்ராடிக்கா மூலமாக உணர்த்தியிருக்கிறார்கள். அப்படி ஆண்-பெண் இணை குறித்த சிற்பங்களை வடித்தவர்கள்தான் வாழ்க்கையையும் காதலையும் படைப்பையும் உண்மையாகப் புரிந்துவைத்திருந்தவர்கள். இப்பொழுது ஸ்ட்ராபெர்ரி மற்றும் வென்னிலா கோயில்களைக் கட்டும் மனிதர்களின் புரிதலைவிட அவர்களது புரிதலின் ஆழம் அதிகம். என் சமகால மதமான கிறித்துவத்திலும் இப்படி நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. எனக்குக் கீழே பணிபுரியும் ஒருவருக்குப் பாம்பு கடித்துவிட்டது. நலமுடன் திரும்ப வாழ்த்துகள் என்று கடிதம் எழுதி அனுப்பினேன். அவர் பதிலுக்கு நான் குணமாகிவிட்டேன், எல்லாம் உங்கள் பிரார்த்தனைகளால்தான் என்கிறார். அந்தக் கடிதத்தை அவரின் மருத்துவர் படிக்காதிருக்கட்டும்!”

          என்னளவில் இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது நிறைவாக இருந்தது. எழுவது ஆண்டுகளுக்கு முந்தைய டெல்லி, பம்பாய், கல்கத்தா வீதிகளிலும், மலைக்குன்றுகளிலும் குக்கிராமத்திலும் பயணம் போன ஒரு உணர்வு ஏற்பட்டது. இதே கட்டுரைகளை இந்தியர்கள் எழுதியிருந்தால் சில நேர்மறை உணர்வுகளை மிகைப்படுத்தும் திரைப்படங்களை feel good film என்று சொல்கிறோமே, அதுபோல் இதனை feel good book என்று சொல்லிக் கடந்திருப்போம். ஆனால் ஆங்கிலேய அதிகாரிகளின் பொதுப்பிம்பம் இப்புத்தகத்தில் அனாயசமாக உடைபடுகிறது. அதே நேரத்தில் இந்தியாவைப் புரிந்துக்கொள்வதில் கிட்டத்தட்ட அனைவருமே முழுமையாக வெற்றிபெறவில்லை என்பதையும் சொல்லவேண்டும். இந்தியாவின் சாதியமைப்பைப் புரிந்துக்கொள்ள ஒருவர் பிரிட்டன், ஐரிஷ் மக்களுக்கு இடையே உள்ள பேதங்களைக் கொண்டு புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார். சாதியமைப்பு இந்தியாவில் ஒரு சமூக-பொருளாதார அமைப்பாக நிலைபெற்றுவிட்ட சூழலில் இன்னொருவர் இது என் நாட்டிலும் இருக்கிறது என்று சொல்லும்போது அவரது மேம்போக்கான புரிதலே புலப்படுகிறது. பல அதிகாரிகள் பல கிளப்புகளில் உறுப்பினராக சேராமலேயே இருந்திருக்கிறார்கள், அவைகளில் இந்தியர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால். ஆனாலும் அவர்கள் எல்லா நியாயங்களையும் பேசிவிட்டு திரும்ப கோல்ஃப் ஆடத்தான் போனார்கள் என்கிற கோபமும் எழுகிறதுதான். ஆனால் அதே நேரத்தில் அன்றைய ஏகாதிபத்திய சூழலில் அவர்களுக்குள்ளே இருந்த மனிதமும் சக மனிதர்கள் மீதான பரிவும், பணியின்பால் நேர்மையும் உறுதியும் வெளிப்பட்டது ஆச்சரியமே என்னும்போது அவர்கள்மீது சக மனிதனாக மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. ஓய்வு நேரத்தில் பொறுமையாக அவர்கள் அளிக்கும் இந்தியாவைப் பருகுங்கள். இதுவரை நீங்கள் சுவைத்திராத ஒரு சிறந்த ஆங்கிலோ-இந்திய பானமாக அது இருக்கும்.

Sahibs Who Loved India
Khushwant Singh
Penguin India
191 pages
Rs.199/-

Comments

  1. I think I don't want to read the book....good review

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி